Press "Enter" to skip to content

இந்தியா – சீனா எல்லை விவகாரம்: அமெரிக்கா மீதான சீனாவின் கோபம்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

  • அனந்த் பிரகாஷ்
  • பிபிசி நிருபர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் இருவர், இந்தியா-சீனா இடையிலான லடாக் நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டனர். சீனா அதை எதிர்த்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதையும், இந்தியா இதை எப்படிப் பார்க்கிறது என்பதையும் இந்தக் கட்டுரையில் கொஞ்சம் விளக்கமாகப் புரிந்து கொள்வோம்.

நடந்தது என்ன?

கடந்த புதன்கிழமை, அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் கமாண்டிங் ஜெனரல் சார்லஸ் ஏ ஃப்ளின், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லடாக்கில் சீனாவின் செயல்பாடு குறித்து அறிக்கை அளித்தார்.

இந்த அறிக்கையில், “சீனா மேற்கு பகுதியில் உருவாக்கியுள்ள உள்கட்டமைப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது” என்று ஃப்ளின் குறிப்பிட்டார்.

இதற்கு அடுத்த நாளான வியாழனன்று, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், “லடாக் குறித்த அமெரிக்க ராணுவ அதிகாரியின் அறிக்கை வெட்கக்கேடானது” என்று கூறி, அமெரிக்காவை விமர்சித்தார்.

இதற்குப் பிறகு, சனிக்கிழமையன்று, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டினும் சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு குறித்துக் கவலை தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நடந்த ஷாங்கிரி-லா உரையாடலில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின், சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு குறித்துக் கவலை தெரிவித்ததோடு, இந்தியாவை ஆதரிப்பது குறித்தும் பேசினார்.

“இந்தியாவுடனான எல்லையில் சீனா தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது. அமெரிக்கா தனது நண்பர்களுடன் துணை நிற்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

இந்த அறிக்கை அமெரிக்க ராணுவ அதிகாரிகளிடமிருந்து வந்ததால், ஆளும் கட்சியான பாஜகவை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் முற்றுகையிடத் தொடங்கியுள்ளன. இதனுடன் இந்திய வெளியுறவு அமைச்சகமும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய – சீன எல்லைப் பிரச்னையின் மையமாக லடாக் இருப்பது ஏன்?

  • ஏப்ரல் 2020 இல், சர்ச்சைக்குரிய அசல் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் (Line of Actual control) கிழக்கு லடாக்கில் சீனா ஒரு ராணுவத் தடுப்பை உருவாக்கியதையொட்டி, சமீபத்திய சர்ச்சை தொடங்கியது.
  • கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோ மற்றும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் போன்ற பகுதிகளில் இரு நாட்டு ராணுவங்களும் நேருக்கு நேர் மோதின.
  • ஜூன் 15 அன்று மோதல் வன்முறையாக மாறியது. கல்வானில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.
  • பின்னர் சீனாவும் தனது நான்கு வீரர்கள் இறந்ததாக ஒப்புக்கொண்டது. ஆனால், சீன வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இதை விட அதிகம் என்பது நிபுணர்கள் கருத்து
  • பிப்ரவரி 2021 இல், இரு நாடுகளும் பாங்காங் த்சோவின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில் ஒரு கட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பதட்டத்தை நீக்குவதாக அறிவித்தன.
  • கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக் மற்றும் டெப்சாங் போன்ற பகுதிகளில் தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
  • அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக குறைந்தது 12 இடங்களிலாவது சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
  • ஜூன் 2020க்குப் பிறகு, இரு நாடுகளின் கோர் கமாண்டர் மட்டத்தில் 14 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா குறித்து சீனா கருத்து

அமெரிக்க ஜெனரலின் அறிக்கைக்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், எல்லைப் பிரச்னை இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்புப் பிரச்னை என்று கூறினார்.

மேலும் அவர், “தற்போது சீனா மற்றும் இந்தியா இடையேயான எல்லை தொடர்பான சூழ்நிலை சீராக உள்ளது. சீன-இந்திய எல்லையின் மேற்கு செக்டாரில் பெரும்பாலான இடங்களில் இரு நாட்டு ராணுவங்களும் படை விலக்கும் பணியை நிறைவு செய்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை என்பது இருதரப்புப் பிரச்னை. இரு தரப்பும் இந்த சர்ச்சையை பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் தீர்க்கத் தயாராக உள்ளன. சில அமெரிக்க அதிகாரிகள் விரல்களை உயர்த்தி இரு நாடுகளுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தவும், பிளவை ஏற்படுத்தவும் முயற்சி செய்துள்ளனர். இது வெட்கக்கேடானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் லடாக் எல்லைப் பிரச்னையில் அமெரிக்க அரசை சீனா கண்டித்துள்ளது. சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட மின்ஊடுருவாளர்கள் செப்டம்பர் 2021 முதல் 7 ஸ்டேட் லோட் டெஸ்பாட்ச் சென்டர்களைத் (எஸ்எல்டிசி) தாக்கியதாக அமெரிக்க இணையப் பாதுகாப்பு நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருந்தது நினைவுகொள்ளத்தக்கது. அப்போதும் சீனா இதை வன்மையாகக் கண்டித்தது

இந்தச் செய்தியை உறுதி செய்த மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், லடாக் அருகே உள்ள மின்பகிர்மான மையங்களை சீன மின்ஊடுருவாளர்கள் இரண்டு முறையாவது தாக்க முயன்றுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும், இந்த மின்ஊடுருவாளர்கள் சீன அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

ஆனால், இந்த அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவுக்கு எதிராக அமெரிக்க அரசு பிரச்சாரம் செய்வதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

“சில காலமாக அமெரிக்க அரசாங்கமும் சில சைபர் பாதுகாப்பு நிறுவனங்களும் ‘சீன ஹேக்கிங்’ தொடர்பான விஷமத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்” என்று லெஜியன் கூறினார்.

சீனாவின் அறிக்கைக்குக் காரணம்

ஆனால், சீனா ஏன் அமெரிக்கா மீது இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, இந்த அறிக்கையை இந்தியா எப்படிப் பார்க்கிறது என்ற கேள்விகளும் இந்த இடத்தில் எழுகின்றன.

சீன விவகார நிபுணரும் எழுத்தாளருமான மனோஜ் கேவல்ரமானி, இந்தியாவில் நிலவி வரும் மாற்றங்களைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

குறிப்பாக, “யார் என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்படுவதற்குப் பதிலாக, களத்தில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். 2017 முதல் நாம் பார்க்கும் தரவு, மேற்கத்திய திரையரங்கம் கட்டளையில் PLA இன் உள்கட்டமைப்பு மற்றும் அடித்தளத்தை உருவாக்கும் செயல்முறையை வேகப்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்றார்.

அமெரிக்காவுக்கு எதிராக இப்படி ஒரு அறிக்கை வெளியானது குறித்து, கேவல்ரமானி, “சீனாவின் எதிர்வினை எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால், அமெரிக்காவுடனான தனது போட்டி என்ற கண்ணாடியின் வழியாக சீனா உலகைப் பார்க்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தரப்பில் இருந்து இதுபோன்ற எதிர்வினை எதிர்பார்க்கக்கூடியது தான்” என்று கூறுகிறார்.

சீன விவகார நிபுணரான அல்கா ஆச்சார்யாவும் இதற்கு உடன்படுவதாகத் தெரிகிறது.

“சீனாவின் தரப்பிலிருந்து இந்த எதிர்வினை வருவது இயற்கையானது, இந்த விவகாரத்தில் எந்த மூன்றாம் தரப்பினரும் எதிர்வினையாற்றுவதை சீனா விரும்பவில்லை. இப்போது இந்தியாவில் இருந்தும் இந்தப் பிரச்னை தீர்க்கப்படவேண்டும் என்பது போன்ற அறிக்கைகள் வருகின்றன. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது” என்கிறார் அவர்.

இப்போது சீனா எந்த மாதிரியான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், சீனா தனது பங்கில் சில முயற்சிகளை எடுத்தால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று இந்தியாவுக்கு ஓரளவு நம்பிக்கை உள்ளது. ஆனால், அமெரிக்கா பிரிவினையை அதிகரிக்கிறது என்பது சீனாவின் பார்வை.

இந்திய-சீன விவகாரத்தில் அமெரிக்கா எங்கு வந்தது?

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 2020 ஆம் ஆண்டு லடாக்கில் பிரச்னை தொடங்கியது. அப்போதிருந்து, அமெரிக்க அதிகாரிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை அளித்து வருகின்றனர்.

சமீபத்தில், அமெரிக்காவின் துணை பாதுகாப்பு ஆலோசகர் தலிப் சிங் ஒரு அறிக்கையை வெளியிட்டார், அது பெரும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

பட மூலாதாரம், Getty Images

“பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாங்கள் எங்கள் தேசிய நலன்களை மனதில் வைத்து வேலை செய்வோம். இந்தியாவை ஒவ்வொரு நாளும் பாதுகாப்பானதாக மாற்ற உதவும் எங்கள் நம்பகமான நட்பு நாடுகளின் பங்கை நாங்கள் அங்கீகரிக்கிறோம். வரலாற்றின் தயக்கங்களிலிருந்து நாங்கள் மீண்டு வந்துவிட்டோம். எங்கள் விருப்பங்களை எதிர்த்து யாரும் வீட்டோ செய்யவிடமாட்டோம்” என்றார்.

இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்காவின் கொள்கையை இந்தியா எப்படிப் பார்க்கிறது என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து அல்கா ஆச்சார்யா கூறும்போது, ​​”சீனாவுடனான மோதலுக்கு இந்தியா சுயமாகத் தீர்வு காண வேண்டும் என்று தான் இந்தியாவில் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சீனாவை சமாளிக்க வேண்டுமானால் முழுமையாக எங்களுடன் இணையுங்கள் என்று அமெரிக்கா கூறியதற்கான ​திலீப் சிங் எதிர்வினையாற்றினார். இந்தியா முழுவதுமாகத் தங்களுக்கு ஆதரவாக இருந்து, ரஷ்யாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்று அமெரிக்கா தரப்பில் இருந்து பெரிய முயற்சி நடந்து வருகிறது. ஆனால், தற்போது வரை, சீனாவுடனான இந்தியாவின் மோதலில், அமெரிக்கா, இந்தியாவுடன் துணை நிற்கும் என்பதற்கான எந்த உறுதியும் இல்லை. இந்தியா அமெரிக்காவுடன் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கில் இவை அனைத்தும் நடந்து வருகின்றன. ஆனால், இந்திய -சீன விவகாரத்தில் இடையே யாரும் தலையிடவோ உதவி செய்யவோ முடியாது என்று நமது வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்றுகளில் இருந்து தெரிகிறது” என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »