Press "Enter" to skip to content

சீனாவிடம் விலகி இந்தியாவுடன் நெருங்கும் இலங்கை: சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம் செய்வது ஏன்?

  • ரஞ்சன் அருண்குமார்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் கடந்த சில மாதங்களாக சில உரசல்கள் தொடர்ந்த பின்னணியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு இன்று (08) அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ விஜயமாகவே, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவிக்கின்றது.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் என்ன பிரச்சினை?

இலங்கைக்கு உரம் ஏற்றிய கப்பலொன்று கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நாட்டை வந்தடைந்த நிலையில், குறித்த உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்றீரியாக்கள் அடங்கியுள்ளதாக தெரிவித்து இலங்கை விவசாய ஆய்வாளர்கள் அந்த உரத்தை நிராகரித்திருந்தனர்.

சுமார் 20,000 மெற்றிக் தொன் உரத்தையே, இலங்கை இவ்வாறு நிராகரித்திருந்தது.

சீனாவினால் கொண்டு வரப்பட்ட உரம் தரமற்றது என தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த உரத்தை கொண்டு வந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 70 நாட்கள் நங்கூரமிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், தமது உரம் தரத்தில் சிறந்தது எனவும், இந்த உரத்தை மூன்றாவது தரப்பாக உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வு கூடமான சுவிஸ் எஸ்.ஜி.எஸ் நிறுவனத்திடம் அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும் என சீன தூதரகம் இலங்கையை வலியுறுத்தியது.

இந்த ஆய்வு கூடத்தினால் வெளியிடப்படும் பெறுபேற்றை இரு நாடுகளும் நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கடந்த ஆக்டோபர் மாதம் சீனா அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்திருந்தது.

உரத்தில் தீங்கும் விளைவிக்கும் பதார்த்தம் இருக்குமாயின், அதனை தாம் நிபந்தனையின்றி மீள நாட்டிற்கு கொண்டு செல்வதாகவும், தீங்கு விளைவிக்கும் பதார்த்தம் இல்லையாயினும், பணம் செலுத்தி உரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சீனா கூறியது.

எனினும், சீனாவின் இந்த கோரிக்கைக்கு எந்தவித இணக்கப்பாடும் இன்றி, உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பை விட்டு வெளியேறியது.

இவ்வாறான பிரச்சினை தொடர்ந்த நிலையில், இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை, சீனா கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கியது.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமையவே, தாம் பணம் செலுத்தவில்லை என மக்கள் வங்கி தெரிவித்த போதிலும், சீனா, மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கியது.

இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை மேலும் வலுப் பெற ஆரம்பித்திருந்தது.

இவ்வாறான நிலையில், சீன நிறுவனத்திடமிருந்து உரத்தை கொள்வனவு செய்த உள்நாட்டு முகவர் நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில், கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு கடந்த 3ம் தேதி தளர்த்தப்பட்டது.

சீனா வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்

பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka

இரண்டு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு மனுவின் ஊடாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவை அடுத்து, நேற்றைய தினம் (09) தரமற்ற உரத்தை அனுப்பியதாக கூறப்படும் சீன நிறுவனத்திற்கு, மக்கள் வங்கி 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தியது.

வடக்கில் மின்சக்தி திட்டத்தை கைவிட்ட சீனா

யாழ்ப்பாணத்திற்கும், தமிழகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இலங்கைக்கு சொந்தமான மூன்று தீவுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படவிருந்த மூன்று மின்சக்தி திட்டங்களை சீனா கடந்த டிசம்பர் மாதம் முதலாம் தேதி கைவிட்டது.

யாழ்ப்பாணத்திற்கு சொந்தமான நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளிலேயே இந்த திட்டத்தை முன்னெடுக்க சீனா முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில், ”மூன்றாவது தரப்பினரின் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வடக்கிலுள்ள மூன்று தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின்சக்தி திட்டம் கைவிடப்படுகின்றது” என கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவித்திருந்தது.

இவ்வாறு கைவிடப்பட்ட திட்டத்தை சீனா மாலைத்தீவில் நிறுவுவதற்கான உடன்படிக்கையில், கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி கைச்சாத்திட்டிருந்தது.

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே, வடக்கிலுள்ள மூன்று தீவுகளை இலங்கை சீனாவிற்கு வழங்கவில்லை என்ற கருத்து, அந்த காலப் பகுதியில் பலராலும் தெரிவிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, இந்தியாவிற்கான அதிகாரபூர்வ விஜயமொன்றை கடந்த டிசம்பர் மாதம் முதலாம் தேதி மேற்கொண்டிருந்தார்;.

பஷில் ராஜபக்ஸ, இந்திய விஜயத்தை ஆரம்பித்த அந்த தருணத்திலேயே, சீனா, வடக்கிலுள்ள மின்;சக்தி திட்டத்தை கைவிட்டு, மாலைத்தீவில் அந்த திட்டத்தை முன்னெடுக்கும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இவ்வாறு சீனாவினால் கைவிடப்பட்ட திட்டத்தை, இந்தியாவிற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனா வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்

பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka

சீன தூதுவரின் வடக்கு விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர், வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதியை இலக்காக கொண்ட விஜயமொன்றை கடந்த மாதம் 15ம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, இந்தியாவை அண்மித்துள்ள யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு 2 கோடி ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் மற்றும் கடற்றொழில் சார் உபகரணங்களை சீன தூதுவர் வழங்கி வைத்திருந்தார்.

அதேபோன்று, பாக்குநீரிணையிலுள்ள மணல் திட்டுக்களையும் சீன தூதுவர் படகில் சென்று பார்வையிட்டிருந்ததை அனைவராலும் பேசப்பட்ட ஒன்றாக காணப்பட்டது.

வடக்கில் சீனாவினால் கைவிடப்பட்ட திட்டம், இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களின் பின்னரே, சீன தூதுவர் வட மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

சீன தூதுவரின் அடுத்த கட்ட நகர்வுகள்

வட மாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர், டிசம்பர் மாதம் 17ம் தேதி தனது வடக்கு விஜயத்தை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, கொழும்பிற்கு வருகைத் தந்த சீன தூதுவர், அடுத்தகட்ட நகர்வாக, இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸவை சந்தித்திருந்தார்.

எதிர்கட்சித் தலைவரை சந்தித்த சீன தூதுவர், சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் சிறுநீரக டயாலிசிஸ் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு, எதிர்கட்சித் தலைவரின் ஊடாக தேவை நிமிர்த்தம் வழங்கும் நோக்கிலேயே இந்த உதவி திட்டம் வழங்கப்பட்டது.

அதன்பின்னர், தென் மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர், அங்கும் பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கி வைத்தார்.

இந்த காலப் பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட மேலும் சில அரசியல்வாதிகளையும் சீன தூதுவர் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

சீனா வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்

பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka

சீனாவின் அதிரடி நடவடிக்கைகள்

கடந்த சில மாதங்களில் மாத்திரம் சீனா, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் பல மில்லியன் கணக்கான ரூபா செலவில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பல்வேறு உதவிகளை வழங்கி வருவதை காண முடிகின்றது.

உரம் பிரச்சினை மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்கள் கைநழுவிய பின்னணியிலேயே, சீனா இவ்வாறான பாரிய உதவிகளை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம்

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படக்கூடிய வகையிலான சில சம்பவங்கள் அண்மை காலத்தில் இடம்பெற்ற பின்னணியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான அதிகாரபூர்வ விஜயத்தில் இன்று (08) ஈடுபட்டுள்ளார்.

இலங்கை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, எதிர்வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில், அதற்கு முன்னைய நாள் சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமையானது, பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

அத்துடன், தெற்காசியாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை எரிபொருள் தாங்கிகள், இந்தியாவிற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை கடந்த 6ம் தேதி கைச்சாத்திடப்பட்ட பின்னணியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று வருகைத் தந்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், சீனாவுடனான உறவிலிருந்து சற்று விலகி, இந்தியாவுடன் நெருங்கிய உறவை பேணும் வகையிலான கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ள இந்த தருணத்தில், சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளது.

இந்த விஜயமானது, இலங்கையுடனான உறவை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »