Press "Enter" to skip to content

கருக்கலைப்பு முயற்சியில் 15வயது சிறுமி உயிரிழப்பு… இளைஞர் கைது

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (30/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே நடந்த கருக்கலைப்பு முயற்சியில் 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்த 15 வயது சிறுமி ஒருவர், 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இவரை, அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துசென்று வந்துள்ளார். இதனால், இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதில், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி முருகனின் நண்பரான பிரபு என்பவர் சிறுமியை, ரெட்டியார்பாளையத்தில் உள்ள போலி பெண் மருத்துவரான காந்தி என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமிக்கு கருக் கலைப்பு மாத்திரையை காந்தி கொடுத்துள்ளார். சிறுமிக்கு ஊசியும் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சிறிது தொலைவு வந்த சிறுமி மயக்கமடைந்தார்.

இதையறிந்த சிறுமியின் உறவினர்கள் தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டதுடன் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டம் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து முருகன், அவரது நண்பர் பிரபு மற்றும் போலி பெண் மருத்துவர் காந்தி ஆகியோரை தானிப்பாடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், காந்தியின் வீட்டில் மருத்துவக் குழுவினர் சோதனை நடத்தி, அங்கிருந்த ஊசி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று அச்செய்தி தெரிவிக்கிறது.

தமிழ்நாடு நிதியமைச்சர் அழைப்பு -மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

பட மூலாதாரம், Getty Images

ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

சண்டிகாரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் சண்டிகாரில் 2 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர், அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தமிழகத்தின் மதுரையில் நடைபெறுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் நடைபெறும். தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பின் பேரில், இந்த கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது’ என தெரிவித்தார்.

அந்த கூட்டத்தில் சூதாட்ட விடுதிகள், கணினிமய விளையாட்டு மற்றும் குதிரைப் பந்தயம் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இலங்கையில் பேருந்து கட்டண உயர்வு – இன்று அறிவிப்பு

இலங்கையில் பேருந்து கட்டண உயர்வு - இன்று அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் இடைக்கால பேருந்து கட்டண உயர்வு தேசிய போக்குவரத்து ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட உள்ளது என டெய்லிமிர்ரர் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பேருந்து கட்டண மாறுதல்கள் ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான மாறுதல்க இன்று காலை அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனைக்கூட்டத்துக்குப் பிறகு, பேருந்து கட்டணம் 30% உயர்த்தப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.32ஆக இருக்கும் குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாக உயர்த்தப்படும்.

இலங்கை போக்குவரத்து அமைச்சரகத்துக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்று டெய்லி மிர்ரர் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்சிக்காக கடிதம் எழுதிய ஓபிஎஸ் – நிராகரித்த ஈபிஎஸ்

கடிதம் எழுதிய ஓபிஎஸ் - நிராகரித்த ஈபிஎஸ்

பட மூலாதாரம், Getty Images

உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ அதிமுக வேட்பாளர்களுக்கான படிவத்தில்‌ கையெழுத்திடுவது குறித்து அக்கட்சியின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌, இணை ஒருங்கிணைப்பாளர்‌ எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்‌ எழுதியுள்ளது குறித்து தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ விடுபட்ட இடங்களுக்கு இடைத்தேர்தல்‌ நடைபெறவுள்ளது. இந்தத்‌ தேர்தலில்‌ அதிமுக சார்பில்‌ போட்டியிடும்‌ வேட்பாளர்களுக்கான படிவத்தில்‌ ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌, இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர்‌ கையெழுத்திடாததால்‌ வேட்பாளர்களுக்கு அதிமுக சின்னம்‌ கிடைக்காத சூழல்‌ உள்ளது.

இந்த நிலையில்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ புதன்கிழமை எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம்‌ எழுதியுள்ளார்‌. அதில்‌, அதிமுக வேட்பாளர்களுக்கான படிவங்களில்‌ வியாழக்கிழமை மாலை 3 மணிக்குள்‌ இருவரும்‌ கையெழுத்திட்டு தேர்தல்‌ ஆணையத்துக்கு அளிக்க வேண்டும்‌ என்று குறிப்பிட்டிருந்தார்‌. ஆனால்‌, அந்தக்‌ கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பில்‌ வாங்க மறுத்துவிட்டதாகத்‌ தெரிகிறது.

சமீபத்தில்‌ நடைபெற்ற அதிமுகவின்‌ பொதுக்குழுவில்‌ ஒருங்கிணைப்பாளர்‌, இணை ஒருங்கிணைப்பாளர்‌ பதவிகளுக்கு ஒப்புதல்‌ பெறாததால்‌, அந்தப்‌ பதவிகள்‌ காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »