Press "Enter" to skip to content

அமெரிக்காவின் ‘ஹைதர் அலி’ ஆங்கிலேயர்களை வெறும் 26 நிமிடங்களில் தோற்கடித்த கதை

  • ஃபைசல் முகமது அலி
  • பிபிசி செய்தியாளர், டெல்லி

பட மூலாதாரம், HULTON ARCHIVE

இது 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று. அமெரிக்க சுதந்திரப் போரின்போது, ஒரு அமெரிக்க போர்க்கப்பல், மிகப் பெரிய பிரிட்டிஷ் கப்பலான ஜெனரல் மாங்க்கை 26 நிமிட போரில் தோற்கடித்து சரணடையச்செய்தது.

அமெரிக்கக் கப்பலின் பெயர் ஹைதர் அலி(Hyder Ally). மைசூர் ஆட்சியாளரான ஹைதர் அலியின் நினைவாக சிறிய மாற்றத்துடன் இது பெயரிடப்பட்டது.

‘Ally’ என்ற ஆங்கில வார்த்தைக்கு நண்பன் அல்லது கூட்டாளி என்று பொருள்.

1782 ஏப்ரல் 8 ஆம் தேதி காலை நடந்த இந்த போரின் சம்பவம் அமெரிக்க கடற்படையின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெலாவேர் வளைகுடாவில் நடந்த இந்த போர் தொடர்பான ஓவியம் அமெரிக்க கடற்படை அகாடமியில் மாட்டப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் போர்கப்பலின் கேப்டன் ஜோஷூவா பர்னியின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க கடற்படை வரலாற்றில் ‘இது அமெரிக்கக் கொடியின் கீழ் நிகழ்த்தப்பட்ட மிகவும் பிரமிக்கவைக்கும் நிகழ்வுகளில் ஒன்று’, என்று ஜேம்ஸ் ஃபெனிமோர் கூப்பர் விவரித்தார். ஒருவேளை இது ‘பிரிட்டனுக்கு எதிரான அமெரிக்காவின் முதல் பெரிய கடற்படை வெற்றி’ என்பதால் இப்படி விவரிக்கப்பட்டிருக்கலாம்.

“தரைப் போரில் பிரிட்டிஷ் ஜெனரல் லார்ட் சார்லஸ் கார்ன்வாலிஸ் ஏற்கனவே 1781 ஆம் ஆண்டு அமெரிக்கத் தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் முன் மண்டியிட்டுவிட்டார்.”

ஹைதர் அலியின் பெயர் அமெரிக்காவிற்கு எப்படி வந்தது?

“தென்னிந்திய மாநிலமான மைசூரு 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவிய அடையாளத்தைக் கொண்டிருந்தது” என்கிறார் மைசூர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசப்.

“1757 பிளாசி போருக்குப் பிறகு கிழக்கிந்திய நிறுவனம், வட இந்தியாவில் ஒரு பிராந்திய சக்தியாக உருவெடுத்தது. ஆனால் ஹைதர் அலியும் அவருக்குப் பின் வந்த திப்பு சுல்தானும் 30 ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக நான்கு போர்களை நடத்தினர்.

மேலும் தெற்கின் பெரும்பகுதியிலிருந்து அவர்களை விலக்கி வைத்திருந்தனர். இதற்கிடையில், அமெரிக்காவின் சுதந்திரப் போர் 1783 இல் முடிவடைந்து. அமெரிக்கா என்ற ஒரு புதிய நாடு பிறந்தது,” என்று பிபிசியுடனான உரையாடலில் பேராசிரியர் ஜோசப் கூறினார்.

ஹைதர் அலி

பட மூலாதாரம், PRINT COLLECTOR

இருப்பினும், வரலாற்றாசிரியர் ராஜ்மோகன் காந்தி தனது ‘ மார்டன் சவுத் இண்டியா: எ ஹிஸ்டரி ஃப்ரம் தி செவண்டீந்த் சென்சுரி டு அவர் டைமஸ்’ என்ற புத்தகத்தில், அரபி கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் காரணமாக போர்ச்சுகல், ஹாலந்து, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மற்றும் அதன் காரணமாக அவர்களின் தொடர்பு பற்றிக்குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கேள்வி என்னவென்றால், இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவிற்கு ஹைதர் அலியின் பெயர் எப்படி வந்தது?

பிரிட்டனில் திப்பு மற்றும் ஹைதர் என்ற பெயர்கள் ஏன் வைக்கப்பட்டன

இது இரண்டு ஆதாரங்களில் இருந்து உருவாகிறது: அமெரிக்க சுதந்திரப் போரின் முக்கிய வீரர்களுக்கு பிரெஞ்சு ராணுவ அதிகாரிகள் எழுதிய கடிதங்கள் மற்றும் குதிரைகள் என்கிறார் கனடாவின் எட்மண்டனில் இருந்து தொலைபேசியில் பிபிசியிடம் பேசிய வரலாற்றாசிரியர் அமீன் அகமது.

பிரிட்டிஷ் ராணுவத்தில் ஜெனரலாகவும் லெப்டினன்ட் ஜெனரலாகவும் இருந்த என்காஸ்டரின் டியூக் ப்ரெக்ரீன் பெர்டி, குதிரைப் பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தனது ஒரு குதிரைக்கு ஹைதர் அலி என்று பெயரிட்டார் (1765).

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹைதர் அலி மைசூரின் ஆட்சியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இதற்கிடையில் கிழக்கிந்திய நிறுவனம் திரிவாதியில் (பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள இடம்) தோற்கடிக்கப்பட்டது. திப்பு சுல்தானும் சிறு வயதிலிருந்தே கிழக்கிந்திய நிறுவனம்யின் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கினார்.

இதன் போது இங்கிலாந்தில் பந்தய குதிரைகளை வளர்ப்பவர் ஒருவர், பிறந்த குதிரைக்குட்டிக்கு திப்பு சாஹேப் என்று பெயர் சூட்டினார். பின்னர் இந்த குதிரைகளின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குதிரை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அங்கும் மைசூர் ஆட்சியாளர்களின் பெயரை குதிரைகளுக்கு சூட்டும் செயல்முறை தொடங்கியது.

ஹைதர் அலி என்ற குதிரையின் வழித்தோன்றலைப் பற்றி, அமெரிக்காவின் போர்ட்ஸ்மவுத் நகரில் அச்சிடப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் பற்றி அமீன் அகமது எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் நகல் அமெரிக்க நாடாளுமன்ற நூலகத்தில் உள்ளது.

ஹைதர் அலி

பட மூலாதாரம், BONHAMS

‘துணிச்சலான முகலாய இளவரசர்’

ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் நிறுவனம்யுடன் நீண்ட காலமாகப் போரிட்டபோதும், ஹைதர் அலி ஆங்கிலேயர்களுடன் வணிக மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை வைத்திருந்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்று அமீன் அகமது கூறுகிறார்.

சில ஆங்கிலேயர்கள் தங்கள் வளர்ப்புப்பிராணிகளுக்கு மைசூர் ஆட்சியாளர்களின் பெயரை சூட்ட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆங்கிலேயர்கள் தங்கள் பந்தய குதிரைகளுக்கு, எதிரிகளின் பெயரை ஏன் வைக்கிறார்கள் என்ற பிபிசியின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய வீரர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் குறித்த 1777 ஆம் ஆண்டின் குறிப்பு உள்ளது.அதில் பிரெஞ்சு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் நெகோம்டே டி டிரசான், பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு அனுப்பிய கடிதத்தில் ‘துணிச்சலான முகலாய இளவரசர்’ என்று அவரை அழைத்துள்ளார். ஹைதர் அலியுடன், பணிபுரியும் ஐரோப்பியர்களுடன் அவரை தொடர்பு கொள்ளச்செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதர் அலி

பட மூலாதாரம், SOTHEBY’S

அமெரிக்காவின் முதல் துணை அதிபராகவும், பின்னர் அதிபராகவும் இருந்த ஜான் ஆடம்ஸ் போன்ற அமெரிக்க போர் வீரர்களில் இருந்து, அமெரிக்காவின் ஆறாவது அதிபரான ஜான் குயின்சி ஆடம்ஸ், பின்னர் நான்காவது அதிபராக வந்த ஜேம்ஸ் மேடிசன் வரை அனைவருமே இந்தியப் போராட்டத்தை கூர்ந்து கவனித்தனர்.

பேரரசு விரிவாக்க லட்சியம் காரணமாக, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இந்தியத் துணைக்கண்டம் தொடர்பாக நீண்ட சண்டையும், போரும் நிகழ்ந்தன. இதில் கடைசியாக பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நீண்ட போர் நிலவியது. இறுதியில் பிரிட்டன் வெற்றிபெற்றது.

அமெரிக்கப் புரட்சியின் கவிஞர் எழுதிய ஹைதர் அலி பற்றிய கவிதை

ஹைதர் அலி

பட மூலாதாரம், SOTHEBY’S

“அமெரிக்க சுதந்திரப் போருக்கும் மைசூர் ஆட்சியாளர்களுக்கும் இடையே பிரான்ஸ் ஒரு பெரிய பாலமாக இருந்தது. அங்கு பிரெஞ்சு நிதி மற்றும் ராணுவ உதவியால் அமெரிக்கப் போர் சாத்தியமானது. அதே நேரத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் ராணுவ பயிற்சி மற்றும் ராணுவ தொழில்நுட்பம் ஆகியவற்றைப்பெற பிரான்சுடன் மிக நெருக்கமான உறவுகளை பேணிவந்தனர்,” என்று பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசப்பின் கூறுகிறார்.

பகிரப்பட்ட நட்பு மற்றும் பொது எதிரி (பிரிட்டன்) ஆகியவற்றின் விளைவாக அமெரிக்கப் புரட்சியின் கவிஞராக அறியப்படும் பிலிப் ஃப்ரீனோ, ஹைதர் அலி பற்றி எழுதிய கவிதையின் சில வரிகள் இதோ:

கிழக்கின் இளவரசர் ஒருவரின் பெயர் இது

அவர் இதயத்தில் சுதந்திர ஜோதி பற்றி எரிந்தது

தன் நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கினார்

ஆங்கிலேயர்களை பெரிதும் அவமானப்படுத்தினார்…..

1781 அக்டோபர் 19 ஆம் தேதி அமெரிக்கப் போராளிகள் பிரிட்டிஷ் ராணுவத்தை தோற்கடித்த பின்னர், நியூ ஜெர்சியின் ட்ரண்டனில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மது கோப்பைகளை முட்டி ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக்கொண்ட வாழ்த்துகளில் ஹைதர் அலியின் பெயராலும் வாழ்த்து கூறப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »