Press "Enter" to skip to content

ட்விட்டரை கைப்பற்றினார் ஈலோன் மஸ்க்: அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், AFP

உலகின் பெரும் பணக்காரரான் ஈலோன் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கி முடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய மதிப்பில் இந்தத் தொகை சுமார் 3 லட்சத்துக்கு 52 ஆயிரம் கோடி.

ட்விட்டரை கைப்பற்றியது குறித்து ட்விட்டர் தளத்திலேயே சூசகமாகப் பதிவிட்டுள்ளார் ஈலோன் மஸ்க். எனினும் ட்விட்டர் நிர்வாகம் இதுபற்றி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

தனது ட்விட்டர் பக்க சுயவிவரத்தை “Chief Twit” என்று மாற்றியுள்ள ஈலோன் மஸ்க், ட்விட்டர் தலைமை அலுவலகத்துக்குள் சமையலை சின்க்கை தூக்கிச் செல்லும் காணொளியையும் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரை கையகப்படுத்துவதற்கான ஈலோன் மஸ்கின் முயற்சி எப்படி தொடங்கியது?

மார்ச் மாத இறுதியான அன்று, ஜான் ஜோஸில் குளிர்ச்சியான மாலைப்பொழுது. ட்விட்டர் நிர்வாகிகளுடன் அவசர அவசரமாக ஈலோன் மஸ்க் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தக் கூட்டம் ட்விட்டர் நிறுவனத்திற்கு மிக முக்கியமானது. ட்விட்டரின் பெரும்பாலான பங்குகளை ஈலோன் மஸ்க் வாங்கியிருந்ததால் அதன் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் அவரை இணைக்க வேண்டும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது.

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான பிரட் டெய்லர், அந்த இடத்திற்கு வந்தபோது அது அவர் எதிர்பார்த்ததுபோல இல்லை.

அண்மையில் நான் அலுவல்பூர்வ சந்திப்பு நடத்திய இடங்களில் இது விசித்திரமானது என ஈலோன் மஸ்கிற்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

விமான நிலையத்திற்கு அருகே சந்திப்பிற்கான இடத்தை அவர்கள் எதிர்பார்த்ததாகவும், இங்கு ட்ராக்டர்கள் மற்றும் கழுதைகள் இருப்பதாக ஈலோன் மஸ்கிடம் பிரட் டெய்லர் கூறினார்.

எனினும், அந்தக் கூட்டம் சுமூகமாக முடிந்தது.

சில தினங்களுக்குப் பிறகு, ட்விட்டரின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் ஈலோன் மஸ்க் இணைய இருப்பதாக அதன் நிர்வாகம் அறிவித்தது.

அடுத்த ஆறு மாதங்கள் நடந்த இழுபறிக்கு, இதுதான் தொடக்கம்.

ட்விட்டர்

பட மூலாதாரம், Getty Images

அந்தப் பொறுப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த ஈலோன் மஸ்க், ட்விட்டர் தளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது தொடர்பாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடர்ந்து ட்வீட் செய்துவந்தார்.

இருப்பினும், ஈலோன் மஸ்கிற்கும் ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி பாரக் அகர்வாலுக்கும் இடையேயான தனிப்பட்ட சந்திப்புகள் சுமூகமாக நடைபெறவில்லை.

இதில் அதிருப்தியடைந்த ஈலோன் மஸ்க், “பாரக் அகர்வாலுடன் இணைந்து ட்விட்டர் தளத்தை சரி செய்வது பயனளிக்காது. தீவிரமான நடவடிக்கைகள் தேவை” என பிரட் டெய்லருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், ஏப்ரல் 14ஆம் தேதி ட்விட்டர் தளத்தை முழுவதுமாக வாங்கவுள்ளதாக ஈலோன் மஸ்க் வெளிப்படையாக அறிவித்தார்.

அதற்காக 44 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஈலோன் மஸ்க் கொடுக்க முன்வந்த நிலையில், அதை ட்விட்டர் நிறுவனம் முதலில் நிராகரித்தது. அதோடு, ட்விட்டரை அவர் கையகப்படுத்துதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

பின்னர் ஏப்ரல் 25ஆம் தேதி ஈலோன் மஸ்கின் ஒப்பந்தத்தை ஏற்பதாக ட்விட்டர் அறிவித்தது.

மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

ட்விட்டர் தன்னுடைய பாதையை இழந்துவிட்டதாக தெரிவித்த ஈலோன் மஸ்க், அந்தத் தளத்தில் பேச்சு சுதந்திரம் கட்டுப்படுத்துவதாகவும், பேச்சு சுதந்திரத்திற்கான தளமாக அது இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

கனடாவின் வான்கூவரில் நடந்த TED2022 மாநாட்டில் ஒரு நேர்காணலில் பேசிய ஈலோன் மஸ்க், பொருளாதாரத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்று கூறினார்.

ஒப்பந்தம் இறுதியான சில வாரங்களில் தொழில்நுட்ப பங்குகள் சரிந்ததால் ட்விட்டரின் பங்கும் சரிந்தது. இதனால் ட்விட்டருக்கு ஈலோன் மஸ்க் அதிக விலை கொடுத்துள்ளாரோ என்று ஆய்வாளர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கினர்.

ட்விட்டரில் எத்தனை உண்மையான கணக்குகள் உள்ளன என்று பொதுவெளியில் ஈலோன் மஸ்க் கேள்வியெழுப்பினார். ட்விட்டர் தளத்தில் உள்ள ஸ்பேம் கணக்குகள் குறித்து பல ஆண்டுகளாகவே அவர் தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

மஸ்க்

பட மூலாதாரம், ELON MUSK

தன்னுடைய ஒப்பந்தம் ஏற்கப்பட்டதும், ட்விட்டரில் உள்ள உண்மையான கணக்குகளின் தரவுகளை வழங்குமாறு தொடர்ந்து அந்நிறுவனத்திடம் ஈலோன் மஸ்க் கேட்டுவந்தார்.

தோராயமான மாதிரி கணக்குகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் தினசரி பயனர்களில் 5 சதவிகிதத்திற்கும் குறைவானது ஸ்பேம் கணக்குகள் என்று ட்விட்டர் தெரிவித்தது. இது ஈலோன் மஸ்கிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த எண்ணிக்கை எப்படி கணக்கிடப்பட்டது என்ற விவரங்களை நீண்ட பதிவாக பாரக் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலளித்த ஈலோன் மஸ்க் மலத்தின் எமோஜியை பதிவிட்டார்.

பின்னர், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஜூலை 8ஆம் தேதி ஈலோன் மஸ்க் அறிவித்தார்.

அவர் இந்த ஒப்பந்தத்தை விட்டு விலக நினைத்தாரா அல்லது பொருத்தமான தொகையில் இந்த ஒப்பந்தத்தை முடிக்க நினைத்தாரா என்பதற்கு பதில் கூறுவது கடினம்.

ஆனால், ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து ஈலோன் மஸ்க் பின்வாங்க முடியாது என அந்நிறுவனம் வாதிட்டது.

இரு தரப்பிலும் செல்வாக்கான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். தங்களது உண்மையான பயனர்கள் குறித்த போதுமான விவரங்களை அளித்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் ட்விட்டர் தெரிவித்திருந்தது.

ஆனால், ட்விட்டர் கூறியதைவிட அதிகமான ஸ்பேம் கணக்குகள் இருக்கலாம் என ஈலோன் மஸ்க் தரப்பு வாதிட்டது. மேலும், ட்விட்டர் மோசடி செய்ததாகவும் ஈலோன் மஸ்க் தரப்பு குற்றம்சாட்டியது.

பொதுமக்களின் விமர்சனமும் ட்விட்டர் நிறுவனத்தை பாதித்தது. ட்விட்டரின் வருவாயில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலமாகவே வருகிறது. இதனால் நம்முடைய விளம்பரங்கள் எத்தனை உண்மையான மக்களுக்கு காட்டப்படுகின்றன என்று விளம்பரதாரர்கள் யோசிக்கத் தொடங்கினர்.

இது ட்விட்டரின் தலைமையகத்திலும் கவனத்தை சிதறடித்தது. சில ஊழியர்கள் தலைமை நிர்வாக அதிகாரியாக ஈலோன் மஸ்க் வருவதை விரும்பினர். பலர் தனிப்பட்ட முறையிலும், சிலர் பகிரங்கமாகவும் இது நிறுவனத்தின் பரந்த இலக்குகளுக்கு பேரழிவாக அமையும் என்று கூறினார்.

ட்விட்டர் மீது இத்தனை குற்றச்சாட்டுகளை வைத்த பிறகும், திடீரென கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ட்விட்டரை வாங்குவது X என்ற “எவரிதிங் ஆப்” என்ற செயலியை உருவாக்குவதை துரிதப்படுத்தும் என ஈலோன் மஸ்க் ட்வீட் செய்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அவரது இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம்? ஒரு வேளை நீதிமன்ற வழக்கில் தாம் தோற்றுவிடுவோம் என அவர் நினைத்திருக்கலாம். இந்த முடிவை அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக, அவர் ட்விட்டர் தரப்பு வழக்கறிஞர்களின் விசாரணை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருவேளை அந்தக் கடினமான குறுக்கு விசாரணையை அவர் தவிர்க்க விரும்பியிருக்கலாம்.

என்ன காரணமாக இருந்தாலும் சரி, ஈலோன் மஸ்கின் இந்த முடிவை ட்விட்டரும் பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஈலோன் மஸ்குடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி விலை மற்றும் விதிமுறைகளின் பரிவர்த்தனையை முடிக்க நிறுவனம் உறுதிகொண்டுள்ளது என ட்விட்டரின் தலைவரான பிரட் டெய்லர் ட்வீட் செய்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »