Press "Enter" to skip to content

“பேனா சிலை வைத்தால் உடைப்பேன்” – கருத்து கேட்பு கூட்டத்தில் கொந்தளித்த சீமான்

பட மூலாதாரம், SEEMAN

கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படும் பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்,” என்று கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்தி வரும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெரும் மோதலும் சலசலப்பும் ஏற்பட்டது.

மு.கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் கருத்துக்கேட்புக் கூட்டம் கலைவாணர் அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  

கருத்துக் கேட்புக் கூட்டம் காலை 10:30 மணி அளவில் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை ஒன்பது மணியிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான ஆட்கள் அங்கு திரள ஆரம்பித்தனர். தி.மு.கவினர் பெரும்பாலான அளவில் அங்கே கூடியிருந்தனர்.

மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கருத்தைத் தெரிவிக்கப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்ததால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

கூட்டம் துவங்கியவுடன், இந்தத் திட்டம் குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. இந்தத் திட்டம் எங்கே, எப்படி அமையும், இதற்கு ஆகும் செலவு, இதன் கட்டுமானப் பணிகள் எப்படி நடைபெறும் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இதற்குப் பிறகு கருத்துக் கேட்புக் கூட்டம் துவங்கியது. இதற்கென பெயர்களைப் பதிவு செய்திருந்தவர்கள் ஒவ்வொருவராகப் பேச அழைக்கப்பட்டனர்.

முதலில் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவர் பேசினார்.  “ஏற்கெனவே மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் சூழலில் இத்தகைய நினைவுச் சின்னம் அமைக்கக்கூடாது. கூவம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இந்த நினைவுச் சின்னம் அமைப்பதால் அது மீன் வளத்தைப் பாதிக்கும்,” என்று கூறினார்.

அவர் இதுபோல எதிரான கருத்தைத் தெரிவித்ததும் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வந்திருந்த தி.மு.கவினர் கூச்சலிட்டு, அவரை பேச்சை நிறுத்தும்படி கூறினர். அதேபோல, ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.கவை சேர்ந்தவர்களும் இந்த நினைவுச் சின்னத்தைக் கடலுக்குள் அமைக்கக்கூடாது எனக் கூறினர்.

அப்போதும் தி.மு.கவினர் எழுந்து அவர்களைத் தொடர்ந்து பேச அனுமதிக்கக்கூடாது எனக் கூச்சலிட்டனர்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு எழும்போது, பேசவிடாமல் கூச்சலிடும் ஒரு நபர்

இதற்குப் பிறகு திருமுருகன் காந்தி பேசும்போது, திராவிட இயக்க சாதனைகளை பள்ளிக்கூடத்தில் சொல்லித்தர வேண்டும். இதுபோன்ற நினைவுச் சின்னம் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேச அழைக்கப்பட்டார். ஆனால், அவர் பேச ஆரம்பித்ததில் இருந்தே தி.மு.கவினர் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவர் பேசியது சரியாகக் கேட்கவில்லை. தி.மு.கவினரை அமைதிபடுத்தும்படி, அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், தொடர்ந்து கூச்சல் எழுந்த நிலையில், அவரும் தொடர்ந்து பேசினார்.

பிறகு அவரை பேச்சை முடித்துக் கொள்ளும்படி கூட்டத்தை நடத்தியவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் பேச்சை நிறுத்த மறுத்தார். இதையடுத்து அவரது மைக் நிறுத்தப்பட்டது. இதனால், கோபமடைந்த அவர் மேடையிலேயே அமர்ந்து தர்ணா செய்ய ஆரம்பித்தார். பிறகு அவர் காவல்துறையால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

பல்வேறு மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

இதற்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவர் அழைக்கப்பட்டதி இருந்து கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கூச்சல் எழுந்தது.

“கடலில் 8551.13 சதுர மீட்டரை நீங்கள் எடுக்கிறீர்கள். அதில் பேனா வைக்க வேண்டும் என்றால், கல்லைக் கொட்ட வேண்டும், மண்ணைக் கொட்ட வேண்டும். இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அங்கிருக்கும் பவளப்பாறைகள் பாதிக்கப்படும்,” என்று அந்தத் திட்டத்திற்கு எதிராக கருத்தைத் தெரிவிக்க ஆரம்பித்ததும் தி.மு.கவினர் மேடைக்கு அருகில் நெருங்கி வந்து கூச்சலிட்டனர். “அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை” என்றனர்.

சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன்

அப்போது சீமான், “உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா?

வேண்டுமென்றால் அறிவாலயத்தில் போய் வையுங்கள். நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பார்களாம்.

இந்தச் சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும்.  சும்மா மீனவ சங்கம் என்ற பெயரில், அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது?” என்றபோது தி.மு.கவினர் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

ஆனால் தொடர்ந்து பேசிய சீமான், “நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி,” என்று பேசிவிட்டு வெளியேறினார். அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் வெளியேறினர்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தி, அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை ஏற்பது, எதிர்க் கருத்து தெரிவித்தால், அதை எதிர்த்துக் கூச்சலிடுவது என்பது ரொம்ப அநாகரிகம்.  

சீமான்

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஏற்கிறோம். ஆனால், கடலுக்குள் வைக்கக் கூடாது. அவ்வாறு வைப்பதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். கிட்டத்தட்ட அரை ஏக்கர் பரப்பளவை கடலில் இருந்து எடுக்கின்றனர்.

கடலுக்குள் கல்லையும் மண்ணையும் கொட்டி அதன் மேல் அந்தப் பேனாவை நிறுவ வேண்டும். எதற்காக?

நினைவு மண்டபம் கட்டுகிறீர்கள், அதற்கு முன் வையுங்கள். அறிவாலயத்தின் முன் வையுங்கள். யார் உங்களை எதிர்க்கப் போகின்றனர்?

பள்ளிக் கூடங்களைப் புனரைமைக்க நிதி இல்லை எனக் கூறி நிதி திரட்டும் அரசுக்கு, இந்தப் பேனா வைக்க மட்டும் ரூ. 81 கோடி எங்கிருந்து வருகிறது?” என்றார்.

இதற்குப் பிறகு விருதுநகரைச் சேர்ந்த ஒரு பெண் செயற்பாட்டாளர் பேச வந்தார். அவர் இந்தப் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதற்கும் தி.மு.கவினர் கூச்சலிட்டனர்.

இதற்குப் பிறகு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் பேசும்போது,  “கடல் மட்டம் உயர்வதால் சென்னை நகரம் அபாயத்தில் இருக்கிறது. கருணாநிதி இருந்தால் இதைச் செய்வாரா என்பதை யோசித்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

இத்துடன் இந்தக் கூட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கருத்துகளைத் தெரிவிக்க பெயர் கொடுத்திருந்த பலரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கோரினர். இருந்தபோதும் கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் இந்தக் கூட்டம் நடத்தப்பட்ட விதம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.

“பல கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மாலை வரை நடந்திருக்கின்றன. குஜராத்தில் அடுத்த நாள் அதிகாலை வரை நடந்திருக்கிறது. இவர்கள் இப்படி முடிக்கிறார்கள். யாரையும் பேசவிடவில்லை. இது அரசுக்கு அவப்பெயரைத்தான் ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »