Press "Enter" to skip to content

பாலுறவு இல்லாத திருமணங்கள்: ஆபாசப் படங்களால் பாலியல் வெறுமையைச் சந்திக்கும் புதிய தலைமுறை தம்பதிகள்

பட மூலாதாரம், Getty Images

தாம்பத்ய வாழ்க்கையில் இளம் தம்பதிகள் வெறுமையை எதிர்கொள்ள ஆபாசப்படங்கள் காரணமா? இளம் தம்பதிகளின் வாழ்க்கையில் பாலியல் உறவு முதன்மையாக இருக்கவேண்டும். ஆனால், பலர் அதில் வறட்சி நிலவுவதாகக் கூறுகின்றனர். என்ன காரணம்?

“திருமண வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில் எங்கள் பாலியல் உறவு சிறப்பாக இருந்தது. இப்போது அவருக்கு 30 வயதாகிவிட்டதால் பாலியல் வாழ்க்கையில் விருப்பமில்லை”

ரெட்டிட் சமூக ஊடக தளத்தில், பாலியல் உறவில் திருப்தி இல்லாதவர்களின் விவாதக் குழுவான r/DeadBedrooms என்ற குழுவில் இந்தக் கருத்தை அதிகம் பார்க்க முடிகிறது. இது மாதிரியான கதைகள் குறைவான பாலியல் உறவு வாழ்க்கை கொண்டவர்களிடம் அதிகம் வெளிப்படுகிறது. “என்னுடன் உறவு கொள்வதற்குப் பதிலாக அவர் ஏன் தன்னுடைய கையைப் பயன்படுத்துகிறார்” என ஒருவர் கேட்கிறார்.

இது மாதிரியான கதைகள் முதிர்ந்த தம்பதிகளிடம் இருந்து வெளிப்பட்டால் அவற்றை சாதாரணமானதாகக் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதில் பதிவிடும் பலர் தங்களின் 20 அல்லது 30களின் பிற்பகுதியில் உள்ளனர். குழந்தைகள் வந்த பிறகு, தங்களின் பாலியல் ஆர்வம் குறைந்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். வேறு சிலர், தங்களின் கணவர் தொடர்ந்து ஆபாசப்படங்கள் பார்ப்பதாகக் கூறுகின்றனர். தங்களின் ‘இறந்த படுக்கையறை’ பற்றி பதிவிடும் இளம் தம்பதிகளின் குறைகள் பட்டியல் நீள்கிறது.

இளம் தம்பதிகள் பாலியல் உறவை முதன்மையாக கொண்டிருந்தாலும், சிலர் அதிலிருந்து பின்வாங்குவதாகக் கூறப்படுகிறது. r/DeadBedrooms மாதிரியான ரெட்டிட் குழு அதை உறுதிப்படுத்துகிறது.

சமீபத்திய சில புள்ளி விவரங்களும் அதே கருத்தை வெளிப்படுத்துகின்றன. கடந்த ஆண்டு 18 முதல் 45 வயதுடையவர்களிடம் கின்சி இன்ஸ்டிட்யூட் மற்றும் லவ்ஹோனி எனப்படும் பாலியல் உறவுக்கான பொம்மைகள் விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர் இணைந்து நடத்திய ஆய்வில் பாலியல் ஆசை தொடர்பான பிரச்னைகளால் இளம் தம்பதிகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. 25.8 சதவிகித இளம் தம்பதிகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

குறைந்த ஆசை என்பது பாலியல் உறவற்ற திருமண வாழ்க்கை என்று பொருள் கொள்ளாது என்கிறார் கின்சி இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் ஜஸ்டின் லெஹ்மில்லர். “திருமண உறவில் இருக்கும் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாலியல் ஆசைகள் குறையும்போது பாலியல் உறவு கொள்தலின் இடைவெளி அதிகமாகிறது. திருமண வாழ்க்கை பாலியல் உறவு அற்றதாக மாறுவதற்கு ஆசைகள் குறைவதே முதன்மைக் காரணமாகும்.

பாலியல் நலம்

பட மூலாதாரம், Getty Images

உண்மையில் என்ன நடக்கிறது?

பாலியல் உறவற்றதாக திருமண வாழ்க்கை மாறுவதற்கு சமீபத்திய வாழ்க்கை நிலை முதல் இணையதளங்களின் தாக்கம் வரை பல காரணங்களை பாலியல் சிகிச்சையாளர்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தலைமுறையினர் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை நடத்துவதில் சில தனித்துவமான தடைகளை எதிர்கொள்கின்றனர்.

பாலியல் ஆசை குறைவான திருமண வாழ்க்கைக்கு என்ன காரணம்?

திருமண வாழ்க்கையில் பாலியல் உறவு குறைவதற்குப் பல்வேறு வரையறைகள் உள்ளன. அதில் வெளிப்படயான ஒன்று, தம்பதிகள் நீண்ட நாட்களுக்கு உறவு கொள்ளாமல் இருப்பது. மற்றொன்று, ஒரு வருடத்திற்கு 10 முறைக்கும் குறைவாகவே பாலியல் உறவு கொள்வது.

பிபிசியிடம் பேசிய சில வல்லுநர்களிடமும் இது குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. “ஒரு தம்பதி ஓர் ஆண்டுக்கு நான்கு முறை அல்லது அதற்கும் குறைவாக பாலியல் உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் பாலியல் ஆசை குறைந்த திருமண வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை உறவுகொண்டு, தாங்கள் மகிழ்ச்சியாக இருக்குறோம் என்று கூறினால் அது பொருந்தாது” என்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த பாலியல் சிகிச்சையாளர் ஸ்டீபன் ஸ்னைடர். ஆனால், வருடத்திற்கு 25 முறை உறவு வைத்துக்கொள்வதையே பாலியல் சிகிச்சையாளர் கிம்பர்லி ஆண்டர்சன் குறைவு என்கிறார். மற்ற சிலர் இந்த வரையறை மாறுதலுக்கு உட்பட்டது என்கிறார்கள். தங்கள் பாலியல் உறவின் எண்ணிக்கை குறித்து ஒரு தம்பதி கவலையை வெளிப்படுத்தினால், அங்கு கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை உள்ளது.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பாலியல் சிகிச்சையாளர் கிறிஸ்டின் லோசானோ கூறுவது போல, ‘ஆசை முரண்பாடு’ இருக்கும்போது, அதை நிவர்த்தி செய்ய தம்பதிகள் கவனம் கொடுக்காவிட்டால், அந்த முரண்பாடு காலப்போக்கில் அதிகமாகலாம். தொடர்ந்து நிராகரிக்கப்படும்போது, பாலியல் உறவில் அதிக ஆர்வம் கொண்டு, அதற்கான தூண்டுதலில் ஈடுபடுபவர் தன்னுடைய செயல்களைக் கைவிடலாம் மற்றும் சுய மரியாதையை இழக்க நேரிடலாம். இது நிராகரிக்கும் நபருக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, இந்தப் பிரச்னையை மேலும் மோசமாக்கலாம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மருத்துவம் அல்லது மனநலப் பிரச்சினைகள் போன்ற பிற விஷயங்களும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் இவற்றால் உடலுறவை சாத்தியமற்றதாக, வலி மிக்கதாக, கடினமானதாக அல்லது விரும்பத்தகாததாக மாற்ற முடியும். வேலை அல்லது குழந்தைகளுடன் கூடுதல் நேரம் செலவிடுவதும், இணையரின் பாலியல் விருப்பம் குறித்து தெளிவற்ற புரிதல் இல்லாமல் இருப்பதும் இத்தகைய பிரச்னையை ஏற்படுத்தலாம்.

பாலியல் ஆசை குறைந்த திருமண வாழ்க்கைக்கு காரணமாக இருக்கும் இந்த அம்சங்கள், எந்தத் தலைமுறையினருக்கும் தனிப்பட்டவை அல்ல என்றாலும், இதை யார் எதிர்கொள்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையில் எந்தக் காலகட்டங்களில் இந்த மாற்றம் ஏற்படுகிறது என்பதை சில நிபுணர்கள் கவனித்திருக்கிறார்கள்.

தற்போது குறுகிய காலத்திலேயே இந்தக் கட்டத்தை தம்பதிகள் அடைந்துவிடுவதாகக் கூறுகிறார் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பாலியல் சிகிச்சையாளர் செலஸ்டி ஹிர்ஷ்மேன். இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் இருக்கிறார். முன்பு, ஒருவருடன் ஒருவர் உறவுகொள்வதை தம்பதிகள் நிறுத்திக்கொள்ள 10 முதல் 15 ஆண்டுகள் எடுத்ததாகக் கூறும் அவர், தற்போது அந்த இடைவெளி மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக சுருங்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

“30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் குறைபாட்டிற்காக நான் சிகிச்சையளித்தவர்கள் ஹார்மோன் மாற்றம் மற்றும் வயது முதிர்வு ஏற்படுத்தும் குறைபாடு கொண்ட 50 வயதினர்” என்கிறார் 30 ஆண்டுகளாக பாலியல் சிகிச்சையளிக்கும் ஆண்டர்சன்.

ஆனால் இன்று அவரைச் சந்திக்கும் தம்பதிகள் 45 வயதினருக்கும் குறைவானவர்கள். இவர்களின் அடிப்படை இயக்கவியல் பழைய தம்பதிகளிடம் இருந்து முற்றிலும் வேறானது என்றும் ஆண்டர்சன் கூறுகிறார்.

மன அழுத்த அளவு

அதிக மன அழுத்தம் பாலியல் வாழ்க்கைக்கு இடையூறாக அமையலாம். இளம் தலைமுறையினர் கார்டிசோல் ஹார்மோனில் மூழ்கியுள்ளனர். “மன அழுத்தம் பாலியல் ஆசைகளை மட்டுப்படுத்திவிடும்” என்கிறார் லெஹ்மில்லர். கடந்த தலைமுறையோடு ஒப்பிடும்போது இளம் தலைமுறையினர் பெரிய அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

உறவுகள் குறித்து ஆலோசனை வழங்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிலேட் அமைப்பின் 2018ஆம் ஆண்டு ஆய்வில், 30 வயதிற்குட்பட்டவர்களில் 61 சதவிகிதம் பேர் தாங்கள் விரும்புவதை விட குறைவான பாலியல் உறவு கொள்வது தெரியவந்தது. அதில், 31 சதவிகிதம் பேர் குழந்தை பெற்றதன் காரணமாக பாலியல் ஆசைகளை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பிற தலைமுறையினரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், இளம் தலைமுறையினர் வீடு வாங்குவது, கல்விக்கடன்தொலைபேசிற நிதிச்சிக்கல்களால் முந்தைய தலைமுறையினரைவிட அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

பாலியல் நலம்

பட மூலாதாரம், Getty Images

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பணியிடங்களின் சமீபத்திய நிலையும் மன அழுத்ததிற்கு காரணமாக அமைந்துள்ளது. ஐந்து நாடுகளில் சேகரிக்கப்பட்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான டெலாய்ட்டின் மே 2022 தரவு, 38 சதவிகித இளம் தலைமுறையினர் பணி தொடர்பான கவலையால் மன அழுத்த சுமையை எதிர்கொள்வதாகக் கூறுகிறது. இதில், ஆண்களைவிட பெண்களே அதிகம் எதிர்கொள்கின்றனர்.

“பெரிய தொழில்நுட்ப மாற்ற காலங்களில், மக்கள் மிகவும் கடினமாக உழைக்க முனைகிறார்கள்” என்கிறார் ஸ்னைடர். இளம் தலைமுறையினர் அதிகம் வேலை செய்வதாக தரவுகள் கூறுகின்றன. நீண்ட நேரம் வேலை செய்யும்போது அது சோர்வுக்கு வழிவகுத்து, பாலியல் உறவில் விருப்பமில்லாத நிலையை ஏற்படுத்தலாம்.

மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த கவலைகளும் சிக்கலை அதிகப்படுத்துகின்றன. “பொருளாதாரம் குறித்த பெருங்கவலைகள், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை அதிக மன அழுத்தம் மற்றும் குறைந்த பாலியல் ஆசைகளை ஏற்படுத்துவதற்கான சக்திவாய்ந்த கலவையாக இருக்கலாம்” என்கிறார் லெஹ்மில்லர்.

பாலியல் வாழ்க்கையைப் பாழ்படுத்தும் சமூக ஊடகங்களும் ஆபாசப்படங்களும்

பாலியல் உறவு போன்ற உடல் ரீதியான தனிப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து நம் கவனத்தை சிதறடிக்கும் விஷயமாக சமூக ஊடகங்களை ஸ்னைடர் குறிப்பிடுகிறார். திருமண வாழ்க்கையில் பாலியல் உறவு குறைவதற்கு அதன் பங்கு மிக அதிகம் என்று நம்பும் ஹிர்ஷ்மேன், இது இளம் தலைமுறையினரிடையே கவலையை அதிகரிக்க வழிவகுத்ததாகக் கூறுகிறார்.

நிஜ வாழ்க்கையில் கிடைக்காத ஃபில்டர்கள் மற்றும் டச்-அப்களை சமூக ஊடகங்களில் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது ஏற்படுத்தும் சுய உணர்வு, படுக்கையறை மற்றும் திருமண வாழ்க்கைவரை பின்தொடரலாம். அது உடல் ரீதியாகவும் அவர்களை பலவீனப்படுத்தும்.

ரிலேட்டின் 2018ஆம் ஆண்டு தரவின்படி, 30 வயதிற்குட்பட்ட பாலியல் ஆசை குறைந்த திருமண வாழ்க்கை கொண்டவர்களில் 37 சதவிகிதம் பேர், தங்கள் உடல் குறித்து சுய உணர்வு கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 14 சதவிகிதம் பேர் மட்டுமே இந்த உணர்வைக் கொண்டுள்ளனர்.

பாலியல் நலம்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களோடு சேர்ந்து ஆபாசப்படங்களும் இளம் தலைமுறையினர் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இது கடந்த தலைமுறையினருக்கும் இந்தத் தலைமுறையினருக்கும் இடையே உள்ள பெரிய மாற்றமாகும்.

“20ஆம் நூற்றாண்டில் சில ஆண்கள் பல பெண்களுடன் கட்டாய உடலுறவு கொள்ள நினைத்தனர். ஆனால், தற்போதைய தலைமுறையினர் நிறைய ஆபாசப்படங்கள் பார்க்க விரும்புகின்றனர்” என்கிறார் ஸ்னைடர்.

ஆபாசத்தால் தூண்டப்பட்ட விறைப்பு குறைபாடு கொண்ட 45 வயதிற்குட்பட்ட பலருக்கு ஆண்டர்சன் சிகிச்சை அளித்திருக்கிறார். “தங்கள் துணையுடன் உறவு கொள்ளும்போது இந்த தன்மை கொண்டவர்களுக்கு விறைப்பு ஏற்படுவது கடினம். இது துணையுடன் உறவுகொள்வதற்குப் பதிலாக தனிமையில் உறவுகொள்ள அவர்களைத் தூண்டலாம். அதில் சிலர் தங்களுடைய இன்பத்தின் மீதான முழுக்கட்டுப்பாட்டையும் தாங்களே எடுத்துக்கொள்ளலாம். படத்தில் பார்ப்பது போல நம்மால் உறவில் ஈடுபட முடியவில்லை என்ற மோசமான எண்ணத்தையும் அது கொடுக்கலாம்” என்று ஆண்டர்சன் கூறுகிறார்.

“ஆபாசப் படங்கள் என்னை நிராகரிப்பதில்லை, ஆபாசப் படங்கள் என் செயல்பாட்டை ஒருபோதும் குறை சொல்வதில்லை என்பது என்னுடைய அலுவலகத்தில் கூறப்படும் பொதுவான கருத்து” என்கிறார் ஆண்டர்சன்.

இந்த நிலை நீடிக்குமா?

இன்றைய இளம் தலைமுறையினரால் ஆபாசப் படங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை அழிக்க முடியாது.

குறைவான பாலியல் உறவு என்பது சிலருக்குத் தங்கள் துணையுடன் பேசுவதற்கே கடினமாக இருக்கும் ஒரு தலைப்பு. இந்தப் பிரச்னைகளைப் புரிந்துகொள்வது மற்றும் தீர்வுகளைக் கண்டறிவது மேலும் கடினமானது.

பாலியல் ஆசை குறைந்த திருமண வாழ்வில் அவதிப்படும் ஒரு பெண் சில தினங்களுக்கு முன்பு, ரெட்டிட் தளத்தில் r/DeadBedrooms என்ற குழுவில், “இதற்கு மேலும் என்ன கேட்பது என்று தெரியவில்லை, இதை சரி செய்ய வேண்டும். ஆனால், எப்படி என்று எனக்குத் தெரியவில்லை” எனப் பதிவிட்டிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »