Press "Enter" to skip to content

யுக்ரேன் போர்; ரஷ்யா-இரான் இடையேயான உறவால் ஏற்பட்டுள்ள புதிய அபாயம்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கருவிகள் இரானுக்கு அனுப்பப்பட்டபோது இது தொடர்பான சர்ச்சைகள் பல ஆண்டுகள் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்தன. ஆனால், இப்போது இந்த இரு நாடுகள் இடையிலான ஆயுத போக்குவரத்தானது எதிர் திசையை நோக்கி பயணிக்கிறது என, எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் வியூகம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் ஜோனாதன் மார்கர்ஸ் எழுதுகிறார்.

இரான் விநியோகித்த ட்ரோன்களை ரஷ்ய ராணுவம், யுக்ரேனிய மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், யுக்ரேனின் மின்சாரம் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தவும் உபயோகித்தது.

யுக்ரேனுடனான ரஷ்யாவின் உறவு சிக்கலடைந்ததன் காரணமாக அந்த நாடு, குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்தும் இரானின் ஆயுதங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. ரஷ்யாவிடம் உள்ள ஆயுதங்களின் கையிருப்பு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

யுக்ரேனில் உள்ள தரை இலக்குகளை குறிவைத்து பலமுறை ரஷ்யா கடல் வெளி தற்காப்பு, வான்வெளி தற்காப்பு ஏகவுகணைகள் உபயோகப்படுத்தின. ஆனால், இந்த ஏகவுகணைகள் தரைவழி தாக்குதலுக்கு ஏற்றதாக இல்லை.

இலங்கை
இலங்கை

இரானில் இருந்து ரஷ்யா செல்லும் விமான போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது. அப்போது, ஐஆர்ஜிசி என்றழைக்கப்படும் இரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையை சேர்ந்த பயிற்சியாளர்கள் தங்களது படைகருவிகளை எவ்வாறு இயக்குவது என்று ரஷ்ய அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க கிரைமியாவில் உள்ள படை தளத்துக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.

யுக்ரேனால் சுட்டு வீழ்த்தப்பட்ட இரானின் ஷாஹத்-131 எனும் சுற்றிதிரியும் ராணுவ தளவாடம் (பேச்சுவழக்கில் காமிகேஸ் ட்ரோன்கள் என்றழைக்கப்படுகிறது), பெரிய வடிவிலான ஷாஹத்-136 ஆகியவற்றின் உடைந்த பாகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சந்தேகத்துக்கு இடமின்றி அவை இரானை சேர்ந்தவை என்பது தெரியவந்தது. இரான் இது குறித்து தொடர்ந்து மறுத்து வந்தபோதிலும், ரஷ்யாவின் குறிப்பிடத்தக்க ஆயுத பற்றாக்குறையை இரான் சரி செய்கிறது.

இது யுக்ரேனுக்கு நல்ல செய்தி அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. இரான் வழங்கிய குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் மோசமான சூழல் ஏற்படலாம்.

இரானின் ஆயுதக் கிடங்கில் அதிக வலுவுடன் கூடிய தளவாடங்கள் உள்ளன. இரானிய ஆயுதங்களின் அதிக அபாயம் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் விரைவில் ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் ட்ரோன்களை விட பெரும் ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் கொண்டவை. யுக்ரேனிடம் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு திறன் குறைவாகவே உள்ளது.

புதிய பதற்றம்

ரஷ்யா-இரான் இடையேயான இந்த ஆழமான உறவு, என்ன மாதிரியான பரந்துபட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்?

இரான் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு இடையேயான காலாவதியான அணு ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் விளைவுகள் ஏற்படலாம். மேலும் சிரியாவில் உள்ள படைகளின் நிலையில் இஸ்ரேல் நாட்டுக்காக குறிப்பிடத்தக்க விளைவுகளுடன் கூடிய மாற்றம் ஏற்படலாம். அதன் விளைவாக ரஷ்யாவுடனான அதன் உறவிலும் மாற்றம் ஏற்படலாம்.

ரஷ்யா, இரான் இரண்டுக்கும் நட்பு நாடுகள் தேவை என்பது தெளிவாகிறது. இரு நாடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யா - இரான்

பட மூலாதாரம், Reuters

யுக்ரேனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக ரஷ்யா பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருக்கிறது. இந்த போர் ரஷ்யாவுக்கு நன்மையளிப்பதாக இல்லை. இரான் ஆட்சியாளர்கள் தங்களின் அணு திட்டங்கள், கடந்த கால மனித உரிமை மீறல்கள் காரணமான பொருளாதார தடைகளை எதிர் கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் பெரும் அளவில் அதிருப்தியும் நிலவுகிறது.

தங்கள் பிராந்தியத்தில் ஆதிக்கத்தை உறுதி செய்யும் இலக்குகளை அடைவதுடன் மட்டுமல்லாது, அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகத் தாங்கள் கருதும் உலகையும் எதிர்கொள்ள வேண்டும் என்று கருதும் நாடுகளின் சிறிய குழுவில் சீனாவுடன் இந்த இரு நாடுகளும் உள்ளன.

இரான் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கையால் ஏற்கனவே மேற்கு நாடுகளின் கூடுதலான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கிறது. இப்போது ரஷ்யாவுக்கு இரான் ஆயுதங்களை அனுப்பியதை பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 2231 ஆவது தீர்மானத்துக்கு எதிரானதாக பார்க்கின்றன. இந்த தீர்மானம் 2015ஆம் ஆண்டின் அணு ஒப்பந்தத்தின் விளைவாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கை
இலங்கை

இதனால், அணுசக்தி தொடர்பான சில தடைகள் மீண்டும் அமலாக்கப்பட வழி உண்டாகும். இந்த பதற்றங்கள், 2018ஆம் ஆண்டு டிரம்ப் நிர்வாகத்தால் கைவிடப்பட்ட இரானின் அணு சக்தி செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச ஒப்பந்தமான ஜேசிபிஓஏ-வுக்கு திரும்பும் முயற்சியை மேலும் பலவீனப்படுத்தும்.

ஒப்பந்தத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள், அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நவம்பர் 8ம் தேதி வரையிலாவது நிறுத்தப்பட்டிருக்கும். இதற்கிடையே, இரான் தொடர்ந்து முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

யுக்ரேன் மீது வலுவான கவனத்தை செலுத்துவதால் இரானின் அணுசக்தி தொடர்பான ஆவணங்கள் மேற்கு நாடுகளுக்கு தெளிவற்ற ஒன்றாக தோன்றும். உண்மையான ஒப்பந்தத்தின் முக்கியமான தரப்பான ரஷ்யா, தனது புதிய ஆயுத வியபாரியிடம் தனக்கு ஒரு தளம் தரும்படி அவ்வளவாக அழுத்தம் தராது

சிரியா

எனினும், ரஷ்யா-இரான் இடையேயான உறவு என்பது ஆழ்ந்த கொள்கை பிடிப்பு அடிப்படையிலானது என்பதை விடவும் சூழ்நிலைகளை சார்ந்தே அமைந்துள்ளது.

இரானுடனா ரஷ்யாவின் உறவு என்பது நீண்டகாலமாகவே முரண்பாடுகளை அளவீடாக கொண்டதாக உள்ளது. சிரியாவை பொறுத்தவரை இந்த இருநாடுகளும் வெவ்வேறு வகையான இலக்குகளை கொண்டிருப்பதே இதற்கு நல்ல உதாரணமாக சொல்லலாம்.

ரஷ்யாவின் ராணுவ தலையீடு ஆசாத் ஆட்சியை காப்பாற்றியிருக்கிறது. ஈரானின் மனித வளம், ஆயுதங்கள், அரசுக்கு ஆதரவான குழுக்கள் ஆகியவை அவர் நீடித்திருப்பதற்கு முக்கியமானதாகும்.

ஆனால், ரஷ்யாவை பொறுத்தவரை சிரியாவில் தொடர்ந்து இருப்பதை இன்னும் நிர்வகித்து வருகிறது. எனவே, அங்கு இரானின் பிராந்திய ரீதியிலான இலக்குகளை ஒரு போதும் ஊக்குவிக்காது. எனினும் இஸ்ரேல் விரும்பிய வகையில் இரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அது செயல்படவில்லை. சிரியாவில் இரானின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை முறியடிக்க சிறிதளவு கூட ஏதும் செய்யவில்லை.

ரஷ்யா-இரான் இடையேயான உறவின் புதிய செயல்பாடுகள் இதனை மாற்றுமா? ரஷ்யாவின் சில வான்வெளி பாதுகாப்பு படைகள், தரைப்படைகள் சிரியாவில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும். எனினும் இன்னும் ரஷ்யா, இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக தலையிடும் வலிமையை கொண்டுள்ளது.

யுக்ரேனுக்கான இஸ்ரேலின் உறுதியற்ற ஆதரவை பாதிக்கும் வழிகாட்டும் கவலைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆனால், இதன் எதிர்காலம் என்ன? பதிலுக்கு இரான் உதவியை எதிர்பார்த்து மேலும் அதி நவீன ஆயுதங்களை ரஷ்யா தர தீர்மானிக்கலாம் என்று உதாரணத்துக்கு வைத்துக் கொண்டால். அப்போது என்ன நடக்கும்? இது கியவ் மீதான இஸ்ரேலின் அணுகுமுறையில் மாற்றத்தைத் தூண்டுமா?

இப்போதைக்கு இஸ்ரேலில் பொதுத்தேர்தல் வர இருக்கும் சூழலில், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. ரஷ்யா-இரான் இடையேயான புதிய உறவு, யுக்ரேன் போருக்கும் அப்பால் உலக நாடுகளுக்கு இடையேயான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது.

ஜொனாதன் மார்கஸ், பிபிசியின் சர்வதேச உறவுகள் மற்றும் பாதுகாப்புத்துறைக்கான முன்னாள் செய்தியாளராவார். இப்போது எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தில் வியூகம் மற்றும் பாதுகாப்பு மையத்தில் கெளரவப் பேராசிரியராக உள்ளார்.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »