Press "Enter" to skip to content

எகிப்து, கிளியோபாட்ரா வரலாறு: சகோதரியை திருமணம் செய்த மன்னர்கள் – வரலாற்றில் அதிகம் அறியப்படாத தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

எகிப்து அதன் பெரிய பிரமிடுகள், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் மம்மிகள் மற்றும் அதன் தங்க பொக்கிஷங்களுக்காக மிகவும் பிரபலமானது. ஆனால் பண்டைய எகிப்தைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? பெரிய பிரமிட் அடிமைகளால் கட்டப்பட்டதா? மம்மிகள் எப்படி உருவாக்கப்பட்டன? எகிப்தை பற்றிய ஆய்வு செய்யும் ஜாய்ஸ் டில்டெஸ்லி பகிர்ந்து கொண்ட முக்கியமான 5 தகவல்கள்.

ஒட்டகங்களில் சவாரி செய்யவில்லை

வம்ச யுகத்தின் இறுதி வரை ஒட்டகம் எகிப்தில் தொடர்ந்து பயன்படுத்தப்படவில்லை. மாறாக, எகிப்தியர்கள் கழுதைகளை சுமக்கும் மிருகங்களாகவும், படகுகளை மிகவும் வசதியான போக்குவரத்து வழிமுறையாகவும் பயன்படுத்தினர்.

நைல் நதி அவர்களின் வளமான நிலத்தின் மையத்தில் பாய்ந்து, ஒரு இயற்கையான நெடுஞ்சாலையை உருவாக்கியது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்ல வேண்டியவர்களுக்கு நீரோட்டம் உதவியது. அதே நேரத்தில் காற்று எதிர் திசையில் பயணம் செய்ய விரும்புவோரின் வாழ்க்கையை எளிதாக்கியது.

கால்வாய்கள் மூலம் நதியோரக் குடியிருப்புகள், குவாரிகள் மற்றும் கட்டுமான தளங்களுடன் இணைக்கப்பட்டன. தானியங்கள் மற்றும் தானியத் தொகுதிகளை கொண்டு செல்ல பெரிய மரத் தோணிகள் பயன்படுத்தப்பட்டன.

பெண்களுக்குச் சம உரிமை

எகிப்து ஆணாதிக்கம் மிக்க சமூகமாக இருந்தது என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் எகிப்தில், ஆண்களும் பெண்களும் சட்டத்தின் பார்வையில் சமமாக நடத்தப்பட்டனர். இதன் பொருள் என்னவென்றால் பெண்கள் சொத்துக்களை வைத்திருக்கலாம், வாங்கலாம், விற்கலாம், வாரிசுரிமை மூலம் பெறலாம்.

பாரோ

பட மூலாதாரம், Getty Images

அவர்கள் ஆண் பாதுகாவலர்கள் பாதுகாப்பின்றி வாழலாம். கணவரை இழந்தால் அல்லது விவாகரத்து செய்திருந்தால், தங்கள் சொந்த குழந்தைகளை அவர்களே வளர்த்துக் கொள்ளலாம். பெண்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுக்கலாம்.

பண்டைய எகிப்தில் உள்ள அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மனைவி, ‘வீட்டின் எஜமானி’, வீட்டு விஷயங்கள் அனைத்துக்கும் பொறுப்பாக இருந்தார். அவர் குழந்தைகளை வளர்த்து குடும்பத்தை நடத்தினார். அதே நேரத்தில் திருமணத்தில் அதிக ஆளுமை கொண்டிருந்த கணவர் வெளியே ஊதியம் பெறும் பாத்திரத்தை வகித்தார்.

பெண்கள் நாட்டை ஆட்சி செய்யலாம்

எகிப்தின் அரசன் முந்தைய அரசனின் மகனாக இருப்பான் என்பது வழக்கம். ஆனால் எல்லா நேரங்களிலும் இல்லை. சில நேரங்களில் பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

எகிப்திய வரலாற்றில் குறைந்த பட்சம் மூன்று சந்தர்ப்பங்களில் பெண்கள் முடியை ஏற்றனர். சொந்தத் திறனில் ஆட்சி செய்தனர். மன்னரின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினர். இந்த பெண் ஆட்சியாளர்களில் மிகவும் வெற்றிகரமானவராகக் கருதப்படும் ஹட்செப்ஸுட், 20 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தை ஆட்சி செய்தார்.

சகோதரியை திருமணம் செய்யலாம்

எகிப்தின் சில மன்னர்கள் தங்களுடைய சகோதரிகள் அல்லது ஒன்றுவிட்ட சகோதரிகளை மணந்தனர். இந்தகைய திருமணங்கள், நாட்டின் ராணி பிறப்பிலிருந்தே தனது கடமைகளைச் செய்ய பயிற்றுவிக்கப்படுவதை உறுதிசெய்தது.

அரியணைக்கு அதிகம் பேர் போட்டியிடுவதைத் தவிர்க்கவும் இத்தகைய திருமணங்கள் பயன்படுத்தப்பட்டன. திருமணமாகாத இளவரசிகளுக்கு கணவர்கள் கிடைக்கும் வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.

பிரமிட்

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், சகோதர-சகோதரி திருமணங்கள் ஒருபோதும் கட்டாயமாக்கப்படவில்லை. அரச குடும்பத்திற்கு வெளியே இத்தகைய திருமணங்கள் பொதுவாக இல்லை. சகோதரி மனைவியாகிவிட்டால் அவரைக் குறிக்க பிரத்யேக சொல் பயன்படுத்தப்பட்டது.

பெரிய பிரமிட் அடிமைகளால் கட்டப்படவில்லை

கிரேட் பிரமிட் எனப்படும் மிகப் பெரிய பிரமிட் ஒரு லட்சம் அடிமைகளால் கட்டப்பட்டது என்று பண்டைய வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ் நம்பினார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் கடுமையான சூழ்நிலைகளில் கடுமையாக உழைக்கும் அவரது கருத்து நவீன திரைப்பட தயாரிப்பாளர்களிடையே குறிப்பிடத்தக்க வகையில் இன்றும் பிரபலம்.

ஆனால் உண்மையில் 5,000 நிரந்தர, சம்பளம் பெறும் பணியாளர்கள் மற்றும் 20,000 தற்காலிக பணியாளர்களால் பெரிய பிரமிட் கட்டப்பட்டது என்று தொல்பொருள் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த தொழிலாளர்கள் அடிமைகள் அல்லர். மூன்று அல்லது நான்கு மாத ஷிப்டில் பணிபுரிந்தனர். அவர்கள் பிரமிடுக்கு அருகிலுள்ள ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, பானம், மருத்துவ கவனிப்பு போன்றவை வழங்கப்பட்டன. பணியில் இறந்தவர்கள் அருகேயுள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர்.

கிளியோபாட்ரா அழகில்லாமல் இருந்திருக்கலாம்

பண்டைய எகிப்தின் கடைசி ராணியான ஏழாவது கிளியோபாட்ரா, ரோமின் மிக முக்கியமான பிரபலங்களான ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனி ஆகியோரின் இதயங்களில் இடம்பிடித்தார். அப்படியானால் அவர் நிச்சயமாக, சிறந்த அழகுடன் இருந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

நாணயம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் அவர் அப்படி இல்லை என்று அவருடைய நாணயங்கள் தெரிவிக்கின்றன.

மூக்கு, கன்னம், கண்கள் ஆகியவற்றைக் கொண்ட அவரது உருவம் நிச்சயமாக பேரழகுப் பெண்ணைப் போன்று இல்லை என்று இப்போது பலரும் கருதுகிறார்கள். எனினும் பெண்பால் தோற்றத்தை விரும்பாததாலும் இப்படிப்பட்ட உருவத்துடன் நாணயங்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கிளியோபாட்ராவை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை. இருப்பினும் அவருடைய அழகு, குரலிலும் நடத்தையிலும் இருந்தது என்று ஒரு பண்டைய வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »