Press "Enter" to skip to content

நெப்ரா ஸ்கை டிஸ்க்: உலகின் பழைய நட்சத்திர வரைபடத்தை காட்சிப்படுத்தப் போகும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

  • ஃப்ரான்செஸ்கா கில்லட்
  • பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

உலகின் மிக பழமையான நட்சத்திர வரைபடம் என்று அறியப்படும் ஓர் அற்புத பழம்பொருள், பிரிட்டன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

நெப்ரா ஸ்கை டிஸ்க் என்று அழைக்கப்படும் அப்போருள், சுமார் 3,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், அது வெண்கல காலத்தைச் சேர்ந்தது என்றும் நம்பப்படுகிறது.

இந்த வட்ட வடிவிலான பொருள் கடந்த 1999ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து எடுக்கப்பட்டது. இது 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இப்பொருளின் கண்டுபிடிப்பு கூட சர்ச்சைக்குள்ளானது. சில அறிஞர்கள் அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்த நெப்ரா ஸ்கை டிஸ்கில் தங்கத்தில் சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், உத்தராயணம் – தட்சிணாயனம்… போன்ற வானியல் நிகழ்வு குறியீடுகள் உள்ளன.

இந்த வட்டத் தகடு, முந்தைய காலத்திலேயே மனிதர்களுக்கு வானியல் துறையில் இருந்த தனித்துவமான பார்வையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் இந்த நெப்ரா வட்டத்தகடை உலகின் முக்கியமான வரலாற்று ஆவணங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் பட்டியலிட்டுள்ளது.

ஜெர்மனியில் நெப்ரா என்கிற இடத்தில் தான் கிடைத்தது அந்த ஸ்கை டிஸ்க்

பட மூலாதாரம், Getty Images

நெப்ரா வட்டத்தகடு ஜெர்மனியின் ஹலே நகரட்தில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய கால அருங்காட்சியகத்துக்குச் சொந்தமானது. நெப்ரா வட்டத்தகடு கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரு வெளிநாட்டு அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோன்ஹென்ச் கண்காட்சியின் ஒரு பகுதியாக, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் இந்த நெப்ரா வான் வட்டத்தகட்டை காட்சிக்கு வைக்கவிருப்பதாகக் கூறியுள்ளது. இக்கண்காட்சி வரும் பிப்ரவரியில் தொடங்கப்பட உள்ளது.

“அது பலரை எதிர்பாராத விதத்தில் ஆச்சர்யப்படுத்தும்” என ஸ்டோன்ஹென்ச் கண்காட்சியின் ஏற்பாட்டாளர் நீல் வில்கின் கூறினார்.

“நெப்ரா வட்டத் தகடு மற்றும் சூரிய பதக்கம் தான், எஞ்சி இருக்கும் ஐரோப்பாவின் வெண்கல காலத்தைச் சேர்ந்த மிக முக்கிய பொருட்கள்” என்கிறார் அவர்.

“இரண்டு பொருட்களுமே சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக நிலத்தில் புதைந்திருந்த பிறகு, சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

“பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின், வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடைபெறும் ஸ்டோன்ஹென்ச் கண்காட்சியில் அந்த இரு பொருட்களும் முக்கியப் பகுதிகளாக இடம்பெறும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஸ்டோன்ஹென்ச்சின் உண்மையான நோக்கம் ஒரு மர்மமாகவே உள்ளது, ஆனால் கிமு 2,500-ல் கட்டப்பட்ட இந்த கல் வட்டம், சூரியனின் இயக்கங்களுடன் ஒத்துப் போவதாக உள்ளது.

நெப்ரா வட்டத்தகட்டில் உள்ள சின்னங்கள் ஒரு சிக்கலான, ஐரோப்பாவில் உள்ள பரந்துபட்ட நம்பிக்கை அமைப்பின் பகுதியாகும். இதன் மூலம் மக்கள் வானத்தை பார்த்து வணங்கினர், சூரியனை வணங்கினர், சந்திரனை வணங்கினர், சூரிய உதயம் அல்லது சந்திர உதயத்தை ஒட்டி தங்களின் நினைவுச் சின்னங்களை அமைத்தனர் என தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் வெண்கல யுக நிபுணருமான பேராசிரியர் மிராண்டா ஆல்ட்ஹவுஸ் பிபிசியிடம் கூறினார்.

“நெப்ரா வட்டத்தகட்டில் இந்த சின்னங்கள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டிருப்பதால், உண்மையில் முதன்முறையாக மக்கள் என்ன பார்க்கிறார்கள், உணர்கிறார்கள் மற்றும் நம்புகிறார்கள் என்பதை சொல்வதாக இருக்கிறது.”

அவர் நெப்ரா வட்டத்தகட்டை ஒரு புனித உரையின் பதிப்போடு ஒப்பிடுகிறார்.

வண்ணமய வரலாறு

நெப்ரா ஸ்கை டிஸ்க்

பட மூலாதாரம், Getty Images

இந்த வட்டத்தகடு ஜெர்மனியில் நெப்ரா நகருக்கு அருகில் வெண்கல காலத்தைச் சேர்ந்த வாள்கள், கோடரிகள், பிற பொருட்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பொருட்கள், இரு சட்டவிரோத புதையல் வேட்டைக்காரர்களால் மெட்டல் டிடெக்டரைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் காவல்துறையினரால் அபொக்கிஷங்கள் மீட்கப்பட்டது.

இது வெண்கல யுகத்தைச் சேர்ந்ததாக பரவலாகக் கருதப்பட்டாலும், கடந்த காலங்களில் மற்றவர்கள் இது போலியானது என்றும் கூறினர்.

கடந்த செப்டம்பர் மாதம், இரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பொருள் 1,000 ஆண்டுகள் இளையதாகவும் இரும்பு யுகத்தை சேர்ந்ததாகவும் இருக்கலாமென, அது தொடர்பாக ஒரு புதிய கட்டுரையை வெளியிட்டபோது, மீண்டும் வாக்குவாதங்களும், விவாதங்களும் எழுந்தன.

ஜெர்மனி அருங்காட்சியகம் அக்கூற்றுகளை நிராகரித்துள்ளது. ஸ்டோன்ஹென்ச் உலகம் (கண்காட்சி) அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் ஜூலை 17 வரை நடைபெற உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »