Press "Enter" to skip to content

ஐபோன் 14: ஆப்பிளின் மாதவிடாய், கருத்தரிப்பை கண்காணிக்கும் வாட்ச்சால் என்ன பிரச்னை?

  • ஷியோனா மெக்கல்லம்
  • தொழில்நுட்ப செய்தியாளர்

பட மூலாதாரம், Apple

அவசர கால செயற்கைக்கோள் இணைப்பு மற்றும் தேர் விபத்தைக் கண்டறியும் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஐபோன் 14 கைபேசியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் நான்கு புதிய பதிப்புகளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இது கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதன்முறையாக பார்வையாளர்கள் நேரடியாக கலந்துகொண்ட நிகழ்வாகும்.

அடுத்த தலைமுறை ஐபோன், வாட்ச், ஏர்பாட்ஸ்களில் கவனம் செலுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்வில் வாட்ச் அல்ட்ரா என்ற ஸ்போட்ஸ் வாட்ச் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

நேற்று நடந்த நிகழ்வில் என்னென்ன அறிமுகம் செய்யப்பட்டன? அதிலுள்ள சிறப்பம்சங்கள் என்ன?

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலில் தேர் விபத்தைக் கண்டறியும் வசதி, மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பதற்கான சென்சார், குறைந்த ஆற்றலில் இயங்கும் திறன் உட்பட பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளன.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

அமெரிக்காவில் கருக்கலைப்பு குற்றமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பதில் மக்கள் மிகவும் கவனமாக உள்ளனர். இந்த வாட்ச்சில் பதிவாகும் மாதவிடாய் சுழற்சி தொடர்பான தரவுகள் போலீஸாரால் பயன்படுத்தப்படலாம் என்ற கவலை எழுந்திருக்கும் நிலையில், பதிவாகும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அதைக் கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக்ஸ் அடையாளங்கள் மூலமே அணுக முடியும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் பொறுப்பை தாங்கள் எடுத்துக்கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சி.ஓ.ஓ. ஜெஃப் வில்லியம் தெரிவித்தார்.

கருத்தரிப்புக்கு முந்தையை நிலை பற்றி அறிவிக்கும் நோட்டிஃபிகேசன் வசதி கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள்

பட மூலாதாரம், Apple

இந்த வசதி வாட்ச்சில் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டால், இரவு முழுவதும் ஒவ்வொரு 5 விநாடிக்கும் ஒரு முறை உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படும். கருத்தரிப்பு நிலையை வெளிப்படுத்தும் வகையில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, அது நோட்டிஃபிகேசன் மூலம் பயனாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

கார் விபத்தைக் கண்டறியும் வசதியும் இந்த வாட்ச்சில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சை அணிந்திருப்பவர் பெரும் தேர் விபத்தில் சிக்கினால் அதிலுள்ள சென்சார் உடனடியாக அவசர சேவை எண்ணை அழைத்து விபத்து நடந்த இடம் குறித்த விவரங்களை அளிக்கும்.

குறைந்த ஆற்றலுடன் இயக்கக்கூடிய வகையிலும் இந்த வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் போன்களில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 36 மணி நேரம் பயன்படுத்த வழிவகை செய்யும் அதே தொழில்நுட்பம் இந்த வாட்ச்சிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வாட்ச்சின் விலையானது அமெரிக்க மதிப்பில் 399 டாலர்களாகவும், யூகே மதிப்பில் 419 யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

நீர், தூசு, விரிசல்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாட்ச், கடினத்தன்மை கொண்ட வாட்ச்களை வடிவமைத்துவரும் கார்மின், போலார் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

பட மூலாதாரம், Apple

முழுமையான விளையாட்டு பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் அறிமுகத்தில், அல்ட்ரா மாரத்தான் வீரர் ஸ்காட் ஜூரெக் கலந்துகொண்டார். ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணிநேரம் இந்த வாட்சை பயன்படுத்த முடியும். நீச்சல், சைக்கிளிங், ரன்னிங்கை உள்ளடக்கிய அல்ட்ரா டிரையத்லான் போட்டிகளை நிறைவுசெய்ய இந்த வாட்சை பயன்படுத்த முடியும் என உறுதியளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், 60 மணிநேரம் தாங்கக்கூடிய கூடுதல் மின்கலவடுக்கு (பேட்டரி) வசதியையும் அளித்துள்ளது.

இந்த வாட்ச்சின் விலையானது அமெரிக்க மதிப்பில் 799 டாலர்களாகவும், யூகே மதிப்பில் 849 யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 14

ஐபோன் 14 மாடலானது ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ் என இரு வடிவங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேட்டிலைட் மூலமாக அவசர அழைப்பை மேற்கொள்ளும் வசதி இந்த வகை மாடலில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வசதியைப் பயனபடுத்தி அவசர உதவிக்கான செய்தி அனுப்ப 15 விநாடிகள் முதல் ஒரு நிமிடம்வரைதான் நேரம் எடுக்கும்.

இந்தக் கண்டுபிடிப்பானது அணுகுவதற்கு கடினமான இடங்களில் உள்ள பயனாளர்களுக்கு நல்ல செய்தியாக இருக்குமென தொழில்நுட்ப ஆய்வாளர் பாலோ பெஸ்கடோர் தெரிவிக்கிறார்.

ஐபோன் 14

பட மூலாதாரம், Apple

வேகமாக நகரும் பொருட்களை படம்பிடித்தல் மற்றும் 49 சதவிகிதம் கூடுதல் சிறப்புடன் குறைந்த ஒளியில் படமெடுக்கும் திறன்களுடன் கூடிய 12 மெகாபிக்சல் ஒளிக்கருவி (கேமரா) வசதி இந்த மாடலில் உள்ளது. தெளிவான செல்ஃபி எடுப்பதற்காக முதன்முறையாக ஆட்டோ-போகஸ் வசதி முன்புறமுள்ள ஒளிக்கருவி (கேமரா)விலும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் மட்டும் மூன்று ட்ரில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் ஐபோனில் எடுக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

ஐபோன் 14 விலையானது அமெரிக்க மதிப்பில் 799 டாலர்களாகவும், யூகே மதிப்பில் 849 யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 14 ப்ரோ

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் தொடுதிரையின் மேற்பகுதி பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ப்ளாக் நாட்ச் அம்சம் குறித்து ஐபோன் பயனாளர்கள் தொடர்ந்து குறைகூறி வந்த நிலையில், தற்போது டைனமிக் ஐலேண்ட் என்ற அம்சத்துடன் கூடிய தொடுதிரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன்மைக்கு ஏற்ப நோட்டிஃபிகேசனின் வடிவங்கள் மாறிக்கொள்ளும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

டிம் குக்

பயன்பாட்டில் இல்லாதபோது மொபைல் திரையின் ஆற்றல் மற்றும் ரெஃப்பரஷ் ரேட் எனப்படும் புதுப்பிப்பு விகிதம் தானாக குறைவதும் இந்த மாடலில் உள்ள கூடுதல் சிறப்பம்சமாகும்.

ஊதா, கருப்பு, சில்வர், கோல்ட் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்ப்பட்டுள்ள இந்த மாடலின் விலை அமெரிக்க மதிப்பில் 999 டாலர்களாகவும், யூகே மதிப்பில்1099 யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்பாட்ஸ்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் ஏர்பாட்ஸின் ஒரு பகுதி காணாமல் போனால் அதைக் கண்டுபிடிக்கும் வசதி உள்ளது. உரையில் இருந்து ஏர்பாட்ஸ் தவறும்போது அது ஒலியெழுப்பும். கூடுதலாக ஏர்பாட்ஸ் உரையிலும் ஒரு ஒலிப்பெருக்கி இருக்கும். find my app மூலமாக காணாமல் போன ஏர்பாட்ஸை தேடும்போது அது ஒலியெழுப்பும்.

ஏர்பாட்ஸ்

பட மூலாதாரம், Apple

இந்த ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் மதிப்பானது அமெரிக்க மதிப்பில் 249 டாலர்களாகவும், யூகே மதிப்பில் 249யூரோவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »