Press "Enter" to skip to content

யுக்ரேன் போர்: மீண்டும் தாக்குதல் நடத்தும் ரஷ்யா – இன்று அங்கே என்ன நடக்கிறது?

  • டேவிட் வில்லிஸ்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் தலைநகர் கீயவில் மீண்டும் ரஷ்ய படையினர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் பலியானதாக அந்த நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயம் அடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற மருத்துவ குழுவினர் போராடி வருகின்றனர். தலைநகர் கீயவில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய ஜெனரல்கள் எச்சரித்திருந்தது தற்போது உண்மையாகி விட்டது என்றும் கீயவ் மேயர் கூறினார்.

உள்ளூர்வாசியான அன்னா புட்கோ, பிபிசி நிருபர் யோகிதா லிமாயேவிடம் பேசுகையில், “அண்டை வீட்டில் இருந்து யாராவது வந்தாலோ காரின் கதவை யாராவது தட்டினாலோ கூட ஒவ்வொரு சத்தத்திற்கும் பயத்தில் உறைந்து போகிறோம்,” என்றார்.”நடுக்கம் ஏற்படுகிறது… இதை எல்லாம் கடக்க முயல்கிறோம். ஆனால், இது எவ்வளவு பயங்கரமானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது,” என்கிறார் அன்னா.

நேற்றிரவு லுவீவ் நகரிலும் வெடிச்சத்தம் கேட்டது. ஆனால் பிராந்தியத்தின் அதிகாரிகள் அது குறித்து கூறுகையில், இது அப்பகுதியின் வெற்றிகரமான பாதுகாப்பின் அடையாளம் என்றனர். ரஷ்ய சுகோய் 35 ரக விமானங்களால் ஏவப்பட்ட “நான்கு குரூஸ் ஏவுகணைகளை” விமான எதிர்ப்பு தளவாடங்கள் உதவியுடன் அழிக்க முடிந்தது என்று பிராந்திய அரசாங்கத்தின் தலைவர் மக்கிஸ்ம் கோசிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.எல்லையில் உள்ள ரஷ்ய கிராமங்கள் மீது யுக்ரேன் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தினால், கீயவில் உள்ள முக்கிய பகுதிகள் இலக்கு வைக்கப்படும் என ரஷ்யா வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே, யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து இதுவரை 1,900க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா பதிவு செய்துள்ளது, ஆனால் “உண்மையான புள்ளிவிவரங்கள் மிகவும் அதிகமாக உள்ளன” என்றும் அந்த சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது.பிப்ரவரி 24 முதல் ஏப்ரல் 14 வரை கொல்லப்பட்ட 1,982 பொதுமக்களில் 162 பேர் குழந்தைகள் என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது. மேலும் 2,651 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்களில் 256 பேர் குழந்தைகள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

போரிஸ் ஜான்சனுக்கு ரஷ்யா தடை

போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், PA Media

யுக்ரேன் போரில் பிரிட்டனின் “விரோதமான” நிலைப்பாடு காரணமாக, அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் புதின் அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் கூறுகையில், முன்னாள் பிரதமர் தெரீசா மே, ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் உட்பட 13 பிரிட்டிஷ் அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.”பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன்னெப்போதும் இல்லாத விரோத நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, குறிப்பாக மூத்த ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிரான பிரிட்டனின் பொருளாதாரத் தடைகளுக்கு இது எதிர்வினை”, என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பல அமெரிக்க அதிகாரிகள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

மேரியுபோலில் பொதுமக்கள் நுழைய ஏப்ரல் 18 முதல் தடை

மேரியுபோலில் எவரும் நுழையவோ புறப்படவோ தடை விதிக்கப்படலாம் என்று அந்த நகரின் முழு கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டுள்ள ரஷ்ய படையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நகர மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்சென்கோ இது தொடர்பாக தமது டெலிகிராம் பக்கத்திலும் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

மேரியுபோல் நகரம்

பட மூலாதாரம், Reuters

ஆனால், இத்தகைய தடை கடந்த நான்கு, ஐந்து நாட்களாகவே அங்கு அமலில் இருப்பதாக நகரின் துணை மேயர் செஹி ஓர்லொஃப் தெரிவித்துள்ளார். தற்போது ஓர்லொஃப் மேரியுபோலில் இல்லாவிட்டாலும் அங்குள்ளவர்களுடன் அவர் நெருங்கி தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை, மேரியுபோலில் முகாமிட்டுள்ள யுக்ரேனிய வீரர்கள் சரண் அடையாவிட்டால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று அந்த நகரில் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ஆதரவு பெற்ற டொனியெட்ஸ் மக்கள் குடியரசு போாரளிகள் குழு தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா

யுக்ரேனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் கொடுத்து உதவினால் கணிக்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்காவைவும், அதன் கூட்டணி நாடுகளையும் ரஷ்யா அதிகாரபூர்வமாக எச்சரித்துள்ளது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய இரண்டு பக்க குறிப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் நேட்டோவும் யுக்ரேனுக்கு அனுப்பும் ஆயுதங்கள் யுக்ரேனில் நடக்கும் போருக்கு எண்ணெய் வார்ப்பதாக உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரேனுக்கான அமெரிக்காவின் புதிய ஆயுத உதவித் தொகுப்பு குறித்த தகவல் கசியத் தொடங்கிய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் குறிப்பு அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த எச்சரிக்கை குறிப்பு வெளிவந்த சில மணி நேரம் கழித்து 80 கோடி டாலர்கள் மதிப்புள்ள ராணுவ உதவியை யுக்ரேனுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். ஹவிட்சர்கள் போன்ற நீண்ட தூர எறிகணைகள் இதில் அடக்கம். இத்தகைய ஆயுதங்களை அமெரிக்கா யுக்ரேனுக்கு அனுப்புவது இதுவே முதல் முறை. ரஷ்ய ராணுவ பலத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஆயுதங்களை யுக்ரேனுக்கு அனுப்பும் நோக்கில் இத்தகைய ஆயுதங்கள் அனுப்பப்படுகின்றன.

அமெரிக்காவும், நேட்டோவும் யுக்ரேனுக்கு அளிக்கும் ராணுவ உதவிக்கு பலன் இருப்பதை ரஷ்யாவே ஒப்புக்கொள்ளும் வகையில் இந்த எச்சரிக்கை அமைந்திருப்பதாகவும் பார்க்க முடியும் என மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யுக்ரேன் - ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

இந்த புதிய ஆயுத உதவியின் முதல் பகுதி, அடுத்த சில நாட்களில் யுக்ரேனை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுக்ரேனில் உள்ள தகராறுக்குரிய டான்பாஸ் பகுதியில் அடுத்த சில வாரங்களில் பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படும் நிலையில், கிழக்கு யுக்ரேனில் படைபலத்தை திரட்டிவருகிறது ரஷ்யா. இந்த நிலையில்தான் அமெரிக்க ஆயுத உதவி யுக்ரேன் சென்று சேரவுள்ளது.

ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே போர் தொடங்கியது முதல், இதுவரை 300 கோடி டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை யுக்ரேனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா.

யுக்ரேன் படையினருக்கு பிரிட்டனில் பயிற்சியா?

பிரிட்டனின் புகழ்பெற்ற சிறப்புப் படைப் பிரிவான எஸ்ஏஎஸ், கீயவ் பகுதியில் யுக்ரேன் படையினருக்கு பயிற்சி அளித்து வருகிறது என்று ‘தி டைம்ஸ் ஆஃப் லண்டன்’ பத்திரிக்கையிடம் யுக்ரேன் படையினர் கூறியுள்ளனர்.

யுக்ரேன் - ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

எஸ்ஏஎஸ் படையினர் கடந்த இரண்டு வாரங்களாக யுக்ரேன் படையினருக்கு பயிற்சி அளித்ததாக இரண்டு படைப்பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் அப்பத்திரிகையிடம் தெரிவித்துள்ளனர்.

என்.எல்.ஏ.டபிள்யூ என்னும் பிரிட்டனின் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தே யுக்ரேன் படையினருக்கு பயிற்சி அளித்ததாக பிரிட்டன் கமாண்டர் ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

யுக்ரேனில் பிரிட்டன் படைவீரர்கள் உதவி செய்து வருவதாக முதல் முறை வெளியான செய்தியை பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்யவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »