Press "Enter" to skip to content

பொருளாதார மந்தநிலை எனும் ‘பேய்’ வரப்போகிறதா?: எச்சரிக்கும் சமிக்ஞைகள்

  • அடஹோல்ஃபா அமெரிஸஸ்
  • பிபிசி முண்டோ சேவை

பட மூலாதாரம், Getty Images

பொருளாதார மந்தநிலை என்று உலகம் அழைக்கும் அந்த ‘பேய்’ வரும் என்று கூறும் பொருளாதார நிபுணர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் நோக்கில் பொருளாதார பேக்கேஜ் என்ற பெயரில் அதிக செலவு செய்வது, சீனாவில் இருந்து உலகிற்கு அனுப்பப்படும் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் தடங்கல், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் பிற காரணங்கள் கடந்த பல தசாப்தங்களாக கண்டிராத நிலைக்கு பணவீக்கத்தை கொண்டுசென்றுள்ளன. இதைத் தடுக்க மத்திய வங்கிகள் கட்டாயத்தின் கீழ் வட்டி விகிதங்களை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. மறுபுறம், உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் சரிவுப் போக்கு தொடர்கிறது.

உதாரணத்திற்கு, அமெரிக்க குறியீடுகளை நம்மால் பார்க்கமுடிகிறது. அங்கு நீண்ட காலமாக சரிவு போக்கு நீடித்து வருகிறது. முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை இழப்பு ஏற்பட்டது போல காணப்படுகிறது.

அத்தகைய சூழ்நிலையில் நமக்காக பொருளாதார மந்தநிலை காத்திருப்பது போலத்தெரிகிறது. மந்தநிலை என்பது பொருளாதார நடவடிக்கைகளில் குறைவு மற்றும் அதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எதிர்மறையான (நெகட்டிவ்) வளர்ச்சி விகிதம் ஏற்படுவது ஆகும்.

பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு அழுத்தத்தில் இருந்தால், அது ‘தொழில்நுட்ப மந்தநிலை’ என்று அழைக்கப்படுகிறது.

பத்து அமெரிக்கப் பொருளாதார நிபுணர்களில் ஏழு பேர், இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு மந்தநிலை வரும் என்று பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஷிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ் நடத்திய கூட்டு ஆய்வில் கூறியுள்ளனர்.

பங்குச் சந்தைகளில் ‘பிளாக் வீக்’ மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவு போன்றவைகளுக்கு முன்பாக, ஜூன் தொடக்கத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எனவே, மந்தநிலை நெருங்கிவிட்டதாகக்கருதும் பொருளாதார வல்லுனர்களின் எண்ணிக்கை இப்போது மேலும் அதிகரித்திருக்கும்.

மந்தநிலையின் பிடியில் சிக்கினால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். முதலீட்டுச் சூழல் பாதிக்கப்படலாம். நுகர்வு மற்றும் பரிவர்த்தனைகள் குறைவதால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்படலாம். வேலைகள் குறையும். மக்களும் வணிக நிறுவனங்களும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவார்கள். மேலும் பலர் திவாலும் ஆகலாம்.

இது குறித்து பிபிசி முண்டோ 4 பிரபல பொருளாதார நிபுணர்களிடம் பேசியது. எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் உலகின் பிற பொருளாதாரங்களில் மந்தநிலை ஏற்படும் அபாயத்தை அவர்கள் உண்மையில் காண்கிறார்களா என்று அவர்களிடம் கேட்டது.

டேவிட் வெசல்

பட மூலாதாரம், DAVID WESSEL

‘2023ல் மந்தநிலை ஏற்படும் சாத்தியகூறு 65 சதவிகிதம்’

டேவிட் வெசல் வாஷிங்டன் டிசியில் உள்ள ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின், நிதி மற்றும் பணக்கொள்கைக்கான ஹட்சின்ஸ் மையத்தின் இயக்குநராக உள்ளார்.

“மந்தநிலையை கணிப்பது கடினமான பணியாகும். பொதுவாக முன்கூட்டியே நீங்கள் எதிர்பார்க்காத சூழ்நிலைகளில் மந்தநிலை வரும். பொருளாதார வல்லுநர்கள் மந்தநிலை வரப்போகிறது என்று முழு நம்பிக்கையுடன் பல முறை கூறுவார்கள். பின்னர் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நீங்கள் காண்பீர்கள்,” என்று அவர் கூறுகிறார்.

“அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் மந்தநிலை ஏற்படுவதற்கான உறுதியான வாய்ப்பை நான் காண்கிறேன். இது நிகழக்கூடிய சாத்தியகூறு 65 சதவிகிதம்தான் உள்ளது. இதற்கு காரணமும் இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜே.போவெல், முன்பு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை குறைத்து வெற்றிகரமாக சமாளித்தார். தனது முந்தைய வெற்றியை சீர்குலைத்தவராக மக்கள் அவரை நினைகூருவதை அவர் விரும்ப மாட்டார்,”என்று டேவிட் வெசல் குறிப்பிட்டார்.

” தேவையை குறைக்க, விலை உயர்வு அழுத்தத்தை குறைக்க மற்றும் பணவீக்கத்தின் பிடி இறுகுவதைத்தடுக்க இப்போது ஃபெடரல் முன்பதிவு வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும். இருப்பினும், பொருளாதாரத்தை மெதுவாக்கி, பணவீக்க விகிதத்தை 2 சதவிகித இலக்குக்கு கீழே குறைக்க, வட்டி விகிதங்களை உயர்த்துவது அல்லது அப்படியே வைத்திருப்பது போன்ற விஷயங்களில், பெடரல் முன்பதிவு மிகவும் கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும்.”என்று அவர் கூறினார்.

“ஒவ்வொரு மாற்றுவழிக்கும் ஆதரவாக நல்ல வாதங்கள் இருக்கலாம். அவற்றை தளர்த்துவதற்கு பதிலாக விகிதங்களை கடுமையாக்கும் தவறை போவெல் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது மந்தநிலைக்கு வழிவகுக்கக்கூடும். ஆனால் இது ஒரு மிதமான மந்தநிலையாக இருக்கும். என் கணிப்பு தவறாக வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். உலகின் விநியோகச் சங்கிலிகளில் உள்ள எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும். கொரோனாவின் மோசமான விளைவுகள் நீங்கவேண்டும். நமக்கும்,மத்திய வங்கிக்கும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவேண்டும்,”என்று வெசெல் குறிப்பிட்டார்.

“ஆனால் அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் வரக்கூடிய வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன்.”என்று அவர் சொன்னார்.

கேப்ரியல் கேஸ்வே

பட மூலாதாரம், GABRIEL GASAVE

‘அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மந்தநிலை வரலாம்’

கேப்ரியல் கேஸ்வே இன்டிபென்டன்ட் இன்ஸ்டிடியூட் சென்டர் ஃபார் க்ளோபல் ப்ராஸ்பெரிட்டியில் ஒரு ஆராய்ச்சி அசோசியேட் மற்றும் Elindependent.org (ஓக்லாண்ட், கலிபோர்னியா) இன் இயக்குனர்.

“ஒருவேளை 2023 இன் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்க மந்தநிலையை நாம் சந்திக்க நேரிடும் என்று நான் கருதுகிறேன். கொரோனா தொற்றுநோய், விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், உணவு பற்றாக்குறை, அதிகரிக்கும் எரிபொருள் விலைகள் போன்றவற்றால் இது ஏற்படாது. அதன் மூல காரணம் வேறு ஏதோ ஒன்றாக இருக்கும்,” என்று கேஸ்வே கூறுகிறார்.

“உலக உருண்டையின் வலதுபக்கத்தில் தற்போது நிலவும் கோடைக்காலம் மற்றும் ஆண்டு இறுதியில் வரும் திருவிழாக்கள், போன்றவற்றால், மந்தநிலை மிதமான இயல்புடையதாக இருக்கும் என்று நான் மதிப்பிடுகிறேன். இந்த நேரத்தில் மக்கள் பயணம் செல்வார்கள், செலவழிப்பார்கள் மற்றும் அரசுகள் வழங்கும் நிதி உதவி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் குதூகலமான காலம் எப்போதுமே தொடரமுடியாது,” என்று கேஸ்வே விளக்குகிறார்.

” எப்போதோ ஒரு நேரத்தில் விஷயங்கள் பழையபடி ஆகிவிடும். விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.பல பொருளாதார வல்லுநர்கள் அந்த இயல்பான நிலையை மந்தநிலை என்று அழைக்கிறார்கள். இப்போது அமெரிக்காவின் கடன் பத்திரங்களின் வருமானம் அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை. அதனால் சர்வதேச மூலதனம் அமெரிக்காவின்பால் ஈர்க்கப்படுவது அதிகரிக்கும்,”என்று அவர் கூறுகிறார்,.

“எனவே உலகின் எவ்வளவு மூலதனம் அமெரிக்காவிற்குத் திரும்புகிறது என்பதைப் பார்ப்பது முக்கியம். மேலும் டாலர் எவ்வளவு வலுவடைகிறது மற்றும் பிற நாடுகளின் நாணயங்கள் எவ்வளவு வீழ்ச்சியடைகின்றன என்பதும் கண்காணிக்கப்படும். இவை அனைத்தும் பொருளாதாரம் மீது ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன,”என்று . கேஸ்வே குறிப்பிட்டார்.

லிண்ட்சே பீயக்ஸா

பட மூலாதாரம், LINDSEY PIEGZA

‘இந்த ஆண்டு இறுதிக்குள் மந்தநிலை வரலாம்’

லிண்ட்சே பீயக்ஸா ஷிகாகோவின் ஸ்டிஃபெல் பைனான்சியலின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முதன்மை பொருளாதார நிபுணர் ஆவார்.

“பெடரல் முன்பதிவு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது தீர்மானத்தை புதுப்பித்து பலப்படுத்தியுள்ளது. ஜூன் மாதத்தில் வட்டி விகிதத்தை 0.75 சதவிகிதம் உயர்த்தி, ஜூலையில் மீண்டும் 0.75 சதவிகிம் உயர்த்துவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஃபெடரல் முன்பதிவு மந்தநிலையைத் தூண்ட முயற்சி செய்யவில்லை என்று அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் கூறியிருந்தார். இப்போது நடப்பதன் காரணமாக ஒரு வேளை இந்த ஆண்டு இறுதியில் எதிர்மறையான வளர்ச்சி விகிதம் அல்லது ஸ்டாக்ஃப்ளேஷன்(ஒரே நேரத்தில் மந்தநிலை மற்றும் பணவீக்கம்) வரக்கூடும்,”என்று பீயக்ஸா கூறுகிறார்.

“விநியோகம் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் தற்போதைய போரினால் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் கஷ்டப்படுகின்றனர். இப்போது ஃபெடரல் முன்பதிவு முன்மொழியப்பட்ட விகிதத்தில் அதாவது சுமார் 4 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக விகிதங்களை உயர்த்தி வருவதால், பொருளாதாரம் பலவீனமாகும் ஆபத்து உள்ளது,”என்கிறார் அவர்.

“வட்டி விகிதத்தை உயர்த்தும் உத்தியானது, சாதாரண மக்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மூலதனத்தின் விலை உயர்ந்தால், நுகர்வு மற்றும் முதலீடு இரண்டும் குறைகிறது. இது தேவையையும் குறைக்கிறது. இது ஏற்கனவே நடந்துள்ளது. விற்பனை சரக்குகள் குறைந்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், கொரோனா மற்றும் யுக்ரேன் போரின் காரணமாக ஏற்பட்ட விநியோகத் தேக்கம் குறைவது போலத்தெரியவில்லை,”என்று அவர் குறிப்பிட்டார்.

ஆண்ட்ரிஸ் மொரேனோ ஜராமிலோ

பட மூலாதாரம், ANDRÉS MORENO JARAMILLO

‘மந்தநிலை வராது’

ஆண்ட்ரிஸ் மொரேனோ ஜராமிலோ, ஒரு பொருளாதார நிபுணர். அவர் ஒரு சுயாதீன நிதி ஆலோசகர் மற்றும் பங்கு சந்தை ஆய்வாளரும் ஆவார்.

” வளர்ச்சி விகிதம் வேகமாக குறைந்து வருவதால், நாம் மந்தநிலையை எதிர்கொள்வோம் என்று பல பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள். ஆனால் வட்டி விகித உயர்வால் இப்போது இந்த சுழற்சி தலைகீழாக மாறப் போகிறது என்று அப்படிப்பட்டவர்கள் நம்புகிறார்கள். நிச்சயமாக அது நடக்கலாம். ஆனால் எல்லா பிரச்சனைகளுக்குப் பிறகும், மந்த நிலை வரும் அளவிற்கு உலகின் புவிசார் அரசியல் நிலை மோசமடையவில்லை,” என்று ஜராமிலோ கூறுகிறார்.

“இதுவரை மந்தநிலை பற்றித்தெரியவில்லை. மந்தநிலை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு தனது வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கைக்கு அமெரிக்கா நீண்ட நேரம் எடுத்தது. பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக வட்டி விகிதங்கள் சிறிய மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும்,” என்று ஜராமிலோ தெரிவித்தார்.

“இது நடந்தாலும் மிகச்சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும். மந்தநிலை வருவதைத் தடுக்க அரசு தன்னால் முடிந்தவரை முயற்சிக்கும் என்று நான் நினைக்கிறேன். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தையும் மாற்றும் இதுபோன்ற பல சம்பவங்கள் அல்லது புவிசார் அரசியல்கள் உள்ளன. அதனால்தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகப் பொருளாதாரம் ஒரு சுழற்சியில் நகர்கிறது. வட்டி விகிதங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை இரண்டும் அந்த சுழற்சியின் ஒரு பகுதியாகும். ஏற்ற இறக்கம் நீடிக்கும் வரை இது கடுமையாக இருக்கும். ஆனால் இதுவரை எந்த ஏற்ற இறக்கமும் காணப்படவில்லை,”என்கிறார் அவர்.

“இந்த விஷயங்களை முடிவு செய்வதற்கே மத்திய வங்கி மற்றும் பொருளாதாரக் கொள்கை உள்ளது. இவற்றின்மூலம் அந்த சுழற்சிகளை பூர்த்தி செய்யமுடியும். மேலும் பொருளாதாரம் பணவீக்கத்தை அதிகரிக்கும் அளவுக்கு வேகமாக வளரக்கூடாது. பொருளாதாரம் வேகமாக சரியவும் கூடாது. ஏனென்றால் இது வேலையின்மை, மனச்சோர்வு மற்றும் பிற விஷயங்களுக்கு வழிவகுக்கும்,”என்று குறிப்பிட்டார் ஜராமிலோ.

“நாம் பார்த்த கொரோனாவின் மோசமான விளைவு உலகிற்கு முற்றிலும் புதியது. இது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தை ஏற்படுத்தியது . அதன் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சிறிது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. ஆனால் அது மிகவும் அதிகமாக இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

“மிக மோசமான காலம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் இப்போது விலைவாசி அதிகரிப்பை எதிர்கொள்கிறது. மேலும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படுவதால், பொருளாதாரத்தில் சிறிது தொய்வு ஏற்படக்கூடும். ஒருவேளை இது கெட்ட வளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். ஆனால் அது அத்தனை மோசமான விஷயமும் அல்ல,” என்று ஜராமிலோ சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »