Press "Enter" to skip to content

ரிஷி சுனக்: வெள்ளையினத்தை சேராத பிரதமரை ஏற்க பிரிட்டன் மக்கள் தயாராக உள்ளார்களா?

  • மார்சியா ஜாகோ
  • பிபிசி செய்தியாளர், லண்டன்

பட மூலாதாரம், PA Media

40-50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் எல்லா வகையான வெளிப்படையான பாகுபாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிரதமராகும் கனவு என்பது கற்பனையாக மட்டுமே இருந்தது.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி(Labour party)யின் எம்பி வீரேந்திர ஷர்மாவுக்கு 75 வயதாகிறது. அவர் இந்தியாவின் பஞ்சாபிலிருந்து 55 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் குடியேறினார். வெள்ளையர்களிடம் பல வெளிப்படையான பாகுபாடுகளை சந்திக்க நேர்ந்தது என்று பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் தெரிவித்தார். “60களில் பிரிட்டனின் வீடுகளின் வெளிப்புறத்தில் ‘வாடகைக்கு வீடு கிடைக்கும். ஆனால் ஆசியர்கள் மற்றும் கறுப்பர்களுக்கு அல்ல’ என்று எழுதப்பட்டிருந்தது. கிளப்புகளின் வெளிப்புறத்தில், ‘நாய்கள், ஐரிஷ்மேன்கள், நாடோடிகள் மற்றும் கறுப்பர்கள் ‘வர அனுமதி இல்லை.’என்று எழுதப்பட்டிருக்கும். ஆங்கிலேயர்கள் இந்தியர்களை பார்க்கும்போது, ‘இவர்கள் எங்களுக்கு அடிமையாக இருந்தவர்கள். இப்போது எங்களுக்கு சமமாக அமர்ந்துள்ளனர்’ என்று கூறி எதிர்ப்பார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் இன்று வீரேந்திர ஷர்மாவைப் போலவே, பிரிட்டனில் உள்ள பல எம்.பி.க்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் . இதுமட்டுமல்ல, போரிஸ் ஜான்சன் அரசில் உள்ள பல காபினெட் அமைச்சர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் ஒருவர் இன்று பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளார். அவர் பெயர் ரிஷி சுனக். அவர் நாட்டின் நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். கன்மேலாய்வுடிவ் கட்சியின் முக்கிய தலைவர்களில் அவர் ஒருவர். 42 வயதான ரிஷி சுனக் உடன், கட்சியின் மூத்த தலைவரான லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளார். கன்மேலாய்வுடிவ் கட்சியின் 1,60,000 உறுப்பினர்கள் இந்த இருவரில் ஒருவருக்கு வாக்களித்து நாட்டின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வார்கள். முடிவு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும்.

அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருக்க முடியுமா? இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெள்ளையர் அல்லாதவரை இங்குள்ள சமூகம் பிரதமராக்க முடியுமா?

இதைத் தெரிந்துகொள்ள, நாட்டின் பல நகரங்களுக்குச் சென்று, ஒவ்வொரு சமூகத்தினரிடமும், கன்மேலாய்வுட்டிவ் கட்சியினரிடமும் இது குறித்து கருத்துக் கேட்டோம்.

ரிஷி சிறந்தவர்

லண்டனில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செல்டென்ஹாம் நகரம் பிரிட்டனின் ஆளும் கன்மேலாய்வுட்டிவ் கட்சியின் கோட்டையாகும். லண்டன், பர்மிங்ஹாம், மான்செஸ்டர் மற்றும் லிவர்பூல் போன்ற பெரிய நகரங்களுக்கு வெளியே, இதுபோன்ற சிறிய நகரங்கள் மற்றும் டவுன்களில் பன்முகத்தன்மை குறைவாகவே உள்ளது. இது பெரும்பாலும் வெள்ளையர்களின் நகரம். ரிஷி சுனக் பற்றி இளைஞர்கள் குழுவிடம் கருத்துக் கேட்டபோது ஒரு இளம் பெண், “ரிஷி சுனக் பொருளாதாரத்திற்கு சிறந்தவராக இருப்பார். அவர் ஒரு பொருளாதார நிபுணர். எனவே இதன்படி அவருக்கு (பிரதமர் ஆவதற்கு) நல்ல வாய்ப்பு உள்ளது,”என்று கூறினார்.

“அவரது கொள்கைகள் அவரைப் போன்ற பணக்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் உதவாது. அதனால்தான் அவர்களில் யாரையும் நான் ஆதரிக்கவில்லை,”என்று உள்ளுர் கல்லூரியில் படிக்கும் அவரது தோழி ஒருவர் குறிப்பிட்டார். நான் ஒரு பெண்ணிடம் ‘பிரிட்டிஷ் சமூகம் ஒரு வெள்ளையர் அல்லாதவரை பிரதமராக தேர்ந்தெடுக்க தயாராக உள்ளதா’ என்று கேட்டேன். “நான் தனிப்பட்ட முறையில் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் நான் நிச்சயமாக இதற்குத்தயார். எனது ஆதரவு ரிஷி சுனக் நோக்கியே உள்ளது” என்று அவர் கூறினார். நகர சந்தையில் ஒரு நபரிடம்,’ இங்குள்ள சமுதாயம் ஒரு கருப்பு இன பிரதமருக்கு தயாராக உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா’ என்று கேட்டேன். அதற்கு அவர் , “நான் நிச்சயமாக தயாராக இருக்கிறேன். எனக்கு வேறு யாரைப்பற்றியும் தெரியாது. ஆனால் அது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்,”என்று தெரிவித்தார்.

விரேந்திர ஷர்மா, இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் எம்பி

பர்மிங்காம் பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரம். இங்கு மக்கள் தொகையில் பன்முகத்தன்மை உள்ளது. நகரில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் கலாச்சாரக் கொண்டாட்டங்களில் பன்முகத்தன்மை உணரப்பட்டது. இங்கு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம். இந்து மதத்தைப் பின்பற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை பிரதமராகப் பார்க்க பாகிஸ்தானிய வம்சாவளி மக்கள் விரும்புவார்களா? அனைவரும் இதற்கு ‘ஆம்’ என்று பதில் சொல்கிறார்கள். வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து மசூதியிலிருந்து வெளியே வந்த ஒருவர், “இப்போது முழு சமுதாயமும் திறமையை அடையாளம் காணும் அளவுக்கு அறிவாளியாகிவிட்டதாக நான் நம்புகிறேன், மனிதனின் இனம், அவனுடைய நிறம், அவன் எங்கிருந்து வந்துள்ளான், எங்கே இருக்கிறான் என்று அது பார்க்காது.” என்று அவர் கூறினார். ரிஷி ஒரு திறமையான மனிதர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், எனவே அவர் ஒரு நல்ல பிரதமராக இருப்பார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

சிறிது நேரத்தில் மேலும் பலர் முன் வந்து என்னிடம் பேசினார்கள். கறுப்பு தாடியுடன் இருந்த ஒருவர், “ரிஷி ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனின் அடுத்த பிரதமருக்கான சிறந்த வேட்பாளர் அவர் என்று நான் நினைக்கிறேன்”என்றார். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரில் இருக்கும் மீர்பூர் நகரைச் சேர்ந்த மற்றொரு நபர், “ரிஷி சுனக் பிரதமராக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் பல ஆண்டுகளாக பெரும்பாலும் வெள்ளையர்களே பிரதமர்களாக வருவதை நாம் பார்க்கிறோம். எனவே ஒரு இந்தியர் அல்லது ஆசிய வம்சாவளியை சேர்ந்தவர் பிரதம மந்திரியாக வரவேண்டும். இதன் காரணமாக நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார்.

ரிஷி சுனக் இந்து மதத்தை பின்பற்றுபவர். 2015ல் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பகவத் கீதையின் மீது கைவைத்து அவர் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது வெற்றிக்காக இந்திய வம்சாவளியினர் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை அவர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது?

ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரூஸ்

ரிஷி சுனக் 1980 மே 12 ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் பிறந்து அங்கு வளர்ந்தார். அவருடைய பெற்றோர் இந்த நகரத்தில் வசிக்கிறார்கள். அவரது தந்தை ஒரு மருத்துவர் மற்றும் தாயார் சமீப காலம் வரை ஒரு மருந்தகத்தை நடத்தி வந்தார். ரிஷியின் குடும்பம் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்து சவுத்தாம்ப்டனில் குடியேறியுள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உள்ளூர் கோவிலான ‘வேதிக் சொசைட்டி இந்து கோவிலுடன்’ ஆழமான தொடர்பு உள்ளது.

நான் கோவிலை அடைந்தபோது, 75 வயதான நரேஷ் சோன்சாட்லாவை சந்தித்தேன். அவர் ரிஷி சுனக்கை சிறுவயதிலிருந்தே அறிந்தவர். “என்னைக் கேட்டால் அவர் பிரதமராக வருவார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எதோ ஒரு காரணத்திற்காக அப்படி நடக்கவில்லை என்றால், ஒருவேளை அது அவரது தோலின் நிறம் காரணமாக இருக்கலாம்,” என்று அவர் என்னிடம் கூறினார்.

இந்த கோவிலின் தலைவர் சஞ்சய் சந்தாராணா. ரிஷியிடம் பாரபட்சம் காட்டப்படும் வாய்ப்பு இல்லை என்று அவர் கருதுகிறார்.”இந்த நாட்டில் யாருடைய கொள்கை நல்லது, யாருடைய கண்ணோட்டம் சரியானது, யார் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார்கள் என்று பார்க்கப்படுகிறது. நிறம் போன்றவை முக்கியமில்லை” என்று அவர் கூறினார்.

மக்களிடையே ரிஷியின் புகழ் லிஸ் ட்ரஸ்ஸை விட அதிகமாக இருப்பதாகத் தோன்றினாலும், வெற்றி தோல்வியை கட்சி உறுப்பினர்களே முடிவு செய்வார்கள். இதற்கான வாக்களிப்பு தொடங்கிவிட்டது. கன்மேலாய்வுடிவ் கட்சியின் இளைய தலைமுறையினர் ரிஷிக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் மூத்த உறுப்பினர்கள் ரிஷியைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். கன்மேலாய்வுட்டிவ் கட்சி நாட்டின் பல்வேறு நகரங்களில் இரு தலைவர்களுக்கும் இடையே விவாதங்களை நடத்தி வருகிறது. இந்த நிகழ்வுகள் ‘ ஹஸ்டிங்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.

கருத்து வாக்கெடுப்பில் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தெளிவான முன்னிலை உள்ளது. ஆனால் ஹஸ்டிங்ஸ் நிகழ்வுகளில் கட்சி உறுப்பினர்கள் லிஸ் ட்ரஸை விட ரிஷி சுனக் பக்கம் அதிக சாய்ந்துள்ளனர். முழு சூழலும் ரிஷிக்கு ஆதரவாக இருப்பது போலவே தெரிகிறது. லிஸ் அணியை விட ரிஷியின் பிரசாரக் குழு அதிக ஒழுங்கமைப்புடன் செயல்படுகிறது. ரிஷியின் அணியில் அதிக இளைஞர்கள் உள்ளனர். எனவே அவர்களின் முகாமில் அதிக உற்சாகம் உள்ளது. லிஸ்ஸின் அணியில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் வெள்ளையர்கள், வெள்ளையர் அல்லாதவர்களை பிரதமராக ஆக்க இன்னமும் தயங்குபவர்கள். கட்சியில் இளைஞர்களை விட இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஆனால் ரிஷியின் முகாமில் எல்லா இடங்களிலும் ஒரு நேர்மறையான அணுகுமுறை காணப்படுகிறது. ரிச்சர்ட் கிரஹாம், க்ளோசெஸ்டர் தொகுதியின் கன்மேலாய்வுடிவ் கட்சியின் எம்.பி மற்றும் ரிஷி சுனக்கின் வெளிப்படையான ஆதரவாளர் ஆவார். ரிஷியை பிரதமராக ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று நான் அவரிடம் கேட்டேன். “நானும் ,கூடவே வேறு பலரும் இதற்கு தயாராக உள்ளோம். இவர்களில் கன்மேலாய்வுடிவ் கட்சியின் பெரும்பாலான எம்.பி.க்கள் அடங்குவார்கள். நாடு முழுவதும் உள்ள எங்கள் உறுப்பினர்களில் ஏராளமானோர் இதற்குத்தயாராக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் உண்மையான வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் முடிவு தெரியவரும். நாங்கள் அனைவரும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல சரியான நபர் ரிஷி என்று உறுதியாக நம்புகிறோம். இந்தப்போட்டியின் வெற்றி நிறம் காரணமாக நிர்ணயிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை,”என்று உற்சாகமாகக் கூறினார்.

பாகுபாடு குறித்துப்பேசிய ரிஷியின் பிரசாரக் குழு உறுப்பினர் ஒருவர், ” இது ஒரு பெரிய விஷயமே அல்ல. வேட்பாளர்களின் கொள்கைகள்தான் முடிவை தீர்மானிக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார். “ரிஷியின் பின்னணி கவலைதரும் விஷயமாக இருக்கும் என்று நான் கருதவில்லை. ஒருவரின் செயல்களின் அடிப்படையில் அவரைப்பற்றிய தீர்மானம் செய்யப்படுகிறது. அவர்களின் பின்னணியை வைத்து அல்ல. தொற்றுநோய் காலகட்டத்தில் ரிஷியின் ‘ஃபர்லோ’ போன்ற புதுமையான திட்டம் லட்சக்கணக்கான மக்களை அவர்களின் வேலைகளில் தொடர்ந்து வைத்திருந்தது. லட்சக்கணக்கான சிறு வணிகங்களுக்கு உதவியது மற்றும் பொருளாதாரத்தை மூழ்காமல் காப்பாற்றியது,” என்று ரிஷி அணியின் இளைஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

ரிஷி சுனக் தனது நண்பர்களுடன்

லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவாகவும் சிலர் பேசினார்கள். “லிஸ் உண்மையான பழமைவாதியாக காணப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். அதுதான் இந்த நாட்டில் நமக்குத் தேவை. ரிஷி நம்மில் பெரும்பாலானவர்களிடம் இருந்து விலகியே உள்ளார். அவருடைய பின்னணி என்ன என்பது எனக்கு முக்கியமில்லை. 2010 க்கு பிறகு கடந்த ஐந்து வருடங்களில் நான் உண்மையில் நிறைய மாறிவிட்டேன். தற்போது கறுப்பு நிறத்தால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நான் நினைக்கிறேன்,”என்று ஒருவர் குறிப்பிட்டார்.

மார்சியா ஜாகோ

மார்சியா ஜாகோ என்ற ஓய்வுபெற்ற ஆசிரியையிடம், “ரிஷி தன்னை இந்து என்று அழைக்கிறார். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை உள்ளதா? என்று கேட்டேன். “அது ஒரு சிறிய பிரச்னைதான். ஆனால் அதுமட்டுமே முக்கியமானது அல்ல. என் கணவர் இங்கு பிரிட்டனில் பிறக்கவில்லை. அதனால் என்னைப்பொருத்தவரை இதுதான் எல்லாமே என்று சொல்லமுடியாது. ஆனால் என் வாக்களிப்பின்போது இந்தக்காரணி பற்றியும் நான் சிந்தித்தேன்,” என்று அவர் பதில் அளித்தார். “எனக்கு ரிஷியை பிடிக்கும். அவர் மிகவும் புத்திசாலி என்று நான் நினைக்கிறேன். ஆனால் எனது அடுத்த பிரதமர் லிஸ்,”என்று அவர் வெளிப்படையாகக்கூறினார்.

போரிஸ் ஜான்சன் ஜூலை மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு புதிய பிரதமருக்கான போட்டியின் முதல் சுற்றில் எட்டு வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடைசி சுற்றுக்கு முன் எல்லா கட்சி எம்.பி.க்களும் வாக்களிக்க வேண்டும். அவர்கள் ரிஷி மற்றும் லிஸ்ஸை தேர்வு செய்தார்கள். இப்போது கடைசி சுற்றில் கட்சியின் ஒரு லட்சத்து அறுபதாயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.

மார்சியா ஜாகோ

வெள்ளையர்கள் அல்லாதவர்கள் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கான வழி திறக்கப்பட்டுள்ளதாக மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் நீலம் ரெய்னா கருதுகிறார். “கதவு திறந்திருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். உங்களுக்கு திறன் இருந்தால், நீங்கள் முன்னோக்கி முதலிடத்திற்குச் செல்ல விரும்பினால், கதவு திறந்திருக்கிறது. ஆனால் ஒரு பணக்கார இந்தியருக்கு அந்தக் கதவு திறந்திருக்கிறது,”என்று அவர் குறிப்பிட்டார்.

ரிஷி சுனக் பிரதமரானால், 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் பராக் ஒபாமாவின் தேர்தல் வெற்றியின் மூலம் சரித்திரம் படைக்கப்பட்டதைப் போல, இது ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கும். “அந்த வகையில், இது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு நான் கேள்விப்பட்டு வரும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்க தன்மை(Inclusiveness) உண்மையில் சரியாக வேலை செய்கிறது என்பதை இது நிரூபிக்கும். அவர் வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய விஷயம்,” என்கிறார் மருத்துவர் ரெய்னா..

கட்சி உறுப்பினர்களின் கருத்து பிளவுபட்டதாக தெரிகிறது. ஆனால், இந்தப் போட்டியில் இல்லை என்றாலும் 2024-ம் ஆண்டின் அடுத்த தேர்தலில், பிரிட்டனின் அடுத்த பிரதமர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. தற்போது இந்திய வம்சாவளி தலைவர்களில் ரிஷி சுனக்கின் அந்தஸ்து உச்சத்தில் உள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »