Press "Enter" to skip to content

வங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்காதா? மதச்சார்பற்ற அரசாகிறதா?

  • சுபீர் பெளமிக்
  • மூத்த பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக

பட மூலாதாரம், HABIBUR RAHMAN / EYEPIX GROUP/BARCROFT MEDIA VIA G

வங்கதேசத்தின் ஆளும் அவாமி லீக் அரசு 1972 ஆம் ஆண்டின் சமயசார்பற்ற அரசியலமைப்பை மீண்டும் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் அதிகாரபூர்வ மதம் என்ற இஸ்லாமின் அங்கீகாரம் நீக்கப்படும். மத நிந்தனை வதந்திகளால் நாட்டில் இந்துக்கள் தாக்கப்பட்ட இந்த நேரத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கிய இத்தகைய தாக்குதல்களில் இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகளுக்கும் டஜன் கணக்கான கோவில்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டின் மதச் சார்பற்ற அரசியலமைப்பை மீண்டும் கொண்டுவருவதற்காக முன்மொழியப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டால் அதிக வன்முறை ஏற்படும் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அவாமி லீக் அரசை எச்சரித்துள்ளனர். 1988 ல், ராணுவ ஆட்சியாளர் எச்எம் எர்ஷாத் இஸ்லாமை அதிகாரபூர்வ மதமாக அறிவித்தார்.

வங்கதேசம் சமய சார்பற்ற நாடு என்றும், தேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானால் உருவாக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நாட்டில் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் தகவல்தொடர்பு அமைச்சர் முராத் ஹசன் வெளியிட்ட அறிவிப்பை டாக்கா நகரின் முன்னாள் மேயர் சயீத் கோகோன் போன்ற சில அவாமி லீக் தலைவர்கள் கூட எதிர்த்துள்ளனர்.

இந்த முடிவின் நேரம் பற்றி கேள்வி எழுப்பியுள்ள சயீத் கோகோன் , “இது நெருப்பில் நெய் வார்ப்பது போல செயல்படும்” என்று எச்சரித்தார்.

“நம் உடலில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம் உள்ளது, எப்பாடுபட்டாவது நாம் 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பிற்கு மீண்டும் திரும்ப வேண்டும்” என்று முராத் ஹசன், தெரிவித்தார். அரசியலமைப்பை திரும்பக்கொண்டுவருவது பற்றி நான் நாடாளுமன்றத்தில் பேசுவேன் … யாரும் பேசாவிட்டாலும், முராத் ஹசனாகிய நான் பேசுவேன்,”என்று அவர் குறிப்பிட்டார்.

शेख हसीना

பட மூலாதாரம், Getty Images

தகவல்தொடர்பு அமைச்சர் முராத் ஹசன் ஒரு பொது நிகழ்ச்சியில், “இஸ்லாம் நமது தேசிய மதம் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் 1972 அரசியலமைப்பை மீண்டும் கொண்டு வருவோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் மசோதாவை நிறைவேற்றுவோம். விரைவில் நாம் 1972 இன் மதச்சார்பற்ற அரசியலமைப்பை மீண்டும் ஏற்றுக்கொள்வோம்.” என்று கூறினார்.

இது நடந்தால், தனது மக்கள்தொகையில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்களைக் கொண்டிருக்கும் வங்கதேசத்தில் இஸ்லாம், அதிகாரப்பூர்வ மதமாக இருக்காது.

அறிவிப்புக்கு எதிர்ப்பு மற்றும் வன்முறை மிரட்டல்

இத்தகைய மசோதாவை அறிமுகப்படுத்தினால் ரத்தக்களறி ஏற்படும் என்று ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹிஃபாசாத்-இ-இஸ்லாம் போன்ற அடிப்படைவாதக் குழுக்களின் மதத்தலைவர்கள் மிரட்டியுள்ளனர்.

“இஸ்லாம் அதிகாரபூர்வ மதமாக இருந்தது, இருக்கிறது மற்றும் தொடர்ந்து இருக்கும். இந்த நாடு முஸ்லிம்களால் விடுதலை பெற்றது. அவர்களின் மதத்தை அவமதிக்க முடியாது. இஸ்லாத்தை அதிகாரபூர்வ சமயமாக தக்கவைக்க நாங்கள் எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்,”என்று ஹிஃபாஸத்தின் பொதுச் செயலர் நூருல் இஸ்லாம் ஜிஹாதி கூறியுள்ளார்.

முன்னாள் மேயர் கோகோன் போன்ற அவாமி லீக் தலைவர்கள் கூட “கட்சிக்குள் இதுபற்றி விரிவாக விவாதிக்கப்படவில்லை” என்ற அடிப்படையில் முராத் ஹசனின் அறிவிப்பை எதிர்த்தனர்.

‘ஒரு தலைவராக முராத் ஹசனின் அந்தஸ்து இவ்வளவு பெரிய அறிவிப்புக்கு தகுதியானது அல்ல. அவர் இதைச் செய்கிறார் என்றால் அவருக்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் முழு ஆதரவு இருக்கிறது’ என்று சில லீக் தலைவர்கள் நம்புகிறார்கள்.

बांग्लादेश

பட மூலாதாரம், EPA

” நாட்டில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் வெளியாகியிருக்கும் முராத் ஹசனின் அறிவிப்பு பற்றி ஷேக் ஹசீனா முன்பே அறிந்திருக்கவில்லை என்றால், கட்சியின் உயர்தலைமை அவரை கண்டிப்பாக கண்டித்திருக்கும். இப்படி நடக்காததால், பிரதமர் இந்த முடிவுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார் என்று கருதுவதே நியாயமாக இருக்கும்,”என்று பெயர் குறிப்பிடவிரும்பாத அவாமி லீக்கின் உயர் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

முராத் ஹசன் அக்டோபர் 14 அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு ஒரு நாள் முன்பு, குமிலா, சாந்த்பூர், ஃபெனி, நோவாகாலி மற்றும் சிட்டகாங் ஆகிய இடங்களில் உள்ள இந்து கோவில்களை முஸ்லிம் கும்பல் தாக்கியது. இந்து கடவுளின் காலடியில் இஸ்லாத்தின் மத நூலான குர்ஆன் இருக்கும் படம், ஃபேஸ்புக்கில் பரவியதைத்தொடர்ந்து வன்முறை தொடங்கியது.

இந்த வன்முறை 23 மாவட்டங்களுக்கு பரவியதால், கலவரத்தைக் கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் எலீட் ரேபிட் ஆக்‌ஷன் பட்டாலியன் (ஆர்ஏபி) பிரிவுகளை, பிரதமர் ஷேக் ஹசீனா பணியில் ஈடுபடுத்த வேண்டியிருந்தது.

குர்ஆனை இந்து கடவுளின் காலடியில் வைத்துப்படம் எடுத்து அதை மிகுதியாக பகிரப்பட்டு்கியதாகக்கூறப்படும் குமிலாவைச் சேர்ந்த இரண்டு கடைக்காரர்கள் உட்பட முன்னூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கலவரக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் ஃபோயாஸ் அகமது. இவர் செளதி அரேபியாவில் பல ஆண்டுகள் பணியாற்றி பின்னர் வங்கதேசம் திரும்பிவந்து தனது தொழிலைத் தொடங்கினார்.

இஸ்லாமிய எதிர்க்கட்சிகளான பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகியவை மதக் கலவரத்தைத் தூண்டி, இந்து விழாவான துர்கா பூஜையை சீர்குலைத்ததாக அவாமி லீக் குற்றம் சாட்டியுள்ளது.

சமயசார்பற்ற நாட்டிலிருந்து இஸ்லாமிய நாடாக வங்கதேசம் மாறியது எப்படி?

“இந்து கடவுளின் காலடியில் வைக்கப்பட்டிருந்த குர்ஆன் செளதி அரேபியாவில் அச்சிடப்பட்டது. பிஎன்பி மேயர் மோனிருல் இஸ்லாம் சக்கு மற்றும் தொழிலதிபர் ஃபோயாஸ் ஆகியோர் இக்பால் உசேன் உதவியுடன், இதை இந்து தெய்வத்தின் காலடியில் வைத்தனர். இக்பால் இதைச்செய்வது கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகளில் தெரிகிறது. இது முஸ்லிம்களைத் தூண்டிவிடும் ஒரு திட்டமிட்ட முயற்சி,”என்று அவாமி லீக்கின் குமிலா பெண்கள் பிரிவின் தலைவர் ஆயிஷா ஜமான் பிபிசியிடம் கூறினார்.

बांग्लादेश

பட மூலாதாரம், EPA

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏறக்குறைய இதே நேரத்தில் நாசீர் நகரில், இத்தகைய படத்தை மிகுதியாக பகிரப்பட்டு்க சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன.

1971 இல் பங்களாதேஷ் உருவானபோது, அது ஒரு மதச்சார்பற்ற நாடாக அடையாளம் காணப்பட்டது. அதன் அடிப்படை, வங்காள கலாச்சார மற்றும் மொழி வழி தேசியம் ஆகும். இது பாகிஸ்தானின் அடிப்படைவாத இஸ்லாமிய நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது.

1972 இல் நடைமுறைக்கு வந்த வங்கதேச அரசியலமைப்பு அனைத்து மதங்களின் சமத்துவத்தை உறுதி செய்தது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் பெற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு மாபெரும் ஆட்சிக்கவிழ்ப்பு கலகம் வெடித்தது. நாட்டின் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தனது குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டார். தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகிய இரு மகள்கள் மட்டுமே தப்பிப்பிழைத்தனர்.

ராணுவ ஜெனரல்களான ஜியாவுர் ரஹ்மான் மற்றும் எச்.எம். எர்ஷாத் ஆகியோர், ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற இஸ்லாமிய கட்சிகளுக்கு ஆதரவளித்தனர். அக்கட்சிகளை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய அனுமதித்தனர். இஸ்லாமை அதிகாரபூர்வ மதமாக நிறுவினர்.

“ராணுவ ஆட்சியாளர்கள் அவாமி லீக்கை ஓரங்கட்ட விரும்பினர். இந்த முயற்சியில், அவாமி லீக்கிற்கு எதிராக ஒரு அரசியல் தளத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. அவாமி லீக்கின் வங்காள தேசியவாதத்தை எதிர்கொள்ள பாகிஸ்தான் பாணி இஸ்லாமிய அரசியலை ஏற்க முடிவானது. ஜியா மற்றும் எர்ஷாத் இருவருமே, சமயத்தை முன்னிறுத்தும் கட்சிகளை உருவாக்கினர்,” என்று ராணுவ சதித்திட்டம் பற்றிய “மிட்நைட் மசாகர்’ புத்தகத்தின் ஆசிரியர் சுக்ரஞ்சன் தாஸ்குப்தா கூறுகிறார்,

“எர்ஷாதின் குடிப்பழக்கம் மற்றும் பெண்களின் மீதான ஆர்வம் பற்றி அனைவருக்குமே தெரியும். அவர் அரிதாகவே தொழுகை செய்தார். அவர் சில கவிதைகளையும் எழுதினார். பன்றி இறைச்சி சாப்பிட்டு ஸ்காட்ச் விஸ்கி குடித்து தொழுகையே செய்திராத ஜின்னாவைப்போலவே, எர்ஷாதுக்கும் இஸ்லாம் என்பது ஒரு அரசியல் கருவி மட்டுமே,”என்று அவாமி லீக் இளைஞர் தலைவரும் “கணினி மயமான பங்களாதேஷின்” அமைப்பாளருமான சூஃபி ஃபாரூக் குறிப்பிட்டார்.

“இரண்டு தசாப்த கால ராணுவ ஆட்சி மற்றும் பிஎன்பி – ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணி அரசு ஆட்சிக்காலத்தில், (1991- 1996 மற்றும் 2001- 2006) இந்துக்கள் கடுமையான துன்புறுத்தலை எதிர்கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். வங்கதேசத்தின் மக்கள்தொகையில் 22 சதவிகிதமாக இருந்த இந்துக்கள், 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 10 சதவிகிதத்திற்கும் கீழே சென்றுவிட்டனர்.”

பங்ளாதேஷ்

பட மூலாதாரம், EPA

“ஆனால் பங்களாதேஷ் புள்ளியியல் துறையின் கூற்றுப்படி, அவாமி லீக்கின் ஆட்சியின் கடைசி பத்து ஆண்டுகளில், இந்து மக்கள் தொகை 12 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்துக்களின் வெளியேற்றம் குறைந்துள்ளது என்பதை இது குறிக்கிறது,”என்று சூஃபி ஃபாரூக் சுட்டிக்காட்டினார்.

தேர்தலின் போது இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை

நாட்டின் இஸ்லாமிய சூழல் தேர்தலின்போது இந்துக்களை குறிவைக்கிறது என்று முன்னாள் தகவல்தொடர்பு அமைச்சர் தரனா ஹலீம் கூறுகிறார். “துர்கா பூஜையின் போது நிகழ்ந்துள்ள இந்த இந்து விரோத வன்முறையை அந்த சூழலில் பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் திரும்ப ஆட்சிக்கு வந்துள்ளது, இஸ்லாமியவாதிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஆனால் 2023 டிசம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவாமி லீக் கட்சிதான் மீண்டும் வெல்லும்,”என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் சிறப்பு உதவியாளரும் தற்போது ஆக்ஸ்போர்டு ஃபெல்லோவுமான பாரிஸ்டர் ஷா அலி ஃபராத், “இது வெட்கக்கேடானது. நாம் கண்டிப்பாக இந்துக்களை பாதுகாக்க வேண்டும்,”என்கிறார்.

இதனால்தான் பிரதமர் ஷேக் ஹசீனா 1972 -ன் மதச்சார்பற்ற அரசியலமைப்பிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார் என்று தோன்றுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »