Press "Enter" to skip to content

பெற்றோர் பராமரிப்பு: வயதான தந்தையை பராமரிக்க தவறிய மகனின் சொத்து உரிமைகள் ரத்து

பட மூலாதாரம், Rapeepong Puttakumwong / Getty Images

(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (17/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

வயதான தந்தையை பராமரிக்கத் தவறிய மகனின் சொத்து உரிமைகளை ரத்து செய்து கும்பகோணம் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கல்லுக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 72). இவரது மகன் வைத்தியலிங்கம். மனைவியை இழந்த சண்முகம் தனது ஒரே மகனான வைத்தியலிங்கத்தை சிரமப்பட்டு வளர்த்து திருமணம் செய்து வைத்ததாகவும் பின்னர் அவர் மகன், மருமகளுடன் திருநாகேஸ்வரம் கல்லுக்காரத் தெரு பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்ததாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

இந்தநிலையில் வைத்தியலிங்கம் தனது தந்தை சண்முகத்திடமிருந்து சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு தனது தந்தையை முறையாக பராமரிக்காமல் இருந்து வந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து திருநீலக்குடி காவல் துறையினர் மற்றும் திருவிடைமருதூர் போலீசாரிடம் சண்முகம் புகார் கொடுத்த நிலையில் காவல் துறையினர் வைத்தியலிங்கத்திற்கு அறிவுரை கூறி தந்தையை முறையாக பார்த்துக் கொள்ளுமாறு அனுப்பியதாகவும் ஆனாலும் வைத்தியலிங்கம் தொடர்ந்து சண்முகத்தை துன்புறுத்தி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சண்முகம் கும்பகோணம் கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்தார். சொத்து ரத்து புகாரின்பேரில், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, கும்பகோணம் தாசில்தார் மற்றும் தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், வைத்தியலிங்கம் தனது தந்தையின் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அவரை முறையாக பராமரிக்காமல் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியது உண்மை என தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் சண்முகத்திடம், வைத்தியலிங்கம் எழுதி வாங்கிய உயில் பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் லதா நடவடிக்கை எடுத்தார். பின்னர் அந்த சொத்தின் ஆவணங்கள் சண்முகத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கீதம் ஒலித்ததால் ஸ்தம்பித்த தெலங்கானா

சந்திரசேகர ராவ்

பட மூலாதாரம், ANI

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் அழைப்பை ஏற்று, நேற்று காலை 11.30 மணிக்கு தெலங்கானா மாநிலம் முழுவதும் சாலைகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதனை கேட்ட பொதுமக்கள் இருந்த இடத்திலேயே நின்று ஒரு நிமிடம் வரை தேசிய கீதம் பாடலுக்கு மரியாதை செலுத்தி, பிறகு தங்களது பணிகளில் கவனம் செலுத்தியதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் 75-வது சுதந்திர தின விழாவினை, வைர விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, நேற்று, முதலமைச்சர் சந்திரசேகர ராவின் அழைப்பின் பேரில் தெலங்கானா மாநிலம் முழுவதும் அனைத்து கூட்டுச்சாலைகள், அரசு அலுவலகங்கள், பஞ்சாயத்து, ஊராட்சி மன்ற அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் தேசிய கீதம் ஒலிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சரியாக நேற்று காலை 11.30 மணிக்கு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் தேசியகீதம் ஒலிக்கப்பட்டது. இதனை முன்கூட்டியே அறிந்த பொதுமக்களில் பலர் தேசியக் கொடியை ஏந்தி சாலையில் குவிந்ததாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11.30 மணிக்கு ஒரு நிமிடம் முன், சாலை சந்திப்புகளில் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியானது. அனைவரும் அவரவர் இருக்கும் இடத்தில் நிற்க வேண்டுமென அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து சாலைகள் முழுவதும் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்ததால், மக்கள் ஆங்காங்கே நின்று விட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

பேருந்து, கார், ஜீப்கள், இருசக்கர வாகனங்களில் சென்ற அனைவரும் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்கி விட்டனர். ஹைதராபாத் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி)கள் கூட ஒரு நிமிடம் வரை நிறுத்தப்பட்டன. மெட்ரோவில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் எழுந்து நின்றனர்.

சரியாக 11.30 மணிக்கு 2 முறை சைரன் ஒலிக்கப்பட்டு, அதன் பின்னர் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது அனைவரும் ஒரு நிமிடம் தேசிய கீதத்தை பாடியபடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிட்ஸ் கூட்டு ரோடு பகுதியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் சில அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நேற்று காலை 11.30 முதல் 11.31 மணி வரை தெலங்கானா மாநிலமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்ததாக அச்செய்தி தெரிவிக்கிறது.

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – அகில இலங்கை தாதியர் சங்கம்

இலங்கை நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

நோயாளிகளுக்கு அவசியமாக தேவைப்படுகின்ற மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ்.பீ. மெதிவத்த ‘வீரகேசரி’க்குத் தெரிவித்ததாக, அதன் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சத்திர சிகிச்சைகளின்போது நோயாளிகளுக்கு அவசியமாக தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கூட வெளியிலிருந்தே அவர்கள் கொண்டுவருகின்ற சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் கஷ்டப்படுவது போலவே சுகாதரப் பிரிவினரும் தங்களது கடமைகளையும் சேவைகளையும் செய்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

சத்திர சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் முற்றிலுமாக வைத்தியசாலைகளில் இல்லை. இவற்றை, நோயாளிகள் வெளியிலிருந்து கொண்டுவர வேண்டும். அவற்றை அவர்கள் கொள்வனவு செய்வதாயின், 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.

நீரிழிவு பரிசோதனைக்கான உபகரணங்கள், வலி நிவாரண மருந்துகள் மற்றும் இன்சுலின்கள், சலைன் உபகரணங்களும் அவற்றுள் செலுத்தப்படும் திரவ மருந்து வகைகள் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதற்கு மேலதிகமாக, பேண்டேஜ், பஞ்சுகள், ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது.

நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்பு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளும் தற்போது நடத்தப்படுது இல்லை.

இவ்வாறான பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் சேவை செய்யும் எங்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை சமாளிக்க எமக்கான சம்பளம் போதுமானதாக இல்லை. எமக்கு 2016 ஆம் ஆண்டிலேயே கடைசியாக சம்பளம் அதிகரிக்கப்பட்டது. எங்களுக்கான சம்பளத்தையும் அதிகரிக்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மன்னார், பூநகரியில் காற்றாலை: அதானி குழுமத்துக்கு அனுமதி

காற்றாலை

பட மூலாதாரம், Geography Photos / Getty Images

மன்னாரில் 286 மெகா வாட் திறனுள்ள, பூநகரியில் 234 மெகா வாட் திறனுள்ள 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்ட இரண்டு காற்றாலைத் திட்ட முதலீடொன்றுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »