Press "Enter" to skip to content

ஸ்டீஃபன் ஹாக்கிங் பிறந்தநாள்: காலப்பயணம் செய்பவர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்த அறிவியல் மேதை

பட மூலாதாரம், JUDE EDGINTON/DISCOVERY COMMUNICATIONS

ஸ்டீஃபன் ஹாக்கிங். சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிவியலாளர். வீல் சேரில் அமர்ந்துகொண்டு, கணினி குரல் உதவியோடு பேசிக்கொண்டு, மொத்த உலகின் கவனத்தையும் தம் பக்கமாகத் திருப்பியவர்.

”எனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை. அதற்காக விரைவாக இறந்து போக வேண்டும் என்றில்லை. நான் முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன,” என்று ஒரு முறை கூறினார் ஸ்டீஃபன் ஹாக்கிங். அந்த அனைத்து பணிகளையும் முடித்துவிட்டாரா என்று தெரியவில்லை.

ஆனால், அவருடைய கோட்பாடுகள், அறிவியல் உலகில் பல்வேறு விஷயங்களில் தெளிவான புரிதலைக் கொண்டுவந்தது. கருந்துளை விரிவடைகிறது என்றே நினைத்துக் கொண்டிருந்த சூழலில், அது சுருங்குகிறது என்ற கோட்பாட்டை முன்வைத்து, அதை நிரூபித்துக் காட்டினார்.

அனைத்து அறிவியல் மாமேதைகளையும் போலவே, ஸ்டீஃபன் ஹாக்கிங்கும் காலப்பயணம் குறித்து ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்தால் காலப்பயணிகளுக்கு என அவர் ஒரு பார்ட்டியையும் ஏற்பாடு செய்தார். அந்த பார்ட்டியின் மூலம், காலப்பயணம் உண்மையா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் கருதினார்.

ஒருமுறை, காலப்பயணம் என்பதைப் பற்றிய ஒரு சின்ன பரிசோதனையைச் செய்து பார்க்க, காலப்பயணம் செய்பவர்களுக்கு என ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்தார்.

அந்த பார்ட்டியை பற்றி அவருடைய “இன் டூ தி யூனிவர்ஸ்” ஆவணப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது 2009-ம் ஆண்டு. பேரா.ஹாக்கிங் ஷாம்பெயின் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த பார்ட்டி நடந்து முடியும் வரை அவர் யாருக்கும் அழைப்புகளை அனுப்பவில்லை. அது நடந்து முடிந்தபின், எதிர்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு வரக்கூடிய காலப்பயணிகளை வரவேற்கும் நோக்கில் அவர் அந்த பார்ட்டியை நடத்தினார்.

இறுதி மரியாதையில் காலப்பயணிகளுக்கு அனுமதி

“ஒருவேளை என்றாவது ஒருநாள், எதிர்காலத்தில் யாராவது என்னுடைய பார்ட்டிக்கான அழைப்பிதழை பார்த்துவிட்டு, வார்ம் ஹோல் வழியாக காலத்தில் பின்னோக்கிப் பயணித்து பார்ட்டியில் வந்து கலந்துகொள்ளலாம்,” என்று இன் டூ தி யூனிவர்ஸ் ஆவணப்படத்தில் அதுகுறித்து அவர் கூறியிருந்தார்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்

பட மூலாதாரம், Getty Images

அதோடு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் நடத்திய அந்த காலப்பயணிகளுக்கான பார்ட்டியின் அழைப்பிதழில், காலப்பயணிகளுக்குத் தெளிவான முகவரியைக் கொடுப்பதற்காக, இடம், நேரம் மட்டுமின்றி, கால-வெளியிலும் (Space-time coordinates) துல்லியமாகக் குறிப்பிட்டிருந்தார்.

2009-ம் ஆண்டு, காலப்பயணிகளுக்கான பார்ட்டியை ஒருங்கிணைத்தவர், அதில் யாரும் கலந்துகொள்ள வருகிறார்களா என்று எதிர்பார்த்தார். இறுதியில், இந்த பார்ட்டியில் எந்த காலப்பயணிகளும் வராததே, அது சாத்தியமில்லை என்பதற்கான ஆதாரம் என்று வேடிக்கையாகக் கூறினார்.

இதேபோல், ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இறுதி மரியாதை சேவைகளை ஒருங்கிணைத்தவர்கள், அதில் கலந்துகொள்ள காலப்பயணிகளும் பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

76 வயதில் உயிரிழந்த கோட்பாட்டு இயற்பியலாளர் ஹாக்கிங்கிற்கு இறுதி மரியாதை செலுத்த விரும்பும் யாராக இருந்தாலும், பொதுத்தளத்தில் அதற்குப் பதிவு செய்யலாம். பதிவு செய்பவர்கள், அவர்களுடைய பிறந்த தேதியைக் குறிப்பிடவேண்டும். அது டிசம்பர் 31, 2038-ம் தேதிக்குள் எந்தத் தேதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்,” என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

அவருடைய இறுதி மரியாதை நாளின்போது, அதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் நிகழ்காலத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதிசெய்துகொண்ட ஸ்டீஃபன் ஹாக்கிங் அமைப்பின் (Stephen Hawking Foundation) செய்தித்தொடர்பாளர், “நம்மைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு இன்னும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை தான். இருப்பினும், ஆதாரம் இல்லையென்பதால், காலப்பயணம் சாத்தியமில்லை என்று நம்மால் முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது. சாத்தியமில்லை என்று நிரூபிக்கப்படும் வரை, அனைத்துமே சாத்தியம்தான்,” என்று கூறினார்.

காலப்பயணத்திற்கான சத்தியக்கூறு

ஹாக்கிங் பெருவெடிப்பு கோட்பாட்டை மிகவும் எளிமையாக விளக்கினார். அவருடைய உலகத்தில், கடவுளுக்கு இடமிருக்கவில்லை. பேரண்டத்தில் உள்ள அனைத்தின் தோற்றமும் ஒன்றுமே இல்லாத வெறுமையிலிருந்து தான் தொடங்கியது என்று அவர் நம்பினார்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்

பட மூலாதாரம், Getty Images

அவருடைய “ஆழமான கேள்விகளுக்கான அறிவார்ந்த பதில்கள்(Brief Answers to the Big Questions),” என்ற நூலில், “பெருவெடிப்பிற்கு முன்பு எதுவுமே இருக்கவில்லை. கடவுளே கூட பேரண்டத்தைப் படைக்கவில்லை,” என்று குறிப்பிட்டிருப்பார்.

மேலும், “அறிவியல் விதிகளின்படி, இந்தப் பேரண்டம் தன்னிச்சையாக ஒன்றுமே இல்லாத வெறுமையிலிருந்து உருவானது என்று நான் நினைக்கிறேன். உருவாக்கியவர் என்றொருவர் இருந்திருக்க, காலம் என்று ஒன்று இருந்திருக்கவேண்டும். அதுவுமே தொடக்கத்தில் இருக்கவில்லை,” என்று எழுதியிருப்பார்.

ஒருவேளை கடவுள் இருந்தாலும்கூட, “இயற்பியல் விதிகளுக்கு முரணற்ற ஒரு கடவுள் இருக்கமுடியும் என்றாலும், அது இந்தப் பேரண்டத்தின் செயல்பாட்டில் நேரடியாக எந்தவிதத் தாக்கத்தையுமே செலுத்தாத ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்,” என்றும் கூறியுள்ளார்.

“பேரண்டத்தின் விதிகள், கடவுளால் ஆணையிடப்பட்டதாகவோ இல்லாமலோ இருக்கலாம். ஆனால், அவற்றில் உள்நுழைந்து, அந்த விதிகளை மீறுவது அல்லது மாற்றுவது கடவுள் என ஒருவர் இருந்தால், அவராலும்கூட முடியாது” என்று கூறியவர், கடவுள் என்ற கோட்பாட்டைப் போலவே, காலப்பயணத்தையும் அணுகினார்.

கடவுள் இருப்பு சாத்தியமில்லை என்று நினைத்தவர், அடுத்ததாக, “மிக நீண்ட” காலத்திற்குள் சாத்தியப்படக்கூடும் என்று பலரும் கருதக்கூடிய காலப்பயணத்தின் சாத்தியக்கூறுகளைத் தெரிந்துகொள்ளத் தொடங்கினார்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்

பட மூலாதாரம், Getty Images

விஞ்ஞானி ஹாக்கிங், காலப்பயணிகளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்தாலும், அவர் அது முற்றிலுமாகச் சாத்தியமில்லை என்று ஒதுக்கவில்லை. பேரண்டத்தினுடைய விதிகளின்படி, அதற்கு ஓரளவுக்கு சாத்தியம் இருப்பதாகக் கூறியுள்ளார். “எம் தியரி (M Theory) என்ற கோட்பாட்டின் கீழ் இதை அவர் கொண்டுவந்தார். அதன்படி, பேரண்டத்தில் கால-வெளியின் நான்கு பரிமாணங்களையும் தாண்டி, மேலும் ஏழு பரிமாணங்கள் இருக்கலாம்.

இதனால், “அதிவிரைவான விண்வெளிப் பயணம் மற்றும் பின்னோக்கி காலப்பயணம் செய்வதை, பேரண்டம் குறித்த நம்முடைய இப்போதைய புரிதல்களை அடிப்படையாக வைத்து சாத்தியமில்லை என்று ஒதுக்கிவிடமுடியாது. அறிவியல் புனைகதை ரசிகர்கள் நம்பிக்கையைக் கைவிடவேண்டாம். எம் தியரியில் அதற்கான சாத்தியம் இருக்கலாம்,” என்று எழுதினார் ஹாக்கிங்.

கருந்துளை கோட்பாடு, பூமியைத் தாண்டி இந்தப் பேரண்டத்தில் வேறு எங்கேனும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆய்வுகள், பெருவெடிப்புக் கோட்பாடு, கால-வெளி குறித்த ஆய்வுகள் என்று சமகால அறிவியலின் முதன்மையான ஆய்வுகளில் அவருடைய பங்கு இருக்கிறது.

இவற்றோடு, தாம் தெரிந்துகொண்ட அனைத்தையும் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எழுத வேண்டும் என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார். காலம் குறித்த சுருக்கமான வரலாறு (A Brief History of Time), அனைத்தைப் பற்றியுமான கோட்பாடு (The Theory of Everything), காலம் மற்றும் வெளியின் இயற்கை (The Nature of Space and Time), ஆழமான கேள்விகளுக்கான அறிவார்ந்த பதில்கள்(Brief Answers to the Big Questions) போன்ற நூல்களை அறிவியல் விரும்பிகள் மட்டுமின்றி பலரும் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »