Press "Enter" to skip to content

வெளிநாடு சென்றதை மனைவியிடம் மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்தவர் கைது

பட மூலாதாரம், Getty Images

(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (10/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

வெளிநாடு சென்றதை மனைவியிடம் இருந்து மறைப்பதற்காக பாஸ்போர்ட்டில் இருந்து சில பக்கங்களை கிழித்ததாக, மும்பையைச் சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்ததாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த 32 வயதாகும் நபர் ஒருவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், சமீபத்தில் அவர் தன்னுடைய காதலியை சந்திப்பதற்காக வெளிநாடு சென்றதாகவும் அசெய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழன் இரவு (ஜூலை 07) அவர், இந்தியாவுக்குத் திரும்பியபோது, ​​மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவரது சமீபத்திய பயணத்திற்கான விசா முத்திரைகளைக் கொண்டிருக்க வேண்டிய பாஸ்போர்ட்டின் சில பக்கங்களைக் காணாதது குறித்து அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் மனைவியிடம் வேலை காரணமாக இந்தியாவுக்குள் செல்வதாக கூறிவிட்டு, தனது காதலியை சந்திக்க வெளிநாடு சென்றதாகவும் மனைவி தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்களை கிழித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டை சேதப்படுத்துவது குற்றம் என்பது தெரியாமல் பாஸ்போர்ட்டை கிழித்துள்ளார். இந்த நிலையில் மோசடி குற்றம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பம்: 24 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கருக்கலைப்பு

பட மூலாதாரம், Getty Images

பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை உடனடியாக கலைக்க மருத்துவக் குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி, வார இறுதி நாட்களில் அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்ததாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்தச் சிறுமி கர்ப்பமானதைத் தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவினை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் வாட்ஸ் அப் காணொளி கால் மூலமாக நீதிபதி பேசினார். அதில், சிறுமியின் வயது, கருவின் காலம் அடிப்படையில் கருவை கலைக்கலாம் என மருத்துவ அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து சிறுமியிடமும் நீதிபதி பேசினார். அப்போது அந்தச் சிறுமி கருவை கலைக்க சம்மதம் தெரிவித்ததாகவும், இதையடுத்து, மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் 24 வாரம் வரையிலான கருவை கலைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது, எனவே, சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை உடனடியாக கலைக்க வேண்டு என்று நீதிபதி உத்தரவிட்டதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நாட்டு மக்களிடம் இலங்கை முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள்

ஜனாதிபதி மாளிகை

பட மூலாதாரம், Getty Images

இலங்கை நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு ராணுவம் மற்றும் காவல் துறையினருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளதாக, ‘வீரகேசரி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம் ஜூலை 09 அன்று தீவிரமடைந்தது. இலங்கை ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கும் தீவைக்கப்பட்டது.

இந்நிலையில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அமைதியான முறையிலும் அரசியலமைப்பின் பிரகாரம் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள இத்தருணத்தில், நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதர்கு ராணுவம் மற்றும் காவல் துறையினருக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் இல்லத்தை எரித்தமைக்கு சுமந்திரன் கண்டனம்

ரணில் விக்ரமசிங்க

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை எரித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ட்விட்டரில் தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு வந்ததில் இருந்து அவருடன் கருத்து வேறுபாடுகள் உள்ள போதும் இச்சம்பவத்தை மன்னிக்க முடியாது என்றும் தயவு செய்து இப்போது வன்முறையை நிறுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »