Press "Enter" to skip to content

சமரசம் செய்யக்கூடியவராக கருதப்பட்ட ஷி ஜின்பிங் வீழ்த்த முடியாத தலைவராக உருவெடுத்தது எப்படி?

  • கிரேஸ் சோய் மற்றும் சில்வியா சாங்
  • பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Getty Images

சமீபத்திய தசாப்தங்களின் வலுவான சீனத் தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுப்பார் என சிலர் கணித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

சீனாவின் புரட்சிகர தலைவர் ஒருவரின் மகன் என்பதைத் தவிர அவர் கடந்த தசாப்தத்தில் பெரிய அளவில் அறியப்படவில்லை.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஓய்விற்குப் பிறகும் தலைவர்கள் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால், கட்சிக்குள் அதிகாரம் பெறுவது மிகக் கடினம். ஆனால், ஷி ஜின்பிங்கிற்கு அவரது குடும்பப் பின்புலம் உதவியது.

“இந்த எழுச்சிக்கு முன்னதாக அனைவருடனும் சமரசம் செய்துகொள்ளக் கூடிய தலைவராகவே ஷி ஜின்பிங் கருதப்பட்டார்” என்கிறார் பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீன மேல்மட்ட அரசியலில் நிபுணத்துவம் பெற்ற ஜோசப் ஃபியூஸ்மித்.

ஆனால், அடுத்த பத்து ஆண்டுகளில் சந்தேகத்திற்கு இடமற்ற மற்றும் நிகரற்ற அதிகாரம் கொண்ட தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுத்தார். இது எப்படி நடந்தது?

துப்பாக்கிக் குழல்

‘அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலுக்கு வெளியே வளர்கிறது’ என்பது கம்யூனிஸ்ட் சீனாவின் நிறுவனத் தந்தையாக அறியப்படும் மா சேதுங்கின் பிரபலமான வாசகம்.

1949இல் சீன மக்கள் குடியரசை தோற்றுவித்த பிறகு, பிஎல்ஏ எனப்படும் மக்கள் விடுதலை ராணுவத்தை கட்சியே கட்டுப்படுத்தும் என்பதை மா சேதுங் உறுதி செய்தார். அப்போது முதல், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரே மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர் பொறுப்பிற்கு உடனடியாக வந்ததில் தனது முன்னவரான ஹு ஜிண்டாவோவைவிட ஷி ஜின்பிங் அதிர்ஷ்டசாலி. ராணுவத்தினுள் இருந்த எதிர்ப்பைக் களைய அவர் நேரத்தை வீணடிக்கவில்லை.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மத்திய ராணுவ ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஷு ஹைகா மற்றும் மக்கள் விடுதலை ராணுவத்தின் முன்னாள் ஜெனரல் ஹூ பாக்ஸாங் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அதிர்ச்சிகரமான அத்தியாயம் தொடங்கியது.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

“ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானபோது அவர்கள் இருவருமே ஓய்வு பெற்றவர்கள். ஆனால், ஷி ஜின்பிங் அவர்களைக் குறிவைத்தது, சீன முன்னாள் தலைவர் ஜியாங் ஜெமின் மக்கள் விடுதலை ராணுவத்தில் கொண்டிருந்த நீடித்த செல்வாக்கைக் குறைத்தது” என்கிறார் பென்டகன் நிதியுதவியில் செயல்பட்டுவரும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோயல் வுத்னோ.

இது ஷி ஜின்பிங்கை எதிர்க்கும் யாரும் தப்பிக்க முடியாது என்று தற்போது இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு வலுவான எச்சரிக்கையைக் கொடுத்ததாகவும் அவர் கூறுகிறார்.

2015ஆம் ஆண்டு ராணுவத்தின் கட்டமைப்பை ஜின்பிங் மாற்றியமைத்தார். ஊழியர்கள், அரசியல், தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் என்று இருந்த நான்கு ராணுவ தலைமையங்களை ஒழித்து, அவற்றை 15 சிறிய முகமைகளாக மாற்றினார்.

“இந்தப் புதிய அமைப்பு, ராணுவத்தின் பல்வேறு பரிவுகளுக்கு மத்திய ராணுவ ஆணையம் நேரடியாக உத்தரவுகள் வழங்க அனுமதித்தது. நிதித்தணிக்கையாளர்கள் கூட இவர்களிடேமே நேரடியாக தொடர்புவைத்திருக்க வேண்டும்” என்கிறார் ஜோயல் வுத்னோ.

இவைய அனைத்திற்கும் அப்பால், இது முழுமையாக ஷி ஜின்பிங்கிற்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

நாட்டின் அதிகாரபூர்வ ராணுவ நாளேடான மக்கள் விடுதலை ராணுவ நாளிதழ், மத்திய ராணுவ ஆணையம் அனைத்து அதிகாரமும் கொண்டது என்பதை அழுத்தமாகக் கூறும் வகையில் கடந்த மாதம் கட்டுரை வெளியிட்டது.

மக்கள் விடுதலை ராணுவத்தின் மூத்த தலைவர்களுக்கு ஆதரவு பெருகி, பின்னாளில் அவர்கள் ஜின்பிங்கிற்கு எதிராக திரும்பிவிடும் போக்கைத் தடுப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும் என்கிறார் மூத்த சர்வதேச பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் திமோதி ஹீத்.

கட்சிக்கு விஸ்வாசம் என்பதற்கு கட்சியையும், குறிப்பாக ஜின்பிங்கையும் ஆட்சியில் வைத்திருக்க மக்கள் விடுதலை ராணுவம் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும் என்று பொருள்.

விஸ்வாசத்திற்கே முதலிடம்

நாட்டின் ராணுவத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த பிறகு, உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஜின்பிங் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஜின்பிங் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் முன்னாள் உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவர் சோ யோங்காங்கை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ததை அதிகாரிகள் உறுதிசெய்கின்றனர். இவர் ஜின்பிங்கிற்கு போட்டியாக இருந்த போ ஷிலையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

அதிசக்திவாய்ந்த முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான பொலிட்பீரோ நிலைக்குழுவின் உறுப்பினர்கள், குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்ற சொல்லப்படாத விதிக்கு மாறாக இருந்த இந்த விசாரணை அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

“இரக்கமற்ற புத்திசாலித்தனமிக்க அரசியல்வாதியாக மாறியுள்ள ஷி ஜின்பிங், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பாக, அமைப்பு ரீதியாக பொறுமையாக முன்னேறினார்” என்று யூரேசியா குழுமத்தின் மூத்த சீன ஆய்வாளர் நீல் தாமஸ் கூறுகிறார்.

ஜின்பிங்கின் வளர்ச்சியை ஆதரித்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களே அவரது வேகம் மற்றும் கைப்பற்றிய அதிகார அளவைக் கண்டு வியந்திருக்கலாம்.

ஜின்பிங்கின் ஊழலுக்கு எதிரான பிரசாரம், அவரது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கட்சிக்குள் இருந்த பிற அணிகளைக் களைய உதவியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஷி ஜின்பிங்

கடந்த தசாப்தத்தில் 4.7 மில்லியனுக்கும் அதிகமானோர் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

தனது வளர்ச்சிக்கு ஆதரவளித்த பாதுகாப்பு அதிகாரிகள் பலரை ஜின்பிங் கடந்த இரண்டு ஆண்டுகளில் நீக்கியுள்ளதாகக் கூறுகிறார் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி விக்டர் ஷிஹ்.

தற்போது பாதுகாப்பு முகமைகள் கிட்டத்தட்ட ஜின்பிங்குடன் கடந்த காலங்களைப் பகிர்ந்துகொண்டவர்கள் மற்றும் அவரின் நம்பிக்கைக்குரியவர்களைக் கொண்டு இயங்குவதாகவும் அவர் கூறுகிறார்.

பெய்ஜிங், ஷாங்காய், சோங்கிங் உட்பட பல முக்கிய நகரங்களின் கட்சி செயலாளர் போன்ற முக்கிய பிராந்திய பதவிகளிலும் ஜின்பிங் தன்னுடைய விஸ்வாசிகளை நியமித்துள்ளார்.

“இந்தப் பதவிகள் முக்கியமானவை. ஏனெனில் மில்லியன் கணக்கான மக்களிடம் மத்திய உத்தரவுகளை விளக்குவதும் செயல்படுத்துவதும் அவர்களது பொறுப்பு” என்கிறார் தாமஸ்.

“மொத்தமுள்ள 31 மாகாண கட்சிச் செயலாளர்களில் குறைந்தது 24 பேர், ஜிங்பின்னின் அரசியல் கூட்டாளிகள், அவரது குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள், அவருடன் படித்தவர்கள், அவருக்குக் கீழ் பணிபுரிந்தவர்கள் அல்லது அவருக்கு நெருங்கிய ஒருவருக்காக வேலை செய்தவர்கள்” என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கிடையே, மாகாண நிலைக் குழுக்களில் உள்ள 281 உறுப்பினர்களில் ஏறக்குறைய அனைவரும் ஜின்பிங்கினால் வளர்ச்சி அடைந்தவர்கள் என்பது விக்டோரியா பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரான வு குவோகுவாங் தொகுத்த தரவுகள் கூறுகின்றன.

தனி அடையாளத்தை உருவாக்குதல்

புதிய சகாப்தத்திற்கான சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் பற்றிய ஷி ஜின்பிங் சிந்தனை சீனாவின் அரசியலமைப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டது.

இது உச்சரிப்பதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால், தன்னுடைய பெயரில் சித்தாந்தத்தை உருவாக்கியது அவரது பாரம்பரியத்தை வலுப்படுத்தியது.

ஜின்பிங்கிற்கு முன்னதாக மாவோ மட்டுமே இதைச் செய்தார். சீனாவின் நவீனமயமாக்கலின் சிற்பி என்று அழைக்கப்படும் டெங் சியாவோபிங்கூட அவரது பெயரில் ஒரு கோட்பாட்டை மட்டுமே கொண்டிருந்தார். ஜிங்பின்னின் முன்னவர்களான ஜியாங் ஜெமின் மற்றும் ஹு ஜிண்டாவோ ஆகிய இருவரும் தங்களது பெயரில் கோட்பாடோ சிந்தனையோ கொண்டிருந்ததில்லை.

ஜின்பிங்கின் சிந்தனை என்ன என்பது விவாதத்திற்குரியது. ஆனால், அது முக்கியமில்லை. இது அதிகார நகர்வு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“ஜின்பிங்கின் சிந்தனை கட்சியிலும் நாட்டிலும் அவரது அதிகாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய ஆளுமை வழிபாட்டின் ஒரு பகுதியான இது, ஜின்பிங்கை மாவோவுடன் மட்டுமல்லாமல் கடந்த காலத்தின் புகழ்பெற்ற மற்றும் வெற்றிகரமான சீன பேரரசர்களுடன் இணைக்கிறது,” என்கிறார் ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜீன்-பியர் கபெஸ்டன்.

ஷி ஜின்பிங்

புகழ்பெற்ற பீக்கிங் பல்கலைக்கழகம் மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஜின்பிங்கின் பெயரில் ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளதாக ஹாங்காங் செய்தித்தாள் மிங் பாவ் கூறுகிறது.

தேசிய பாடத்திட்டத்தில் ஜின்பிங் சிந்தனையை ஊக்குவிக்கும் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜின்பிங்கிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், நாட்டை வலுப்படுத்துங்கள் எனப் பொருள் கொள்ளும் வகையில் Xuexi Qiangguo என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தச் செயலியில் ஷி ஜின்பிங்கின் சிந்தனை தொடர்பான வினாடி வினாக்களும் உள்ளன.

தான் சரியான அரசியல் சித்தாந்தம் கொண்டிருப்பதாகவும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜின்பிங் நினைப்பதாக கொலம்பியா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ நாதன் கூறுகிறார்.

“மாவோ கொள்கை நிலைப்பாட்டை எடுக்கும்போதெல்லாம் அதை அனைவரும் பின்பற்ற வேண்டியிருக்கும். அதைத்தான் தற்போது ஜின்பிங்கும் செய்கிறார்” என்கிறார் ஆண்ட்ரூ நாதன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »