Press "Enter" to skip to content

சீனா – தைவான் விவகாரம்: தைவானைச் சுற்றி சீனாவின் போர்ப்பயிற்சி சொல்லும் செய்தி என்ன?

பட மூலாதாரம், EPA

அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றது, சுயாதீன ஆட்சி நாடாக இருக்கும் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கூறிவருகிறது. நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தைவானை சுற்றி சீனா போர் ஒத்திகையில் ஈடுபட்டதை இருதரப்பும் எப்படி பார்க்கிறது என்பதை பிபிசி செய்தியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

புதிய இயல்பு நிலை

ஸ்டீஃபன் மெக்டொனெல், பெய்ஜிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மட்டத்தில் உள்ள தீவிர சிந்தனையாளர்கள், நான்சி பெலோசியின் தைவான் வருகை தங்களுக்கு விட்டுச் சென்றுள்ள சூழல் குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடையலாம்.

நான்சி பெலோசி அவர்களுக்கு ஒரு வாய்ப்பை திறந்துவிட்டுள்ளார், அவர்கள் அதனை பயன்படுத்தியுள்ளனர்.

தைவானைச் சுற்றி மேற்கொள்ளப்படும் தீவிர ராணுவ நடவடிக்கைகள் தற்போது “ஏற்றுக்கொள்ளக்கூடிய” பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

தைவானில் ஏவுகணைகளை ஏவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது “ஏற்றுக்கொள்ளக்கூடியதாக” மாறியுள்ளன. சர்வதேச சமூகம் இதனை ஏற்றுக்கொண்டது மட்டும் இதற்கு காரணம் அல்ல, அவற்றை நிகழ்த்திய சீனா அதிலிருந்து தப்பித்து கொண்டதால் இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இப்போது சீன ராணுவம் (பிஎல்ஏ) ஒவ்வொரு முறையும் தைவானுக்கு நெருக்கமாக போர் விமானங்களை அதிக எண்ணிக்கையில் பறக்கவிடுகிறது. இது தற்போது புதிய இயல்பாக மாறியுள்ளது.

இதைவிட, சீனா தன் படைகளின் மூலம் தைவானை கைப்பற்றும் வகையில் தாக்குதல் நிகழ்த்தும் என்பதே நடப்பதற்கு சாத்தியமான ஒன்றாக உள்ளது என, சீன மக்கள் பலரும் கருதுகின்றனர்.

இது நடைபெற வேண்டும் என விரும்பியவர்களுக்கு இச்சூழல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தைவான் “தாய்நாட்டுக்குத் திரும்புதல்” என, சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ விவரித்ததை அடைவதற்கு உண்டான அமைதிவழி உத்திகள் தற்போது விவாதிக்கப்படவில்லை அல்லது அதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

சீன ராணுவத்தின் இத்தகைய பிரம்மாண்டமான ராணுவ ஒத்திகைகள், சீன ராணுவத்தின் எழுச்சி தடுக்க முடியாதது என்கிற நம்பிக்கையை உலகளவில் முடுக்கிவிட்டுள்ளது என்பது இதன் பக்கபலனாக கருதப்படுகிறது. இது, தென்சீனக் கடலில் உரிமைகோரல் தொடர்பாக சீனாவுடன் போட்டி கொண்டுள்ள தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளை அச்சுறுத்தலாம்.

சீனா - தைவான்

பட மூலாதாரம், Getty Images

இந்த பெரியளவிலான ராணுவ நடவடிக்கைகள் முன்னதாக திட்டமிடப்பட்டிருக்கலாம். நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி கசிந்தபோது, சீன ராணுவ ஜெனரல்கள், திடீரென இவற்றை நிகழ்த்தினார்கள் என கற்பனை செய்வது கடினம்.

சீனா இதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு, சந்தர்ப்பம் கிடைத்தபோது நிகழ்த்தியது என்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம் பெய்ஜிங்கில் நேர்காணல் செய்யப்பட்ட தேசியவாதி ஒருவர், “காம்ரேட் பெலோசிக்கு நன்றி!” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

நான்சி பெலோசி - ட்சாய் யிங் வென்

பட மூலாதாரம், Reuters

கடும் ரத்தக்களரியான, பேரழிவு நிகழ்வு என்பதற்கு மாறாக, தைவானை கைப்பற்றுவது எளிதானது என, தனது சொந்த போர்க்குணமிக்க சொல்லாட்சிகளில் சீன அரசாங்கம் சிக்கிக்கொள்வது ஆபத்தானது.

பிரதான நிலப்பகுதியில் எவ்வித தாக்குதலையும் தடுக்க தைவான் மற்றும் அமெரிக்க ராணுவங்கள் பாதுகாப்பு உத்திகளை தயாரிப்பதற்கு இந்த போர் விளையாட்டுகள் உதவியதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், இந்த போர் ஒத்திகைகள் அதிபர் ஷி ஜின்பிங் அரசாங்கத்திற்கு போதவில்லை. அமெரிக்காவுடன் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடல் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லை கடந்த குற்றங்கள் தடுப்பு ஆகியவற்றுடனான ஒத்துழைப்பை சீனா கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்திவிட்டது. மேலும், அமெரிக்கா – சீன ராணுவத்திற்கு இடையிலான அனைத்து உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

மேலும், இதுதொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டின் மற்றும் தலைமைத் தளபதி ஜெனரல் மார்க் மில்லே ஆகியோரின் தொலைபேசி அழைப்புகளுக்கு சீன தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை என அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, காலநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்திக்கொண்டது. உலகின் இருபெரும் கார்பன் உமிழ்வு நாடுகள் இதுதொடர்பாக பேசுவதை நிறுத்திக்கொண்டன.

பெலோசியின் தைவான் வருகை பதட்டத்தை நிச்சயமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஷி ஜின்பிங் அரசாங்கம் குறைந்தது இப்போதைக்கு இந்த பதட்டத்தை விரும்புவதாக தெரிகிறது.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

வார்த்தை போர்

ரூபெர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ், தைவான்

தைவானை சுற்றி நடக்கும் சீன ராணுவ நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து சீன தரப்பிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளும் அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

தைவான் அரசியல்வாதிகளின் சிறு குழு ஒன்றை சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, “தைவானின் பிரிவினைவாத சக்திகள்” என்று அடையாளப்படுத்தினார்.

அப்படி அடையாளப்படுத்தப்பட்டதில் முதன்மையானவர் தைவான் அதிபர் ட்சான் யிங்-வென். சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ அவரை, “சீன நாட்டின் தகுதியற்ற வம்சாவழி” என கூறினார். இதனை வேறு விதமாக கூறினால், ஒரு துரோகி.

தங்களின் எதிரி அல்ல என சீனா கூறிவரும் பெரும்பகுதி தைவான் மக்களை, தைவானை தாய்நாட்டிலிருந்து கிழித்தெடுக்க முயற்சிப்பதாக கூறும் சிறிய “குழுவில்” இருந்து பிரித்தெடுக்க முயற்சிப்பதே இதன் நோக்கமாகும்.

தைவான் குறித்த சீனாவின் இந்த பார்வை யதார்த்தத்திலிருந்து வேறுபட்டதாக இருப்பது இங்கு பிரச்னையாக உள்ளது. சீனாவுடனான எவ்விதமான ஒன்றிணைப்பையும் தைவானின் பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர் என சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்களை “தைவானியர்கள்” என்றே கருதுகின்றனர் “சீனர்களாக” அல்ல.

“சீன கலாச்சாரக் கூறுகளை நீக்குவதை” ட்சாய் யிங்-வென் அரசாங்கம் மேற்கொள்வதே இதற்கு காரணம் என, வாங் இ கூறுகிறார். மேலும், ட்சாய் “இரு சீனாக்கள்” அல்லது “ஒரு சீனா, ஒரு தைவானை” உருவாக்க முயல்வாதாக கூறுகிறார்.

சீனா - தைவான்

பட மூலாதாரம், EPA

தைவான் சீனாவுடன் “மீண்டும் இணைந்த பின்பு” தைவான் மக்கள் “மீண்டும் கற்க வேண்டும்” என்று பிரான்ஸுக்கான சீன தூதர் கூறியிருந்தார். தைவான் மக்கள் சீனர்கள் அல்ல என நம்பும் வகையில் அவர்கள் “மூளைச்சலவை” செய்யப்பட்டுள்ளதாக, அவர் கூறுகிறார்.

இது மீண்டும் யதார்த்தத்துடன் வேறுபட்டதாக உள்ளது. விரும்பியதை படிக்கவும் சிந்திக்கவும் வாக்களிக்கவும் அனுமதிக்கப்பட்ட சுதந்திர சமூகத்தினராக தைவான் மக்கள் உள்ளனர்.

இவை அனைத்தும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இப்போதைக்கு உள்ள கேள்வி.

2024இல் நடைபெற உள்ள தேர்தலில் தைவான் மக்களை அதிபர் ட்சாய் கட்சிக்கு எதிராக தைவான் மக்கள் வாக்களிக்கும் வகையில் அச்சுறுத்துவதே சீனாவின் நோக்கமாக உள்ளது. சீனாவுடன் நட்பாக உள்ள குவாமிண்டாங் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என சீனா நினைக்கிறது.

சீன பிரதான நிலப்பகுதியில் பெருமளவில் முதலீடு செய்துள்ள தைவான் தொழிலதிபர்களுக்கு சீனா நேரடி அச்சுறுத்தல்களை விடுக்கிறது. அவர்கள் “சரியான பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்” என அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.

இத்தகைய உத்திகளை சீனா முன்பே முயற்சித்துள்ளது, ஆனால் அவை வெற்றி பெறவில்லை. தைவானின் தொழில்கள் பல சீனாவின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக தைவானின் பழ விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைவானுக்கு வரும் பிரதான சுற்றுலாப் பயணிகள் மீது சீனா விதித்துள்ள தடையால் சுற்றுலாத் துறை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சீனாவைப் பற்றிய தைவானிய அணுகுமுறைகள் மேலும் கடினமாகிவிடும் என்பதே கடந்த சில நாட்களின் சான்றுகள் கூறுவதாக உள்ளன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »