Press "Enter" to skip to content

இலா பொப்பட்: 50 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்தும் நாடற்றவர் என சொல்லப்படுவது ஏன்?

  • மெரில் செபாஸ்டியன்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்திய ஓட்டுநர் உரிமமும் வாக்காளர் அடையாள அட்டையும் கொண்டிருக்கும் ஒருவர் ‘நாடற்றவர்’ என்ற பிரச்னையுடன் போராடி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?

50 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலா பொப்பட் தான் இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார். இந்தியாவில் திருமணம் செய்து, தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவருக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவது மட்டும் இன்னும் சவாலாகவே உள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று நாடுகள் இவரை நாடற்றவர் என்ற நிலைக்கு தள்ளியுள்ளன.

இந்த நிலையில், தனக்கு கடவுச்சீட்டு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி, தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் இலா. யார் இவர்? இவரது குடியுரிமையில் என்னதான் சிக்கல்?

உகாண்டா சிறுமி

தற்போது 66 வயதாகும் இலா, உகாண்டாவிலிருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்கு வந்தார். அப்போது, அவருக்கு வயது 10 என்பதால், அவரது தாயின் கடவுச்சீட்டு மூலம் பயணித்தார். அதன்பிறகு, இந்தியாவிலேயே வாழ்ந்து இதையே தன் தாய்நிலமாக மாற்றிக்கொண்டு தனக்காக சில இந்திய அடையாள அட்டைகளையும் பெற்றார்.

ஆனாலும், மூன்று நாடுகளால் இவர் நாடற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளதால், ஆண்டுக்கணக்கில் தனது கடவுச்சீட்டுக்கான போராட்டத்தை தொடர வேண்டிய நிலையில் உள்ளார்.

இலாவின் தந்தை குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்து வளர்ந்தவர். 1952ஆம் ஆண்டு, பணி நிமித்தமாக உகாண்டா சென்ற அவர், பின்னர் சில ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் கடவுச்சீட்டையும் பெற்றார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான `கமுலி`யில் 1955ஆம் ஆண்டு பிறந்த இலா, உகாண்டாவின் அரசியல் நெருக்கடி காரணமாக 1966ஆம் ஆண்டு தன் தாயுடனும் தம்பியுடனும் இந்தியாவுக்கு வந்தார்.

அது குறித்து பேசியபோது, “நான் மைனராகவே இந்தியா வந்தேன். என் அம்மாவின் கடவுச்சீட்டில் என் பெயர் குறிக்கப்பட்டு அத்துடன் `British Protected Person,` என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பிரிட்டிஷ் அரசால் வழங்கப்படும் தேசிய அடையாளத்தின் ஒரு வகை அது” என்கிறார் இலா.

இந்திய கடவுச்சீட்டு

பட மூலாதாரம், Getty Images

இத்தனை ஆண்டுகள் என்ன செய்தார்?

பெற்றோரின் கடவுச்சீட்டு மூலம் குழந்தைகள் பயணிக்க, அப்போதையை விதிகள் அனுமதித்தன. அப்படியில்லாவிட்டால், அவர் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கவே முடியாது என்கிறார் இலாவின் வழக்குரைஞரான ஆதித்யா சித்தலே.

பின்னர், குஜராத்திலிருந்து 1972ஆம் ஆண்டு இவரது குடும்பம் மும்பைக்கு நகர்ந்தது. அங்குதான் 1977ஆம் ஆண்டு, அவர் திருமணம் செய்து கொண்டு இந்திய குடும்பத்துடன் வாழத் தொடங்கினார்.

1997இல் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்தார். அப்போது குடியுரிமை சட்டம் 1955இன் விதிகளின்படி, இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்து 7 ஆண்டுகள் இந்தியாவிலேயே வாழ்வதன் மூலம் குடியுரிமை பெறத் தகுதி பெறலாம். ஆனால், இலாவின் விண்ணப்பம் அப்போது நிராகரிக்கப்பட்டது.

பின்னர் மும்பையில் உள்ள, பிரிட்டிஷ் தூதரகத்தை அணுகினார். ஆனால், இவரது தந்தையோ, தாத்தாவோ பிரிட்டிஷின் ராஜ்ஜிய/காலணிய பகுதிகளில் பிறந்தவர்களாகவோ அல்லது பதிவுசெய்யப்பட்ட குடிமக்களாகவோ இல்லை என்பதால் இவருக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டு வழங்க முடியாது என்று தூதரகம் மறுத்துவிட்டது.

அத்துடன், “நீங்கள் உகாண்டா குடிநபராகவும் இருக்கலாம்” என்று சொன்ன தூதரகம், ஒருவேளை உகாண்டா உங்களுக்கு கடவுச்சீட்டு தர மறுத்தால், நீங்கள் நாடற்றவராக அறியப்படுவீர்கள்” என்றும் தூதரகம் தெரிவித்தது.

நாடற்றவரா நான்!’

தன் மீது இப்படி ஒரு முத்திரை விழுவதை அவர், வாழ்வில் முதல்முறையாக அப்போதுதான் உணர்ந்தார். அதன்பின்னர், இந்திய கடவுச்சீட்டுக்காக இதுவரை, இருமுறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மூன்றாவது முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. “ஏதாவது வழி கிடைத்துவிடாதா என்பதற்காக, ஒவ்வொரு அரசு அலுவலகமாக ஏறி இறங்கும்போதெல்லாம் என்னை `நாடற்றவர்` என்றுதான் சொல்கிறார்கள்” என்கிறார் இலா.

2018ஆம் ஆண்டு இலாவின் மகள், டெல்லியில் இருக்கும் உகாண்டா தூதரகத்துக்கு கடிதம் எழுதினார். கடவுச்சீட்டு அல்லது குடியுரிமை வழங்கும்படி வைத்த கோரிக்கையை பரிசீலித்த தூதரகம், அவர் உகாண்டாவில் பிறந்ததை உறுதி செய்தது. ஆனாலும், அவர் உகாண்டா குடிமகள் அல்ல என்று தெரிவித்து விட்டது.

அத்துடன், நாடற்றவர் என்ற முறையில், இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பியுங்கள் என்றும் அவருக்கு சொல்லப்பட்டது. இதையடுத்து 2019 இல் விண்ணப்பித்தார். இந்தமுறையும் நிராகரிப்புதான். அத்துடன், முறையான விசாவோ கடவுச்சீட்டோ இல்லாமல் இத்தனை ஆண்டுகாலம் இந்தியாவில் வாழ்ந்துள்ளார். குடியுரிமை சட்டம் 1955ன் விதிகளும் பூர்த்தியாகவில்லை என்று சொல்லப்பட்டது.

இடி அமீன் உத்தர்வுக்குப்பின் ஏராளமான ஆசியர்கள் வெளியேறினர்

பட மூலாதாரம், Getty Images

இது, அவரை மன அழுத்தத்துக்கு ஆளாக்க, தீர்வு கேட்டு இந்த முறை அரசாங்க அதிகாரிகளிடமோ, அரசிடமோ கோரிக்கை வைக்கவில்லை. நேராக நீதிமன்றப் படியேறிவிட்டார். மும்பை உயர் நீதிமன்றத்தில், தனக்கு கடவுச்சீட்டு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் பிபிசியிடம் பேசியபோது “என் கணவர் இந்தியர், என் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் கூட இந்தியர்கள். ஆதார் உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளும் என்னிடம் உண்டு. ஆனால், இன்னும் இவை எதுவும் போதவில்லை” என்று தெரிவித்தார்.

1972க்குபிறகு உகாண்டா சர்வாதிகாரி இடி அமீன், ஆசியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டார். அப்படி வெளியேறியவர்களில் பலர் பிரிட்டிஷ், கனடா, இந்தியாவில் குடியிரிமை பெற்றனர்.

இவரது மனு மீதான விசாரணை, ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. “ஏற்கனவே என் உறவினர்கள் பலரது நிகழ்வுகளை தவறவிட்டுவிட்டேன். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பாக துபாயில் என் இன்னொரு உறவினருக்கு திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயம் அதையும் தவறவிடுவேன்” என்று சொல்கிறார் இலா.

இவரது இப்போதைய நம்பிக்கையெல்லாம், தன் வாழ்வின் பெரும்பகுதியை எந்த நாட்டில் கழித்தாரோ அந்த நாட்டின் குடிமகள் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதுதான்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »