Press "Enter" to skip to content

உகாண்டாவில் அதிகரிக்கும் எபோலா: 19 பேர் உயிரிழப்பு – மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு

  • எல்சா மைஷ்மான்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

உகாண்டாவில் எபோலா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் அதிகரித்துவரும் நிலையில், இரண்டு மாவட்டங்களில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதால் முபெண்டே மற்றும் அதன் அண்டை மாவட்டமான கசாண்டாவில் உள்ள மதுபானக்கூடங்கள், இரவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்படும்.

முன்னதாக, எபோலா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலுக்கு ஊரடங்கு நடவடிக்கைத் தேவையில்லை என உகாண்டாவின் அதிபர் யோவேரி முசெவேனி தெரிவித்திருந்தார்.

சமீபத்திய பரவலில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 58 பேரில், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம்.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் தலைநகர் கம்பாலாவிலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள முபெண்டேவில் முதல் தொற்று பதிவானது. தொற்றுப்பரவலின் மையமாகவும் முபெண்டே உள்ளது.

எபோலா காற்றில் பரவும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அல்ல என்பதால் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு போன்ற அதே நடவடிக்கைகள் தேவையில்லை என அதிபர் யோவேரி முசெவேனி தெரிவித்திருந்தார்.

ஆனால், முபெண்டே மற்றும் கசாண்டா ஆகிய மாவட்டங்களில் நேற்று அவர் 21 நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்தார்.

அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டாலும், சரக்கு பார வண்டிகள் மாவட்டத்திற்குள் நுழையவும், வெளியேறவும் எந்தக் கட்டுப்பாடும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தொலைக்காட்சி உரையில் இது எபோலாவைக் கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கை எனத் தெரிவித்த அதிபர் யோவேரி முசெவேனி, அனைவரும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டுமென்றும், அதன் மூலம் இந்தத் தொற்றை விரைந்து முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்தார்.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மறுத்தால் அவர்களைக் கைது செய்யவும் காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Ebola outbreak in Uganga

அதேபோல, எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய தொற்றுப்பரவலின்போது, பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க அவர்கள் காரணமாக இருந்தனர்.

இந்தப் பரவலில் முதலில் உயிரிழந்தவர் முபெண்டேவைச் சேர்ந்த 24 வயது இளைஞர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் உயிரிழந்தனர்.

பின்னர், இந்தத் தொற்று தலைநகர் கம்பாலாவிற்கும் பரவியது. அங்கு ஒருவர் பலியானார். பலியான அந்த நபர் முபெண்டேவில் இருந்து அங்கு சென்றவர் என்பதால் கம்பாலாவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது பரவிவரும் எபோலா வைரஸின் சூடான் திரிபுக்கு எதிராக ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகள் ஏதும் இல்லை. 2013 முதல் 2016வரையான காலகட்டத்தில் மேற்கு ஆப்ரிக்கா முழுவதும் 11,000 பேரைக் கொன்ற சயர் திரிபிற்கு மட்டுமே தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

ரத்தம், எச்சில் போன்ற உடல் திரவங்கள் அல்லது அசுத்தமான பொருட்களுடன் நேரடி தொடர்புகொள்வது மூலம் ஒருவருக்கு எபோலா பரவுகிறது.

வாந்தி, வயிற்றுப்போக்கு, உள் அல்லது வெளிப்புற இரத்தப்போக்கு ஆகியவை அதன் அறிகுறிகளாகும்.

இது இரண்டு நாட்கள் முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மலேரியா மற்றும் டைஃபாய்டு போன்ற நோய்களையும் ஏற்படுத்தலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »