Press "Enter" to skip to content

சல்மான் ருஷ்டி சென்னையை மையப்படுத்தி எழுதிய சிறுகதை: அடுத்த நாவல், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டது

பட மூலாதாரம், Getty Images

புக்கர் பரிசு பெற்ற, சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகக்கூடிய நாவல்களை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியுள்ளார். பல்வேறு புகழ்பெற்ற, பேசப்படும் நாவல்களை எழுதியுள்ள சல்மான் ருஷ்டியின் அடுத்த நாவல் 2023ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. அந்த நாவல், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டது.

அவருடைய கற்பனைக் கதை, ஓர் அற்புதமான சாம்ராஜ்யத்திற்கு உயிர்கொடுக்கும் ஒரு பெண்ணின் காவியக் கதை என்று பென்குயின் புத்தக வெளியீட்டு நிறுவனம், அவருடைய “விக்டரி சிட்டி” நாவல் குறித்த குறிப்பில் தெரிவித்துள்ளது.

அந்தக் கதை 14ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடக்கிறது. கதை நடக்கும் காலகட்டத்தில் நீண்டகாலமாக மறக்கப்பட்ட இரண்டு ராஜ்ஜியங்கள் ஒரு சிறிய போரில் ஈடுபட்டிருக்கின்றன. அப்போது அங்கிருக்கும் ஒன்பது வயது சிறுமியின் வாழ்வில், தெய்வீகமான ஒரு சம்பவம் நிகழ்கிறது. இது தென்னிந்தியாவின் வரலாற்றையே மாற்றக்கூடிய வகையில் அவர் கதைக் களத்தை அமைத்திருக்கிறார்.

தன் தாயின் இறப்பை நேரில் பார்த்த துக்கத்தில் இருக்கிறாள், பம்பா கம்பனா. அப்போது அவர் பெயரையே கொண்ட பம்பா என்ற ஒரு பெண் தெய்வம், அவள் வழியாகக் குறி சொல்வதைப் போல் கதை அமைத்துள்ளார் ருஷ்டி. கதைப்படி, பம்பா கம்பனாவின் புரிதலுக்கு அப்பாற்றபட்ட சக்திகளை அந்தத் தெய்வம் அவருக்கு வழங்குகிறது. மேலும், பம்பாவிடம், பிஸ்னகா என்றழைக்கப்படும் பெரிய நகரத்தை எழுப்பும் கருவியாக அவள் இருப்பாள் என்றும் அந்தத் தெய்வம் கூறுகிறது. அந்த நகரம் தான் நூலின் தலைப்பான “விக்டரி சிட்டி.”

1px transparent line
1px transparent line

அற்புதங்கள் நிறைந்த அந்த நகரத்தின் பிறப்பிலிருந்து, அதன் துயர்மிக்க அழிவு வரை, அடுத்த 250 ஆண்டுகளுக்கு, பம்பாவின் வாழ்வு பிஸ்னகாவின் விதியோடு ஆழமாகப் பிணைந்திருக்கிறது. பம்பா, பிஸ்னகாவையும் அதன் மக்களையும் உருவாக்குகிறாள். தனது பெண் தெய்வம் தனக்குக் கொடுத்திருக்கும் முக்கியமான பணியைச் செய்கிறாள். அதாவது, ஆணாதிக்க உலகில் பெண்களுக்கும் சம உரிமைகளைப் பெற்றுத் தருவதே அந்தப் பணி.

ஆண்டுகள் செல்கின்றன. அரசர்கள் வாழ்ந்து வீழ்கிறார்கள். போர்கள் பல வென்றும் தோற்றும் கடக்கின்றன. விசுவாசத்தின் பக்கங்கள் மாறுகின்றன. பிஸ்னகா நகரம் வரலாற்றுச் சிடுக்குகளுக்குள் ஆழமாகச் சிக்கிக் கொள்கிறது. இவை அத்தனையின் மத்தியிலும் பம்பா இருக்கிறாள்.

மாய எதார்த்த கதை சொல்லல், பின்நவீனத்துவ கதை சொல்லல் போன்ற இலக்கிய உத்திகளைக் கையாள்வதில் முதன்மையானவரான ருஷ்டி, “இந்த நாவலை ஒரு தொன்மையான இதிகாசத்தின் மொழிபெயர்ப்பாகக் கட்டமைத்திருக்கிறார்,” என்று இந்த நாவலை வெளியிடவுள்ள பென்குயின் பதிப்பகம் தெரிவித்துள்ளது.

சென்னையை மையப்படுத்தி கதை எழுதிய ருஷ்டி

சல்மான் ருஷ்டி, இதற்கு முன்பு சென்னையை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுதியுள்ளார். “தி நியூயார்க்கர்” இதழில் அவர் எழுதிய “இன் தி சவுத்” என்ற சிறுகதையில், சென்னையிலுள்ள பெசன்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரை ஆகியவற்றில் கதை நிகழ்கிறது.

சல்மான் ருஷ்டி

பட மூலாதாரம், PA Media

இந்தக் கதை, பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும், தங்களுடைய 80களில் இருக்கக்கூடிய ஓய்வுபெற்ற இரண்டு அரசு அதிகாரிகளின் வாழ்வைச் சுற்றிச் சுழல்கிறது. அங்கு வாழும் மக்களின் வாழ்வியல், எலியாட்ஸ் கடற்கரை மீனவர்கள், குழந்தைகளின் சிரிப்பு மற்றும் அழுகைச் சத்தங்கள், மூத்த குடிமக்களின் அரசியல் பேச்சு என்று பெசண்ட் நகருக்கே உரிய இயல்புத்தன்மையைக் கடத்தியபடி, கதை நகர்கிறது.

குழந்தையாகத் தொடங்கும் வாழ்க்கை மீண்டும் குழந்தையாகியே முடிவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் வயதான மனம், குடும்பத்தினரின் அன்பு மீதே கூட வெறுப்பு ஏற்பட்டுவிடக்கூடிய அளவுக்கு நிரந்தர அமைதிக்காக மரணத்தை எதிர்பார்க்கும் வயது, அந்த அமைதியைத் தர மறுத்து வாழவிட்டுக் கொண்டிருக்கும் மரணம் என்று வாழ்வியல் ரீதியிலான பல விஷயங்களை ருஷ்டியின் “இன் தி சவுத்” சிறுகதை பேசுகிறது.

சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியாக மாறியது, அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமி பாதிப்பு ஆகியவற்றின் காலகட்டத்தில் இந்தச் சிறுகதை நிகழ்கிறது.

சென்னையை மையமாகக் கொண்ட அவருடைய இந்தச் சிறுகதை, 2009, மே 18ஆம் தேதியன்று நியூயார்க்கர் இதழில் வெளியானது. இதற்கு முன்பாக, 2004ஆம் ஆண்டு அவர் சென்னை வந்திருந்ததாகவும் அமிதிஸ்டில் நடந்த மெட்ராஸ் வார கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

சல்மான் ருஷ்டி தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

சல்மான் ருஷ்டி எழுதிய நூல்கள்

சல்மான் ருஷ்டி எழுதிய முதல் நூலான, “க்ரிம்ஸ்” பெரிதாக வெற்றியடைவில்லை. ஆனால், அவருடைய திறமையை எழுத்துலகம் புரிந்துகொள்ள அந்தப் படைப்பு உதவியது.

அவருடைய இரண்டாவது நூல், மிட்நைட்ஸ் சில்ட்ரன். இந்த நூல் வெளியான 1981ஆம் ஆண்டில், இதற்காக ருஷ்டி புக்கர் பரிசை வென்றார். இதை எழுதுவதற்கு அவருக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டன. இந்த நூல் 5 லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. இதன் கதையை மையமாக வைத்து மிட்நைட்ஸ் சில்ட்ரன் என்ற படமும் எடுக்கப்பட்டது. ஷ்ரேயா சரண், சித்தார்த் ஆகியோர் அந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

1983ஆம் ஆண்டில் வெளியான ஷேம் என்ற நாவல், பாகிஸ்தானை கதைக்களமாகக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி ஜாகுவார் டைம்ஸ்’ என்ற பெயரில் தனது நிகரகுவா நாட்டுப் பயணத்தை அடிப்படையாக வைத்து ஒரு நூலை எழுதினார்.

சல்மான் ருஷ்டி தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

1988ஆம் ஆண்டு அவர் தற்போது தாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த “சாத்தானின் வசனங்கள்” நூல் வெளியானது. இந்த பின்நவீனத்துவ நாவல், இஸ்லாமியர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியது. இது தங்கள் மதத்தை அவமதிப்பதாக அவர்கள் கருதினர்.

சாத்தானின் வசனங்கள் நூலுக்காக, 1989, ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று, ருஷ்டி மீது ஒரு புத்தக வெடிகுண்டு மூலமாகக் கொலை முயற்சி நிகழ்த்தப்பட்டது. அந்தக் கொலை முயற்சியை மேற்கொண்டவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.

ருஷ்டிக்கு எதிராக நடந்த கலவரங்களில் மக்கள் கொல்லப்பட்டனர். இரான் தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டது. ருஷ்டியை போலவே, சாத்தானின் வசனங்கள் நூலை விற்பனை செய்தவர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன.

அந்த நூலுக்குப் பிறகு, ஹாரூன் அண்ட் தி சீ ஆஃப் ஸ்டோரிஸ் என்ற நூலை 1990ஆம் ஆண்டில் எழுதினார். மேலும், 1991ஆம் ஆண்டில் இமேஜினரி ஹோம்லேண்ட்ஸ் என்ற நூலையும் 1995ஆம் ஆண்டில் தி மூர்ஸ் லாஸ்ட் சை என்ற நூலையும் எழுதினார். நாவல்கள், அபுனைவுகள் மட்டுமின்றி, பல்வேறு சிறுகதைகளையும் ருஷ்டி எழுதியுள்ளார்.

1px transparent line

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

1px transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »