Press "Enter" to skip to content

நியாண்டர்தால் பெண்களை மனிதர்கள் இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தினார்களா?

  • பெட்ரா ஜிவிக்
  • பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Getty Images

ஹோமோ சேபியன்ஸ்களுடன் ஏற்பட்ட இனக்கலப்பு நியாண்டர்தால்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேலியோ ஆந்த்ரோபாலஜி சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு, இது ஒருவருக்கொருவர் இனப்பெருக்கம் செய்யும் நியாண்டர்தால்களின் எண்ணிக்கையைக் குறைத்து, இறுதியில் அவர்களின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறுகிறது.

“ஹோமோ சேபியன்களுக்கும் நியாண்டர்தால்களுக்கும் இடையே வளங்களுக்காக நிறைய போட்டி இருந்தது என்பதே நீண்ட காலமாக இருக்கும் முக்கிய கோட்பாடு” என்று லூசில் கிரீட் பிபிசியிடம் கூறினார்.

ஆனால், லூசில் கிரீட் மற்றும் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர் இணைந்து நடத்திய ஆய்வு, இதற்கு வன்முறை காரணமல்ல, மக்கள்தொகை கலவை நியாண்டர்தால்களின் மரபணு தொகுப்பை பலவீனப்படுத்தியதாகக் கூறுகிறது.

“நியாண்டர்தால்கள் ஹோமோ சேபியன்களுடன் தொடர்ந்து இனப்பெருக்கம் செய்திருந்தால், அந்த நடத்தை நியாண்டர்தால்களின் அழிவுக்கு வழிவகுத்திருக்கலாம்” என்று ஆய்வு வெளியிடப்பட்ட பின்னர் பேராசிரியர் ஸ்ட்ரிங்கர் கூறினார்.

இவர்களுடன் எந்தவித நேரடித் தொடர்பும் கொண்டிராத ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட இன்று உயிருடன் உள்ள அனைவரிடமும் நியாண்டர்தால்கள் மரபணு காணப்படலாம்.

சுமார் 6,00,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்கள் மற்றும் ஹோமோ சேபியன்கள் ஒருவரையொருவர் பிரிந்த பிறகு, உலகின் பல பகுதிகளில் இருவரும் பரிணாம வளர்ச்சியடைந்தனர்.

ஹோமோ சேபியன்கள் ஆப்பிரிக்காவில் பரிணாம வளர்ச்சியடைந்தாலும், நியாண்டர்தால்கள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் வாழ்ந்தனர்.

“சமீபத்திய கண்டுபிடிப்புகள் 50,000 அல்லது 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஹோமோ சேபியன்கள் இருந்ததைக் காட்டுகின்றன. அதாவது ஐரோப்பாவில் நியாண்டர்தால்கள் இருந்த அதே நேரத்தில் ஹோமோ சேபியன்கள் நாம் முன்பு நினைத்ததை விட நீண்ட காலம் இருந்தனர்” என்கிறார் கிரீட்.

ஹோமோ சேபியன்ஸ் மற்றும் நியாண்டர்தால் இனத்தை எப்படி அறிவோம்?

நியாண்டர்தால்

பட மூலாதாரம், Reuters

நியாண்டர்தால் மரபணுக்கள் ஹோமோ சேபியன்ஸ் மரபணுவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஹோமோ சேபியன்ஸ் மரபணுக்கள் நியாண்டர்தால் மரபணுவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆய்வு முடிவு கூறுகிறது.

“மரபணு பரிமாற்றம் நடந்திருப்பது தெரிகிறது. ஆனால், ஒரு வழியில் மட்டுமே” என்கிறார் கிரீட். இரண்டு இனங்களும் ஒன்றோடொன்று இணைந்திருப்பது நாம் ஏற்கனவே அறிந்ததே. நீங்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே பிறந்திருந்தால், உங்கள் மரபணுவின் சுமார் 2 சதவிகிதம் நியாண்டர்தால்களிலிருந்து பெறப்பட்டது.

இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ள 32 நியாண்டர்தால் மரபணுக்களை கிரீட் மற்றும் ஸ்ட்ரிங்கர் மேலும் ஆராய்ந்தனர்.

இனப்பெருக்கம் வெற்றிகரமாக இருந்ததா என்பது இனப்பெருக்கம் செய்யும் ஜோடியைப் பொறுத்தது என்று இருவரும் கூறுகின்றனர்.

“ஆனால், இதை எப்படி விவரிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதற்கு நம்மிடம் உள்ள தரவுகள் அல்லது கலப்பினமாக்கல் செயல்படும் விதம் காரணமாக இருக்கலாம்” என்கிறார் கிரீட்.

“சில வகை பறவைகள் மற்றும் பாலூட்டிகளுக்கு சில நேரங்களில் கலப்பினமாக்கல் செயல்முறை இரு வழிகளிலும் நடைபெறாது. இது வளமான சந்ததியை உருவாக்குவதில் ஒரு இனத்திற்கு கடினமாக அமையலாம்” என்றும் அவர் கூறுகிறார்.

எதிர்காலத்தில் நியாண்டர்தால் புதைபடிவங்கள் மேலும் கண்டுபிடிக்கப்பட்டு, அவை பகுப்பாய்வு செய்யப்படலாம் என்று நம்பும் அவர், “நாம் எவ்வளவு அதிகமாக பகுப்பாய்வு செய்ய முடியுமோ, அவ்வளவு அதிகமாக இந்த கோட்பாடுகளை சோதிக்க முடியும்” என்கிறார்.

பாலியல் சந்திப்புகள்

நியாண்டர்தால்

பட மூலாதாரம், Getty Images

அனைத்து பாலியல் சந்திப்புகளும் ஒருமித்ததாக இருந்திருக்காது என்ற மற்றொரு கோட்பாட்டையும் கிரீட் மற்றும் ஸ்ட்ரிங்கர் தங்கள் ஆய்வில் முன்வைத்தனர்.

“ஒருவேளை ஹோமோ சேபியன்ஸ் பெண்களைத் தேடிச் சென்றிருக்கலாம் அல்லது பிற இனக்குழுவில் வளமான இணையைக் கண்டுபிடிக்க தங்கள் வலிமையை பயன்படுத்தியிருக்கலாம்” என்று கிரீட் கூறுகிறார்.

இந்த மாதிரியான நடத்தை சில மனிதக் குரங்குகளிடம் காணப்பட்டதாக அவர் கூறுகிறார்.

“ஆண்கள் தங்கள் குழுவில் இனப்பெருக்கத்திற்கு போதுமான பெண்கள் இல்லை எனும் போது, அவர்கள் மற்ற குழுவிற்குச் சென்று அங்கிருக்கும் பெண்களை அபகரித்திருக்கலாம்” என்றும் கிரீட் கூறுகிறார்.

ஆனால், இது குறித்து பெரிதும் அறியப்படவில்லை.

நியாண்டர்தால்கள் மற்றும் ஹோமோ சேபியன்கள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது இருவருக்கும் எளிதாக இருந்திருக்காது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

“அவர்களால் ஒரே மாதிரியான ஒலிகளை உருவாக்க முடியாமல் இருந்திருக்கலாம், அவர்களுக்கு ஒரே மாதிரியான உச்சரிப்பு பேச்சு இல்லை, அவர்களின் மூளை வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டது, அவர்களின் உடல் தோற்றமும் வித்தியாசமாக இருந்தது” என்கிறார் கிரீட்.

“நியாண்டர்தால்கள் மிகவும் வலுவானவர்கள். குறுகிய கைகள் மற்றும் கால்களை உடையவர்கள். கண்களுக்கு மேல் உள்ள புருவம் அவர்களின் தனித்த அடையாளம்” என்று கிரீட் கூறுகிறார்.

எனினும், ஆண் மற்றும் பெண் நியாண்டர்தால்கள் எவ்வளவு வித்தியாசமாக இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பெண் நியாண்டர்தால்

பட மூலாதாரம், Getty Images

“பொதுவாக எலும்புக்கூடுகள் துண்டு துண்டாகவும், உடைந்ததாகவும் இருக்கும். மேலும் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டுச் சொல்ல எங்களிடம் அதிக இடுப்பு எலும்புகள் இல்லை” என்று கூறும் கிரீட், எதிர்காலத்தில் அவற்றை அடையாளம் காண முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளார்.

“நாம் முன்பு கற்பனைகூட செய்ய முடியாத சில விஷயங்களை புதிய முறைகள் சாத்தியமாக்கியுள்ளன. இது ஒரு பிரம்மாண்ட புதிர் போன்றது. நாம் சிந்திக்கும் விதத்தை இது மாற்றுவதால் புதிய கண்டுபிடிப்புகளோடு இந்தப் புதிர் பெரிதாகிக்கொண்டே செல்கிறது” என்கிறார் கிரீட்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »