Press "Enter" to skip to content

“அவர்கள் பொய் சொன்னார்கள்”- கட்டாய ராணுவ சேவையால் சிக்கிய மகன்களை மீட்டெடுக்க போராடிய ரஷ்ய தாய்

  • ஸ்டீவ் ரோசென்பெர்க்
  • ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை

கடந்த குளிர்காலத்தில் மெரினாவின் இரண்டு மகன்களும் ரஷ்ய ராணுவத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தப்பட்டபோது, அவர் தனது மகன்கள் ஓராண்டு ராணுவ சேவையில் ஈடுபடுவதை வரவேற்றார்.

“அவர்கள் ராணுவ சேவையைச் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் கூறினேன். அது தாய்நாட்டிற்கு அவர்கள் செய்யவேண்டிய கடமை,” என்று மெரினா என்னிடம் கூறுகிறார்.

ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அவர் கவலைப்படத் தொடங்கினார். அவருடைய மகன்கள் யுக்ரேன் எல்லையருகே இருக்கும் பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள்.

பிப்ரவரி 24-ஆம் தேதியன்று, அதிபர் விளாதிமிர் புதின் ரஷ்ய துருப்புகளை யுக்ரேன் மீது படையெடுக்குமாறு உத்தரவிட்டார். அன்று மெரினா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மகன்களுடனான தொடர்புகளை இழந்தார்.

“எனக்கு நேரம் நின்றுவிட்டதைப் போல் இருந்தது. என்னால் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. அதே பிரிவைச் சேர்ந்த மற்ற கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டோரின் தாய்மார்களுடன் நான் தகவல்களைப் பரிமாறிக் கொண்டேன். அவர்களில் பலர் தங்கள் பிள்ளைகளுடனான தொடர்புகளை இழந்திருந்தனர்,” என்று கூறினார்.

ரஷ்ய கட்டாய ராணுவ சேவையில் இருப்பவர்கள், யுக்ரேனுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று ரஷ்ய அதிபர் மாளிகை உறுதியளித்தது.

மெரினாவின் மகன்கள் எங்கே?

“நான் காரில் சென்று தேடத் தொடங்கினேன். தொலைபேசியில் ராணுவ தளபதிகளில் ஒருவர், தாங்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக வலியுறுத்தினார். அதற்கு நான், ‘இங்கு அருகிலுள்ள பயிற்சிகள் நடந்த பகுதிகளையெல்லாம் தேடிவிட்டேன். அவர்கள் அங்கில்லை. தயவு செய்து என்னிடம் பொய் சொல்லாதீர்கள்’ என்றேன். அவர் துண்டித்துவிட்டார்.”

“விரக்தியில் ஒருமுறை நான் யுக்ரேனுக்குச் செல்லவும் முயன்றேன். அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அனைத்து இடங்களிலும் சோதனைச் சாவடிகள் இருந்தன.”

“பிறகு உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கின. ராணுவ வீரர்கள் இறந்துவிட்டார்கள் என்றும் காயமடைந்துவிட்டார்கள் என்றும் எனக்கு ஓர் அழைப்பு வந்தது. நான் ராணுவ மருத்துவமனைக்கு விரைந்தேன்,” என்ற மெரினா, அங்குத் தேடியபோது அவருடைய மகன்கள் அங்கு இல்லை. ஆனால், அங்கு பார்த்தவை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

மேரியோபோலில் இருக்கும் ஒரு ரஷ்ய படைவீரர்Russian soldier in Mariupol

பட மூலாதாரம், EPA

“ராணுவ மருத்துவமனையில் போதிய மருந்துகளோ, கட்டுகளோ இல்லை. உள்ளூர்வாசிகள் அனைத்தையும் விநியோகித்தனர். வீரர்கள் குளிரோடும் பசியோடும் இருந்தார்கள். பெரிய மனது கொண்ட உள்ளூர் மக்கள் மருத்துவமனைக்கு உணவு மற்றும் பானங்களைக் கொண்டு வந்தார்கள்.”

இறுதியில் மெரினாவின் மகன்கள் இருந்த ராணுவப் பிரிவில் இருந்த ஒருவர், அவர்கள் இருவரும் யுக்ரேனில் இருப்பதாக ஒப்புக் கொண்டார்.

“உங்கள் குழந்தைகள் தொழில்முறை வீரர்களாக ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர். அவர்கள் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் (யுக்ரேனில்) பங்கெடுக்கிறார்கள். அவர்கள் போரின் நாயகர்களாகத் திரும்புவார்கள்’ என்ற திகிலூட்டும் செய்தி எனக்குச் சொல்லப்பட்டது.”

அதற்கு, “நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்? ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் எந்தத் திட்டமும் அவர்களுக்கு இல்லை,” என்பது தான் அவருடைய பதிலாக இருந்தது. “அவர்கள் ராணுவத்தில் சேர்ந்தே மூன்று மாதங்கள் தான் ஆகிறது. ஒருமுறை தான் துப்பாக்கியைப் பிடித்துள்ளார்கள். ஒருமுறை தான் துப்பாக்கிச் சூடு நடத்தும் இடத்திற்குச் சென்றுள்ளார்கள். பெரும்பாலும் அவர்கள் பனியைத் தான் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்,” என்று கூறியுள்ளார்.

“நான் வழக்கறிஞர்-ஜெனரல் அலுவலகத்திற்கு விசாரணை கேட்டுக் கடிதம் எழுதினேன். என் மகன்கள் ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர்களிடம் கூறினேன். நான் மிகவும் உறுதியாக இருந்தேன். மற்ற தாய்மார்களும் கடிதம் எழுதினார்கள். அவர்களும் தங்கள் பிள்ளைகளை நன்கு அறிவார்கள்.”

ஆயுதப் படைகளில் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா கட்டாய ராணுவ சேவையை நம்பியுள்ளது. சில விதிவிலக்குகளோடு, 18 முதல் 27 வயது வரையுள்ள ரஷ்ய ஆண்களுக்கு கட்டாய ராணுவ சேவை 12 மாதங்கள் நீடிக்கும்.

தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் மெரினா

மார்ச் 5-ஆம் தேதியன்று, அதிபர் புதின், “யுக்ரேனில் இந்த நடவடிக்கையில் தொழில்முறை வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். அங்கு கட்டாய ராணுவ சேவை இல்லை. அதற்கான திட்டமும் இல்லை. நாங்கள் அவர்களைப் பயன்படுத்தப் போவதில்லை,” என்று அறிவித்தார்.

ஆனால், நான்கு நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், முதன்முறையாக யுக்ரேனில் ரஷ்ய தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர்களில், கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்ட வீரர்களும் இருப்பதாக ஒப்புக் கொண்டது. “அத்தகைய அனைத்து படைவீரர்களும் இப்போது ரஷ்யாவிற்குத் திரும்பியுள்ளனர்,” என்று அமைச்சகம் கூறியது.

கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் எப்படி யுக்ரேனுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதை விசாரிக்க ராணுவ வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடும் கோபத்தில் இருக்கும் மெரினா

மெரினாவின் அதிகாரபூர்வ புகார் உறுதிசெய்யப்பட்டது. அவருடைய மகன்கள் ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என்பதை ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்தனர். இரண்டு மகன்களும் ரஷ்யாவுக்குத் திரும்பினார்கள்.

“அவர்கள் என் இளைய மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதித்தார்கள். அவனை அழைத்துச் செல்ல காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவனை அழைத்து ஏதும் கொண்டுவர வேண்டுமா எனக் கேட்டேன். அதற்கு என் மகன் ‘அம்மா எனக்கு நீங்கள் தான் வேண்டும். வேறெதுவுமில்லை,’ என்றார்,’ என்கிறார் மெரினா.

“நான் அவனைப் பார்த்தபோது மிகவும் சோர்ந்து போயிருந்தான். அங்கிருந்து திரும்பி வந்த இளைஞர்கள், மிகவும் மெலிந்து, அழுக்காகவும் களைப்பாகவும் இருந்தனர். அவர்களின் ஆடைகள் கிழிந்திருந்தன. என் மகன், ‘அங்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லது’ என்றான். அவன் உயிரோடு திரும்பி வந்துவிட்டான். அதுதான் எனக்கு இப்போது முக்கியம்,” என்றார்.

நடந்ததை நினைத்து மெரினா கடும் கோபத்தில் உள்ளார்.

புதன்கிழமையன்று முதன்முறையாக காயமடைந்த ரஷ்ய படைவீரர்களைச் சந்தித்த விளாதிமிர் புதின்

பட மூலாதாரம், Sputnik/Mikhail Metzel/Pool

“அவர்கள் என் முகத்துக்கு நேராகப் பொய் சொன்னார்கள். முதலில் என் மகன்கள் யுக்ரேனில் இல்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு அவர்கள் ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக பொய் சொன்னார்கள். அதிகாரிகள், சார்ஜென்ட்கள் பொய் சொன்னார்கள். பிறகு என்னிடம் உண்மையைச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை என்று ஒருவர் கூறினார். அவர்கள் சட்டத்தை மீறுவதற்கும் என் மகன்களை யுக்ரேனுக்கு அனுப்புவதற்கும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஒரு தாயின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்று கூற அவர்கள் அனுமதிக்கப்படவில்லை,” என்று மெரினா கூறினார்.

“ராணுவத்தில் உள்ள குழப்பங்கள் மற்றும் சச்சரவுகள் பற்றி எங்கள் அதிபரும் தலைமைத் தளபதியும் அறிந்திருக்கவில்லை என்று நான் நம்ப விரும்புகிறேன். அவர்கள் தொலைக்காட்சியில் சொல்வது போல் இங்கு இல்லை என்பதை நான் அவருக்குச் சொல்ல விரும்புகிறேன்,” என்ற மெரினா தனது மகன்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதால் நிம்மதியடைந்துள்ளார். அவரைப் போன்ற நிலையில் இருக்கும் மற்ற குடும்பங்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.

“இத்தனை மகன்கள் இன்னும் திரும்பி வரவில்லை. பல தாய்மார்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் கொடுமையானது. மனித வளர்ச்சியின் உச்சத்தை நாம் அடைந்திருக்க வேண்டும். இதில் எப்படி நல்லாம் ஓர் உடன்பாட்டை அடைய முடியவில்லை? ஏன்? நாம் போர் புரியவோ கொலை செய்யவோ தான் வேண்டுமா?

“என் பிள்ளைகள் திரும்பி வரும்போது வித்தியாசமாக இருந்தார்கள். நீங்கள் அதை அவர்களின் கண்களில் பார்க்கலாம். அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை கொள்வதை நிறுத்திவிட்டார்கள். அவர்கள் மீண்டும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தின் மீது, அமைதி மற்றும் அன்பின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்கிறார் மெரினா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »