Press "Enter" to skip to content

நாஜிக்களிடம் இருந்து தப்பிக்கப் பதுங்கிய பெண்ணின் டைரி- லட்சக்கணக்கில் விற்பனையானது ஏன்?

பட மூலாதாரம், PA Media

1929-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதியன்று பிறந்த ஆன்னி ஃபிராங்க் நெதர்லாந்தில் நாஜி இனப்படுகொலை நேரத்தின்போது, இளம் பருவத்தினராக இருந்தார்.

இந்த ஆண்டு ஆன்னி ஃபிராங்க்கின் வீடு பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1960-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதியன்று பிரின்சென்க்ராட் 263-இல் இருந்த ஃபிராங்கின் மறைவிடம் மீட்கப்பட்டு, பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டது.

அவர் தனது குடும்பத்துடன் ஆம்ஸ்டர்டாமில் வசித்து வந்தார். ஆனால், 1942-ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் யூத மக்களை அகற்ற விரும்பிய நாஜிக்களிடம் இருந்து ஃபிராங்க் குடும்பத்தினர் தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மறைந்திருந்த அந்த நேரத்தில், ஆன்னி ஒரு நாட்குறிப்பை (டைரி) வைத்திருந்தார். அது பின்னர் உலகம் முழுவதும் மிகப் பிரபலமான நூல்களில் ஒன்றாக மாறியது.

ஆனால், ஓர் எழுத்தாளராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க அவர் வாழவில்லை. ஏனெனில், அவர் இனப்படுகொலையில் கொல்லப்பட்டார். அவருடைய தந்தை இரண்டாம் உலகப் போரில் உயிர் பிழைத்ததால், நாட்குறிப்பில் இருந்த ஆன்னியின் நாட்குறிப்பை அவர் வெளியிட்டார்.

நவீன கால வரலாற்றில் நடந்த மிகவும் பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றான ஆன்னியின் கதை வெளியுலகுக்கு வந்தது எப்படி?

ஆன்னி ஃபிராங்கின் ஆரம்பக்கால வாழ்க்கை எப்படியிருந்தது?

ஆன்னிலீஸ் மேரி ஃபிராங்க்- ஆன்னி ஃபிராங்க் என்று அழைக்கப்படுபவர். 1929-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு, அவரை விட 3 வயது மூத்த மார்கட் என்ற சகோதரி இருந்தார். அவருடைய பெற்றோர் ஈடித் மற்றும் ஓட்டோ என்று அழைக்கப்பட்டார்கள்.

முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனி மிகவும் வறுமையில் இருந்தது. பலரின் வாழ்க்கை கடினமானதாக இருந்தது. பிரபலமாக வளர்ந்துகொண்டிருந்த, அடால்ஃப் ஹிட்லரின் தலைமையிலான நாஜி கட்சி, நாட்டின் பல பிரச்னைகளுக்கு யூத மக்களைக் குற்றம் சாட்டியது.

ஆன்னி ஃபிராங்க் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பதுங்கியிருந்த ரகசிய அறை

பட மூலாதாரம், Reuters

இனப்படுகொலையின் போது ஆன்னி மற்றும் அவரது குடும்பத்தினர் மறைந்திருந்த ரகசிய இடம் ஒரு தனித்துவமான புத்தக அலமாரிக்குப் பின்னால் மறைக்கப்பட்டிருந்தது.

தேர்தலுக்குப் பிறகு, 1933-ஆம் ஆண்டில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் யூத மக்களைத் துன்புதுத்தத் தொடங்கினார்கள். யூதர்களின் வாழ்க்கையை நம்பமுடியாத அளவுக்குக் கடினமாக்கினார்கள்.

ஃபிராங்க் குடும்பத்தினர் ஜெர்மனியை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தார்கள். எனவே அவர்கள் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமுக்குச் சென்றனர். அங்கு பாதுகாப்பாக இருக்கலாம் என நினைத்தார்கள்.

ஆன்னி பள்ளிக்குச் சென்றார். புதிய நண்பர்களை உருவாக்கிக் கொண்டார். டச்சு மொழியைக் கற்றுக் கொண்டு, தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதியன்று ஜெர்மனி போலந்தை ஆக்கிரமித்தபோது, இரண்டாம் உலகப் போர் அறிவிக்கப்பட்டபோது, ஆன்னிக்கு 10 வயது.

ஓராண்டு கழித்து, 1940-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதியன்று, ஜெர்மன் ராணுவம் நெதர்லாந்தை ஆக்கிரமித்தது. நாஜிக்கள் அங்கிருந்த யூத மக்களை துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

இனப்படுகொலையின்போது, ஆன்னி ஃபிராங்கிற்கு என்ன நடந்தது?

ஆன்னியின் 13-ஆவது பிறந்தநாளில், ஆன்னிக்கு ஒரு டைரி வழங்கப்பட்டது. அதை அவர் கிட்டி என்றழைத்தார். 1942-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதியன்று அவர் அந்த டைரியில் தனது முதல் பதிவை எழுதினார்.

அந்த நேரத்தில், நாஜிக்கள் நெதர்லாந்தில் யூதர்களை துன்புறுத்துவதை அதிகப்படுத்தினர்.

1942-ஆம் ஆண்டு கோடையில், ஆன்னியின் சகோதரி மார்கட் ஒரு முகாமில் வேலைக்குச் செல்லும்படி நாஜிக்களால் கட்டளையிடப்பட்டார். ஆனால், அவருக்கும் மற்ற குடும்பத்தாருக்கும் உண்மையில் என்ன நடக்கும் என்று அஞ்சிய ஃபிராங்க் குடும்பம், ஓட்டோ சில வாரங்களாகத் தயாரித்துக் கொண்டிருந்த ரகசிய இடத்திற்குள் சென்று மறைந்தார்கள்.

ஆன்னியின் டைரியுடன் அவருடைய தந்தை ஓட்டோ பிராங்க்

பட மூலாதாரம், Getty Images

அவர்களுடன் வான் பெல்ஸ் குடும்பத்தினரான, ஹெர்மன், அகஸ்டே, அவர்களுடைய மகன் பீட்டர் மற்றும் ஃப்ரிட்ஸ் ஃபெஃபர் ஆகிய நால்வரும் அதில் மறைந்துகொண்டனர்.

ஓட்டோவுக்கு விசுவாசமாக இருந்த நண்பர்கள் மறைந்திருந்த குழுவிற்கு உதவினார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் வெளியுலக செய்திகளை அவர்கள் கொண்டு வருவார்கள்.

ஆறுதல் தந்த எழுத்து

ஆன்னி ரகசிய இடத்தில் மறைந்திருந்த காலம் முழுவதும், தனது டைரியில் தினசரி பதிவுகள் மற்றும் பிற கவிதைகள், கதைகள் ஆகியவற்றை எழுதி மகிழ்ந்தார்.

எழுத்து அவருக்கு ஒரு வகையான ஆறுதலை அளித்துள்ளது.

ஒருநாள், பிரிட்டனில் இருந்த டச்சு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் வானொலியில் போர் நாட்குறிப்புகளை ஆவணங்களையும் வைத்திருக்கும்படி, மக்களைக் கேட்டுக்கொண்ட ஓர் அம்சத்தைக் கேட்டார். அது அவரது நாட்குறிப்புகளை மீண்டும் நூலாக எழுதத் தூண்டியது.

அவர் தனது நாவலான ஹெட் ஆக்டர்ஹூயிஸுக்கான (‘தி சீக்ரெட் அனெக்ஸ்’) வேலைகளைத் தொடங்கினார். ஆனால், அவர் முடிப்பதற்குள், குடும்பத்தின் மோசமான பயம் நிஜமானது. இரண்டு ஆண்டுகள் மறைந்திருந்த பிறகு, நாஜிக்கள் ரகசிய இடத்தைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என இன்று வரை யாருக்கும் தெரியாது. 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதியன்று, அங்கு மறைந்திருந்த அனைவரையும் கைது செய்து, ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் வதை மற்றும் மரண முகாமுக்கு அனுப்பினார்கள். ஆன்னியின் நாட்குறிப்பில் இறுதி பதிவு 3 நாட்களுக்கு முன்பு, 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று எழுதப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழியில் 'வேலை உங்களை விடுவிக்கும்' என எழுதப்பட்டுள்ளது

பட மூலாதாரம், Getty Images

ஆன்னி ஃபிராங்க் பிடிபட்ட பிறகு என்ன ஆனார்?

அவர்கள் ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவுக்கு வந்தபோது, ஃபிராங்க் குடும்பத்தினர் ஒப்பீட்டளவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆகவே, அனைவரும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். ஓட்டோ தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களிடம் இருந்து பிரிக்கப்பட்டார். பின்னர், ஆன்னி மற்றும் மார்கட் அவர்களுடைய தாயிடம் இருந்தும் பிரிக்கப்பட்டார்கள்.

ஆஷ்விட்ஸ் முகாமில் உள்ள ஒரு பிரபலமான வாயிலில் ஜெர்மன் மொழியில் ‘வேலை உங்களை விடுவிக்கிறது’ என எழுதப்பட்டிருந்தது.

மீண்டும் ஆம்ஸ்டர்டாமில், மீப் கீஸ் மற்றும் பெப் வோஸ்குய்ல்- ஓட்டோவின் இரண்டு நண்பர்கள் (அவர்கள் தலைமறைவாக இருந்தபோது உதவியவர்கள்) ஆன்னியின் எழுத்துகளைக் கண்டுபிடித்து, அவர் எப்போதாவது திரும்பி வந்தால் கொடுக்கலாம் என்று வைத்திருந்தனர்.

ஆனால், அது நடக்கவில்லை, ஆன்னி மற்றும் மார்கட் 1944-ஆம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் பெர்கன்-பெல்சன் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால், அவர்களுடைய உடல்நிலை மோசமடைந்தது. 1945-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அவர்கள் இருவரும் டைஃபஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பிறகு அவர்களுடைய தாய் ஈடித்தும் கொல்லப்பட்டார்.

ஆன்னியின் டைரியை லட்சக்கணக்கான மக்கள் வாசித்துள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

ஆன்னியின் தந்தை ஓட்டோ தான், இனப்படுகொலையில் இருந்து தப்பிய ஒரே ஃபிராங்க் குடும்ப உறுப்பினர். மீப் மற்றும் பெப் ஆன்னியின் டைரியை அவருக்கு அனுப்பினார்கள்.

அவர் அதைப் படித்தபோது, ஆன்னிக்கு எழுத்து மீது எந்தளவுக்கு ஆர்வம் இருந்தது என்பதை உணர்ந்தார். “மரணத்திற்குப் பிறகும் அவர் வாழ வேண்டும்” என்று நினைத்தவர், ஆன்னியின் எழுத்துகளை ஒரு புத்தகமாக ஒழுங்கமைத்து வெளியிட்டார்.

ஆன்னியின் டைரியை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் படித்துள்ளார்கள்.

1947-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதியன்று, ஹெட் ஆக்டர்ஹூயிஸ் (தி சீக்ரெட் அனெக்ஸ்) வெறும் 3,000 பிரதிகளே அச்சிடப்பட்டன.

அது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, ஒரு நாடகமாகவும் திரைப்படமாகவும் மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, உலகமெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஆன்னியின் கதையை அறிந்தனர்.

எழுத்தாளராகி, தன் தலைமறைவு வாழ்க்கையை நாவலாக வெளியிட வேண்டும் என்ற அவருடைய கனவு நனவானது.

1960-ஆம் ஆண்டில், ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரகசிய இடத்தின் தளம் ஆன்னி ஃபிராங்க் இல்லம் என்ற அதிகாரபூர்வ அருங்காட்சியமாக மாறியது. அங்கு அசல் டைரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இன்றும் அதைப் பார்வையிட முடியும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »