Press "Enter" to skip to content

க்ளா ஹேர் க்ளிப்: 90களில் பிரபலமான இந்த கிளிப் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? – சுவாரசிய தகவல்

  • ஆனி-மேரி டயஸ் போர்ஜஸ்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

1990களில் மிகவும் பிரபலமாக இருந்த க்ளா ஹேர் க்ளிப், கொரொனா பொதுமுடக்க காலத்தில் முடித் திருத்தகம்களுக்கு செல்ல முடியாத நிலை வந்த போது மீண்டும் பிரபலமடைந்தது.

ஆனால், இந்த க்ளா ஹேர் க்ளிப் மிகச்சாதாரணமான ஒரு பட்டறையில் உருவானது என்பதும், இது என்னுடைய வளர்ப்பு தந்தையால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் பலருக்குத் தெரியாது.

“நீங்கள் உலகில் எங்கு சென்றாலும், கோக் பாட்டில், மைக்கேல் ஜாக்சனின் விளம்பர ஒட்டி மற்றும் எங்கள் ஹேர் கிளிப்பைக் காணலாம்” என்று எங்களிடம் ஒரு கருத்து இருந்தது.

நான் பிரான்சில் இரண்டு குடும்பங்களால் வளர்க்கப்பட்டேன். என் தாய் மரியா, மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் உள்ள கேப் வெர்டே தீவைச் சேர்ந்தவர். தன்னுடைய 24 வயதில் என்னை கருவில் சுமந்தபோது ஐரோப்பாவில் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து அவர் தீவில் இருந்து வெளியேறினார்.

அதாவது கினி-பிசாவுக்கு விமானத்தைப் பிடிப்பதற்காக நள்ளிரவில் தீவில் இருந்து தப்பித்தார். அங்கிருந்து பல மாத கடுமையான பயணத்திற்குப் பிறகு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவியோடு போர்ச்சுகலையும், அதன் பின்னர் ஃபிரான்ஸையும் சென்றடைந்தார்.

சில வாரங்களுக்குப் பிறகு 1976ஆம் ஆண்டு டிசம்பரில் கிழக்கு பிரான்சில் உள்ள ரியோம் என்ற சிறிய நகரத்தில் நான் பிறந்தேன். நாங்கள் தங்குவதற்கு கைவிடப்பட்ட ஓர் இடத்தைக் கண்டுபிடிக்கும் வரை தீவிர குளிரில் தெருக்களில் தூங்கினோம். அன்றிலிருந்தே அவர் உடல்நிலை மோசமானது.

எங்களின் அவல நிலையை கண்டு, ஒரு இளம் பிரெஞ்சு ஜோடியான கிறிஸ்டியன் பொட்டுட் மற்றும் அவரது மனைவி சில்வியான் எங்களுக்கு உதவ முன்வந்தனர்.

என்னைப் பெற்ற தாய் மரியாவுடன் நான்

பட மூலாதாரம், ANNE-MARIE DIAS BORGES

பொட்டுட் குடும்பத்தினருக்கு நாம் பட்டிருக்கும் நன்றிக்கடனை அடைக்க வேண்டும் என என்னுடைய அம்மா மரியா எப்போதும் கூறுவார்.

1980களுக்கு பின்நோக்கிச் செல்வோம். கிறிஸ்டியன் பொட்டுட்டிற்கு அப்போது பெரிய கனவு இருந்தது.

தன்னுடைய 14 வயதில் பொட்டுட் பள்ளிப்படிப்பை நிறுத்தினார். அவருக்கு புதிதாக ஒரு பொருளைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. 27 வயதில் கையில் பணமில்லாமல் இருந்த நிலையில், தன்னுடைய பெற்றோர் ரொட்டி தயாரிக்க பயன்படுத்திய ஒரு பழைய அடுப்பைக் கொண்டு தோட்டத்தின் பின்புறத்தில் 180 சதுர அடி பரப்பில் அவர் ஒரு பட்டறையை உருவாக்கினார்.

அவருடைய தொழில் மெதுவாக விரிவடைந்தது. 1986ஆம் ஆண்டில் கிறிஸ்டியன் மற்றும் சில்வியான் நிறுவனமான சிஎஸ்பி டிஃப்யூஷன், எங்கள் சொந்த ஊரான ஓயோனாக்ஸில் முதல் தொழிற்சாலையைத் திறந்து, ஹேர்பேண்டுகள், சீப்புகள் போன்ற பல்வேறு நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களைத் தயாரித்தது.

ஒரு நாள் எங்கள் விதியை மாற்றும் அந்தத் தருணம் வந்தது.

“ஒருநாள் என்னுடைய கைகளை பிசைந்துகொண்டிருந்த போது நாம் சீப்பு விற்கிறோம், கிளிப் விற்கிறோம், ஏன் இரண்டையும் ஒன்றாக்க கூடாது என்று திடீரென ஒரு யோசனை எனக்கு தோன்றியது” என்கிறார் கிறிஸ்டியன்.

இப்படித்தான் தனித்துவமான க்ளா ஹேர் க்ளிப் உருவானது.

“சுருள், நேர்த்தி, அடர்த்தி, நீளம், குட்டை என எந்த வகையான கூந்தலுக்கும் இது பொருந்தும்” என பெருமையாக அவர் கூறுகிறார்.

ஆப்பிரிக்க மகளாக நான் இருப்பது எல்லா வகையான முடிகளுக்கும் பொருந்தும் வகையான க்ளிப்களை உருவாக்க தூண்டியதா என்று அவரிடம் கேட்ட போது, அவர் இல்லை என்றார்.

ஆனால், அதன் உலகளாவிய தன்மை அந்த நேரத்தில் பொருத்தமாக இருந்தது.

க்ளா க்ளிப்கள் விலை குறைவானவை என்பதோடு பணக்காரர்கள், சாதரண மக்கள் என அனைவராலும் விரும்பப்பட்டவை.

“இந்த கிளிப் குழந்தைப் பருவத்திற்கு என்னை அழைத்துச் செல்கிறது. என்னுடைய அம்மா அவரது வாடிக்கையாளர்களின் தலையில் தினமும் இதைப் பயன்படுத்துவார்” என்கிறார் சிகையலங்கார நிபுணரும் L’Oréal பிராண்ட் தூதருமான அலெக்சிஸ் ரோஸ்ஸோ. “நீண்ட தளர்வான கூந்தல் அந்த நேரத்தில் ஃபேஷனாக இருந்தது. ஆனால், இந்த க்ளிப் அனைத்தையும் மாற்றியது” என்றும் அவர் கூறுகிறார்.

இறுதியில் எங்கு பார்த்தாலும் க்ளா க்ளிப்புகள் இருந்தன. பிரெண்ட்ஸ் என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரில் ஜெனிஃபர் அனிஸ்டனின் ரேச்சல் கதாபாத்திரமும் அதைப் பயன்படுத்தி இருந்தது.

ஜெனிஃபர் அனிஸ்டனின் ரேச்சல் கதாபாத்திரம்

பட மூலாதாரம், NBC/PHOTO 12/ALAMY

ஆனால், என்னுடைய பள்ளி நண்பர்கள் க்ளிப் கேட்டு என்னை தொடர்ந்து தொந்தரவு செய்த பிறகுதான் அதற்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை நான் உணர்ந்தேன்.

1990களின் மத்தியில், எங்கள் குடும்ப நிறுவனம் மாதத்திற்கு லட்சக்கணக்கான ஹேர் கிளிப்களை உலகளவில் விற்பனை செய்துவந்தது. கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தொழிற்சாலை விரிவாக்கப்பட்டு பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

பள்ளி விடுமுறை நாட்களில் கிறிஸ்டியனின் குழந்தைகளான சான்ட்ரின் மற்றும் ஜீன்-பிரான்கோயிஸ் ஆகியோருடன் பட்டறையில் அமர்ந்து, விற்பனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு க்ளிப்களையும் நான் சரிபார்ப்பேன்.

உருகும் நெகிழி (பிளாஸ்டிக்) வாசனை என் மேல் எப்போதும் இருக்கும். இது விசித்திரமாக இருந்தாலும், அந்த வாசனை என் குழந்தைப் பருவ நினைவுகளை சுருக்கமாகக் கூறுகிறது.

அந்த சிறிய பொருளுக்குள் எவ்வளவு உழைப்பு உள்ளது என்பது நம்புவதற்கு கடினமானது.

“முதலில் மாதிரியை வரைவோம். பின்னர் பிளாஸ்டர் அச்சை உருவாக்கி அதன் மீது ஒரு வகை உலோகக் கலவையை ஊற்றி இறுதி அச்சை உருவாக்குவோம். அதன் பிறகு, இந்த அச்சு ஒரு பெரிய அழுத்த இயந்திரத்துடன் இணைக்கப்படும். அதில் சூடான உப்புத்தன்மை கொண்ட திரவம் ஊற்றப்படும். அவை குளிர்ந்தவுடன், க்ளிப் கிடைக்கும்” என்கிறார் கிறிஸ்டியன்.

ஒரு அச்சினை உருவாக்க தனக்கு 200 மணிநேரம் எடுக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

கிறிஸ்டியன் பொட்டுட்

பட மூலாதாரம், SYLVIANE POTUT

அமெரிக்கா மற்றும் ஜப்பான் இதன் மிகப்பெரும் சந்தைகளாக இருந்தன. கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு போதுமான க்ளிப்கள் கிடைக்கவில்லை.

“இது புத்திசாலித்தனமாகவும் மிகவும் புதுமையாகவும் இருந்தது” என்கிறார் ஏதென்ஸைச் சேர்ந்த ஃபேன்னி லாப்பாஸ். எனது பெற்றோரின் முதல் மற்றும் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒருவரான இவர், ஒரே நேரத்தில் 100,000 க்ளிப்புகள் வரை வாங்கியிருக்கிறார்.

இன்று பெரும்பாலும் க்ளா கிளிப்புகளை கருப்பு மற்றும் ஆமை ஓடு போன்ற நிறங்களில் தயாரிக்கிறோம்.

“எங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவர் ஸ்வீடனின் அரச குடும்பத்திற்கு பொருள் வழங்குபவர். அவர் கடையில் அலங்கார கற்கள் பொதிக்கப்பட்ட எங்கள் தயாரிப்பின் விலையுயர்ந்த க்ளிப்புகள் நிறைய இருக்கும். அவை ஒவ்வொன்றையும் அவர் விற்பனை செய்வார்” என்று என் வளர்ப்பு அம்மா சில்வியான் நினைவு கூர்கிறார்.

பிரிட்டனும் எங்கள் புதிய மற்றும் அற்புதமான வடிவமைப்புகளை விரும்புகிறது. இது, இந்த வடிவமைப்பில் நான் பார்த்த முதல் க்ளிப் என்று எங்கள் வாடிக்கையாளர் பால் கிறிஸ்குவோலோ கூறுகிறார்.

“நான் பல ஆண்டுகளாக வணிகத்தில் இருந்தேன். கிறிஸ்டியன் எங்கள் லண்டன் அலுவலகத்திற்கு அந்த க்ளிப்பைக் கொண்டு வந்தபோது அது மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எங்களுக்கு உடனடியாகத் தெரியும்” என்கிறார் அவர்.

வியாபாரம் வளர வளர, என் பெற்றோரின் கொள்கைகளில் நம்பிக்கையும் அதிகரித்தது. நம்பிக்கையே அவர்களுக்கு முதன்மையாக இருந்தது. “நாங்கள் நிறைய க்ளிப்களை விற்றோம், நிறைய நண்பர்களையும் உருவாக்கினோம்” என்கிறார் சில்வியான்.

இந்த வெற்றி தேசம் கடந்து செல்வதற்கான வாய்ப்பையும் கொண்டு வந்தது.

வாடிக்கையாளர்கள்

பட மூலாதாரம், CHRISTIAN POTUT

“நான் இதற்கு முன்பு பிரான்ஸை விட்டு வெளியேறியதில்லை. ஆனால் இந்த க்ளிப் மூலம் நான் டோக்கியோ, டொராண்டோ அல்லது மொராக்கோவில் வாடிக்கையாளர்களைச் சந்தித்தேன்” என்கிறார் கிறிஸ்டியன்.

அந்த நேரத்தில் நான் பதின்ம வயதில் இருந்தேன். எனக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்பதால் வெளிநாட்டு வணிக பயணங்களில் எங்கள் குழுவில் முக்கிய இடம் பிடித்தேன்.

நான் முதன்முதலில் ஆவலுடன் நியூயார்க்கைப் பார்த்தேன். நகரின் அற்புதமான ஹோட்டல் ஒன்றில் நாங்கள் தங்கியிருந்தோம். ஜன்னலுக்கு வெளியே பார்த்து, நானும் என் கனவுகளைப் பின்பற்றுவேன் என்று எனக்குள் உறுதியளித்தது இன்னும் நினைவிருக்கிறது.

இது கடினமான வேலை. நியூயார்க்கில் உள்ள ஒரு முக்கியமான வாடிக்கையாளருக்காக நூற்றுக்கணக்கான தவறான க்ளிப்களை தயார் செய்தது போன்ற சில மறக்கமுடியாத தோல்விகளும் உள்ளன.

அந்த அனுபவத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது நான் தயார் செய்யும் அனைத்தையும் இருமுறை அல்லது மூன்று முறை சரிபார்க்கிறேன்.

நாம் எதிர்கொண்ட சவால்களுக்கு வருந்தவில்லை என்று கூறும் என்னைப் பெற்ற தாய், ஏனென்றால் “என் மகள் என்னைப் பெருமைப்படுத்துவார் என்று நான் உணர்ந்திருந்தேன்” என்கிறார்.

என் வளர்ப்புப் பெற்றோர் எனக்காக தங்கள் வீட்டையும், தங்கள் இதயங்களையும் திறந்து, கனவு காணும் தைரியத்தை அளித்து, இங்கிலாந்துக்கு வருவதற்கு என்னை ஊக்குவித்தார்கள்.

அவர்கள் இல்லாவிட்டால், பிபிசி ஆஃப்ரிக்கின் கேஷ் எகோ திட்டத்தின் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் நான் இன்று இருக்க முடியாது. சமீபத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் மிகவும் செல்வாக்கு மிக்க ஆறாவது ஆப்பிரிக்க பெண்ணாகவும், 100 செல்வாக்கு மிக்க ஆப்பிரிக்க பெண்களில் ஒருவராகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

என் அப்பாவின் கண்டுபிடிப்பு 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்படுவதைக் காண்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

“இளைய தலைமுறையினர் எங்கள் க்ளிப் அணிவதைப் பார்க்கும்போது இன்றும் அதே பெருமையையும் உற்சாகத்தையும் உணர்கிறோம். இது உண்மையிலேயே ஓர் உன்னதமான வடிவமைப்பு” என்கிறார் சில்வியான்.

ஆனால் அந்த வெற்றியில் கிறிஸ்டியன் மற்றும் சில்வியானுக்கு ஏதேனும் வருத்தங்கள் இருந்ததா?

“நாங்கள் காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். பிரான்சில் இதற்கு பாதுகாப்பு இருந்தாலும், வெளிநாட்டில் இல்லை” என்கிறார் கிறிஸ்டியன். “உலகம் முழுவதும் இதன் நகல்கள் உள்ளன. நல்ல விஷயங்கள் மட்டுமே நகலெடுக்கத் தகுதியானவை என்பதால் இது நகலெடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறுகிறார்.

அவர்களை வருந்தச் செய்யாத ஒரு விஷயம் எனக்கு வருத்தத்தை தந்தது.

“நீங்கள் ஆப்பிரிக்க குடியேறி என்பதால் மக்கள் எங்களை முட்டாள்கள் என்று அழைத்தனர். ஆனால், உன்னை என்னுடைய கைகளில் ஏந்தியபோது, முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது” என்று என்னுடைய வளர்ப்புத் தந்தை என்னிடம் கூறினார்.

“நான் உன்னைப் பார்த்ததும், நீ என்னுடைய மகள் என்று உணர்ந்தேன்” என்று என் வளர்ப்பு அம்மா கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »