Press "Enter" to skip to content

வரலாறு: ஆப்ரிக்காவின் இரக்கமில்லா கன்னிப்பெண் மெய்க்காப்பாளர்கள் – அதிகம் அறியப்படாத பழங்குடி சமூகம்

  • ஃப்லோர் மெக்டொனால்டு
  • பிபிசி ட்ராவல்

பட மூலாதாரம், Chris Hellier/Getty Images

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 19ஆம் கட்டுரை இது)

கிரேக்க புராணங்களில் காணப்பட்ட இரக்கமற்ற போராளிகளுக்கு பிறகு, இந்த ஆப்ரிக்காவின் அனைத்து பெண்களை உள்ளடக்கிய போராளிகளை ஐரோப்பிய காலனித்துவவாதிகள், ‘கருப்பின அமேசான்கள்’ என்று அழைக்கும் அளவுக்கு இந்த பெண் ராணுவம் இரக்கமற்றதாக இருந்தது.

இவர்களின் வரலாற்றுப் பதிவுகள், வெள்ளித்திரையில் மார்வெல் ஸ்டூடியோ தயாரிப்பில் பிளாக் பாந்தர் என்கிற பெயரில் 2018ல் வெளிவந்தபோது, அதில் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக பரிணமித்ததாக நடிகர்கள் சாட்விக் போஸ்மேன், மைக்கேல் பி. ஜோர்டான் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

ஆனால், அவர்களை விட டோரா மிலாஜே என்ற கதாபாத்திரம் புனைக்கதையாக நம்பப்பட்ட வகாண்டா ராஜ்ஜியத்தின் இளம் பெண்கள் சிறப்புப் படையில் இடம்பெற்றதையே சிறப்பான விஷயமாக கூறுவேன். மிலாஜே போன்ற பெண் மெய்க்காப்பாளர்கள்தான் பிளாக் பாந்தர் படத்தின் அடிநாதமாக விளங்கி படத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

நிஜ வாழ்வில் இப்படியும் ஒரு பெண்கள் சமூகம், அதுவும் ராஜ்ஜியத்தின் மெய்க்காப்பாளர்களாக, ஈவு இரக்கமற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்பதை அறிந்தபோது உண்மையில் நான் ஈர்க்கப்பட்டேன்.

இந்தப்பெண்கள் சமூகத்தின் வழி, வழியாக வந்த தலைமுறையினர் இப்போதும் வாழ்கிறார்கள். தங்களுடைய மூதாதையர்களின் பாரம்பரியத்தை இப்போதும் அவர்களில் சிலர் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை அறிந்து மேலும் வியந்தேன்.

Short presentational grey line
Short presentational grey line

அந்த காலத்து டஹோமி சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது அபோமி. இப்போது அது பெனின் நாட்டில் தென்பகுதியில் உள்ளது. அந்தக்காலத்து ஆப்ரிக்க மெய்க்காப்பாளர்கள் படை சமூகத்தின் வழி, வழியாக வந்தவர்கள் இப்போதும் தங்களுடைய தலைமுறை ராணிக்கு மரியாதை செய்கிறார்கள்.

இந்த அமேசான் பெண்கள் மெய்க்காவலர்கள் படைக்குழுவை உருவாக்கியவர் ராணி ஹாங்பே. இவரது வழிவந்த டஹோமிய ராஜ்ஜியத்தின் தற்போதைய ராணியை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. தங்களுடைய பாரம்பரிய வழக்கத்தின்படியே தமது பட்டத்தையும் அதிகாரத்தையும் இவர் கொண்டிருக்கிறார்.

அவரைச் சுற்றிலும் நான்கு மெய்காப்பாளர்களாக பெண்கள் இருக்கிறார்கள். கையால் நெய்யப்பட்ட தரைவிரிப்பானில் அவர்கள் அமர்ந்திருந்தனர். அந்த அறை ராஜ கம்பீரத்துடன் காட்சியளித்தது. மேஜைகள், பார்வையாளர்களுக்கான இருக்கைகள் எல்லாம் அங்கிருந்தன. பழங்கால தொலைக்காட்சியொன்றையும் காண முடிந்தது. அதன் அருகே தற்காலிக மர வேலைப்பாடு அமைப்பு போன்ற மதுபான அறையும் இருந்தது.

ராணியின் செயலாளராக 24 வயது பெண் ரூபினெல் பணியாற்றுகிறார். “இவர் எங்களுடைய ராஜா. எங்களுடைய கடவுள். அவருக்காக நாங்கள் சாகவும் துணிவோம்,” என மிகக் கவனமாக இந்த வார்த்தைகளை ரூபினெல் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

ராணியைப் பார்த்தவுடன் நான் விழுந்து வணங்கி, பிறகு சம்பிரதாய முறையில் குடிநீரைப் பருக வேண்டும் என்று எனக்கு அவர்கள் உணர்த்தினர். அதைத்தொடர்ந்து, ரூபினெல்லும் அவரது பாட்டியும் தங்களுடைய மூதாதையர்களின் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அமேசான் பெண் போர் வீரர்களால் உந்தப்பட்டு ப்ளாக் பேந்தர் படத்தில் டோரா மிலாஜெ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது

பட மூலாதாரம், Marvel/Disney

மேற்கு ஆப்ரிக்காவில் 1625 முதல் 1894வரை இருந்த டஹோமி சாம்ராஜ்ஜியத்தின் முன்கள வீரர்களாக டஹோமி அமேசான்கள் இருந்தனர். இப்போது அந்த பகுதி நவீன கால பெனின் ஆக உள்ளது. முந்தைய காலத்தில் வாழ்ந்த டஹோமி சாம்ராஜ்ஜியத்தின் பல தடயங்கள் இப்போதும் இங்குள்ளன. நைஜீரியா மற்றும் டோகோ கடலோர பகுதிகளுக்கு இடையே இந்த இடம் உள்ளது.

அண்டை பகுதிகளில் உள்ள பழங்குடிகளை வெல்லும்போதும், ஐரோப்பிய படைகளுக்கு எதிர்வினையாற்றும் தீரத்திலும் அச்சமற்றவர்களாக இந்த அமோசான் பெண் மெய்க்காப்பாளர்கள் விளங்கினர். 1892-ல் இந்த ராஜ்ஜியம் பிரெஞ்சு காலனியாக மாறுவதற்கு முன்பாக, இந்த பகுதியில் அமேசானிய பெண்களின் கடைசி யுத்தம் நடந்ததாக வரலாறு கூறுகிறது. அப்போது 434 மெய்காப்பாளர்களில் 17 பேர் மட்டுமே உயிருடன் ராஜ்ஜியத்துக்கு திரும்பினர்.

வரலாற்றுக்கூற்றுப்படி, ஹாங்பே 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமது இரட்டை சகோதரர் அகாபா இறந்த பிறகு மணி மூடியை ஏற்றார். ஆனால், அதிகாரப்பசி கொண்ட மற்றொரு சகோதரரான அகாஜாவால் அவர் அரியணையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அகாஜா பதவிக்காலத்தில் தமது மூதாதையர்களின் அனைத்து தடயங்களையும் அழித்ததாக தற்போதைய ராணி ஹாங்பே கூறுகிறார்.

Short presentational grey line
Short presentational grey line

காரணம், அந்த காலத்தில் அரியணையை ஏற்க தகுதி பெற்றவர்கள் ஆண்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அகாஜா கொண்டிருந்தார்.

அபோமியில் உள்ள அரண்மனை சுவற்றில் இப்போதும் சில பகுதிகளில் வெண்கல சிற்பக்காட்சிகளில் வழி, வழியாக வந்த ராஜ்ஜிய குடும்பம் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால், அதில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாங்பே பற்றிய அறிகுறி இல்லை என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியொருவர் வாழ்ந்தாரா என்று கூட சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

பழங்கால ராணியின் வாழ்க்கை முறையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பண்பாளர்களாக ராணியின் மெய்க்காப்பாளர்களாக விளங்கிய பெண்களின் தலைமுறைகள் உள்ளன.

இந்த பெண் மெய்க்காப்பாளர்களின் தோற்றம் தொடர்பாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் பல குறிப்புகள் உள்ளன.

சிலர் ஆரம்பத்தில் யானை வேட்டையாளர்களாக இந்த அமேசானிய பெண்கள் இருந்தனர் என்றும் அவர்கள் காலப்போக்கில் மனிதர்களை வேட்டையாடக் கூடியவர்களாக மாறினர் என்றும் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலானவர்கள், இந்த கன்னிப்பெண் மெய்க்காப்பாளர்கள் ஹாங்பே ராணிக்கு பிறகு ராஜ்ஜியத்துக்கு தலைமை தாங்கிய ராஜாக்களுக்கும் மெய்க்காப்பாளர்களாக வாழ்ந்தனர் என்று கூறுகின்றனர்.

இந்தக் கூற்று ஏற்புடையதாக உள்ளது என்கின்றனர், இவர்களின் வரலாறை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.

அமேசான் வீராங்கனைகளின் வழி வந்தவர்களே ஹாங்பே அரசியின் உதவிப் பெண்களாக உள்ளனர்.

பட மூலாதாரம், Fleur Macdonald

இதன்படி, 1818 முதல் 1858இல் டஹோமியை ஆட்சி செய்த மன்னர் கெசோதான் முதல் முறையாக தமது ராணுவப்படையில் அமேசான் பெண்களை அதிகாரபூர்வ இணையச் செய்கிறார். அந்த காலத்தில் ஐரோப்பிய அடிமை வர்த்தகம் தலைதூக்கியிருந்ததால் ராணுவத்தில் சேர ஆள் பற்றாக்குறை இருந்துள்ளது. அதை சமாளிக்கும் விதமாக இந்த பெண் மெய்க்காப்பாளர்களை சேர்க்கும் ஏற்பாட்டை மன்னர் கெசோ செய்திருக்கக் கூடும் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

டஹோமி ராஜ்ஜியத்தில் அமேசான்கள் அங்கீகரிக்கப்பட்ட படை வீராங்கனைகளான பிறகு அவர்களின் பலம் பெருகியது. ஏற்கெனவே அவர்கள் டஹோமி ஆளுகையில் சிறந்த பலசாலிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தனர்.

வூடூ மத அடிப்படையில் தற்போதைய பெனின் நாட்டின் அலுவல்பூர்வ மதமான வென்டூன் மேம்பட்டதும் இந்த காலகட்டத்தில்தான். புவியை படைக்க ஆண் கடவுளும், பெண் கடவுளும் சேர்ந்தே வந்ததாகவும் மதம், அரசியல், ராணுவம் என எதுவானாலும் அதில் ஆணும் பெண்ணும் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற போதனையை இந்த மதம் வலியுறுத்தியது.

Short presentational grey line
Short presentational grey line

பல ஐரோப்பிய அடிமை வர்த்தகர்கள், மிஷனரிகள் மற்றும் காலனித்துவவாதிகள் தங்களுடைய குறிப்புகளில், இந்த அமேசானிய அச்சமற்ற பெண்களுடனான தங்களின் சந்திப்புகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும், அமேசான்கள் பற்றிய நேரடி வரலாற்றுக் குறிப்புகள் நம்பக்கூடியவையாக இல்லை.

1861ஆம் ஆண்டில், இத்தாலிய பாதிரியார் ஃபிரான்செஸ்கோ போர்ஹெரோ, ஒரு ராணுவப் பயிற்சி பற்றி விவரித்திருந்தார், அதில் ஆயிரக்கணக்கான பெண்கள் 120 மீட்டர் உயரமுள்ள முட்கள் நிறைந்த அகாசியா புதர்களில் வெறுங்காலுடன் நடந்தனர் என்று குறிப்பிடுகிறார்.

1889ஆம் ஆண்டில், பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகி ஜீன் பயோல், தான் நேரில் கண்ட ஒரு இளம் அமேசான் பெண் கைதியின் அணுகுமுறை பற்றி விவரித்தார். “[அவர்] சர்வ சாதாரணமாக மேலே நடந்து, இரண்டு கைகளாலும் தன் வாளை மூன்று முறை சுழற்றினாள், பின் தலையை உடற்பகுதியில் இணைத்திருந்த கடைசி சதையை வெட்டினார்… பின்னர் அவர் அந்த ஆயுதத்திலிருந்து ரத்தத்தை நக்கி விழுங்கினார்,” என்று குறிப்பிடுகிறார்.

19ஆம் நூற்றாண்டில் ராஜ்யத்திற்கு வருகை தந்த ஐரோப்பியர்கள் டஹோமியின் பெண் போராளிகளை அமேசான்கள் என்றும் கிரேக்க புராணங்களின் இரக்கமற்ற போர்வீரர்கள் என்றும் அழைத்தனர்.

இன்று, வரலாற்றாசிரியர்கள் இந்த பெண் மெய்க்காப்பாளர்களை மினோ என்று குறிப்பிடுகின்றனர். இதை உள்ளூர்தொலைபேசி மொழியில் ‘எங்கள் தாய்மார்கள்’ என்று மொழிபெயர்க்கலாம்.

இருப்பினும், பெனினில் பிறந்து இப்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் பேராசிரியராகவும், கோட்டோனுவில் உள்ள ஆப்ரிக்க பொருளாதார கல்லூரியின் நிறுவனருமான லியோனார்ட் வாண்ட்செகான், சமகால டஹோமி சமுதாயத்தில் இந்த போர்வீராங்கனைகளின் பங்கு துல்லியமாக பிரதிபலிக்கவில்லை என்று கூறுகிறார்.

“மினோ என்றால் சூனியக்காரி” என்று அவர் வாதிடுகிறார்.

பெனின் பெண் போராளிகளின் வரலாறு

பட மூலாதாரம், The Picture Art Collection/Alamy

இன்று, இப்போதைய ராணி ஹாங்பே மற்றும் அவரது அமேசான் பெண்களின் பங்களிப்பு என்பது வெறும் சடங்கு போலவே உள்ளது. ராணியின் வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலில் நடக்கும் மத சடங்குகளுக்கு மட்டுமே அவர் தலைமை தாங்குகிறார். ராணி ஹாங்பேயின் புகைப்படங்களை எடுக்க நான் கேட்டபோது, ​​மற்றொரு அமேசானான பியரெட், தனது எஜமானியின் மீது ஒரு சம்பிரதாய துணியை வைத்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார்.

ஆடை தயாரிப்பாளரான பியர்ரெட் ஒவ்வொரு ஆண்டும் தனது ராணிக்கு ஒரு புதிய குடையை வடிவமைக்கிறார். குறியீடுகளால் நிரம்பிய, விரிவாக அலங்கரிக்கப்பட்ட இந்த ஆடை, ஒருமுறை டஹோமி அரசவையில் காட்சிப்படுத்தப்பட்டது.

ராணி ஹாங்பேயின் குடை ஒப்பீட்டளவில் எளிமையானது, இருப்பினும் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், அது பெரும்பாலும் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளின் எலும்புகளால் அலங்கரிக்கப்பட்டன. பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்களையும், அமேசான்கள் போரில் பயன்படுத்திய வட்ட – தலை வடிவங்களிலும் இது தயாரிக்கப்பட்டது.

Short presentational grey line
Short presentational grey line

இந்த கொடிய ஆயுதங்கள் அரண்மனை கட்டடங்களின் மண் சுவர் வேலைப்பாடுகளில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அரசரும் தனது முன்னோடிக்கு அடுத்ததாக ஒரு புதிய அரண்மனையைக் கட்டுவார்கள், முந்தையதை ஒரு கல்லறையாக விட்டுவிடுவார்கள்.

டஹோமி பேரரசின் கடைசி மன்னரான பெஹான்சின், பிரெஞ்சுக்காரர்கள் வருவதற்கு முன்பு அரண்மனைகளை எரித்த போதிலும், ஒரு பகுதி இன்னும் அபோமியில் வீற்றிருக்கிறது. துருப்பிடித்த யுனெஸ்கோவின் சின்னம், அதன் நுழைவு வாயிலில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

எதிரிகளை அழிக்க அமேசான்கள் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு தூசு நிறைந்த அலமாரியில், மனித மண்டை ஓட்டில் இருந்து பாயும் குதிரை வால் போன்ற ஒரு கோப்பை வடிவிலான வெப்ப மேலங்கி போன்ற ஆடை இருந்தது. அதை அரசருக்கு ஒரு அமேசான் மெய்க்காப்பாளர் போரின் முடிவில் வழங்கியதாக கருதப்படுகிறது.

டாஹோமே பேரரசின் வரலாறு தற்கால பெனின் நகரில் உள்ள அபோமே அரண்மனைகளில் வெளிப்படுகிறது.

பட மூலாதாரம், ullstein bild/Getty Images

அமேசான் பெண்கள் பற்றிய தகவல்கள் மீது எப்போதுமே ஒருவித ஈர்ப்பு இருந்தது, ஆனால் அதன் தன்மை மாறிக்கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பிளாக் பாந்தர் திரைப்படம்.

ஆனால் மேற்கு ஆப்பிரிக்காவில் பெண்களின் வரலாறு பற்றிய புதிய பாடத்தை அறிமுகப்படுத்திய அபோமி-கலாவி பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆர்தர் விடோ மற்றொரு கோட்பாட்டைக் கொண்டுள்ளார்.

“ஆப்ரிக்காவில் பெண்களின் நிலை மாறி வருவதால், மக்கள் கடந்த காலத்தில் அவர்களின் பங்கைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

அமேசானிய பெண்கள் இரக்கமற்று இருந்தனர் என்ற கருத்தாக்கத்தை இதுவரை வாழ்ந்த பலரும் கொண்டிருந்தாலும், அவர்களின் போர் நடவடிக்கைகள் மிகைப்படுத்தப்படும் கருத்துகளை வான்ட்செக்கான் என்ற ஆய்வாளர் ஏற்கவில்லை.

“போர் வீராங்கனைகளாக அவர்கள் தங்களுடைய பணியை செய்தார்கள். அவர்கள் படைவீரர்களாக என்ன சாதித்தார்கள் என்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வான்ட்செக்கான்.

சமுதாயத்திற்கு முக்கியமான ஒரு தொழில் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் இடத்தில், ஆண்களுக்கு இணையாக இந்த சிறப்பான பலம் வாய்ந்த பெண்களின் பிரிவை நாம் ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கேட்கிறார் அவர்.

அபோமியின் மேற்கில் உள்ள வான்ட்செக்கான் வளர்ந்த கிராமம், அமேசான்களின் பயிற்சி முகாமின் தளமாக அந்தக்காலத்தில் இருந்தது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கிராமத்திற்கு குடிபெயர்ந்த ஒரு வயதான அமேசானை இவரது அத்தை கவனித்துக் கொண்டார்.

இந்த கிராமவாசிகள் இன்னும் முன்னாள் ராணுவ வீரர்களை, “வலிமையான, சுதந்திரமான மற்றும் சக்திவாய்ந்தவர்கள்” என்று நினைவுகூர்கின்றனர், என வான்ட்செக்கான் கூறினார்.

கிராமத்தில் கடைப்பிடிக்கப்படும் அதிகார நிலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க இந்த பெண்மணி தயங்கியதில்லை. காரணம், அவர் ஒரு அமேசானாக விளங்கினார். லட்சியமும் கனவும் சுதந்திரமும் நிறைந்த இந்த பெண்மணியின் சிந்தனை, தனது தாய் உள்பட உள்ளூர் பெண்களாலும் ஈர்க்கப்பட்டதாகக் கூறுகிறார் வான்ட்செக்கான்.

இந்த காரணத்துக்காகவே அமேசான் பெண்கள் இன்றும் அவசியமானவர்கள் என்கிறார் வான்ட்செக்கான். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் அவர்களுடன் ஏன் சரிசமமாக பெண்கள் இருக்கும் நிலையை உருவாக்கக் கூடாது?

ஹேங்பே அரசி என்பது இப்போது ஒரு சம்பிரதாயப் பதவி மட்டுமே.

பட மூலாதாரம், Fleur Macdonald

அமேசானிய பெண்களின் ராணுவ ஆற்றல் மட்டுமே அவர்களை சிறப்பானவர்களாக்கவில்லை. அவர்களின் சமூக பங்களிப்பும்தான் அவர்கள் பிறருக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறது என்கிற செய்தியை ஆப்பிரிக்க சமூகத்துக்கு உணர்த்தியது பிளாக் பாந்தர் திரைப்படம்.

வரலாற்றில் அதிகம் அறியப்படாத இந்த அமேசானிய ஆப்ரிக்க பெண் மெய்க்காப்பாளர்களின் பழங்காலம் முதல் இந்தக் கால வாழ்க்கை முறையை பற்றிய அறிந்த பிறகு தற்போதைய ராணி ஹாங்பேயிடம் இருந்து நான் விடைபெற்றேன்.

பிறகு அவர்கள் வாழ்ந்த நகரத்தைக் கடந்து வந்தபோது, சாலையில் ஆங்காங்கே மிக உயரமான மற்றும் விரிந்த தோள்களுடன் கம்பீரமாக அமேசானிய பெண்களின் சிலைகள் காட்சியளித்தன. அவை ஒவ்வொன்றும் ராணியின் மெய்க்காப்பாளராக இருக்கும் ரூபினெல் போன்ற பலரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »