Press "Enter" to skip to content

ஆபாச சாட்: உலக அளவில் நடக்கும் மோசடியின் பின்னணியில் இருப்பது யார்?

  • டுகா ஒர்ஜின்மோ
  • பிபிசி நியூஸ், அபுஜா

பட மூலாதாரம், IEROMIN

அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபருக்கு 50 வயதிருக்கும். அவர் இணையத்தில் ஜிஞ்சர்ஹனி என்ற பெயர் கொண்ட மிகவும் வசீகரமான பெண்ணுடன் ‘சாட்டிங்’ செய்கிறார். அந்த நபர் ஜிஞ்சர்ஹனி அவர் இருக்கும் பகுதிக்கு அருகில் இருப்பது போல் நினைத்திருக்கிறார். ஆனால், உண்மையில், அவருடன் சாட்டிங் செய்வது ஒரு பெண் அல்ல. நைஜீரியாவில் உள்ள ஓர் ஆண்.

உலகம் முழுவதும் உள்ள ஆண்கள், இது போன்ற வசீகரமான பெண்களிடம் கணினிமய மூலம் சாட் செய்ய, பல நூறு டாலரை இணையதளங்களில் செலவு செய்கின்றனர். ஆனால், அப்படி அவர்களிடம் சாட்டிங் செய்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பிபிசி கண்டறிந்துள்ளது.

இத்தகைய மோசடி குறித்து பல மாதங்களாக திரட்டிய ஆதாரங்கள், இத்தகைய போலி கணக்குகளுக்கு பின்னால் நடக்கும் உலகளவிலான மோசடியை வெளிக்கொண்டு வந்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து அமெரிக்கா வரை, சுரினாம் வழியாக நைஜீரியா வரை வந்தோருக்கான கணினி மயமான நடத்தை மீதான கடுமையான சட்டங்களை மீறுவதாக இந்த சாட் மோசடிகள் இருக்கும்.

நைஜீரிய பல்கலைக்கழக மாணவரான அபியோடுன் (அவரது உண்மையான பெயர் அல்ல) என்பவர், மெட்டியோர் இன்டராக்ட்டிவ் பிவி ( Meteor Interactive BV) என்ற டச்சு நிறுவனத்துக்கு சொந்தமான டேட்டிங் வலைத்தளங்களில் போலி ப்ரொஃபைலை பயன்படுத்தும் பலரில் ஒருவர்.

அபியோடுன் இந்த இணையதளங்களில் அவர் நிர்வகிக்கும் டஜன் கணக்கான போலி கணக்குகளை காட்டுகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் ஒரு கவர்ச்சியான இளமையான வெள்ளை நிற பெண்ணாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார்.

ஒரு தளத்தில், அவர் ஜிஞ்ஜர்ஹனி என்ற பெயரில், 21 வயது மாடல் என்று குறிப்பிட்டுள்ளார். இளஞ்சிவப்பு நிற போர்வையை இடுப்பில் சுற்றியுள்ளார்.

அவர் அந்த தளத்தில் இவ்வாறு தன்னை விவரித்து கொள்கிறார் – ‘என் கூந்தலின் நிறமும், ஜிஞ்சர் (இஞ்சி) நிறமும் ஒன்றாக இருப்பதால், ஆண்கள் என்னை ஜிஞ்சர் என்று அழைக்கலாம்.

ஒருவேளை வாடிக்கையாளர்கள் மேலும் கவர்ச்சிகரமான படங்கள் கேட்டால் அனுப்புவதற்கு, ஜிஞ்சர்ஹனியின் மிகவும் கவர்ச்சிகரமான படங்களை அபியோடுனின் கணினியில் ஏதோ ஒரு ஃபோல்டரில் வைத்திருக்கிறார்.

அந்த தளத்தில் உள்ள ப்ரொஃபைல் படம் உள்ளிட்ட படங்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள். ஜின்ஞர்ஹனியின் ப்ரொஃபைலைப் பயன்படுத்தும் அதிகாரத்தை அபியோடுன் மட்டும் வைத்திருக்கவில்லை. பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷிப்ட் அடிப்படையில் அந்த ப்ரொஃபைலை பயன்படுத்தி வேலை செய்கின்றனர்.

இந்த வலைதளங்களின் பின்னணியில் நடக்கும் பணிகள்

அபியோடுனும் அவரது சக ஊழியர்களும் ஜிஞ்சர்ஹனியின் இருப்பிடத்தை வாடிக்கையாளரின் 50 கிமீ (30 மைல்) சுற்றளவுக்குள், மேம்பட்ட வரைபடக் கருவி கொண்டு போலியாக உருவாக்கினர். அதனால்தான் வாடிக்கையாளருக்கு பொருத்தமாக இருப்பதாக காட்டியது. வாடிக்கையாளர் இந்த சாட்டுக்கு பணம் செலுத்தி உள்ளார். அவர் சொல்லவில்லை என்றாலும், ஜிஞ்சர்ஹனியைச் சந்திக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

இந்த இணையத்தளங்களில் இலவசமாக சேரலாம் என்றாலும், ​​வாடிக்கையாளர்களின் குறுஞ்செய்திகளை சம்பந்தப்பட்ட ‘பெண்களுக்கு’ அனுப்ப பணம் செலுத்த வேண்டும். அதற்கான கட்டணம் 6 டாலர் முதல் 300 டாலர் வரை.

இளைஞர்கள் தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பெண்களை நேரடியாக சந்திக்க விரும்பினாலும், வயதான வாடிக்கையாளர்கள் செக்ஸ் சாட்கள், கவர்ச்சிகரமான படங்கள் மற்றும் காணொளிக்கள் மூலம்பெரும்பாலும் திருப்தி அடைகிறார்கள் என்று அபியோடுன் கூறுகிறார்.

இந்த சந்தாதாரர்களை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இணையதளங்களில் வைத்திருப்பதே அபியோடுனுக்கும், அவரைப் போல உள்ள மற்றவர்களுக்குமான நோக்கமாகும்.

‘சாட்’டை தொடர ஒவ்வொரு குறுஞ்செய்தியும் குறைந்தது 150 எழுத்துகளும், ‘திறந்த முனையாக’வும் (open ended) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“இது ஒரு வாடிக்கையாளர்-சேவை வேலை போன்றது. வித்தியாசம் என்னவென்றால், வாடிக்கையாளர் மட்டுமே தலைமை நிர்வாக அதிகாரியுடன் சாட் செய்வது போல நினைத்துக் கொள்வார்,” என்று அபியோடுன் பிபிசியிடம் கூறினார்.

சுரினாமில் உள்ள Logical Moderation Solutions (LMS) என்ற ‘அவுட்சோர்சிங்’ நிறுவனம் மூலம் ஆட்சேர்ப்பு நடத்துகிறது, தன் நைஜீரியப் பணியாளர்களுக்கு பயிற்சி தருகிறது அபியோடுனின் மெட்டியோர் இன்டராக்ட்டிவ் பிவி நிறுவனம். இந்த அவுட்சோர்சிங் நிறுவனம் ஒரானோ ரோஸ் என்ற சுரினாமைச் சேர்ந்தவரால் நிறுவப்பட்டது.

இந்த எல். எம். எஸ் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப், டெலிகிராம் மற்றும் ஸ்கைப் கணக்குகளில் பிபிசி ஆதாரங்களைக் கண்டறிந்தது. அதில் இந்த நிறுவனம் நூற்றுக்கணக்கான நபர்களை வேலைக்கு அமர்த்தி, பயிற்சி அளித்தது என்று தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் நைஜீரியாவின் லாகோஸ் மற்றும் அபுஜா பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் டெலிகிராமில் வேலைக்கான விளம்பரத்தை அளிக்கின்றனர். நைஜீரியாவின் வேலையற்ற, படித்த இளைஞர்களை இலக்காகக் கொண்டு ‘கணினிமய வேலைகள்’, ‘கணினி மயமான மார்க்கெட்டிங் வேலைகள்’, ‘சாட் மதிப்பீட்டாளர் வேலைகள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வயது வந்தோருக்கான விஷயங்களை கையாள வேண்டும் என்று ஊழியர்களுக்கு எந்த குறிப்பும் இல்லை.

எல்.எம்.எல் நிறுவனத்தில் உள்ள ஆட்சேர்ப்பு பணியில் உள்ள முக்கியமான ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்த அடெடமோலா யூசுப் ( Adedamola Yusuf). தனது சமூக ஊடக கணக்குகளில் வேலை விளம்பரங்களைக் கையாளுகிறார். அந்தக் கணக்குகளில் அவர் தாம் பல ஆடம்பரமான இடங்களில் தமது மகிழ்ச்சியான விடுமுறையை கழிக்கும் வாழ்க்கை முறையை காட்டுகிறார்.

“நீங்கள் சலிப்படைந்த வெள்ளைக்காரர்களுடன் சாட் செய்கிறீர்கள். ஜெர்மனியிலும் நைஜீரியாவிலும் இந்த வேலை முற்றிலும் சட்டப்பூர்வமாகவும் உரிமம் பெற்றதாகவும் உள்ளது,” என்று அவர் வாட்ஸ்அப் சாட்டில் பணிக்கு சேர்ந்த முதல் நாளில் ஊழியர்களிடம் சொல்கிறார்.

யூசுப் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆட்சேர்ப்பு பணியை செய்து வருகிறார். கடந்த நவம்பரில் நடந்த ஆட்சேர்ப்பு முகாமில், நூற்றுக்கணக்கானவர்கள் பதிவுசெய்தனர்.

அவரிடம் கருத்து கேட்டது பிபிசி. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

“மேற்கு நாடுகளைச் சேர்ந்த இவர்கள் முக்கியமாக சாட் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் முடிந்தவரை கடுமையான ஆங்கில மொழி சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்,” என்று ஒரு பயிற்சியாளர் புதிய பணியாளர்களிடம் கூறினார்.

நைஜீரியாவில் எல்எம்எஸ் இயக்குநரான நிக்கோலஸ் அகண்டே, ஜூலை முதல் வாரத்தில் 100க்கும் மேற்பட்டோரை இதற்காக பதிவு செய்து, இந்த வேலை சட்டப்பூர்வமானது என்று அவர்களிடம் கூறினார்.

அவரிடம் பிபிசி கருத்து கேட்டது. அவர் பதிலளிக்கவில்லை.

நிக்கோலஸ் அகண்டே வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப்பில் புதிய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

பட மூலாதாரம், NICHOLAS AKANDE/INSTAGRAM

பணியமர்த்தப்பட்டவர்களுக்கு அவர்களின் வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களில் கலாசாரம், எழுத்து நடை மற்றும் பிரபலமான உரையாடல்கள் பற்றிய பாடங்களும் வழங்கப்படுகின்றன.

சில நாட்கள் முதல் ஒரு வாரம் வரை நீடிக்கும் இந்த பயிற்சியின் முடிவில், அவர்களுக்கு இணையதளங்களில் ‘லாக்-இன்’ (log in) விவரங்கள் வழங்கப்படுகின்றன. அங்கு சந்தாதாரர்களின் வீட்டு முகவரி, தொலைபேசி எண் மற்றும் வயது போன்ற தனிப்பட்ட தகவல்களைக் காணலாம்.

இணையத்தில் ஆண்களின் கருத்துக்களை பிபிசி பார்த்தது அவர்கள் தங்களுடன் சாட் செய்யும் ‘பெண்களை’ சந்திக்கும் நம்பிக்கையில் இந்த இணையதளங்களில் 300 முதல் 700 டாலர் வரை செலவழித்ததாகக் கூறியுள்ளனர்.

“நான் 20 பெண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று கூறும் போதெல்லாம் விலகி சென்று விடுவார்கள்,” என்று ஒருவர் கூறியுள்ளார். அவர் மெட்டியோர் இன்டராக்ட்டிவ்க்கு சொந்தமான தளத்தில் 64.99 டாலரை செலவிட்டதாகக் கூறுகிறார்.

பெண்களை நேரில் சந்திக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையின் பேரில் 300 டாலருக்கு மேல் செலவழித்ததாக ஒருவர் கூறினார்:

“அவர்கள் உங்கள் நகரத்திலோ அல்லது அதற்கு அருகிலோ வசிப்பதாகக் கூறி, ‘இன்றிரவு’ உங்களைச் சந்திக்க விரும்புவதாகக் கூறி உங்களை ஈர்ப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதற்கு செலவிடுவீர்கள். நீங்கள் சந்திக்க ஒரு இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்ய விரும்பினால், அன்று ஏதோ ஒரு காரணம் சொல்ல தொடங்குவார்கள்,” என்று அவர் கூறினார்.

அந்தக் கணக்குகளின் சில சுயவிவரங்கள் கற்பனையானவை என்பதையும், “நேரடி சந்திப்புக்கான சாத்தியமில்லை” என்பதையும் மெட்டியோர் இன்டராக்ட்டிவ் நிறுவனம், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தெளிவுபடுத்துகிறது என கூறுகிறது.

இருப்பினும், அதன் நைஜீரிய பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தை போலியாக உருவாக்க வரைபடக் கருவியை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதை அது விளக்கவில்லை.

இந்தக் கருவி, இந்த மோசடி மீது அதிக நம்பகத்தன்மையை அளிக்கிறது. மேலும் ஒருபோதும் நடக்காத சந்திப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு தவறான நம்பிக்கையை அளிக்கிறது.

ஆபாசமான அல்லது வயது வந்தோருக்கான விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதைத் தடைசெய்யும் சட்டத்தின் கீழ் நைஜீரியாவில் இந்த நபர்களின் நடவடிக்கைகள் இணைய மோசடிக்கு இணையாக இருப்பதாக நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

2015ஆம் ஆண்டின் சைபர் கிரைம் சட்டம் பின்வரும் விஷயங்களுக்கு தடை விதிக்கிறது:

  • உண்மைகளை தவறாக சித்தரிக்கும் மின்னணு செய்திகளை அனுப்புதல்
  • மிகவும் புண்படுத்தும், ஆபாசமான, அநாகரீகமான அல்லது அச்சுறுத்தும் செய்திகளை அனுப்புதல்
  • நிதி அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்து சேவைகளைப் பெறுதல்.

நைஜீரியாவில் ஏமாற்றுதல் மற்றும் வயது வந்தோருக்கான உள்ளடக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தால் எல். எம் எஸ் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யும் அபாயம் இருப்பதாக ஒரு அரசு அதிகாரி கூறினார்.

பிபிசியிடம், தான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்றும், நைஜீரியாவில் உள்ள சைபர் கிரைம் சட்டம் பற்றி அவருக்கு தெரியாது என்றும் ஒரானோ ரோஸ் கூறினார். அவர் சுரினாமில் இருப்பதால், அவர் மீது வழக்குத் தொடர்வது கடினம்.

பல லட்சக்கணக்கான நைஜீரியர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அங்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல மாத கால வேலைநிறுத்ததில் உள்ளனர். இதனால், இளைஞர்கள் தீவிரமாக வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

355 டாலர் வரையிலான மாதச் சம்பளத்தை பணியில் சேர்பவர்களுக்கு வழங்குவதாக எல் எம் எஸ் கூறுகிறது. இது புதிதாக ஆசிரியர் பணிக்கு சேர்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட இரண்டு மடங்கு அதிகம். வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த ஊதியத்தைப் பெறலாம்.

இந்த வேலை வாய்ப்புக்கான விளம்பரம்

அபியோடுன் தான் செய்யும் பணி குறித்து கூறுகையில், ‘உலகளவில் நடப்பதில் இது ஒரு சிறிய பகுதியே என்றும், இணைய மோசடியுடன் ஒப்பிடும் போது குற்றம் குறைவாகவே உள்ளது எனவும்” கருதுகிறார்.

“அன்பானவர்களுடன், நண்பர்களுடன் சாட் செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இது லட்ச கணக்கானவர்கள் ஒவ்வொரு நாளும் செய்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

டேஷ்போர்டில் ஒரு குறுஞ்செய்தி வர ஜிஞ்சர்ஹனி ப்ரொபைலுக்கு அவர் மாறுகிறார்.

அமெரிக்காவில் இருக்கும் 50 வயது முதியவர் சந்திக்க வேண்டும் என்று கேட்கிறார்.

” மன்னிக்கவும், நான் இப்போது என் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல வேண்டும்,” ஜிஞ்சர்ஹனி பதிலளிக்கிறார்.

அத்தகைய கோரிக்கைகளைத் திசை திருப்ப அவர் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு வகையான காரணம் இது.

அபியோடுன் ஒரு டேபை மூடிவிட்டு மற்றொன்றைத் திறக்கிறார். அங்கே “உங்கள் கிறுக்குத்தனமான கற்பனைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு முத்து” என்ற குறிப்போடு இருக்கும் அவரது மற்றொரு புரொஃபைல் இருக்கிறது. அந்தக் கணக்குக்கு ஒரு செய்தி அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருக்கிறார் லண்டன் நகரை சேர்ந்த சாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »