Press "Enter" to skip to content

இதய நோய், ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுமா டார்க் சாக்லேட்? – ஆய்வுகள் சொல்வது என்ன?

  • ஜெஸ்ஸிகா பிராட்லி
  • பிபிசி ஃப்யூச்சர்

பட மூலாதாரம், Getty Images

மனிதர்கள் பல நூறு ஆண்டுகளாக சாக்லேட் வகைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் சாக்லேட் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

“பனாமாவிலுள்ள சான் ப்ளாஸ் தீவுகளில் வாழும் குனா இந்தியர்கள் போன்ற மக்களின் கலாசாரங்களில் சாக்லேட் ஒரு பகுதியாக உள்ளது. மேலும், அவர்களுக்குக் குறைந்த ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு போன்றவை குறைவான அளவில் உள்ளன,” என்று அமெரிக்க புற்றுசோய் கூட்டமைப்பின் தொற்றுநோயியல் ஆராய்ச்சி பிரிவின் மூத்த அறிவியல் இயக்குநரான மர்ஜி மெக்கல்லோ கூறுகிறார்.

அதிகப்படியான உப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்ற அறிவியல் கருத்துக்கு மாறாக, அவர்கள் தங்கள் உணவில் ஒரு சராசரி அமெரிக்கர் சேர்ப்பதை விட அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்கிறார்கள்.

குனா இந்தியர்கள் தினசரி என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களை நேரில் சென்று சந்தித்தார். அவர்கள் நான்கு கப் கக்காவ் (வெப்ப மண்டல அமெரிக்காவில் வளரும் தாவரம், இது கோகோ தயாரிக்கப் பயன்படுகிறது) தண்ணீர் மற்றும் சிறிதளவு சர்க்கரை கலந்த கோகோவை தினமும் உட்கொள்வதை அவர் கவனித்தார். டார்க் சாக்லேட்டில் இந்த கக்காவின் அளவு 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது.

1px transparent line
1px transparent line

டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா?

  • பல்வேறு அவதானிப்பு ஆய்வுகள், டார்க் சாக்லேட்டின் இதய நன்மைகளைப் பற்றிக் கூறுகின்றன. ஓர் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 20,000 பேரின் உணவுப் பழக்கம் மற்றும் அவர்களுடைய ஆரோக்கியத்தை அவதானித்தார்கள். அதன்மூலம், 100 கிராம் சாக்லேட்டை ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்வது இதய நோய் மற்றும் மாரடைப்புக்கான அச்சுறுத்தலைக் குறைப்பதாகக் கண்டறிந்தார்கள்.
  • கோகோ சப்ளிமென்ட் மற்றும் மல்டிவைட்டமின் விளைவுகளின் ஆய்வு (Cocoa Supplement and Multivitamin Outcomes Study), 21,000 பேரை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டது. தினசரி 400 முதல் 500 மில்லிகிராம் கோகோ ஃபிளாவனால் (cocoa flavanol) இருக்கக்கூடிய சப்ளிமென்ட்களை (ஊட்டச்சத்துக்காக உட்கொள்ளப்படும் பொருட்கள்) எடுத்துக்கொள்வது ரத்த அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதன் மூலம், இதய நோயால் உயிரிழக்கும் அபாயத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டது.
  • இந்த ஃபிளாவனாய்டுகளின் அளவு டார்க் சாக்லேட்டில் தேநீரை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம். ஆனால், உற்பத்தி செயல்பாட்டின்போது, ஃபிளாவனாலின் அளவு குறைவதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. அதன்விளைவாக, டார்க் சாக்லேட்டில் எவ்வளவு கோகோ ஃபிளாவனால் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பலனளிக்கும் என்ற முழு விவரம் இல்லை என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் பேராசிரியராக இருக்கும் குன்டெர் குன்லே.
  • சாக்லேட் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாகக் கவலைப்படுபவர்கள், அதை முழு முற்றாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். டார்க் சாக்லேட்டில் பொதுவாக சர்க்கரையும் உள்ளது. ஆனால், பால் சாக்லேட்டில் உள்ள விகிதத்தைவிட அதிக சதவீதம் கோகோ கொண்ட சாக்லேட்டை தேர்ந்தெடுப்பது, அதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக அமையும்.
டார்க் சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

பட மூலாதாரம், Getty Images

  • இதய நோயைத் தடுக்க சாக்லேட் சாப்பிடுவதை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படையாகப் பரிந்துரைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து டார்க் சாக்லேட் சாப்பிடுவது நம் உடல்நலத்தில் நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதாகவும் ஓர் ஆய்வறிக்கையின் முடிவு கூறுகிறது.
  • பலவிதமான உணவுப் பொருட்களில் ஃபிளாவனால்கள் இருக்கின்றன என்றாலும், டார்க் சாக்லேட் ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில் பொருந்தக்கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டார்க் சாக்லேட்டின் இருண்ட பக்கம்

  • டார்க் சாக்லேட்டுகள் நன்மை பயப்பதாக தான் நினைக்கவில்லை என்கிறார் குன்லே. ஐரோப்பிய உணவு தர நிர்ணய ஆணையம், 200 மில்லிகிராம் கோகோ ஃபிளாவனாய்டுகள் அல்லது 10 கிராம் டார்க் சாக்லேட் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறது. ஆனால், ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லி கிராம் அளவு ஃபிளாவனாய்டு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது 30 கிராம் அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு சிறு டார்க் சாக்லேட்டுக்கு நிகரானது. சாக்லேட்டுகளில் ஃபிளாவனால் அளவை அதிகர்ப்பதற்கான எந்த முயற்சியும் அவற்றை ஓர் ‘ஆரோக்கியமான உணவாக’ மாற்றும் என்று தான் கருதவில்லை என்கிறார் குன்லே.
  • சாக்லேட்டில் கோகோ ஃபிளாவனால் சேர்ப்புகளின் விளைவுகளைச் சோதிப்பதில் கவனம் செலுத்தப்படுவதில், டார்க் சாக்லேட்டிலுள்ள சர்க்கரை, நிறை கொழுப்பு (Saturated fat) போன்ற மற்ற கூறுகள் தவிர்க்கப்படுகின்றன. டார்க் சாக்லேட்டில் பெரும்பாலும் கோகோ வெண்ணெய் கலக்கப்படுகிறது. இதில் அதிகமான கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்புக்கு இதய நோய் அபாயத்துடன் தொடர்புள்ளது.
  • “சாக்லேட்டில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கோகோ வெண்ணெயில் இருந்து வருகின்றன. கோகோ வெண்ணெயில் உள்ள கொழுப்பில் மூன்றில் ஒரு பங்கு நிறை கொழுப்பு. அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது,” என்கிறார் வடக்கு ஐயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டில் இருக்கும் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் பயாலஜிகல் சயின்சஸ் பேராசிரியர் ஏடின் காஸ்ஸிடி.
டார்க் சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

பட மூலாதாரம், Getty Images

  • “சாக்லேட்டில் அதிகளவு கோகோ ஃபிளாவனாய்டு இருந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால், அது அதிகளவில் சேர்க்கப்படும்போது, அந்த சாக்லேட்டின் சுவை கசப்பாக இருக்கும். சாக்லேட்டின் சுவை கசப்பாக இருந்தால் அதைச் சந்தைப்படுத்துவது மிகவும் கடினம். கோகோவின் நன்மைகளுக்கும் சுவையானதாக மகிழ்ந்து ருசிக்கக்கூடியதாக மாற்ற எதைச் சேர்க்க வேண்டும் என்பதற்கும் இடையே முரண்பாடு நிகழ்கிறது,” என்கிறார் ஆஸ்டன் மெடிக்கல் ஸ்கூலில் உணவியல் வல்லுநராக இருக்கும் டுவேன் மெல்லோர்.
  • ஃபிளாவனாய்டுகளை உடல் எடுத்துக்கொள்வதை எளிதாக்க ஏதுவாக, கொழுப்பு மற்றும் சர்க்கரை சாக்லேட்டில் சேர்க்கப்படுகிறது. “இந்த ஃபிளாவனால்கள் மிகவும் சிக்கலான கரிம சேர்மங்களாக உள்ளன. ஆகவே, அவற்றோடு சர்க்கரையைச் சேர்ப்பதன் மூலம் உடலுக்கு எளிதில் கிடைக்க வழி செய்யலாம்,” என்றும் மெல்லோர் கூறுகிறார். இருப்பினும், ஒருவர் எவ்வளவு கோகோ ஃபிளாவனால்களை டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பெறுகிறார் என்பதைக் கண்டறிவதற்கான வழிகள் எதுவும் இதுவரை இல்லை.
  • “சாக்லேட் ஆரோக்கியமான உணவுப்பொருள் அல்ல. பெரும்பாலான சாக்லேட்டுகளில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கருத்தில் கொண்டு, அதிகப்படியாக அதை உண்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகளோடு ஒப்பிடும்போது, ஃபிளாவனால்கள் மூலம் கிடைக்கும் நன்மையும் மிகக் குறைவாகவே இருக்கும்,” என்கிறார் குன்லே.
டார்க் சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

பட மூலாதாரம், Getty Images

உடல்நல நன்மைகளைக் குறைக்காமல் தயாரிக்கும் முயற்சி

சுவையைக் கைவிடாமல் அதேவேளையில், அதில் கிடைக்கும் உடல்நல நன்மைகளையும் தரக்கூடிய வகையில் அதிக கோகோ உள்ளடக்கத்தைக் கொண்ட சாக்லேட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடும் சிறு சிறு சாக்லேட் நிறுவனங்கள் பெருகி வருகின்றன.

ஃபயர்ட்ரீ என்ற சாக்லேட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்டின் ஒடேர், “கோகோ பீன்ஸ் பசிபிக்கில் இருக்கும் சாலமன் தீவுகளில் வளர்க்கப்பட்டு, அவற்றின் ஓடுகளை உடைத்து, உள்ளிருக்கும் கோகோ பீன்ஸ்களை ஆறு நாட்கள் நொதித்தல் செயல்முறைக்கு உள்ளாக்கி, பிறகு அவற்றைக் காய வைத்த பிறகு விவசாயிகள் பிரிட்டனுக்கு அனுப்புகிறார்கள். அங்கு அவற்றை வறுத்து பயன்படுத்துகிறோம்,” என்கிறார். பீன்ஸ் ஓடுகளைப் பிரிக்காமல் முழுவதுமாக வறுக்கும்போது அதிக நேரத்திற்கு அவற்றைச் சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும். காய்கறிகளை நீண்ட நேரத்திற்கு வெப்பத்தில் சமைக்கும்போது அவற்றிலுள்ள ஊட்டச்சத்துகளும் குறையத் தொடங்குகின்றன. டார்க் சாக்லேட் விஷயத்திலும் அப்படியே இருந்தால், அதிலுள்ள நன்மைகளும் குறையும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, ஓடுகளைப் பிரித்துவிட்டு வறுப்பதன் மூலம் குறைவான நேர்த்திற்கு வெப்பத்தில் வைத்தால் போதும். அதன்மூலம் அதிலுள்ள நன்மைகளும் பெரியளவில் குறையாமல் இருக்கலாம். இதில் இன்னும் ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.

உடல் ஆரோக்கியத்திற்கான ஃபிளாவனால்களை எடுத்துக்கொள்வது குறித்துப் பேசியபோது, “அதிகப்படியான கலோரிகளை தவிர்ப்பதாக இருந்தால், ஒரு வாரத்தில் பல முறை அதிக சதவீதத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அதை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவாகக் கருதக்கூடாது. சரியான அளவில் கக்காவ் அதிகமுள்ள சாக்லேட் உடன் தேநீர், பெர்ரி, திராட்சை போன்ற பழங்கள் மூலமாகவும் ஃபிளாவனால்களை எடுத்துக்கொள்ள முயலவேண்டும்,” என்றார் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பேராசிரியராக இருக்கும் ஜோஆன் மேன்சன்.

1px transparent line

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

1px transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »