Press "Enter" to skip to content

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை: யார் இவர்?

பட மூலாதாரம், Reuters

ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

67 வயதாகும் ஷின்சோ அபே, சுதந்திர ஜனநாயக கட்சியை இரண்டு முறை ஆட்சியமைக்க வைத்த பெருமைக்குரியவர்.

2006 ஆம் ஆண்டு சர்ச்சையுடன் தொடங்கியது இவரது பிரதமர் பயணம். இரண்டாவது முறையாக 2012இல் பிரதமரான இவர், 2020ஆண்டு உடல்நலம் காரணமாக இவர் பதவி விலகும்வரை பிரதமராக நீடித்தார்.

இரண்டாவது முரை அவர், பிரதமராக பொறுப்பேற்றபோது நாடு, பொருளாதார வீழ்ச்சியில் இருந்தது. இந்த நிலையில் அபேவின் எளிமைப்படுத்தப்பட்ட பணமாக்கல், நிதி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான கொள்கைகள் மூலம், நாட்டை அதிலிருந்து மீட்டு ஒரு முன்னேறும் பொருளாதார நிலைக்கு கொண்டு வந்தார்.

20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்த 2011ஆம் ஆண்டு சுனாமி மற்றும் நிலநடுக்கத்தின் மீட்பு பணிகளை மேற்கொண்டார். இந்த நிலநடுக்கத்தில்தான் ஃபுகுஷிமா அணு உலை உருகியது.

2020ஆம் அண்டு உடல்நலக்கோளாறு காரணமாக தன் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். முன்பும் 2007 ஆம் ஆண்டில் குடல் நோய் காரணமாகவே பதவி விலகியிருந்தார். தற்போது இவர் பிரதமர் பதவியில் இல்லாத போதும் ஜப்பானின் செல்வாக்கு மிக்க தலைவராகவே பார்க்கப்படுகிறார்.

ஆட்சிக்கு வந்தது எப்படி?

ஜப்பான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், ஷிண்டாரோ அபேவின் மகனும் முன்னாள் பிரதமர் நோபுசுக்கே கிசியின் பேரனுமான இவர், பிறப்பிலிருந்தே அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார்.

1993 ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2005ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜுனிக்கிரோ கோய்சுமியால் அமைச்சரவையின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.

2006ஆம் ஆண்டு, போருக்கு பிந்தைய மிக இளம்வயது பிரதமராக பொறுப்பேற்றதற்கு பிறகு, இவரது வளர்ச்சி இன்னும் வேகமெடுத்தது.

ஷின்சோ அபே

பட மூலாதாரம், Getty Images

ஆனால், தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் – 5 கோடி பேரின் பென்ஷன் பதிவேடுகளை தொலைத்தது என இவரது நிர்வாகம் கடுமையான சர்ச்சைகளை சந்தித்தது.

2007ஆம் ஆண்டு ஜூலை மாதம், மேலவையில் தன் கட்சிக்கான ஆதரவு குறைந்தது. பின் அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் பெருங்குடல் அழற்சி காரணமாக பதவி விலகினார்.

சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் 2012இல் பிரதமராக பொறுப்பேற்ற இவர், 2014 மற்றும் 2017ஆம் ஆண்டுகளிலும் மிண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஜப்பானின் நீண்டகாலம் பிரதமாரக இருந்தவர் என்ற பெருமையை பெற்றார்.

இவரது செல்வாக்கு ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்தது என்றாலும் கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கு யாரும் சவால்விட முடியாத அளவுக்கு இருந்தது. இதன் விளைவாக, மூன்றாம் முறையும் இவரே கட்சி தலைவராகும்படி கட்சி விதிகளில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

சர்ச்சை மிக்க தேசியவாதி

பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் தன் கடுமையான நிலைப்பாடுகளுக்காகவும் போருக்கு பிந்தைய ஜப்பானிய அரசியலமைப்பை திருத்த முயன்றதற்காகவும் இவர் அறியப்படுகிறார்.

அதே சமயம், அமெரிக்காவால் வரைவு செய்யப்பட்ட ஜப்பானின் அரசியலமைப்பை, இரண்டாம் உலகப்போரின் அவமானகரமான தங்கள் தோல்வியின் நினைவூட்டலாகவே கன்மேலாய்வுட்டிவ் கட்சியினர் பார்த்தனர்.

அபேவின் தேசியவாத கண்ணோட்டங்களால் அவ்வப்போது சீனா மற்றும் தென்கொரியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2013ஆம் அண்டு டோக்யோவில் உள்ள யாசுகுனி புனித தலத்திற்கு இவர் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரிலும் அதற்கு முன்பும் ஜப்பானின் ராணுவவாத நம்பிக்கையுடன் தொடர்புடைய கோயில் அது.

ஷின்சோ அபே

பட மூலாதாரம், EPA

பொருளாதாரம் மற்றும் கொரோனா தொற்றை கையாண்டது

அபே பிரதமராக இருந்த முதல் முறை அவரின் பொருளாதார கொள்கைகள் வளர்ச்சி பாதைக்கு நாட்டை அழைத்து சென்றன. அது ‘அபேனோமிக்ஸ்’ என்றும் அழைக்கப்பட்டது.

இதில், நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் எளிதில் பணத்தை கடன் வாங்கி செலவு செய்யும் வகையில் எதிர்மறை குறுகியகால வட்டி விகித முறை, கட்டமைப்பில் அரசின் செலவை அதிகரித்தல், வரிச் சலுகைகள், பெண்களை பணிக்கு வர ஊக்குவிக்கும் திட்டம், குடியேறிகளை பணியமர்த்துவது போன்ற திட்டங்கள் அடங்கும்.

ஆனால் நாடு 2020ஆம் ஆண்டு மீண்டும் பணவீக்கத்தை சந்தித்தபோது அவரின் முயற்சிகள் பெரும் சவாலை சந்தித்தன.

மேலும் இவர் கொரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்கும் இவரின் முயற்சியால் தொற்று அதிகரித்தது என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.

பதவி விலகலும் மரணமும்

2020, ஆகஸ்ட் 28ஆம் தேதி தன் பதவி விலகலை அறிவித்தபோது அவர் அடுத்த அரசியல் வாரிசு என்று யாரையும் குறிப்பிடவில்லை. இது உள்கட்சி போராட்டத்துக்கு வழிவகுத்தது.

பின்னர், மூத்த அரசியல்வாதியும் நீண்ட கால அமைச்சரவை உறுப்பினருமான யோஷினிடே சுகா பதவிக்கு வந்தார்.

ஆனால் சுகாவிற்கு பின்னர், தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா நியமிக்கப்பட்ட பிறகும் கூட, ஜப்பானில் உள்நாட்டு அரசியலில் அபே தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

ஷின்சோ அபே

பட மூலாதாரம், Reuters

இந்த நிலையில், ஜூலை 8 அன்று, ஜப்பானின் மேலவைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்காக, நாரா நகரில் பிரசாரம் செய்தார்.

அப்போது, 41 வயதுடைய ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஜப்பானின் கடற்படைக்குச் சமமான தற்காப்புப் படை ஒன்றின் முன்னாள் உறுப்பினர் என நம்பப்படுகிறது.

சுடப்பட்ட உடன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அபே சுயநினைவுடன் இருந்தார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »