Press "Enter" to skip to content

குழந்தையை கடித்துக் கொன்ற நாய்கள்? உசிலம்பட்டி சாலையோரம் காணப்பட்ட கொடுமை

பட மூலாதாரம், Getty Images

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (17/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

உசிலம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்து குதறி கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தேனி ரோட்டில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே ரத்தக்கறையுடன் கிடந்த துணியை நாய்கள் கடித்து குதறின. இதை கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த உசிலம்பட்டி டவுன் காவல் துறையினர் ரத்தக் கறையுடன் கிடந்த துணியை பிரித்து பார்த்தனர். அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் நாய்கள் கடித்துக் குதறியதில், சிதைந்த நிலையில் இருந்தது.

காவல் துறையினர் அந்த குழந்தையின் உடல் பாகங்களை சேகரித்து பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதாடர்பாக வழக்குப்பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை சாலையோரம் வீசிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வீசிச் சென்றது யார்? குழந்தையின் உடல் பெரும்பாலும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா? என கண்டறிய முடியவில்லை. உயிருடன் இருந்த குழந்தையை வீசிச் சென்றார்களா அல்லதுஇறந்த குழந்தையா என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ. சட்டையை பிடித்து எச்சரித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சௌத்ரி

ரேணுகா சௌத்ரி

பட மூலாதாரம், ANI

ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில், எஸ்.ஐ. சட்டையை பிடித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சௌத்ரி எச்சரித்தது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து, ஹைதராபாத்தில் ராஜ்பவன் முற்றுகை போராட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியினர் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தலைமையில் பேரணியாக நேற்று சென்றனர்.

ஹைதராபாத் கூட்டு ரோடு அருகே காவல் துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது காவல் துறையினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது முன்னாள் எம்பியான ரேணுகா சவுத்ரியை கைது செய்து காவல் துறை வாகனத்தில் ஏற்ற எஸ்.ஐ தேவேந்திரா என்பவர் முயற்சித்தார்.

அப்போது ரேணுகா சவுத்ரி அந்த எஸ்.ஐ.யின் சட்டை காலரை பிடித்து ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். காவல் துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததற்காக, ரேணுகா சவுத்தரி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படாது

இலங்கை உணவு நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

அதிகளவான ஹெக்டேர்களில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, உணவுப்பஞ்சம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்ததாக, ‘தமிழ் மிரர்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அப்போது, “நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை வசமுள்ள நெல்லை விரைவாக அரிசியாக மாற்றி விநியோகிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.

வழமையாக மாதமொன்றுக்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படும். எனினும், அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க நாம் ஆலோசனை வழங்கி உள்ளோம். எனவே, தேவைக்கு ஏற்ப அரசியை சதோச, சுப்பர் மார்க்கெட்டுக்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

அரிசி மாபியாவை இல்லாதொழிக்க நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை நேரடியாக தலையீடுகளை மேற்கொள்ளும். தேவையைவிட பத்து மடங்காக அரிசியை சந்தைகளுக்கு விநியோகிக்கும் போது அரிசிக்கான தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியும்.

நான் அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்பு 2,48,000 ஹெக்டேர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது 4,70,000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. எனவே, நாட்டின் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. ஆகவே, மக்களுக்கு முன்பிருந்த அச்சம் இப்போது தேவையில்லை” என தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும்

ரணில் விக்ரமசிங்க

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என, ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் கூறியதாக, “நாடு பொருளாதார ரீதியில் பின் தள்ளப்பட்டு வங்குரோத்து அடைந்த நிலையிலும் உலக நாடுகள் இலங்கையை அந்நியப்படுத்தி இருந்த நிலையிலுமே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆனால், இன்று ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சியில் சிலர் விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு விமர்சிப்பவர்களை அன்று இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு அழைத்தபோது பின்வாங்கினார்கள். ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும்” என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »