Press "Enter" to skip to content

இரான் நாட்டின் ‘கொடூரமான’ எவின் சிறையில் பெரும் தீ – வேண்டுமென்றே ஏற்படுத்திய விபத்தா?

பட மூலாதாரம், TWITTER

இரானில் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் மோசமான சிறைச்சாலையான எவின் சிறையில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டு நான்கு கைதிகள் மரணமடைந்ததாகவும், 61 கைதிகள் காயமடைந்திருப்பதாகவும் இரானின் அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

ஆனால், பிபிசிக்கு நெருக்கமான சிறைத்துறை வட்டாரத்தினர், இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கின்றனர்.

இணையத்தில் பகிரப்பட்ட காணொளிகளில் தீப்பிழம்புகள் மற்றும் புகையைப் பார்க்கமுடிகிறது. மேலும் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிச் சத்தத்தையும் கேட்க முடிகிறது.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசு ஊடகங்களில் அதிகாரிகள் கூறினாலும், தீ தொடர்ந்து எரிவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

இரானில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

கடந்த மாதம் மாசா அமினி என்ற குர்திஷ் இனப் பெண் காவல் துறை காவலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தப் போராட்டம் வெடித்தது. மாசா அமினி மாரடைப்பால் இறந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால், ஹிஜாப் ஒழுங்குமுறையை அமல்படுத்தும் காவல்துறையினரால் அவர் தாக்கப்பட்டதாக மாசா அமினியின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

சிறைச்சாலையில் நிலவும் சூழலுக்கும் சமீபத்திய போராட்டங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என பிபிசி பாரசீக சேவையைச் சேர்ந்த ராணா ரஹிம்பூர் கூறுகிறார்.

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இவை இரண்டிற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், இந்தத் தீ விபத்திற்கு குற்றவாளிகளே காரணம் என்றும் இரண்டு நிகழ்வுகளுக்கும் தொடர்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக அரசு ஊடகம் கூறுகிறது.

சிறைச்சாலைக்குள் இருந்து பேசிய தெஹ்ரானின் ஆளுநர் அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சிறைச்சாலையில் சிறு குற்றவாளிகள் இருக்கும் பிரிவில் கலவரம் நடந்ததாகவும், தற்போது நிலைமை முற்றிலும் அமைதியாக இருப்பதாகவும் கூறினார்.

ஆனால், சிறையில் இருக்கும் உயர் அரசியல் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துவிட்டு அதிகாரிகள் வேண்டுமென்றே சிறைக்குத் தீ வைத்ததாக சில ஊடகவியலாளர்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டியுள்ளனர். இரானின் மறைந்த முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சனியின் மகன் மெஹ்தி ஹஷேமி ரஃப்சஞ்சனிக்கு முன்கூட்டியே தற்காலிக விடுதலை வழங்கப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

இரானின் புரட்சிகர காவலர்களுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் சிறைக்கலவரத்திற்குப் பிறகு கண்ணிவெடிகள் வெடித்ததால் வெடிப்புகள் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.

முதலில், தீ விபத்திற்கு மத்தியில் தப்பிக்க முயற்சித்த சில கைதிகள் சிறையின் வடக்குப்பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் சிக்கிக்கொண்டதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்ட நிலையில், பின்னர் தங்களுக்கு கிடைக்கும் தகவலின்படி யாரும் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை என்று தெரிவித்தது.

இணையத்தில் பதியப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், TWITTER/VAHID ONLINE

இந்தத் தீ விபத்து தொடர்பான காணொளிகள் நேற்று மாலை சமூக வலைத்தளங்களில் முதன்முதலாக பகிரப்பட்டன.

சில காணொளிகளில் துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்கமுடிகிறது. வேறு சில காணொளிகளில் சிறைக்கு வெளியே ‘சர்வாதிகாரிக்கு மரணம்’ என்ற முழக்கத்தையும் கேட்க முடிகிறது. இது அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட முக்கிய முழக்கமாகும்.

ஒரு காணொளியில், வெளியே இருந்து சிறைக்குள் ஒரு பொருள் எறியப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து வெடிச் சத்தம் கேட்பதையும் காண முடிகிறது.

சிறைக்கு வெளியே பெரும் கூட்டம் திரண்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்தாலும், சிறையின் சூழ்நிலை குழப்பமாகவே இருப்பதாக பிபிசி பாரசீக சேவையைச் சேர்ந்த கஸ்ரா நஜி கூறுகிறார். சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகளில் தீ தொடர்ந்து எரிவதையும், துப்பாக்கிச்சூடு சத்தத்தையும் கேட்க முடிகிறது.

சில புகைப்படங்களில், அரசியல் கைதிகள் மற்றும் சமீபத்திய போராட்டங்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் பகுதியின் கூரையில் கைதிகள் இருப்பதைப் பார்க்க முடிவதாக கஸ்ரா கூறுகிறார்.

தங்களால் உறவினர்களை அலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என சில சிறைக்கைதிகளின் குடும்பத்தினர் பிபிசியிடம் தெரிவித்தனர். சிறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

சிறைச்சாலையில் அமைதி திரும்பிவிட்டதாகக் கூறி சனிக்கிழமை இரவு இரானின் அரசு ஊடகம் செய்திவெளியிட்டது. எவின் சிறைச்சாலையில் பல ஆண்டுகள் இருந்தவரும், நாடு கடத்தப்பட்ட இரானின் ஊடகவியலாளருமான மசூத் கசெமி, கலவரம் நடக்காத பகுதிகள் மட்டுமே அதில் காட்டப்பட்டதாக கூறுகிறார்.

பிரித்தானிய மற்றும் இரானிய குடியுரிமை கொண்டிருந்த நசானின் ஜகாரி-ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகிய இருவரும் உளவு பார்த்ததாகக் கூறி பல ஆண்டுகளாக எவின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, அந்தக் குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர்.

மேற்குலக மனித உரிமை குழுக்களால் இந்த சிறைச்சாலை தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. சிறைச்சாலையில் உள்ள அதிகாரிகள் கைதிகளுக்கு எதிராக சித்ரவதை , காலவரையற்ற சிறை தண்டனை, நீண்ட விசாரணைகள் மற்றும் மருத்துவ உதவி மறுப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

எடலட்-இ அலி (அலியின் நீதி) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் மின்ஊடுருவாளர் குழு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எவின் சிறைச்சாலையில் காவலர்கள் கைதிகளை அடிப்பது அல்லது தவறாக நடத்துவது போன்ற கண்காணிப்பு காட்சிகளின் காணொளிகளை வெளியிட்டது.

இது தொடர்பாக சில அயல்நாட்டு அரசுகளும் கவலை தெரிவித்தன.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர், இந்த நிகழ்வுகளை விரைந்து கவனித்துவருவதாகக் கூறினார். மேலும், இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் இதை மிகவும் கவலைக்குரிய வளர்ச்சி என்று குறிப்பிட்டார்.

ஐந்து வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த மாசா அமினி மரணத்தைத் தொடர்ந்து, இரான் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டம் முதன்முறையாக இஸ்லாமிய குடியரசுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »