Press "Enter" to skip to content

“தந்தையின் கொலை தான் நான் வாதாடிய முதல் வழக்கு” – ஒரு பெண் வழக்கறிஞரின் வாழ்க்கையாகிப் போன வழக்கு

பட மூலாதாரம், Salman Saeed

ஷாகுஃப்தா தபசும் அகமது, தனது பெற்றோர் அறிவுறுத்தியதன் பேரில் சட்டம் படிக்க ஒப்புக் கொண்டார். இருப்பினும் அவருக்கு வழக்கறிஞர் ஆகும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால், அவருடைய தந்தை கொலை செய்யப்பட்டவுடன் அவருடைய அந்த மனநிலை மாறியது. பிபிசியின் பாலினம் மற்றும் அடையாளம் பிரிவின் செய்தியாளர் மேகா மோகனிடம் அவர் தனது தந்தையின் கொலையாளிகளுக்கு எதிராக நீதிக்காக 16 ஆண்டுகாலப் போராட்டம் நடத்தியதைப் பற்றிக் கூறினார்.

என் தந்தை மருத்துவர் தாஹெர் அகமது கொலை செய்யப்பட்டார் என்று நான் கேள்விப்பட்ட நாள், முழுமையாகவும் தெளிவாகவும் நினைவில் உள்ளது.

எனக்கு அந்த அறை நினைவிருக்கிறது. ஆனால், அதில் யார் இருந்தார்கள் என்பது நினைவில்லை. அது ஒரு வெள்ளிக்கிழமை. ஆனால் எனக்கு நேரம் நினைவில்லை. தொலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது ஞாபகம் உள்ளது. ஆனால், என் குடும்பத்தில் அதை யார் எடுத்தார்கள் என்பது நினைவில்லை.

அண்ணன் தான் அழைத்திருந்தார்.

“அவரைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்,” என்ற என் அண்ணனின் வார்த்தைகளை யார் கேட்டுச் சொன்னது என்று எனக்கு நினைவில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு அதுவரை தெரிந்திருந்த என் வாழ்க்கை முடிந்துவிட்டது.

உடனே என் அம்மா கண்ணீர் விட்டு அழுதார். ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தில், என் தந்தை பேராசிரியராகப் பணியாற்றிய புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் இருந்த செப்டிக் டேங்கில் அவருடைய உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு நாங்கள் திகைத்துப் போயிருந்தோம்.

வங்கதேச தலைநகரான டாக்காவிலுள்ள எனது அண்ணனின் வீட்டில் எங்கள் முழு குடும்பமும் கூடியிருந்தது. அண்ணன் எங்களுடன் இல்லை. முந்தைய நாள் அவர் எங்கள் தந்தையைத் தேடி வங்கதேச-இந்திய எல்லைக்கு அருகிலுள்ள ராஜ்ஷாஹிக்கு காரில் ஆறு மணிநேர பயணத்தில் சென்றிருந்தார்.

படைப்பு திருட்டு குறித்த குற்றச்சாட்டு

என் குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார்கள்.

எப்படி? ஏன்? அவரைக் கொல்ல வேண்டுமென யார் நினைத்திருப்பார்கள்?

கார் வாங்குவதற்குப் பதிலாக நடக்கவோ அல்லது பொதுப் போக்குவரத்தில் செல்லவோ தான் என் தந்தை விரும்புவார். மாணவர்கள் விரும்பிய பல்கலைக்கழக பேராசிரியராக அவர் இருந்தார். வங்கதேசத்தில் வழக்கத்திற்கு மாறாக இருந்த நேரத்திலேயே, உணவு சமைப்பது, உணவுக்கான பொருட்களை வாங்கி வருவது ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய கணவராக அவர் இருந்தார். 18 வயதில் நான் தெருவைக் கடக்கும்போது கூட அவருடைய கையைப் பிடித்திருந்தேன்…

இப்படிப்பட்ட ஒரு மனிதரைக் கொலை செய்ய வேண்டுமென யார் நினைத்திருப்பார்கள்?

இந்தக் கேள்வி தான் எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியின் தொடக்கமாக இருந்தது.

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, புதன்கிழமை அன்று, என் தந்தை டாக்காவில் இருந்து ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்திற்கு பேருந்தில் சென்றார்.

என் சிறு வயதில் எங்கள் குடும்பம் தங்கியிருந்த இடமான, பரபரப்பான, துடிப்பான பல்கலைக்கழக வளாகத்தை அவர் மிகவும் விரும்பினார். நாங்கள் அப்போது பல்கலைக்கழகம் வழங்கிய ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தோம். எங்களுக்குத் தேவையான அனைத்தும் அருகிலேயே இருந்தன. நானும் என் அண்ணன் சன்ஸித்தும் காலையில் பள்ளிக்கு நடந்து செல்வோம். மாலையில் மற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் குழந்தைகளுடன் விளையாட்டு மைதானங்களில் விளையாடுவோம். பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் அனைவருக்கும் எங்களைத் தெரியும். எங்களின் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான இடமாக அது இருந்தது.

இறுதியில், சன்ஸித்தும் நானும், டாக்காவுக்குச் சென்றோம். சன்ஸித் ஒரு பெரிய பன்னாட்டு வணிக நிறுவனத்தில் ஹெச்.ஆர் துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

ஷாகுஃப்தா அவரின் தந்தையோடு

பட மூலாதாரம், Salman Saeed

என் தந்தையின் ஆலோசனையின் பேரில், நான் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தேன். நான் வழக்கறிஞராக ஆக வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. எனது பட்டப்படிப்புக்குப் பிறகு நான் ஒரு சர்வதேச அரசு சாரா நிறுவனத்தில் சேரலாம் அல்லது கல்வியாளராக மாறலாம் என்று நினைத்தேன். ஆனால், எங்கள் குடும்பத்திற்கு எது நல்லது என்று என் அப்பாவுக்குத் தெரியும். ஆகையால், அவர் சொன்னபடி நான் 2006-ஆம் ஆண்டில் சட்டம் படிக்கத் தொடங்கினேன். பிறகு, என்னோடு தங்குவதற்காக என் அம்மா என்னுடன் டாக்காவிற்கு வந்தார்.

அப்பா உயிரிழந்த வாரத்தில், அவர் எங்களைப் பார்ப்பதற்காக சில நாட்கள் டாக்காவுக்கு வந்திருந்தார். பிப்ரவரி 1, 2006 அன்று புதன்கிழமை அன்று மதியம் ராஜ்ஷாஹிக்குப் புறப்பட்டார். அங்கு சென்றடைந்தவுடன் தான் பத்திரமாகச் சென்றுவிட்டதாகத் தகவல் கொடுக்க அம்மாவுக்கு அழைத்தார். பிறகு மீண்டும் இரவு 9 மணியளவில் அழைத்துப் பேசினார். பின்னர் அவருடைய கால்சட்டை படுக்கையறை கதவு கைப்பிடியில் தொங்கவிடப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இரவு 9 மணிக்கு அழைத்த பிறகு அவர் சிறிது நேரம் மட்டுமே உயிரோடு இருந்துள்ளார். இரவு 10 மணிக்கு முன்னதாக அவர் கொலை செய்யப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி பின்னர் தெரிவித்தார்.

மருத்துவர் மியா முகமது மொஹிதீன் என்ற சக ஊழியரின் எதிர்காலம் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது தந்தை பல்கலைக்கழகத்திற்குத் திரும்பியிருந்தார். மருத்துவர் மொஹிதீன் ஒரு காலத்தில் நெருங்கிய குடும்ப நண்பராக இருந்தார். ஆனால், அவருக்கும் என் தந்தைக்கும் இடையிலான நட்பு, மருத்துவர் மொஹிதீனின் பல படைப்பு திருட்டு சம்பவங்களை அப்பா கண்டுபிடித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இதை பல்கலைக்கழக ஊழியர்களிடமும் கொண்டு சென்றார் அப்பா. இந்த சர்ச்சையை எப்படிக் கையாள்வது என்பது குறித்து விவாதிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், என் தந்தை அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எங்கள் அழைப்புகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. பராமரிப்பாளர், ஜஹாங்கீர் ஆலம், அவர் வீட்டில் இல்லை என்றவர், என் தந்தை வந்ததாகத் தான் பார்க்கவே இல்லையென்றும் கூறினார்.

பதற்றமடைந்த அம்மா, அப்பாவைத் தேடுவதற்காக என் சகோதரனை அன்று மாலை ராஜ்ஷாஹிக்கு அனுப்பி வைத்தார். அடுத்த நாள், பிப்ரவரி 3, 2006 பல்கலைக்கழக விடுதியின் தோட்டத்தில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் அப்பாவின் சடலத்தை என் சகோதரர் கண்டுபிடித்தார். அது கொலை விசாரணையாக மாறியது.

யார் கொலையாளி?

ஒரு கணம், உலகத்தின் கண்கள் எங்கள் குடும்பத்தின் மீது திரும்பியதைப் போல் இருந்தது. தந்தையின் மரணம், ஒரு பெரிய கதை, ஒரு மர்மமான கொலை, ஓர் உண்மையான குற்றம். அவரது முகம் தொலைக்காட்சியில் பளிச்சிட்டது, செய்தித்தாள்களில் அச்சிடப்பட்டது. சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் ஒரு முக்கியமான கதையை உருவாக்கக்கூடிய விலைமதிப்பற்ற விவரங்களைத் தேடின. நல்ல, பிரபலமான, ஆரோக்கியமான மனிதர் இப்படி இறக்கமாட்டார். விடை தெரியாத பல கேள்விகள் இருந்தன. மரியாதைக்குரிய பல்கலைக்கழக பேராசிரியரை யார் கொலை செய்வார்கள்? அது தனிப்பட்ட வெறுப்பா? கடும்போக்கு கொண்ட இஸ்லாமியர்கள் காரணமா? வங்கதேச சமூகத்தைப் பற்றி அது என்ன சொல்கிறது?

சலசலப்புக்கு நடுவே, நான், என் அண்ணன் மற்றும் அம்மா மூவருமே அச்சத்தில் இருந்தோம். என் அம்மா ராஜ்ஷாஹியில் உள்ள என் சகோதரனுடன் காவல்துறைக்கு உதவவும் சந்தேகத்திற்குரிய அனைவரையும் விசாரிக்கவும் சேர்ந்தார். சில வாரங்களுக்குள் என் தந்தை படைப்பு திருட்டு குற்றம் சாட்டிய மருத்துவர் மியா முகமது மொஹிதீன், பல்கலைக்கழக விடுதி காப்பாளர் ஜஹாங்கீர் ஆலம் மற்றும் ஆலமின் சகோதரர் மற்றும் மைத்துனர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, என் தந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

விசாரணையின்போது, ஜஹாங்கீர் ஆலம் மற்றும் அவருடைய உறவினர்கள், பணம், கணினி மற்றும் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, மொஹிதீன் என் தந்தையைக் கொலை செய்ய வற்புறுத்தியதாக வாக்குமூலம் அளித்தனர். மொஹிதீன் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

குழந்தையாக ஷாகுஃபதா அவருடைய தந்தையின் மடியில்

பட மூலாதாரம், Salman Saeed

2008-ஆம் ஆண்டில், ராஜ்ஷாஹி கீழ் நீதிமன்றத்தில் நான்கு பேர் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு பேர் விடுவிக்கப்பட்டனர். அது அப்போதே முடிந்திருக்க வேண்டும், ஆனால் முடியவில்லை. நான்கு பேரும் மேல்முறையீடு செய்தார்கள். இந்த வழக்கு வங்கதேச உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

என் தந்தைக்கு நீதி கிடைக்க என் அம்மாவும் அண்ணனும் அயராமல் பாடுபட்டார்கள். அதற்கு மாறாக, நான் பயனற்று இருப்பதாக உணர்ந்தேன். கீழ் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, நான் என் பதின்ம வயதில் இருந்தேன். என் குடும்பம் தான் என் வாழ்நாள் முழுவதும் எனக்கான அடைக்கலமாக இருந்தது. அப்பாவின் மரணத்திற்குப் பிறகும், எனது ஒரே கவனம் பல்கலைக்கழகப் படிப்பை முடிக்க வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினார்கள். உணர்ச்சி ரீதியாகவும் சரி நிதி விஷயத்திலும் சரி எனக்கு அவர்கள் ஆதரவளித்தார்கள்.

நான் என் படிப்பில் விடாமுயற்சியோடு இருந்தேன். எனது சட்ட நூல்களில் கவனம் செலுத்த முயன்றேன். இருப்பினும் என் வாழ்க்கை என்ன நிலையில் உள்ளது என்றே புரியாமல் இருந்தேன். 2011-ஆம் ஆண்டு அப்பாவின் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. என் அப்பா, படைப்பு திருட்டுக்காகக் குற்றம் சாட்டிய, அவருடைய சக ஊழியரான மருத்துவர் மியா முகமது மொஹிதீனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும், அவர் விசாரணைக் காலத்திற்கு விடுவிக்கப்பட்டார். அவர் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களைப் பணியமர்த்தினார். அதோடு, அவருடைய வாதம் நுட்பமானதாக இருக்கும்.

திடீரென, என் எதிர்காலம் எனக்குத் தெரிந்தது. என் வாழ்வில் நான் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். எனது தந்தையின் கொலையாளிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உதவ நான் என் சட்டப் படிப்பைப் பயன்படுத்தலாம். நான் ஒரு தனித்துவமான நிலையில் இருந்தேன். நான் என் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கான சட்டபூர்வ ஆவணங்களை மொழி பெயர்க்கவும் முடியும். எனக்கு காவல்துறையைத் தெரியும். என் தந்தையை எனக்குத் தெரியும். குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கூட எனக்குத் தெரியும். இந்த வழக்கில் என் தந்தைக்கு நீதி கிடைப்பதில் அவசியம் என்னால் பங்கு வகிக்க முடியும்.

வழக்கறிஞராக ஷாகுஃப்தா அகமது

பட மூலாதாரம், Salman Saeed

நான் 2012-ஆம் ஆண்டில் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றேன். உடனடியாக வழக்கறிஞர்களுக்கு உதவத் தொடங்கினேன். வங்கதேசத்தின் குற்றவியல் நீதிமன்ற வழக்குகளில் பெண் வழக்கறிஞர்கள் அதிகமில்லை. ஆனால், எனது மதிப்பை அனைவராலும் பார்க்க முடிந்தது. என்னை மிகவும் வரவேற்றார்கள். நான் விழித்திருந்த ஒவ்வொரு தருணத்தையும் அங்கு தான் கழித்தேன். என் தந்தைக்குக் கிடைக்க வேண்டிய நீதி மீது மட்டுமே கவனம் செலுத்துவதற்காக நான் மற்ற வழக்குகளை நிராகரித்தேன்.

2013-இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. என் தந்தையால் படைப்பு திருட்டு குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மியா முகமது மொஹிதீன் மற்றும் பராமரிப்பாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோருக்கு மரண தண்டனையை அந்தத் தீர்ப்பு உறுதி செய்தது. ஆனால், ஆலமின் உறவினர்களான மற்ற இருவரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அவர்கள் கொலைக்கு உதவியதாகவும் மொஹிதீன் மற்றும் ஆலம்தான் என் தந்தையின் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாகவும் கூறி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், அது இன்னும் முடியவில்லை…

பராமரிப்பாளரும் அவருடைய உறவினர்களும் என் தந்தையின் கொலையையும் அவர்கள் அனைவரும் மொஹிதீனிடம் பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டனர். இருந்தாலும், மொஹிதீனின் வழக்கறிஞர்கள் மற்றொரு முறையீட்டை தாக்கல் செய்தார்கள். இந்த முறை, வங்கதேசத்தின் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவில், தாக்கல் செய்தார்கள்.

நான் ஆவணங்களை ஆராய்ந்தேன். குற்றவியல் விவரங்களை ஆய்வு செய்தேன். வழக்கறிஞர்களுடன் பேசினேன். என் சகோதரர் மற்றும் அம்மாவுக்கு தைரியம் கொடுத்தேன். நீண்ட இரவுகள், வார இறுதி நாட்கள், பல ரமலான்கள் என அனைத்தும் எங்கள் தந்தையின் கொலைக்கு நீதி கிடைக்க, எங்கள் தந்தைக்கு அமைதி கிடைக்கப் போராடினோம். இந்தச் சூழ்நிலையில் நான் என் 30-களில், ஓர் உறுதியான வழக்கறிஞராக இருந்தேன். 2006-இல் இருந்ததைப் போன்ற பதற்றம் நிறைந்த பதின்பருவத்துப் பெண்ணாக இருக்கவில்லை.

ஆனால், நீதிமன்றத்தின் கால அட்டவணைக்கு நாங்கள் கட்டுப்பட்டோம். மேல் முறையீட்டு மனுவின் விசாரணைக்காக எட்டு ஆண்டுகள் காத்திருந்தோம்.

ஷாகுஃப்தாவும் அவருடைய அம்மாவும்

பட மூலாதாரம், Salman Saeed

மியா மொஹிதீன் பெரியளவிலான தொடர்புகளைக் கொண்ட பணக்காரர். அவருடைய மைத்துனர் ஒரு செல்வாக்கு மிக்க வங்கதேச அரசியல்வாதி. அவரிடம் செல்வமும் பெரிய வழக்கறிஞர்கள் குழுவும் இருந்தது. என் தந்தையின் கொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவரும் என் தந்தையும் எப்போதும் நெருங்கிய நண்பர்கள் என்றும் அவருக்கு எதிராக வலுவான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் இந்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மற்ற மூன்று பேரும் விரிவான வாக்குமூலம் கொடுத்ததையோ, அதன்பிறகு அவரது நடத்தை எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவருடைய நடத்தையைப் போல் இல்லை என்பதையோ பொருட்படுத்தவில்லை. முந்தைய ஆண்டுகளில் எங்களை அடிக்கடி வந்து பார்த்த மொஹிதீன், என் தந்தையின் இறுதிச் சடங்கில் இருந்து விலகியிருந்தார். அப்பாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாத ஒரே ஆசிரியர் அவர் மட்டும் தான். எங்களுக்கு ஆதரவளிக்க அவர் எங்கள் குடும்பத்தைச் சந்திக்கவில்லை.

உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு இறுதி வரை என் தந்தையின் வழக்கை பட்டியலிடவில்லை. 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று தான், நீதிபதி ஹசன் ஃபோஸ் சித்திக் தலைமையிலான நீதிபதிகள் மருத்துவர் மியா முகமது மொஹிதீன் தான் என் தந்தையைக் கொலை செய்த குற்றவாளி என்று உறுதி செய்து அவரது மரண தண்டனையை உறுதி செய்தனர்.

தீர்ப்புக்குப் பிறகு, தீர்ப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று என் குடும்பத்தினர் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். ஆனால், “‘மகிழ்ச்சி’ என்பது சரியான வார்த்தையாக எனக்குத் தோன்றவில்லை. கடந்த 16 ஆண்டுகள் எங்கள் குடும்பம் எப்படியிருந்தது என்பதை விவரிக்க என்னிடம் இன்னும் வார்த்தைகளே இல்லை. நினைத்துப் பார்க்க முடியாத வலி. சிலநேரங்களில், என் தந்தை உயிரிழந்த விதம், என் வாழ்வில் என்றுமே நிம்மதியை வழங்காதோ எனச் சிந்தித்ததுண்டு.

என் அப்பாவுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டம் எனது வாழ்வின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டதால், என் சொந்த வாழ்க்கை தேங்கியுள்ளது. நான் செட்டிலாகி, என் சொந்த குடும்பத்தைத் தொடங்குவேனா என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். என் தந்தையைக் கொலை செய்தவர்கள் இறந்த பிறகு வேண்டுமானால் நான் அதைச் செய்யலாம். அதன்பிறகு இது முடிந்துவிட்டதாகத் தோன்றலாம். என் தந்தை என் முழு உலகமாக இருந்தார். அவர் நல்லவர், ஒழுக்கமானவர், எளிமையானவர், அறிவாளி.

மருத்துவர் மொஹிதீன் தனது வேலையை இழக்கும் அபாயத்தில் இருந்ததால், என் தந்தையை என்ன செய்தார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால், அவருக்காக, நான் தொடர்ந்து நீதிக்காகப் போராடி, நல்ல வாழ்க்கையை வாழ்வேன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »