Press "Enter" to skip to content

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்: “அணு ஆயுதத் திட்டங்களை மேலும் அதிகரிப்போம்”

  • சுபைதா அப்துல் ஜலில் மற்றும் பிரான்ஸின் மாவோ
  • பிபிசி

பட மூலாதாரம், KNCA/REUTERS

வட கொரியாவில் திங்களன்று நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் உரையாற்றிய அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் அணு ஆயுத கையிருப்பை அதிகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படையின் ஆண்டுவிழாவையொட்டி இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் காட்சிப்படுத்தப்பட்டது.

2017ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் வட கொரியா தனது மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது.

சர்வதேச அளவில் இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த சோதனைக்கு பிறகு அமெரிக்கா வட கொரியா மீது பல்வேறு தடைகளை விதித்தது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள் அமெரிக்க பெருநிலப்பரப்பு வரை வட கொரியா தாக்குதல் நடத்த உதவும்.

இந்த அணிவகுப்பில், நீருக்கு அடியிலிருந்து ஏவக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டன.

சர்வதேச தடைகளுக்கு மத்தியிலும் தனது ஆணு ஆயுதங்கள் குறித்து இந்த அணிவகுப்பின்போது பேசினார் கிம்.

“நாட்டின் அணு ஆயுத திறனை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்,” என கிம் தெரிவித்தார்.

கிம்

பட மூலாதாரம், KCNA/REUTERS

மேலும் எந்த நேரத்திலும் தனது திறனை காட்ட அணு ஆயுதப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கிம் தெரிவித்துள்ளார் என வட கொரிய செய்தி முகமையான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் ஆணு ஆயுதங்கள் என்பது போருக்கு எதிராக தடுப்பு அரணாக பயன்படுத்தும் ஒரு கருவியே. ஆனால் அது வேறு மாதிரியாகவும் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது நாடு தாக்கப்பட்டால் நிச்சயம் திரும்பி தாக்குவோம் என்ற கூற்றைதான் அவர் திரும்ப தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பல்வேறு ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்திருந்ததால் திங்களன்று நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு சர்வதேச அளவில் உற்று நோக்கப்பட்டது.

நாட்டின் அணு ஆயுத சோதனை மையத்தில் மார்ச் மாதம் சில செயல்பாடுகளை வட கொரியா தொடங்கியதால் நாடு மீண்டும் ஆணு ஆயுதங்களை சோதனை செய்கிறதோ என பதற்றம் நிலவியது.

தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சூக் யோல், வட கொரியாவின் செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இது இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ச-வூக், வட கொரியாவின் ஏவுகணை தாக்குதல் மையங்களை தாக்கும் திறன் தென் கொரியாவுக்கு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தொலைதூரம் தாக்கும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை நிறுத்தி வைத்திருந்தார் கிம். ஆனால் 2020ஆம் ஆண்டு, தான் அந்த உறுதிக்கு கட்டுப்படபோவதில்லை என்று தெரிவித்தார்.

வட கொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க தான் தயாராக இருப்பதாக பைடன் தெரிவித்திருந்தாலும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான உறவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »