Press "Enter" to skip to content

மசாஜ் பெயரில் பாலியல் துன்புறுத்தல் – வெளியே முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள்

  • எலெனோர் லேஹே & ஹன்னா பிரைஸ்
  • பிபிசி

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனில் வீடுகளுக்கே வந்து மசாஜ் செய்வது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆனால், இத்தகைய மசாஜ் சிகிச்சைஸ்டுகளால் தங்களின் வீடுகளுக்குள்ளேயே டஜன் கணக்கிலான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது பிபிசிக்கு தெரியவந்துள்ளது. பெரிதும் கண்காணிக்கப்படாத இந்த தொழிலை ஒழுங்குமுறைப்படுத்த கடும் விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என நிபுணர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

எச்சரிக்கை: இந்த கட்டுரையின் சில பகுதிகள் மனதுக்கு சங்கடத்தை தரலாம்.

வீட்டுக்கே வந்து மசாஜ் சேவை வழங்குவதாக சமூக ஊடகங்களின் வாயிலாக, கேலம் உர்கார்ட் விளம்பரப்படுத்தினார். அதன் வாயிலாக, யாஸ் (உண்மை பெயர் அல்ல) என்பவர் மசாஜ் சேவை கேட்டு பதிவு செய்தார். ஆரம்பத்தில் அவருடைய மசாஜ் சேவை தொழில்முறையில் இருந்ததாகவும், உடலின் சில பகுதிகளில் மசாஜ் செய்வதற்கு முன்பு தன்னிடம் உர்கார்ட் ஒப்புதல் கேட்டதாகவும் கூறுகிறார் யாஸ்.

ஆனால், பிறகு யாஸை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் உர்கார்ட்.

“அந்த மாதிரியான சூழலில் உண்மையில் இப்படி நடக்கிறது என்பதை உங்களால் நம்ப முடியாது. அந்த சமயத்தில் அதீதமாக எதிர்வினையாற்றி விடக் கூடாது என உங்கள் மூளையின் ஒரு பக்கம் சொல்லும். ஆனால், அவர் கொஞ்ச நேரத்திலேயே கரடு, முரடாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான் என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. என்னை அவர் பாலியல் வன்புணர்வு செய்யப் போகிறாரா அல்லது கொல்லப் போகிறாரா என்பது தெரியவில்லை” என்கிறார் யாஸ்.

நடந்தவை குறித்து போலீசிடம் புகார் அளித்தபின் தான், மசாஜ் சிகிச்சையில் உர்கார்ட் எந்த தகுதிகளையோ எவ்வித பயிற்சியையோ பெற்றிருக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை நடைபெற்ற பின்னரும், அவர் மசாஜ் தொழிலை தொடர்ந்து செய்துவருகிறார் என்பதும் தன் வாடிக்கையாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்பதையும் பிபிசி கண்டறிந்துள்ளது.

பிரிஸ்டலில் நான்கு பெண் வாடிக்கையாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக உர்கார்ட் கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மசாஜ் தொழிலை தொடருவதிலிருந்தும் மற்ற பெண்களை துன்புறுத்துவதிலிருந்தும் உர்கார்ட்டை எதுவும் நிறுத்த முடியாது என்பது தன் “இதயத்தை நொறுக்குவதாக உள்ளது” என்கிறார் யாஸ்.

மசாஜ் துறையில் மாற்றங்கள் தேவை என நம்பும் அவர், “இத்துறையில் கட்டுப்பாடுகள் இருந்தால் தற்போது அவர் விசாரணைக்கு ஈடுபடுத்தப்பட்டிருப்பார் அல்லது மசாஜ் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டிருப்பார்” என்கிறார் அவர்.

“அப்போதுதான் அவருடைய செயல்களுக்கு சில பின்விளைவுகள் இருந்திருக்கும்,” எனும் அவர், “இதனை நான் வெளியில் சொல்வது, மற்ற யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தத்தான்” என்றும் தெரிவித்தார்.

ஒழுங்குமுறை இல்லாமை

மசாஜ் பாலியல் சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனில் தற்போதுள்ள விதிமுறைகளின்படி, மசாஜ் சிகிச்சைஸ்டுகள் அதனை தொழிலாக தொடர, எவ்வித உரிமமோ முறையான பயிற்சியோ தேவையில்லை.

எனவே எவர் ஒருவரும் சிகிச்சைஸ்டாகலாம். மசாஜ் தொடர்பான அங்கீகாரம் பெற்ற பதிவொன்றில், மசாஜ் சிகிச்சைஸ்ட் ஆணா அல்லது பெண்ணா என்பதை பொதுவில் அறிய முடியும். ஆனால், இது தாமாக முன்வந்து பதிவு செய்வது, ஆதலால் மிக சிலரே இதில் பதிவு செய்கின்றனர் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

‘மசாஜ் சிகிச்சை’ வழங்கும் இடங்களுக்கு தொழில் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது சில உள்ளூர் கவுன்சில்களில் விதியாக இருக்கிறது, குறிப்பிட்ட நிறுவனம் பாதுகாப்பற்றது என கருதப்பட்டால் அந்த உரிமம் ரத்து செய்யப்படும். பொதுமக்களுக்கு ஆபத்து என்ற ரீதியில், பிசியோதெரபிஸ்டுகளைப் போல மசாஜ் சிகிச்சைஸ்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் கருத வேண்டும்.

ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக மசாஜ் தொழிலை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் செய்தது உள்ளிட்ட டஜன் கணக்கிலான குற்ற வழக்குகளை பிபிசி கண்டறிந்துள்ளது.

இவற்றில், மசாஜ் சிகிச்சைஸ்டுகள் கைதான பின்னரும் மசாஜ் சேவை மூலம் பாலியல் குற்றங்களில் மீண்டும் ஈடுபட்டு வந்ததும் அடக்கம்.

தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதன் தாக்கம் இன்னும் நீடிப்பதாக யாஸ் தெரிவித்தார்.

“வெகு காலமாக என்னால் படுத்துத் தூங்க முடியவில்லை. ஏனெனில், அது பற்றிய கனவு வந்து விடுமோ என்கிற பயம் இருந்தது. பதற்றம், நடுக்கம் போன்றவற்றால் நான் பாதிக்கப்பட்டேன். என்னுடைய முடிவுகள் குறித்தே நான் சந்தேகப்படும் நிலைக்கு சென்றேன். ஏனெனில், அந்த நபர் என்னுடைய வீட்டுக்கே வரும் அளவுக்கு நான் நம்பினேன். இனி யாரையும் நம்பக்கூடாது என்று நினைக்கிறேன்,” என்கிறார் யாஸ்.

மசாஜ் சிகிச்சை

செல்பேசி செயலிகளின் (apps) வளர்ச்சி, வீட்டுக்கே வந்து மசாஜ் சேவை வழங்குவதை முன்பை விட இப்போது எளிதாக்கியிருக்கிறது. அப்படி, மசாஜை சுயதொழிலாக மேற்கொண்டு வரும் சிகிச்சைஸ்டுகளை வாடிக்கையாளர்கள் கண்டறியும் ஒரு செயலியாக ‘அர்பன்’ (Urban) என்ற செயலி இருக்கிறது. இதில் மசாஜ் சிகிச்சைஸ்ட் சேவைக்கு பதிவு செய்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அவர்கள் வீட்டுக்கு வந்து விடுகின்றனர்.

இத்தகைய செயலி மூலம் வீட்டுக்கே வந்து மசாஜ் செய்பவர்களில் எப்போதும் பெண்களையே மசாஜ் செய்வதற்கு தேர்ந்தெடுப்பார் டேய்லர் (உண்மையான பெயர் அல்ல). ஆனால், அக்டோபர் 2019இல், ஒருமுறை ஆழமான அழுத்தத்தை பிரயோகித்து மேற்கொள்ளப்படும் Deep tissue மசாஜை எடுத்துக்கொள்ள அவர் விரும்பியபோது, எந்தவொரு பெண் சிகிச்சைஸ்டுகளும் கிடைக்கவில்லை.

அதற்கு பதிலாக, ஒரு ஆண் சிகிச்சைஸ்ட் மட்டுமே அந்த சமயத்தில் இருந்தார். அந்த செயலியில் அவருக்கு நூற்றுக்கணக்கில் நேர்மறையான கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தன, பலரும் 5 விண்மீன்களை வழங்கியிருந்தனர்.

“பலரின் நம்பிக்கைக்குரிய ஒருவர், அந்த செயலியால் நம்பப்படும் ஒருவரை மசாஜுக்கு அழைப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என கருதினேன்,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், மசாஜ் செய்ய ஆரம்பித்த உடனேயே, ஏதோ சரியாக இல்லை என்பதை அவர் உணர்ந்தார். “ஒரு தொழில்முறை பெண் ஒருவரால் மசாஜ் செய்யப்படும்போது உங்கள் உடலின் எந்தவொரு பகுதியும் குறிப்பாக வெளிப்படுவது போல் நீங்கள் உணர மாட்டீர்கள்,” என்கிறார் அவர்.

“என் உடலுக்குக் கீழ்பகுதியில் இருந்த துண்டு முழுவதையும் அவர் உருவிவிட்டார்.”

மசாஜ் பாலியல் சிகிச்சை

பட மூலாதாரம், URBAN APP

பின்னர், மசாஜ் செய்த நபர் கடும் பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு முன்பு, டேய்லரின் ஒப்புதல் இன்றி தனது அந்தரங்க பகுதிகளை தொட்டதாக கூறுகிறார். தான் எதிர்வினையாற்றினால் அந்த நபர் என்னை ஏதாவது செய்து விடுவாரோ என்ற பயத்தில் தான் “உறைந்தேன்” என்கிறார் டேய்லர். கடைசியில் அந்த நபரை நிறுத்துமாறு கூறியபோது, அந்த நபர் மறுத்துவிட்டதாக டேய்லர் கூறுகிறார்.

“உடைந்து அழுதேன்”

“என்னுடைய வீட்டிலிருந்து அவர் சென்ற பின், என்னுடைய வரவேற்பறையில் உடைந்து போய் அழுதேன். நானே சென்று அறையை உள்பக்கமாக பூட்டினேன்.” அர்பன் செயலி நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார் டேய்லர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி காவல் துறையினர் விசாரணையை கைவிட்டனர்.

குறிப்பிட்ட அந்த நபரை தங்கள் செயலியில் இருந்து நீக்கிவிடுவதாக அந்நிர்வாகம் தெரிவித்தாலும், இரண்டு வாரங்கள் கழித்து அதே நபர் அச்செயலியில் தொடர்புகொள்ளக் கூடியவராக இருந்தார் என்று டேய்லர் கூறுகிறார்.

தொழில்நுட்ப கோளாறு “உடனடியாகத்” தீர்க்கப்படும் என்று கூறினாலும், சம்பவம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் கழித்தும் அந்த நபரின் விவரங்கள் அச்செயலியில் உள்ளதை பிபிசி கண்டறிந்தது.

இது தொடர்பாக ‘அர்பன்’ நிர்வாகத்தை பிபிசி தொடர்புகொண்டு கேட்ட நிலையில், அவருடைய விவரங்கள் முற்றிலும் நீக்கப்பட்டன.

டேய்லர் புகாரைத் தொடர்ந்து அந்த நபரின் சுயவிவரம் செயலியில் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அவரை அழைக்க முடியாது என அச்செயலி நிர்வாகம் தெரிவித்தது.

அதேபோன்று, அச்செயலியில் மசாஜ் சிகிச்சைஸ்டாக இருந்த காஸ்மின் டுடோசே என்பவருக்கு, பெண் வாடிக்கையாளர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை கடந்தாண்டு விதிக்கப்பட்டது.

மசாஜ் சிகிச்சைஸ்டுகள், 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டிபிஎஸ் சோதனை உட்பட கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அர்பன் நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது. இதனால் குறைந்த அளவிலேயே பாலியல் புகார்கள் வருவதாகவும் தெரிவித்தது. அனைத்துப் புகார்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தது.

மசாஜ் சிகிச்சை

மசாஜ் சிகிச்சைஸ்டுகளுக்கான பொதுக்குழுவின் துணைத்தலைவர் யோனே பிளேக் பிபிசியிடம் கூறுகையில், தற்போதிருக்கும் விதிமுறைகளின்படி, எவ்வித பரிசோதனைகளும் இன்றி “யார் வேண்டுமானாலும்” மசாஜ் தொழிலை செய்யலாம் என தெரிவித்தார்.

மசாஜ் சிகிச்சைஸ்டுகள் சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் நிபுணத்துவ சாட்சியாக அழைக்கப்படும் பிளேக் கூறுகையில், “தகுதியை யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்கலாம். ஆனால், ‘அந்த’ விஷயங்களை செய்வதை யாரும் தடுக்க எந்த ஒழுங்குமுறையும் இல்லை” என தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால், இந்த துறையின் விதிமுறைகள் யாருடைய பொறுப்புக்குக் கீழ் வருகிறது என்பதில் குழப்பங்கள் ஏற்பட்டன.

அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், “பாலியல் குற்றங்கள் கடுமையான குற்றங்களாகும். இலவச உதவி மற்றும் ஆலோசனைகளை நாடுமாறு, இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்பட்டோரை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். காவல் துறை நடவடிக்கையுடன் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை கையாள்வதற்கு, அத்தகைய நிறுவனங்கள் பாதுகாப்பற்றவை என கருதினால் அவர்களின் உரிமத்தை நீக்க வேண்டும்” என கூறினார்.

பழமைவாத கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், பெண்கள் மற்றும் சமத்துவக் குழுவின் தலைவருமான கரோலின் நோக்ஸ் பிபிசியிடம் கூறுகையில், இதுதொடர்பாக அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறினார். “ஆடைகள் ஏதுமின்றி நம்பமுடியாத அளவுக்கு பாதிக்கப்படக்கூடிய நிலையில் பெண்கள் இருக்கும்போது, வேட்டையாடும் குணம் கொண்ட நபருக்கு இது சிறந்த தொழிலாக உள்ளது. அரசாங்கத்தில் இதுகுறித்து அதிக புரிதல் இருப்பது மிகவும் முக்கியமானது” என்றார்.

மசாஜ் துறையில் கூடுதல் விதிமுறைகளை தாங்கள் வரவேற்பதாக அர்பன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், டேய்லரை பொறுத்தவரை அச்சம்பவத்தின் அழிவுகரமான தாக்கம் இன்னும் நீடிக்கிறது. “இதிலிருந்து வெளியே வர முடியாத நிலையில் உள்ளேன்,” என அவர் கூறுகிறார். “இது என்னை முழுவதுமாக மாற்றி விட்டது. என் தோளில் பெரும் சுமையை ஏற்றியது போல் உள்ளது, இதிலிருந்து மீள்வேன் என நினைக்கவில்லை.”

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »