Press "Enter" to skip to content

உலக உணவு தினம்: உணவு விலையேற்றத்துக்கு நாம் ‘பழகிக்கொள்ள’ வேண்டுமா?

  • சரோஜ் பத்திரனா
  • பிபிசி

பட மூலாதாரம், Getty Images

“முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உணவுப் பாதுகாப்பின் பேரழிவு நிலைகள்” குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கை மற்றும் உணவுப் பொருட்களின் விலையில் காணப்படும் உலகளாவிய ஏறுமுகப்போக்கு ஆகியவற்றுக்கு மத்தியில், உலக உணவு தினம் இன்று (அக்டோபர் 16) கொண்டாடப்படுகிறது.

“எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான் மற்றும் ஏமெனில் சுமார் ஐந்து லட்சம் பேர் பஞ்சம் போன்ற நிலைகளை அனுபவித்து வருகின்றனர். சமீபத்திய மாதங்களில், புர்கினா ஃபாசோ மற்றும் நைஜீரியாவில் உள்ள பாதிக்கப்படக்கூடிய மக்களும், இதே நிலைமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்” என்று ஐ.நா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. .

பஞ்சத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ள பல நாடுகளில் உள்ள 4 கோடியே 10 லட்சம் மக்களுக்கு ஆதரவளிக்க உடனடியாக நிதி வழங்கப்படவேண்டும் என்று ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.

உலகளவில் 690 மில்லியன் மக்கள் தொடர்ச்சியாக பசியுடன் வாழ்கின்றனர் என்றும், 850 மில்லியன் மக்கள் கோவிட் -19 காரணமாக வறுமையின் பிடியில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘தி ஹங்கர் ப்ராஜெக்ட்’ தெரிவிக்கிறது. அந்த 690 மில்லியன் மக்களில் 60% பேர் பெண்கள்.

அதிகரிக்கும் உணவு விலைகள் என்பது உலகெங்கிலும் உள்ள மக்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், ‘உணவு வறுமையை’ போக்க என்ன மாற்று வழிகள் பற்றி சிந்திக்கப்படுகின்றன என்பதையும் இங்கே நாம் பார்ப்போம்.

ஆனால் முதலில் உணவு விலைகள் ஏன் உயர்கின்றன என்று பார்க்கலாம்.

விலையேற்றம் ஏன் ஏற்படுகிறது?

The pandemic led to a shortage of ketchup sachets as demand for takeaways soared

பட மூலாதாரம், Getty Images

எல்லா இடங்களிலும், தொற்றுநோய்க்குப் பிறகான பணவீக்கம் காரணமாக மக்கள், “அதிக உணவு விலைகளுக்குப் பழக வேண்டும்” என்று சர்வதேச உணவு நிறுவனமான ‘கிராஃப்ட் ஹெயின்ஸ்’ எச்சரித்துள்ளது.

உணவு விலைகள் உயர் அளவில் இருக்கும் என்ற கிராஃப்ட் ஹெயின்ஸின் தலைவர் மிகுவல் பேட்ரிசியோவின் கருத்தை, இந்தியாவின் மும்பையைச்சேர்ந்த ராஹ் அறக்கட்டளையின் நிறுவகர் மற்றும் அறங்காவலருமான மருத்துவர் சரிகா குல்கர்னி, ஏற்றுக்கொள்கிறார்.

இந்தியாவில் உள்ள பழங்குடி சமூகங்களுக்கு சிறந்த, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க மருத்துவர் குல்கர்னியின் ராஹ் அறக்கட்டளை பாடுபட்டு வருகிறது.

பெருந்தொற்று காலகட்டத்தில் பல நாடுகளில், உணவு தானியங்கள் முதல் தாவர எண்ணெய் வரை மூலப்பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தன. வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் நோய்த்தொற்று, உற்பத்தியையும், பொருட்களின் போக்குவரத்தையும் சீர்குலைத்தன.

இப்போது இந்த பொருட்களின் விநியோகம் மீண்டும் துவக்கியுள்ளதால், பல நாடுகளாலும் அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இது விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. அதிக ஊதியங்கள் மற்றும் உயர் எரியாற்றல் விலைகளும் உற்பத்தியாளர்களுக்கு சுமையை அதிகரித்துள்ளது.

“தேவை மற்றும் அளிப்பு (விநியோகம்) மீது, விலைகளுக்கு நேரடி தொடர்பு உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பதனால்,உணவுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சனைகள் காரணமாக சாகுபடியின் கீழ் உள்ள நிலப்பரப்பு குறைந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை, மண் தரம் குறைவது, பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் தீவிர காலநிலை மாறுபாடு நிகழ்வுகள், புதிய தலைமுறையினர் விவசாயத்தை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்வதில் உள்ள ஆர்வமின்மை ஆகியவை இந்தப்பிரச்சனைகளில் அடங்கும்,”என்கிறார் வறுமை ஒழிப்பு நிபுணர் மருத்துவர் குல்கர்னி.

“விவசாயிகள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், இது தொடர்ந்து அதிகரித்து வரும் உணவு விலைகளில் பிரதிபலிக்கிறது.”என்கிறார் அவர்.

‘உணவுக்காக செக்ஸ் வர்த்தகம்’

Empty open hands under a pair of hands full of food

பட மூலாதாரம், Getty Images

“பஞ்சம் ஏற்படும்போது, மற்ற அச்சுறுத்தல்களில் இல்லாத அளவிற்கு அது விரிவாகப்பரவுகிறது,” என்கிறார் ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணை பொதுச் செயலர் மார்ட்டின் கிரிஃபித்ஸ்.

வறுமை மற்றும் அதிகரிக்கும் உணவு விலைகளின் விளைவாக குறிப்பாக பெண்களும், சிறுமிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

” தங்கள் குடும்பத்திற்கு உணவளிப்பதற்காக, உணவுக்காக பாலியல் வர்த்தகம், குறைவான வயதில் அல்லது குழந்தைத் திருமணங்கள்தொலைபேசிற இறுதிகட்ட நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாக சமீபத்திய எனது சிரியா பயணத்தின்போது பெண்கள் கூறினார்கள்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

“உலகளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பில்லாதவர்களில் சிலர், சிறு விவசாயிகள்” என்று ஃபார்ம் வானொலி இன்டர்நேஷனலின் திட்ட மேம்பாட்டு மூத்த மேலாளர் கரேன் ஹாம்ப்சன் கூறுகிறார்.

“உயரும் உணவு விலைகளின் தற்போதைய உண்மை , அவர்களுக்கு இரு முனைகள் கொண்ட வாள் போல உள்ளது. ஒருபுறம், விவசாயக் குடும்பங்கள் தங்களால் சாகுபடி செய்ய முடியாத உணவை வாங்க வேண்டியுள்ளது. அதனால் அவர்களின் செலவுகள் உயர்கின்றன அல்லது உணவை அவர்கள் பெறுவது குறைகிறது. இதன் விளைவாக பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது,” என்று ஹாம்ப்சன் பிபிசியிடம் கூறினார்.

“மறுபுறம், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அவர்கள் விற்கும் பொருட்களிலிருந்து சிறந்த வருமானம் கிடைக்கும் என்று கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த, விலை உயர்வு விவசாயிகளுக்கு குறிப்பாக ஆப்ரிக்காவின் சிறு விவசாயிகளுக்கு அதிக வருமானம் தருவதாகத்தெரியவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

வறுமைக்கும், விலைக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதை மருத்துவர் குல்கர்னி சுட்டிக்காட்டுகிறார். விலை அதிகரிக்கும்போது துரத்திருஷ்டவசமாக வறுமையும் அதிகரிக்கிறது. கூடவே அவர்களிடமிருக்கும் சிறு தொகையும் செலவாகிவிடுகிறது என்று அவர் சொன்னார்.

“அதிக உணவு விலைகள் ஏழை சமூகங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசி மற்றும் பல உடல்நலம் தொடர்பான சவால்களையும் ஏற்படுத்துகின்றன. அதிக உணவு விலைகள் பசி, உடல்நலம் மற்றும் வறுமை ஆகியவற்றின் மோசமான சுழலில் இந்த சமூகங்களை சிக்கவைக்கின்றன,”என்கிறார் மருத்துவர் குல்கர்னி.

டெவலப்மென்ட் இனிஷியேடிவ்ஸ் என்பது உலகளாவிய அமைப்பாகும். இது வறுமையை ஒழிக்கவும், சமத்துவமின்மையை குறைக்கவும் தாக்குப்பிடிக்கும் சக்தியை அதிகரிக்கவும், தரவு மற்றும் ஆதாரங்களின் பலத்தை பயன்படுத்துகிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்பீந்தர் கொல்காட், மருத்துவர் குல்கர்னியுடன் உடன்படுகிறார்.

தீவிர வறுமை என்பது குறிப்பாக அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உணவு அதில் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.

“அந்த உணவின் விலை உயர்ந்தால், தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதாவது அவர்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுகிறார்கள் அல்லது தீவிர வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

என்ன செய்ய முடியும்?

Maria Mchele with her fellow farmers in Tanzania

பட மூலாதாரம், Susuma Susuma

வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் ஆடம்பரப் பொருட்களைக் குறைக்கலாம், வெளிநாடுகளில் விடுமுறை செல்வதை சுருக்கலாம், அல்லது தங்கள் வரவு செலவுத் திட்டத்தை கவனமாக நிர்வகிக்கலாம். வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள சிலருக்கு இவை பொருந்தாது. வேறு வழி தெரியாத அவர்கள் உணவுக்காக செக்ஸ் வர்த்தகத்திற்குள் நுழைகிறார்கள்.

ஐ.நா., பிராந்திய அமைப்புகள் மற்றும் அந்தந்த அரசுகள், மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டுவரவும், அதிகரிக்கும் உணவு விலைகளின் சவாலை எதிர்கொள்ளவும் வழக்கமான அணுகுமுறைகளை பின்பற்றலாம். ஆனால் உலகெங்கிலும் உள்ள பல தொண்டு நிறுவனங்கள் புதுமையான முறைகளில் கவனம் செலுத்துகின்றன.

“உணவு மற்றும் வாழ்வாதார உதவிகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட வேண்டும்,” என்கிறார் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலமை இயக்குநர் க்யூ டோங்யு.

“விவசாய உணவு முறைகளை ஆதரிப்பது மற்றும் நீண்ட கால உதவிகளை வழங்குவது, மீட்புக்கான பாதையை அமைக்கிறது. உயிர்வாழ்வதைத் தாண்டி, தாக்குப்பிடிக்கும் திறனை அதிகரிக்கிறது … வீணடிக்க நேரம் இல்லை,” என்று அவர் கூறினார்.

ஆனால் உணவுப் வறுமையை, அதிக பணத்தால் மட்டும் தீர்க்கமுடியாது என்று கொல்காட் பிபிசியிடம் கூறினார். “மக்களை வறுமையில் வைத்திருக்கும் முறைமைகள் மற்றும் கட்டமைப்புகளில் தீவிர சீர்திருத்தம் தேவை,”என்று அவர் கூறினார்.

“ஒவ்வொரு அரசிலும், நிறுவனத்திலும், வணிகத்திலும், என்ஜிஓவிலும் ஒரு உலகளாவிய முயற்சி தேவை. இது ஏழ்மையான மக்களின் நிலைமையை மாற்றுவதற்கான அணுகுமுறையை மையமாக கொண்டிருக்கவேண்டும். நடப்பு நிலையை மாற்றி, மக்கள் பின்தங்கிவிடுவதைத் தடுக்கும் ஒரு உலகளாவிய அமைப்பு உருவாக்கப்படவேண்டும்,” எனறு அவர் குறிப்பிட்டார்.

” காலநிலைக்கு ஏற்றபடியான ஸ்மார்ட் விவசாயத்தை அறிமுகப்படுத்துவது, பருவநிலை மாற்ற தழுவலை மேம்படுத்துவது, மழைநீர் சேகரிப்பு மற்றும் சேமிப்புத்திறன்களை மேம்படுத்துதல், விதைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிற மூலப்பொருட்களின் விலைகளை குறைத்தல், சுய நுகர்வுக்கு போதுமான அளவு வைத்திருந்து, மீதியை விற்று வருமானம் ஈட்ட விவசாயிகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்,” என்கிறார் மருத்துவர் குல்கர்னி.

ராஹ் அறக்கட்டளை கடந்த ஏழு ஆண்டுகளில் 105 கிராமங்களை ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கச் செய்யும் வகையில் ஆக்கியுள்ளது. 30,000 உள்ளுர் பழங்குடியின மக்கள் இதனால் பலனடைந்துள்ளனர்.

“தேவையான ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலமும், சிறந்த விளைச்சல் மற்றும் அதன் மூலமான வருவாயை உறுதி செய்வதற்காக விவசாய சாளரங்களை உருவாக்குவதன் மூலமும், விவசாயத்தை முழுநேர தொழிலாக எடுத்துக்கொள்ள இளையோரை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்” என்கிறார் மருத்துவர் குல்கர்னி.

வளரும் நாடுகளில் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு சரியான தகவல்களை பெறுவதற்கான போதிய வசதி இல்லாமை, உணவு வறுமைக்கு ஒரு காரணம் என்று ஹாம்ப்சன் கூறுகிறார். வெவ்வேறு சந்தைகளில் உள்ள விலைகள் பற்றி தெரியாததால் அவர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களிடம் சரியாகப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. உள்ளுர் வானிலை பற்றியும் அவர்களுக்கு தகவல் தெரிவதில்லை.

கனேடிய என்ஜிஓவான, ஃபார்ம் வானொலி இன்டர்நேஷனல், சஹராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் சிறிய விவசாயிகளின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தேவைகளுக்காக, இருமுனைத் தொடர்பு வானொலிவைப் பயன்படுத்துகிறது.

“பண்ணை வானொலி நிகழ்ச்சிகள் வாயிலாக தங்கள் தயாரிப்புகளுக்கு சிறந்த விலைகளைப் பெறுவது பற்றிய ஆலோசனை அல்லது பிற துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவலை வழங்குவதன் மூலம் அதை மாற்றலாம். எடுத்துக்காட்டாக தான்சானியாவில் வானொலி மூலமான காலநிலைச் சேவைகள் பற்றிய சமீபத்திய ஆய்வில், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டபின் தங்கள் விவசாயத்தை ‘சிறப்பாக’ மேம்படுத்த வானிலைத் தகவல் பயன்பட்டது என்று 58% பேரும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டபின் தங்கள் களையெடுக்கும் நடைமுறைகளை மேம்படுத்தியதாக 73% பேரும் தெரிவித்தனர்,” என்று ஹாம்ப்சன் பிபிசியிடம் கூறினார்.

இனி என்ன?

A woman shows how they discuss, makes notes & record

பட மூலாதாரம், Susuma Susuma

உலகெங்கிலும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் உள்ள மக்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்வை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்நிலையில், உலகத்தால் விரைவான மற்றும் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் நெருக்கடியை தவிர்க்கலாம் என்று ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தனக்கு இப்போதும் நம்பிக்கை இருப்பதாக ஹாம்ப்சன் கூறுகிறார் .

“நாங்கள் பெண்கள், ஆண்கள் மற்றும் இளம் விவசாயிகளின் பேச்சைக் கேட்கிறோம், அவர்களின் கவலைகளை செவிமடுக்கிறோம். அவர்களை கொள்கை உரையாடல்களில் சேர்க்கிறோம். அவர்களின் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். கூட்டுறவு அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் குழுக்கள் அல்லது புதிய கண்டுபிடிப்புகள் மூலம் இதை செய்கிறோம். பருவநிலை மாற்றங்களுக்கான தீர்வு மற்றும் பின்னுக்கு தள்ளப்பட்ட குழுக்களை ஆதரிப்பதில் குறிப்பாக கவனம் செலுத்துகிறோம். அவர்கள் தேவைகளை கவனிக்கிறோம். சந்தைகளை அணுகுவது, கடன் பெறுவது மற்றும் தகவல்கள் கிடைப்பதில் பாகுபாடு நீங்குவதை உறுதிசெய்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இதேபோன்ற கருத்தை மருத்துவர் குல்கர்னியும் வெளிப்படுத்துகிறார். “இடைவெளிகள் அறியப்பட்டு, அடையாளம் காணப்பட்டதால் அவற்றை சீராக்க இன்னும் நேரம் இருப்பதால் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, ” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஆனால், நாம் அவற்றை தொடர்ந்து புறக்கணித்தால் பிரச்சனை ஏற்படலாம். நம்பிக்கை மங்கலாகத் தோன்றலாம்,”என்று எச்சரிக்கிறார் மருத்துவர் குல்கர்னி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »