Press "Enter" to skip to content

யுக்ரேன் மோதல்: ‘ரஷ்ய வீரர்கள் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர், என் கணவரையும் கொன்றனர்’

  • யோகிதா லிமாயே
  • பிபிசி நியூஸ், கீயவ், யுக்ரேன்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரஷ்யர்கள், கீயவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரும்பிச் சென்று விட்டனர், ஆனால் அவர்கள் இந்த நகரில் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இனி எப்போதும் மீள முடியாதவர்களிடையே ஆழமான காயத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

இங்கே யுக்ரேனிய பெண்கள் ரஷ்ய படையெடுப்பு வீரர்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட நேரடி பாதிப்புக்குள்ளானவர்களின் வாக்குமூலத்தையும் அது பற்றிய ஆதாரங்களையும் பிபிசி நேரடியாகக் கேட்டது.

Short presentational grey line

எச்சரிக்கை: இந்த செய்தியில் பாலியல் வன்முறை பற்றிய சங்கடம் தரும் தகவல்கள் உள்ளன.

கீயவுக்கு மேற்கே 70 கிமீ (45மைல்) தூரத்தில் உள்ள அமைதியான கிராமப்புறத்தில், 50 வயதான அன்னாவிடம் பேசினோம். அவரது அடையாளத்தைப் பாதுகாக்க அவரது பெயரை மாற்றியுள்ளோம்.

மார்ச் 7ஆம் தேதி ஒரு வெளிநாட்டு சிப்பாய் உள்ளே நுழைந்தபோது தனது கணவருடன் வீட்டில் இருந்ததாக அன்னா எங்களிடம் கூறினார்.

“துப்பாக்கி முனையில், அவர் என்னை அருகே ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் என்னிடம் ‘உன் ஆடைகளை அவிழ்த்து விடு அல்லது உன்னை சுடுவேன்,’ என கட்டளையிட்டார். அவர் சொன்னதைச் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டிக் கொண்டே இருந்தார். பிறகு என்னை வன்புணர்வு செய்யத் தொடங்கினார்,” என்றார் அன்னா.

ரஷ்ய கூட்டு நாடான செசன்யாவின் வீரரான அந்த நபர் இளமையான மற்றும் மெலிந்த உடல்வாகு கொண்டவராக இருந்ததாக அன்னா விவரித்தார்.

“அவர் என்னை பலாத்காரம் செய்து கொண்டிருக்கும் போது, ​​மேலும் நான்கு வீரர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது நான் அவ்வளவுதான் என நினைத்தேன். ஆனால் அவர்கள் அந்த வீரரை அழைத்துச் சென்றனர். பிறகு நான் அந்த நபரை திரும்பப் பார்க்கவேயில்லை,” என்று அன்னா கூறினார்.

ரஷ்ய வீரர்களின் சிறப்புப்பிரிவினரால் தான் காப்பாற்றப்பட்டதாக அன்னா நம்புகிறார்.

அன்னா உடனடியாக வீட்டுக்குத் திரும்பி வந்து தன் கணவனை பார்த்தார். அவரது கணவர் வயிற்றில் சுடப்பட்டுக் கிடந்தார்.

“என்னைக் காப்பாற்ற எனது கணவர் என்னைப் பின்தொடர்ந்து ஓட முயன்றார், ஆனால் அவர் ஒரு ரவுண்டு தோட்டாக்களால் அவர் தாக்கப்பட்டார்,” என்று அன்னா கூறினார். இருவரும் பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தனர். மோதல் காரணமாக கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு காயங்கள் காரணமாக அன்னாவின் இறந்தார்.

தனது துயரக்கதையை விவரிக்கும்போது அஅன்னா தனது அழுகையை நிறுத்தவே இல்லை. வீட்டின் கொல்லைப்புறத்தில் தனது கணவரை புதைத்த இடத்தை அன்னா எங்களுக்குக் காட்டினார். ஒரு உயரமான, மரச் சிலுவை அந்தக் கல்லறையின் மீது நிறுத்தப்பட்டிருந்தது. தான் உள்ளூர் மருத்துவமனையுடன் தொடர்பில் இருப்பதாகவும் உளவியல் ஆலோசனையைப் பெறுவதாகவும் அன்னா எங்களிடம் கூறினார்.

யுக்ரேன் ரஷ்யா

தன்னைக் காப்பாற்றிய வீரர்கள் தனது வீட்டிலேயே சில நாட்களுக்குத் தங்கியிருந்தனர் என்ற அன்னா, அவர்கள் துப்பாக்கியைக் காட்டி கணவரின் உடைமைகளைத் தங்களுக்குக் கொடுக்கச் சொல்வார்கள் என்கிறார்.

“அவர்கள் கிளம்பியபோது, ​​நான் போதைப்பொருள் மற்றும் வயாக்ராவை பார்த்தேன். அவர்கள் போதைக்கு தலைக்கேறியபடி அடிக்கடி குடித்துவிட்டு இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் கொலையாளிகள், கற்பழிப்பவர்கள் மற்றும் கொள்ளையடிப்பவர்கள். சிலர் மட்டுமே சரி” என்கிறார் அன்னா.

அன்னாவின் வீட்டிலிருந்து வரும் வழியில், மற்றொரு சிலிர்க்க வைக்கும் கதையைக் கேட்டோம்.

இங்கே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அன்னாவின் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு, அவரை பாலியல் வல்லுறவு செய்த அதே நபர், இதைச் செய்ததாக பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுகிறார்கள்.

அந்த பெண்ணின் வயது 40களில் இருந்தது. வீட்டை விட்டு அந்த பெண் வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறும் அண்டை வீட்டார், போர் தொடங்கியபோது வெளியேறிய ஒரு குடும்பத்தின் வீட்டின் படுக்கையறையில் அடைக்கப்பட்டார்.

நன்கு அலங்கரிக்கப்பட்ட அறை, அலங்கரிக்கப்பட்ட வால்பேப்பர் மற்றும் தங்கத் தலையணியுடன் கூடிய படுக்கை, குழப்பமான குற்றச் சம்பவ இடமாக காட்சியளித்தது. மெத்தை மற்றும் தலையணை உறையில் ரத்தக்கறைகள் தென்படுகின்றன.

ஒரு மூலையில் லிப்ஸ்டிக்கில் எழுதப்பட்ட ஒரு கண்ணாடியில், பாதிக்கப்பட்டவர் எங்கே புதைக்கப்பட்டார் என்பதை குறித்திருப்பதாகத் தோன்றுகிறது.

யுக்ரேன் ரஷ்யா

ஓக்சானா என்ற அண்டை வீட்டார், அந்த பெண்ணின் உடலை கண்டுபிடித்து புதைத்த ரஷ்ய வீரர்கள், அதை அங்கேயே விட்டுச் சென்றதாக எங்களிடம் கூறினார்.

“அவர்கள் [ரஷ்ய வீரர்கள்] அவளை பாலியல் வல்லுறவு செய்ததாகவும் அவளது கழுத்து அறுக்கப்பட்டோ குத்தப்பட்டோ, அவள் ரத்தம் கசிந்து இறந்து விட்டதாகவும் என்னிடம் கூறினார்கள். நிறைய ரத்தம் இருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.”

அந்த பெண் வீட்டின் தோட்டத்தில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டார்.

நாங்கள் சென்ற ஒரு நாள் கழித்து, அங்கு வந்து வழக்கை விசாரித்த காவல் துறையினர், அந்த பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர். அந்த சடலம் ஆடையின்றியும், ஆழமான, நீளமான, கழுத்து முழுவதும் வெட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது.

கீயவ் பிராந்தியத்தின் காவல்துறை தலைவரான ஆண்ட்ரி நெபிடோஃப், கீயவுக்கு மேற்கே 50 கி.மீ (30 மைல்) கிராமத்தில் தாம் நடத்தி வரும் மற்றொரு வழக்கைப் பற்றி விசாரித்து வருவதாக எங்களிடம் கூறினார்.

மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் – அதில் முப்பதுகளில் ஒரு ஜோடி, அவர்களின் சிறு குழந்தை – என அந்த கிராமத்தின் விளிம்பில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் வாழ்ந்தனர்.

“மார்ச் 9ஆம் தேதி, ரஷ்ய ராணுவத்தின் பல வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அந்த கணவர் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பாதுகாக்க முயன்றார். அதனால் அவர்கள் அவரை முற்றத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர்,” என்கிறார் நெபிடோஃப்.

“அதற்குப் பிறகு, இரண்டு வீரர்கள் அந்த வீட்டுப் பெண்ணை பலமுறை பாலியல் வல்லுறவு செய்தனர். அவர்கள் வெளியேறி விட்டு திரும்பி வருவார்கள். அவர்கள் மூன்று முறை வந்து பாலியல் வன்புணர்வு செய்தனர். எதிர்ப்பு தெரிவித்தால் பிள்ளைக்கு தீங்கு விளைவிப்போம் என்று மிரட்டுகின்றனர். குழந்தையைப் பாதுகாக்க அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவில்லை.”

வீரர்கள் புறப்பட்டபோது அந்த வீட்டை எரித்ததுடன், குடும்பத்தில் வளர்ந்த நாய்களையும் சுட்டுக் கொன்றனர்.

யுக்ரேன் ரஷ்யா

கடைசியில் அந்த பெண் தனது மகனுடன் தப்பிச் சென்று பின்னர் காவல்துறையை தொடர்பு கொண்டார்.

அது குறித்து நம்மிடையே பேசிய அதிகாரி நெபிடோஃப், தனது விசாரணைக்குழு, அந்த பெண்ணை சந்தித்து அவரது சாட்சியத்தைப் பதிவு செய்ததாகக் கூறுகிறார்.

காவல்துறையினர் அவர்களின் குடும்ப வீட்டில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் – அந்த வீட்டின் கூடு மட்டுமே இப்போது அங்கு எஞ்சியுள்ளது.

முந்தைய அமைதியான, சாதாரண வாழ்க்கையின் சில அறிகுறிகள் எரிந்த இடிபாடுகளில் உள்ளன. ஒரு குழந்தையின் மிதிவண்டி, ஒரு அடைத்த குதிரை, ஒரு நாயின் கயிறு மற்றும் ஒரு மனிதனின் ஃபர் வரிசையான குளிர்கால காலணி ஆகியவற்றைப் பார்த்தோம்.

அந்த பெண்ணின் கணவரை அக்கம் பக்கத்தினர் தோட்டத்தில் புதைத்தனர். தற்போது அந்த பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் அதை தோண்டி எடுத்துள்ளனர். இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளனர்.

யுக்ரேனின் மனித உரிமைகளுக்கான புகார் பெறும் நிர்வாகி லியுட்மிலா டெனிசோவா, இத்தகைய நபர்கள் தெரிவிக்கும் வழக்குகளை தாங்கள் ஆவணப்படுத்தி வருவதாகக் கூறுகிறார்.

“புச்சாவில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஆக்கிரமிப்பின் போது 14 முதல் 24 வயதுடைய சுமார் 25 சிறுமிகள் மற்றும் பெண்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களில் ஒன்பது பேர் கர்ப்பமாக உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“யுக்ரேனிய குழந்தைகளை பெற்றெடுப்பதைத் தடுக்க, எந்த ஆணுடனும் உடலுறவு கொள்ள விரும்பாத அளவிற்கு யுக்ரேனிய பெண்களை பாலியல் வல்லுறவு செய்வோம் என்று ரஷ்ய வீரர்கள் கூறினார்கள்.”

யுக்ரேன் ரஷ்யா

ஆதரவு ஹெல்ப்லைன்களில் பல அழைப்புகள் வருவதாகவும், டெலிகிராம் செயலி பயன்பாட்டில் உள்ள சேனல்கள் மூலமாகவும் தகவல்களைப் பெறுவதாக அவர் கூறுகிறார்.

“ஒரு 25 வயது பெண்மணி, தனது 16 வயது சகோதரி தன் கண்ணெதிரிலேயே வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை எங்களிடம் தெரிவிக்க அழைத்தார். தனது சகோதரியை பாலியல் வல்லுறவு செய்தபோது, ‘ஒவ்வொரு நாஜி விபச்சாரிக்கும் இப்படித்தான்நடக்கும்’ என்று அந்த வீரர்கள் கத்தினர் என்று அவர் கூறினார்,” என்கிறார் டெனிசோவா.

ஆக்கிரமிப்பின் போது ரஷ்ய துருப்புக்கள் செய்த பாலியல் குற்றங்களின் அளவை மதிப்பிட முடியுமா என்று நாங்கள் கேட்டோம்.

“தற்போது அது சாத்தியமற்றது, ஏனென்றால் எல்லோரும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எங்களிடம் கூறத் தயாராக இல்லை. அவர்களில் பெரும்பாலானோர் தற்போது உளவியல் ஆதரவைக் கோருகிறார்கள். எனவே அவர்கள் எங்களிடம் சாட்சியம் அளிக்கும் வரை நாங்கள் அந்த கொடுமைகளை குற்றங்களாக பதிவு செய்ய முடியாது,” என்கிறார் டெனிசோவா.

பாலியல் வல்லுறவு உள்ளிட்ட போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்காக விளாதிமிர் புதினை தனிப்பட்ட முறையில் விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று யுக்ரேன் விரும்புகிறது என்று அவர் கூறுகிறார்.

“நான் புதினிடம் இதை கேட்க விரும்புகிறேன். ஏன் இப்படி நடக்கிறது?”

தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக எங்களிடம் கூறிய பெண் அன்னா, “இது எனக்குப் புரியவில்லை. நாம் கற்காலத்தில் வாழவில்லை, புதினால் ஏன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது? அவர் ஏன் ஆக்கிரமித்து கொலை செய்கிறார்?” என்று கேட்கிறார்.

கூடுதல் செய்தித்தகவல் வழங்கியவர்கள்: இமோஜென் ஆண்டர்சன், அனஸ்டாசியா லெவ்செங்கோ, டாரியா சிபிகினா மற்றும் சஞ்சய் கங்குலி.

line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

line

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »