Press "Enter" to skip to content

தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் இந்திய கடற்படை துப்பாக்கி சூடு: கேப்டன் விசாரணை

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக

நடுக்கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அதில் மீனவர் ஒருவர் காயமடைந்த நிலையில் இது குறித்து, இந்திய கடற்படை கேப்டன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கடற்படையினர் மீது மரைன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் கடந்த 15ஆம் தேதி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து வீரவேல், செல்லத்துரை, கண்ணன், மோகன்ராஜ், விக்னேஸ்வரன், மகேந்திரன் உள்ளிட்ட 10 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த 21ம்தேதி அதிகாலை 2 மணியளவில் மீனவர்கள் ஜெகதாபட்டிணத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து சென்ற இந்திய கடற்படையினர் செல்வகுமார் படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில், படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து இந்திய கடற்படையினர் உடனடியாக உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திற்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து உலங்கூர்தி வரவழைக்கப்பட்டு நடுக்கடலில் படுகாயம் அடைந்த மீனவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் மீனவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவர்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு

இந்நிலையில் படகில் இருந்த எஞ்சிய 9 மீனவர்களை இந்திய கடற்படையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, 21ம்தேதி நள்ளிரவு படகுடன் நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

கரை திரும்பிய மீனவர்களிடம் பாதுகாப்பு வட்டார அதிகாரி மற்றும் மரைன் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்திய கடற்படை விளக்கம்

இச்சம்பவம் குறித்து 21ந்தேதி மாலை இந்திய கடற்படை சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது, ‘இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லை அருகே பாக் ஜலசந்தி கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய கடற்பகுதிக்குள் மீன்பிடி படகு ஒன்று நுழைந்தது. படகை நிறுத்துமாறு ரோந்து படகில் இருந்த கடற்படை வீரர்கள் தெரிவித்தும் படகு நிற்காமல் சென்றதால், வழிமுறைகளுக்கு உட்பட்டு எச்சரிப்பதற்காக படகின் மீது சுடப்பட்டது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இதில் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமில் இருந்து உலங்கூர்தி வரவழைக்கப்பட்டு காயமடைந்த மீனவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக’ அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்திய கடற்படை மீது வழக்கு பதிவு

பின்னர் மீன்பிடி படகின் உரிமையாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் வேதாரண்யம் மரைன் காவல் துறையினர் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியது, உயிர் பயத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு

இந்நிலையில் இந்திய கடற்படை அதிகாரி கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைத்த விசைப்படகில் ஆய்வு நடத்தினர்.

மீன்பிடி படகில் 47 இடங்களில் துப்பாக்கி குண்டு துளைகள்

துப்பாக்கி சூடு சம்பவம் எப்படி நடந்தது? படகில் எத்தனை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது? படகில் ஏற்பட்டுள்ள சேதம் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் விசைப்படகில் 47 குண்டுகள் துளையிடப்பட்ட ஓட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து துப்பாக்கி சூட்டின் போது படகில் இருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட அறிக்கை

துப்பாக்கி சூடு நடந்த அன்று பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீனவரை துப்பாக்கியால் சுட்டது யார் அவர் மீது பாய்ந்த குண்டு என்ன வகையான குண்டு என்பது குறித்து விசாரணைக்கு பிறகு தான் தகவல்கள் தெரிய வரும் என தெரிவித்தார்.

இந்திய கடற்படையினர் ஏன் மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கினர்?

இது குறித்து துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்த படகில் இருந்த மீனவர் செல்வகுமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த 21ம்தேதி அதிகாலை 3 மணியளவில் ஜெகதா பட்டினத்திற்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடற்படைக் கப்பல் ஒன்று எங்களை அழைத்தது. அந்த கப்பல் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் என பயந்து அங்கிருந்து வலைகளை கடலில் வெட்டி விட்டு சென்றோம்.

ஜேசுராஜா

அப்போது படகை நிறுத்துமாறு ஒலி பெருக்கி மூலம் அழைத்தனர். ஆனால் மீன்பிடி படகின் எஞ்சின் சத்தத்தில் அது கேட்காததால் நாங்கள் படகை நிறுத்தவில்லை. இதனையடுத்து மீன் பிடி படகின் மீது கடற்படை வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் படகில் ஏறிய கடற்படையினர் படகில் இருந்த மீனவர்களை இரும்பு கம்பியை கொண்டு சரமாரியாக தாக்கினர்.

பகல் முழுவதும் எங்களை இந்திய கடற்படை கப்பலில் வைத்து சாப்பாடு, குடிநீர் கொடுக்காமல் அடித்தனர். அப்போதுதான் படகு மீது துப்பாக்கி சூடு நடத்தியது இந்திய கடற்படை என தங்களுக்கு தெரிய வந்ததாக கூறுகிறார் மீனவர் செல்வகுமார்.

மழுப்பலான பதில் அளிக்கும் கடற்படை விசாரணை அதிகாரிகள்

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விசைப்படகு உரிமையாளர் செல்வம், படகின் மீது துப்பாக்கி சூடு நடத்தியது குறித்து இந்திய கடற்படையின் உயர் அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தினர்.

“எங்களிடம் விசாரணை நடத்துவதற்கு முன் விசாரணை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய கடற்படை வீரர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எனவே நாங்கள் குற்றம் செய்தவர்கள் என்ற கோணத்தில் அதிகாரிகள் தங்களிடம் தனி தனியாக விசாரித்தனர்.

ஏன் எங்கள் படகின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று கடற்படை விசாரணை அதிகாரியிடம் கேட்டதற்கு மீன்பிடி படகு சந்தேகப்படும்படி இருந்ததால் படகு மீது கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவித்தனர்.

ஆனால் எங்களது மீன்பிடிப் படகில் நான்கு புறமும் இந்திய தேசியக் கொடி உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி சந்தேகத்திற்குரிய படகு என்று நீங்கள் துப்பாக்கி சூடு நடத்தினீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் மலுப்பலான பதில் அளித்தனர்.

இந்த விசாரணையில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை வீரர்களை காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் விசாரணையாக இதனை நாங்கள் பார்க்கிறோம்,” என்கிறார் படகின் உரிமையாளர் செல்வம்.

படகை நிறுத்தியிருந்தால் துப்பாக்கி சூடு நடந்திருக்காது

இந்த துப்பாக்கி சூடு குறித்து இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், சமீப காலமாக ஜெகதாபட்டினம், மல்லிபட்டினம், கோட்டைப்பட்டினம், கோடியாக்கரை உள்ளிட்ட கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் கூடுதலாக இந்திய கடற் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் இலங்கை கடல் பகுதியில் இருந்து இந்திய கடல் பரப்பிற்குள் நுழையும் தமிழ்நாடு மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து விசாரிப்பது வழக்கம்.

அதேபோல் இந்த படகு நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து விட்டு இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்தது. அந்தப் படகு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதா என்பது குறித்து விசாரிப்பதற்காக படகை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மீன்பிடி படகு நிற்காமல் சென்றது கடற்படையினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே படகை நிறுத்த முயற்சித்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்” என்றார் கடற்படை அதிகாரி.

இரண்டாவது முறையாக தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு

குண்டடி பட்ட படகினை ஆய்வு செய்யும் அதிகாரி.

தமிழ்நாடு மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய குறித்து இந்திய – இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு தமிழக தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், தமிழ்நாடு மீனவர்களின் தொடர் போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவது வேதனையளிக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய கடலோர காவல் படை ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். தற்போது இரண்டாவது முறையாக நடுக்கடலில் இந்திய கடற்படை படகை நிறுத்த சொல்லி படகு நிற்காமல் சென்றதால் அந்த படகின் மீது 47 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே உடனடியாக துப்பாக்கி சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய குறித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை அது சம்பந்தமாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது நடந்த துப்பாக்கி சூடு குறித்து வேதாரண்யம் மரைன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை கண்துடைப்பாக மீனவர்கள் பார்க்கிறோம்.

துப்பாக்கி சூடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் வரும் 11ஆம் தேதி கடலூர் முதல் கன்னியாகுமரி வரை மீனவர்கள் நடத்த இருக்கும் போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்,” எனத் தெரிவித்தார் ஜேசுராஜா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »