Press "Enter" to skip to content

வெளிநாட்டு கல்வி: வெளிநாடுகளில் உதவித்தொகையுடன் உயர்கல்வி ஆராய்ச்சி வாய்ப்புகள் – மாணவர்களுக்கான ஒரு வழிகாட்டி கட்டுரை

  • முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
  • இணைப் பேராசிரியர், கெரியட் வாட் பல்கலைக் கழகம், பிரிட்டன்

பட மூலாதாரம், Getty Images

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஒன்பதாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்)

அதில், வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்புவது ஏன்? அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு உண்மையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறதா? அதை மாணவர்கள் திட்டமிட்டு எட்டிப்பிடிப்பதுவெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் உயர்கல்வி பயில விரும்புவது ஏன்? அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு உண்மையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறதா? அதை மாணவர்கள் திட்டமிட்டு எட்டிப்பிடிப்பது? உள்ளிட்ட விடயங்களை கட்டுரையாளர் அலசி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையில் வெளிநாடுகளில் உயர்கல்வி ஆராய்ச்சிக்கான‌ வாய்ப்பு எப்படி உள்ளது? அதனை எப்படி அறிந்து கொள்வது? வெளிநாடுகளில் உயர்கல்வி ஆராய்ச்சி கல்விக்கு உதவித் தொகை கிடைக்குமா? உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதிலளிக்கிறது.

ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் உலக நாடுகள்

ஒவ்வொரு நாடும் தனது தொழில்துறை வளர்ச்சியினை விரிவாக்க ஒவ்வொரு உத்தியினை கையாள்கிறது. மேற்குலகு நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியா, தைவான், ஜப்பான் போன்றவை பல்கலைக்கழகங்கள் வாயிலான‌ மனிதவள மேம்பாடு வளர்ச்சியை தொழில்துறை வளர்ச்சிக்கான திறவுகோலாக பார்க்கிறது. ஆய்வுத் துறையில் இருந்து பெறப்படும் புதுமை (Innovation) மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் அந்நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை சந்தைக்கு தேவையான உபகரணங்கள், மற்றும் நுட்ப வசதிகளுக்கு மூலதனமான உள்ளது. இவை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்து கோலாக இருப்பவை.

ஒவ்வொரு நாடும் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஆய்வுக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணியில் முதலீடு செய்கிறது. இம்முதலீட்டின் மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆய்வுத் துறையில் மனிதவள ஆற்றலை மேம்படுத்த இயலும். குறிப்பாக, பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகை மற்றும் முதுமுனைவு ஆய்வாளர்களுக்கான் ஊதியம் என பல்வேறு தளங்களில் இம்முதலீடு உதவுகிறது.

வெளிநாட்டுக் கல்வி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% மட்டுமே ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறையில் (Research and Development) முதலீடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் சீனா கிட்டத்தட்ட 2.2% மற்றும் இஸ்ரேல் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% செலவிடுகிறது. பத்து லட்சம் மக்களுக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை (Research and Development Personnel Per Million Inhabitants – R&DPPMI) இந்தியாவில் 409 குறைவாக உள்ளது, அதேசமயம் இந்தியாவிற்கு இணையான மக்கள் தொகை கொண்ட சீனாவில் R&DPPMI 3069 ஆக‌ உள்ளது. யுனெஸ்கோ 2018இல் வெளியிட்ட தரவுகளின்படி தென் கொரியாவின் R&DPPMI எண்ணிக்கை (9794) உலக நாடுகளை ஒப்பிடும் போது அதிகமாக உள்ளது.

ஆனால், தென் கொரியா போன்ற வளர்ந்த நாடுகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் இளம்நிலை பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் பட்டம் பயின்ற பின்னர் தொழில்துறை வேலைவாய்ப்புகளை நோக்கி நகர்கின்றனர். ஆகையால் தற்போது உயர்கல்வித் துறையில் (முதுநிலை மற்றும் ஆய்வு) இத்தையக நாடுகள் பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்களையே நம்பி உள்ளது. ஆகையால் இந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் நல் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இளம் நிலை மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளைப் போல அல்லாமல் உயர்கல்வி ஆராய்ச்சி துறைக்கான வாய்ப்பு என்பது மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் இதற்கான வாய்ப்பினை பெற மாணவர்கள் சற்றே கூடுதலாக உழைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் உயர்கல்வி ஆராய்ச்சி கல்விக்கு உதவித் தொகை கிடைக்குமா?

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்கு தங்கள் நாடுகளில் பிஎச்டி (PhD) முனைவர் பட்ட ஆய்வு செய்ய உதவித் தொகை தருகிறது. வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு வகையில் இந்த உதவித் தொகையினை பெறலாம்.

வெளிநாட்டுக் கல்வி

பட மூலாதாரம், Getty Images

1. அரசு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (Trust) தரும் உதவித் தொகைக்கான (Research Scholarship) போட்டியில் கலந்து கொண்டு உதவித் தொகையினை பெறுவது.

2. ஏற்கனவே நிதி உதவி பெறப்பட்ட‌ ஆய்வுத் திட்டத்தில் (Funded Projects) ஆய்வு உதவியாளர் (Research Assistant) அல்லது இளம் நிலை அறிவியலாளர் (Research Fellow) பதவிக்கு விண்ணப்பித்து அதன் வாயிலாகவும் பெற முடியும்.

இந்த இரண்டு வழி முறைகளிலும் மாணவர்கள் முதலில் செய்ய வேண்டியது, எந்த கல்வி நிறுவனத்தில் ஆய்வு படிப்பை மேற்கொள்ள விரும்புகிறார்களோ அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்களை தொடர்பு கொண்டு அவர்களது ஆய்வுக் குழுவில் பணியாற்றுவதற்கான சம்மதக் கடிதத்தை (Consent letter) பெறுவது.

ஒரு பேராசிரியரை மின்னஞ்சல் (E-mail) வாயிலாக‌ தொடர்பு கொள்ளும் முன்பு கீழ்கண்ட ஆவணங்களை முன் கூட்டியே தயார் செய்து வைத்து கொள்வது தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கும்.

1. தன் விவரக்குறிப்பு (Resume): நீங்கள் எங்கு படித்தீர்கள்? உங்கள் கல்வித் தகவல், ஆய்வு ஏடுகள் (Research Publications) ஏதேனும் பிரசுரித்துள்ளீர்களா, ஆய்வு பட்டறைகள் அல்லது மாநாடுகளில் கலந்து கொண்ட விபரம், ஆய்வு விருப்பம் (Research interest), உங்கள் முதுநிலை பட்டயப் படிப்பில் மேற்கொண்ட ஆய்வு திட்டம் (Project dissertation) குறித்த சிறு உரை என உங்களைப் பற்றிய மேலதிக தகவல்களை சுருக்கமாக பல தலைப்புகளில் விவரித்தல் அவசியம். முக்கியமாக உங்களது தொடர்பு எண், மின்னஞ்சல் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

வெளிநாட்டுக் கல்வி

பட மூலாதாரம், Getty Images

2. குறிப்பு கடிதம் (Reference Letter): உங்களுக்கு நன்கு தெரிந்த பேராசிரியர்களிடம் இருந்து உங்களது கல்வித் திறன், கற்றல் மற்றும் பயிற்றுவித்தலில் உங்களது ஆர்வம், ஆய்வு பட்டயப் படிப்பு உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது, ஒரு குழுவில் எப்படி உங்கள் பங்களிப்பை செய்வீர்கள்?, குறிப்பிட்ட‌ உதவித் தொகை எப்படி உங்கள் வாழ்க்கையின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

3. ஆய்வுச் சுருக்கம் (Abstract): உங்கள் ஆய்வின் நோக்கம் (Aim), ஏன் உங்கள் ஆய்வு நோக்கம் தனித்துவமானது (Uniqueness), அவை உலக அளவில் எத்தகைய நேர்மறையான தாக்கத்தை (Impact) விளைவிக்கும் என்று ஒரு பக்க அளவில் ஆய்வு சுருக்க உரையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அறிவியல் மற்றும் நுட்ப தளங்களில் ஆய்வு செய்வோர் ஆய்வு செயல்பாடுகளை ஒரு சிறிய வரைபடத்தின் (Graphical abstract) மூலம் எளிதாக விளக்கலாம். இந்த ஆய்வு உரையில் விண்ணப்பிக்கும் பேராசிரியரது ஆய்வுப் பணியுடன் உங்களது ஆய்வின் திட்டம் எப்படி ஒன்றுக்கொன்று மதிப்பு கூட்டும் (Value addition) என்பதை தெளிவாக குறிப்பிடவும். இது மிகவும் முக்கியமானது. ஒரு ஆய்வு திட்ட உரைக்கு இரு வழியான அறிவு பரிமாற்றம் (Two way knowledge transfer) இருந்தால் மட்டுமே உதவித் தொகை போட்டியில் வெற்றி பெற இயலும்.

4. மின்னஞ்சலின் உள்ளடக்கம் (Cover letter): பேராசிரியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது மரியாதையுடன் அவர்களது பெயரை குறிப்பிட வேண்டும். பெயருக்கு முன்னால் முனைவர் (Dr.) அல்லது பேராசிரியர் (Prof.) எனக் குறிப்பிடுதல் நாகரீகமானது. மிக உயர்ச்சி சொல்லான Sir அல்லது Madam போன்ற வழமையான வார்த்தைகளை தவிர்க்கலாம். மின்னஞ்சலில், மாணவர்களின் சுய அறிமுகம் மற்றும் குறிப்பிட்ட ஆய்வுக் குழுவை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறோம்? என்பதற்கான விளக்கத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். நீங்கள் எப்படி இந்த ஆய்வுக் குழுவில் பங்கேற்று உங்கள் பங்களிப்பை செய்ய முடியும் என விவரிக்க வேண்டும். ஒவ்வொரு பேராசிரியரும் தங்கள் ஆய்வுக் குழுவிற்கு மதிப்பு கூட்டலாக (Value addition) இருக்கும் மாணவர்களையே வரவேற்கிறார்கள். இந்த இடத்தில், ஆய்வுக் குழுவின் தலைவர் (பேராசிரியர்) வெளியிட்டு இருக்கும் பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளை (International peer-reviewed articles) மேற்கோள் காட்டுதல் கவனத்தை ஈர்க்கும். கடிதத்தில் எந்த உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிகிறோம், அதன் தொகை எவ்வளவு, விதிமுறைகள் மற்றும் விண்ணபிக்க வேண்டிய இறுதி நாள் குறித்த தகவல்களை குறிப்பிடுதல் அவசியமானது.

வெளிநாட்டுக் கல்வி

பட மூலாதாரம், Getty Images

மின்னஞ்சல் மேலாண்மை குறித்த கீழ்கண்ட‌ சில விவரங்களை நினைவில் கொள்ளுங்கள்:

  • ஒரு நாளைக்கு சராசரியாக இருபதில் இருந்து நூறு மின்னஞ்சல்களை பேராசிரியர்கள் பெறும் போது மாணவர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் கூடுதல் தகவல்கள் இருந்தால் தகவல் பரிமாற்றம் பயனுள்ளதாக இருக்கும்.
  • மின்னஞ்சலை அனுப்பும் முன்பு ஒரு முறை எழுத்துப்பிழை (Typos) உள்ளதா என அவசியம் சரி பார்த்தல் நலம்.
  • மின்னஞ்சலுடன் உங்களது தன் விவரக்குறிப்பு, ஆய்வுச் சுருக்கம் மற்றும் குறிப்பு கடிதங்களை மறக்காமல் இணைத்து விடுங்கள்.
  • பெரும்பாலான பேராசிரியர்கள் பணிச்சுமையில் இருக்கும் போது தொடர்ச்சியான நினைவூட்டல் மின்னஞ்சல்களை தவிருங்கள்.
  • ஒரே மாதிரியான கடிதத்தை எல்லா இடங்களிலும் பயன்படுத்தாதீர்கள். இவை உங்களுக்கான வெற்றி வாய்ப்பை பாதிக்கும். இயன்ற வரை ஒரே பல்கலைக்கழகத்தில் பல பேராசிரியர்களை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளாதீர்கள்.
  • மின்னஞ்சல் அனுப்பும் போது ஒரே மாதிரியான தகவலை ஒரு மணி நேரத்திற்குள் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பும் போது அவை Spam folder-க்கு செல்லும் வாய்ப்பு அதிகம். ஆகவே மின்னஞ்சல் மேலாண்மை (E-mail management) குறித்த புரிதல்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  • பேராசிரியர்கள் மின்னஞ்சலில் உங்களிடம் மேலதிக தகவல்களை கேட்கும் போது இயன்ற வரை உடன் பதில் அளியுங்கள் அல்லது எவ்வளவு காலத்தில் பதில் அளிக்க இயலும் என்பதை தெரியப்படுத்துங்கள். இவை உங்களின் மீதான மதிப்பை அதிகரிக்கும். பெரும்பாலான பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் கெடு விதிக்கப்பட்ட நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என‌ எதிர்பார்ப்பார்கள்.
  • ஆய்வு உதவித் தொகை விண்ணப்பத்திற்கு தேவையான சான்றிதழ்கள் (Transcripts), குறிப்பு கடிதங்களை முன் கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெளிநாட்டுக் கல்வி

பட மூலாதாரம், Getty Images

உலகெங்கும் உள்ள நாடுகளின் அரசுகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆய்வு படிப்பிற்கான உதவித் தொகையினை வழங்குகின்றன. கீழ்கண்ட உதவித் தொகை திட்டங்கள் உலகின் பரவலான கவனத்தைப் பெற்றவை. ஒவ்வொரு வருடமும் இந்த உதவித் தொகை திட்டம் குறிப்பிட்ட மாதத்தில் விண்ணப்பங்களை வழங்குவதால், இது குறித்து மாணவர்கள் முன் கூட்டியே திட்டமிடலாம்.

– Germany: DAAD PhD Scholarships (German Academic Exchange Service)

– South Korea: Global Korea Scholarship

– Japan: Japanese Government (MEXT) Postgraduate Scholarships

– Australia: PhD Top-Up Scholarship/Research Training Program

– Taiwan: Taiwan International Scholarship Program 2022

– China: Chinese Government Scholarship

– Canada: Queen Elizabeth Scholarships/Vanier Canada Graduate Scholarships (Vanier CGS)

இந்தியாவில் சம காலத்தில் பிஎச்டி முனைவர் பட்ட ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளதா?

இந்தியாவில் முனைவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆய்வு மாணவர்கள் 2 மாதம் முதல் ஒரு வருடம் வரை வெளிநாடுகளுக்கு வருகை தரு ஆய்வு மாணவராகச் (Visiting Research Studentship) சென்று படிக்க இயலும். இந்திய ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் நுட்பத் துறை (Department of Science and Technology), உயிரிநுட்பத் துறை (Department of Biotechnology) இரு நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இதற்கான‌ உதவித் தொகை வழங்குகிறது.

வெளிநாட்டுக் கல்வி

பட மூலாதாரம், Getty Images

உதாரணத்திற்கு பிரிட்டனில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் இந்தியாவின் DST/DBT இணைந்து நியூட்டன் பாபா வருகை தரு ஆய்வு திட்டம் (Newton-Bhabha PhD Placement Program) மூலம் இந்திய மாணவர்கள் பிரிட்டனில் உள்ள பல்கலையில் 4 மாதம் சென்று ஆய்வு செய்ய இயலும். அதே போல Commonwealth split-site scholarships, DAAD PhD visiting scholarship, SERB – Overseas Visiting Doctoral Fellowship Program போன்று பல திட்டங்கள் இந்திய மாணவர்களுக்கு உதவுகின்றன.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலே சொன்னபடி வெளிநாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரியர்களிடமிருந்து அவர்கள் குழுவில் பணியாற்ற விருப்ப கடிதம் பெற வேண்டும்.

நேர்முகத் தேர்விற்கு எப்படி தயாராவது?

ஆய்வு உதவித் தொகைப் போட்டிக்கான நேர்முகத்தேர்வு கடிதம் கிடைக்கப் பெற்ற உடன் நேர்முகத் தேர்விற்கு முன் கூட்டியே தயாராகுங்கள். பெரும்பாலான நேர்முகத் தேர்வுகள் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பல நாட்கள் பயிற்சி எடுப்பதன் மூலம் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கலாம்.

வெளிநாட்டுக் கல்வி

பட மூலாதாரம், Getty Images

காமன்வெல்த் நாடுகளில் உள்ள மாணவர்கள் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பிஎச்டி ஆய்வு படிப்பினை Commonwealth PhD Scholarship மூலம் பயிலலாம். ஆனால் இந்த போட்டிக்கு பல ஆயிரம் மாணவர்கள் பல்வேறு காமன்வெல்த் அமைப்பு நாடுகளில் இருந்து விண்ணப்பிப்பர். ஆகையால் நேர்முகத் தேர்வில் நீங்கள் எப்படி பதில் சொல்கிறீர்கள் என்பதே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்.

கீழ்கண்ட விடயங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள்:

1. உங்கள் முதுநிலை பட்டப்படிப்பில் நீங்கள் மேற்கொண்ட திட்ட ஏட்டில் (Project dissertation) இருந்து முக்கியமான‌ அடிப்படை தகவல்களை ஐந்து நிமிடத்திற்குள் விளக்கும்படியாக Presentation slides (PPT) தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நேர்முகத் தேர்வில் அனுமதிக்கப்பட்ட நிமிடத்திற்கு மேல் அதிகமாக‌ ஒரு நிமிடம் விளக்கத்திற்காக‌ எடுத்துக் கொண்டாலும் உங்களுக்கான மதிப்பெண்ணை இழக்க நேரிடும்.

2. உங்கள் ஆய்வு திட்டத்தை (Proposal) இரண்டு அல்லது மூன்று பக்கத்தில் நோக்கம் (Aim), செயல்பாடுகள் (Objectives), மற்றும் செயல்முறை (methodology), எதிர்பார்ப்புகள் (Deliverable and milestone) மற்றும் தாக்கம் (Impact) போன்றவற்றை பல தலைப்புகளில் சுருக்கமாக விளக்கவும். இயன்ற வரை நெடிய சொற்றொடர்களை உங்கள் PPT presentation slide-ல் தவிருங்கள். சின்ன சின்ன வாக்கியங்களை கண்களுக்கு நன்கு புலப்படும் வகையில் வரிசையாக (Bulletins) விளக்கவும்.

கல்வி

பட மூலாதாரம், Getty Images

3. நீங்கள் ஏன் இந்த உதவித் தொகை திட்டத்திற்கு அல்லது ஆய்வு திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளீர்கள். அது குறித்த தகவல்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

4. ஒரு ஆய்வுக் குழுவில் ஒரு சிறந்த பங்கேற்பாளாராக (Team player) எப்படி செயல்படுவீர்கள் என்பதை உதாரணத்துடன் விளக்கவும்

5. உங்கள் ஆய்வுப் பணிகளை எப்படி திட்டமிடுவீர்கள் (Planning) என்பதை உதாரணத்துடன் விளக்கவும். இதனை எளிதாக விளக்க‌ மாத வாரியான‌ (Timeline) திட்டமிடலை (Gantt Chart) உங்கள் ஆய்வு திட்டத்தில் விளக்கவும். முக்கியமாக ஆய்வுத் திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் (Budget breakdown) என்ற தகவல் பட்டியலை இணைக்கவும். அத்தொகை உதவித் தொகை திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி இருக்க வேண்டும்.

6. எதிர்கால திட்டம் அல்லது ஐந்து வருடங்கள் கழித்து நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள் என்ற தகவலை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

7. சமகாலத்தில் உலக அளவில் ஏற்பட்டுள்ள‌ நுட்ப வளர்ச்சி அல்லது விண்ணப்பிக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் இருந்து வெளியாகியுள்ள ஆய்வு சாதனைகளை குறித்த தகவல்களை அறிந்து வைத்திருக்கவும். உங்களைப் போலவே நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுத் துறையில் பிற நாடுகளில் பணியாற்றும் முக்கியமான ஆய்வுக் குழுக்களின் பெயர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

8. உங்களுக்கு தரப்படும் ஆய்வு உதவித் தொகை மூலம் நீங்கள் உங்கள் துறையில் (Field) அல்லது சமூகத்தில் எத்தகைய நேர் மறையான தாக்கத்தை (Societal impacts) ஏற்படுத்துவீர்கள் என புள்ளி விபரங்களுடன் விவரிக்கவும்.

9. நேர்முகத் தேர்வு முடிவடைந்ததும் உங்களை கேள்வி கேட்க Interview panel அனுமதிக்கும் போது ஓரிரு கேள்விகளை கட்டாயம் கேட்கலாம். உதாரணத்திற்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும்? அல்லது ஆய்வுக் குழுவில் உள்ள உபகரணங்கள் குறித்த தகவல்கள் போன்ற நேர்மறையான தகவல்களை கேளுங்கள். ஆய்வுத் தொகை, சம்பளம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை கேட்பதை தவிருங்கள்.

10. உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் (Submission deadline) வரை ஆவணங்களை தயாரிக்காதீர்கள். பெரும்பாலான வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பே அவர்களின் ஆய்வு அலுவலகத்திற்கு அல்லது வெளிநாட்டு ஆய்வு மாணவர்கள் துறைக்கு (Overseas Research Students Department) உங்கள் விண்ணப்ப ஆவணங்கள் மற்றும் ஆய்வு உரையினை சமர்ப்பிக்க கேட்பார்கள். ஆகவே ஆவணங்கள் தயாரிப்பை முன்கூட்டியே முடிக்க‌ திட்டமிடுவது மிகவும் நல்லது.

கல்வி

பட மூலாதாரம், Getty Images

ஆய்வு உதவித் தொகை குறித்த தகவல்களை எப்படி தெரிந்து கொள்வது?

  • முதுநிலைப் படிப்பிற்கு பிறகு ஆய்வு சார் படிப்புகளுக்காக இயங்கும் குழுக்களோடு இயன்ற வரை இணைந்திருங்கள் (Networking).
  • பல இணைய தளங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்கான உதவித் தொகை (Stipend) அல்லது ஆய்வு உதவியாளர் (Research Assistant) பணிக்கான உதவித் தொகை குறித்த தகவல்களை வெளியிடுகின்றன. உதாரணத்திற்கு www.jobs.ac.uk என்ற இணையதளம் மூலம் பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள ஆய்வு சார் பணிகளுக்கான உதவித்தொகை திட்டங்களை அறிய முடியும். ஐரோப்பிய நாடுகளுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியாகும் ஆய்வு திட்ட உதவித் தொகை பணியிடங்களை https://euraxess.ec.europa.eu/jobs என்ற இணையதளம் மூலம் பெறலாம். இது போன்ற பல இணையதளங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் என்றே பிரத்யேகமாக‌ உள்ளது. அவற்றை தேடி தொடர்ந்து தகவல்களைப் பெற்றிடுங்கள்.
  • scholarship-positions.com, findaphd.com போன்ற இணையதளங்களில் Subscribe செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் வாயிலாக‌ ஒவ்வொரு நாளும் உலகெங்கும் உள்ள ஆய்வு உதவித் தொகை திட்டங்கள் குறித்த தகல்களை பெற முடியும்.
  • சமகாலத்தில் சமூக ஊடகங்கள் (Social media) முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக LinkedIn, Twitter, ResearchGate போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் (Funding agencies) முனைவர் ஆய்வு படிப்பிற்கான வாய்ப்புகளை நேரடியாக பகிர்கிறார்கள். ஃபேஸ்புக்கில் இதற்கென உள்ள‌ திறந்த குழுக்களில் நீங்கள் உறுப்பினராக‌ பங்கேற்பதன் மூலம் எளிதாக தகவல்களை பெற இயலும்.
  • LinkedIn போன்ற தளங்களில் உள்ள “Open for Position” போன்ற Badge வாய்ப்புகளை உங்கள் முகப்பு படத்தில் வைக்கும் போது நீங்கள் வாய்ப்பு தேடுபவராக எளிதாக பிறருக்கு தென்படுவீர்கள். இது போன்று சமூக வலை தளங்களில் உள்ள நல்வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் உள்ள முன்னோடி கல்வி நிறுவனங்களில் ஆய்வு உதவித் தொகை அல்லது முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்கான வாய்ப்பு என்பது உலகளாவிய போட்டியாகும். சராசரியாக ஒரு வாய்ப்பிற்கு நூறு முதல் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் போட்டியிடுகிறார்கள். ஆகவே வெற்றி சதவிகிதம் 0.1 முதல் 1% மட்டுமே.

ஆகவே ஆய்வு உதவித்தொகைப் போட்டியில் ஒரு வேளை நீங்கள் தோற்கும் போது சோர்வடைய வேண்டாம். அதனை ஒரு அனுபவமாகக் கொண்டு நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதில்களை தயார் செய்து கொண்டு மீண்டும் அடுத்த போட்டியில் வெல்ல முயலுங்கள்.

இயன்ற வரை உங்களுக்கென்று ஒரு வழிகாட்டியை (Mentor) தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அவர் உங்களது கல்லூரி பேராசிரியராகவோ, அல்லது உங்களது நலம் விரும்பி ஆசிரியராகவோ இருக்கலாம். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களது திட்டங்களை அவர்களிடம் விவாதித்து ஆலோசனைகளைப் பெறுங்கள்.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு” (குறள் எண் 397)

என்ற குறளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்? என்ற திருவள்ளுவரின் கேள்வியை வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

(இக்கட்டுரையின் ஆசிரியர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து, தற்போது பிரிட்டனில் உள்ள கெரியட் வாட் பல்கலைக் கழகத்தில் (Heriot-Watt University) உள்ள நுட்பம் மற்றும் இயல் அறிவியல் (School of Engineering and Physical Sciences) பள்ளியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். சூரிய ஆற்றல் மூலம் நானோ அளவிலான குறைகடத்தி வினையூக்கிகள் உதவியுடன் எவ்வாறு மின் உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் வாயுவை தயாரிப்பது என்ற ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வுக் குழுவின் தலைவராக உள்ளார். நானோ நுட்பம் சார்ந்த ஆற்றல் கருவிகள் வடிவமைப்பில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டு ஆய்விதழ்களில் பிரசுரித்துள்ளார். ஐப்பானிய அரசின் JSPS Fellowship விருதையும், ஐரோப்பிய பிராந்திய‌ வளர்ச்சி நல நிதி மூலம் வேல்சு அரசிற்கான Ser-Cymru II Rising Star விருதையும் பெற்றவர். நானோ நுட்பம் மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து சமூக வலை தளங்களில் தமிழில் எழுதியும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு கருத்தரங்குகளில் பேசியும் வருகிறார்.)

தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »