Press "Enter" to skip to content

ஷின்சோ அபே இறுதிச் சடங்கு: ஜப்பானில் நரேந்திர மோதி உள்ளிட்ட உலகத் தலைவர்கள்

பட மூலாதாரம், Reuters

ஜப்பானில் கடந்த ஜூலை 8ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு இன்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு நிகழ்வு நடைபெறுகிறது.

கடந்த ஜூலை 8ஆம் தேதி தேர்தல் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் இருமுறை சுடப்பட்டு உயிரிழந்தார் ஷின்சோ அபே என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானை பொறுத்தவரை அரசியல் தலைவர்கள் குறைந்த பாதுகாப்புடனேயே வெளியில் செல்வர்.

ஷின்சோ அபே இறுதிச் சடங்கு குறித்து 10 முக்கியத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • ஜப்பானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் மோதி உட்பட பல்வேறு நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
  • சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசி, தென் கொரிய பிரதமர் ஹன் டக் சூ, ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இருப்பினும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்கிறார்.
  • இந்த நிகழ்ச்சி ஜப்பானின் புகழ்பெற்ற விளையாட்டு அரங்கமான நிப்பான் புடோனில் நடைபெறுகிறது. இதில் சுமார் 4,300 பேர் விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் புடோனை சுற்றியுள்ள தெருக்கள் மூடப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

4. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அபேவின் அஸ்தி பாரம்பரிய உடையால் போர்த்தப்பட்ட பெட்டி ஒன்றில் வைத்து எடுத்து வந்தார் அவரின் மனைவி அகி அபே. ஒரு பக்கம் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் மறைந்த அபேவுக்கு அமைதியாக தங்களின் மரியாதையை மக்கள் செலுத்தி கொண்டிருக்கும் அதே வேளையில், ஒரு பகுதியினர் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அபே

பட மூலாதாரம், Getty Images

5. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு ஆகும் செலவு 11.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 92 கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதை நாட்டின் நலனிற்காக செலவு செய்ய வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோருகின்றனர்.

6. இந்த வார தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலுகம் முன்பு ஒருவர் தீயிட்டு கொளுத்தி கொண்டார். இவ்வாறு பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஷின்சோ அபேவின் இறுதி மரியாதை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7. ஜப்பானில் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு என்பது அரச குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே அபேவுக்கு அரச மரியாதை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக கருதப்படுகிறது.

8. ஜப்பானில் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இதுவரை ஒரே ஒரு அரசியல் தலைவருக்கு மட்டுமே அரச மரியாதை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஜப்பானின் நீண்டகால பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. அதன் போல இரண்டாம் உலகப் போருக்கு பிறகு வந்த அரசியல் தலைவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

அபேவின் இறுதிச் சடங்கு நிகழ்வு

பட மூலாதாரம், Reuters

9. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார். அப்போது அபேவின் மறைவிக்கு தனது இரங்கலை தெரிவித்தார் மோதி. மேலும் இந்தியா – ஜப்பான் உறவை வலுப்படுத்தியதில் அபேவின் பணிகள் குறித்தும் நினைவு கூர்ந்தார்.

10. ஜூலை மாதம் ஷின்சோ அபேவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைப்பாடுகள் இருந்ததை ஜப்பான் காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. இன்றைய நிகழ்வுக்கு சுமார் 20,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »