Press "Enter" to skip to content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு – நெருக்கடியில் இருக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின் களம் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக மாறி வருகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட இரு துருவங்களாக செயல்பட்டு வரும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரண்டு அணிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இவர்களில் எவருடைய தலைமையை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என்பது இதுவரை தீர்மானிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

இந்த இருவரது தலைமையுடனும் பாரதிய ஜனதா கட்சி இணக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தம்முடனேயே பிரதமர் நரேந்திர மோதி அதிகம் நெருக்கமாக இருப்பதாக கூறி வருகிறார்.

இதேவேளை, பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவை எடுக்கும் முன்பாகவே தமது தரப்பு வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டு தேர்தல் பரப்புரையையும் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இத்தனைக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதும் முதலில் தேர்தல் பணிக்குழு அமைத்தது பாஜகதான்.

அந்த நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், அதிமுகவின் இரண்டு அணிகளின் தலைமையுடன் பாஜக மாநிலத் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது.

அதில் ஒருமித்த பொதுவான கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்பாகவே எடப்பாடி பழனிசாமி தமது தரப்பு வேட்பாளராக தென்னரசுவை அறிவித்தார் அவரை ஆதரித்து நடந்த பரப்புரை கூட்டங்களிலும் கட்சி பேனர்களிலும் பாஜக தலைவர்களின் படங்கள், பாஜக பெயர் என ஏதும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் தமது தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் என்பவரை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அவரை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், ஒருவேளை இடைத்தேர்தலில் பாஜக தமது வேட்பாளரை அறிவித்தால், செந்தில்முருகன் திரும்பப்பெறப்படுவார் என்று கூறினார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுகவில் ஈபிஎஸ் அல்லது ஓபிஎஸ் அணிகளில் யாராவது ஒருவரை ஆதரிக்க வேண்டும் அல்லது இருவரையும் ஒதுக்கிட விட்டு தனியாக ஒரு வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாஜக மாநிலத்தலைமை தள்ளப்பட்டு இருக்கிறது.

இடைத்தேர்தலில் பாஜக மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்தியிடம் பேசியபோது, “எங்களது கட்சியைப் பொறுத்தவரை கட்சியின் மேலிடம் இறுதி முடிவை எடுக்கும் என்றும் ஓரிரு நாட்களில் தெளிவான பதில் கிடைக்கும்,” என்கிறார்.

அதிமுகவைச்சேர்ந்த இரண்டு அணிகளும் பாஜகதான் முடிவைத் தெரிவிக்கும் என்று கூறி விட்டு, தற்போது இரண்டு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பற்றி கேட்டபோது, ”எங்கள் மாநில தலைவர் டெல்லி செல்கிறார். ஓரிரு நாட்களில் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். எங்களைப் பொறுத்தவரை அதிமுகவில் இருப்பது உள்கட்சி பூசல்தான். அதில் நாங்கள் எந்த கருத்தும் சொல்லமுடியாது. நாங்கள் தேசிய கட்சி என்பதால் நாங்கள் கட்சி மேலிடத்தில் எடுக்கும் முடிவைவைத்து தான் பதில் சொல்லமுடியும்,”என்கிறார்.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்களில் பெரும்பாலும், ஆளும்கட்சிதான் வெற்றி பெற்ற வரலாறு இருப்பது குறித்து கேட்டபோது, ”பண பலம் இருப்பவர்கள் அதுபோல வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால் எங்களது நோக்கம் அதற்கு மாறானது. பொறுத்திருங்கள், எங்களை முடிவைச் சொல்கிறோம்,”என்று முடித்துக்கொண்டார் நாராயணன் திருப்பதி.

”அதிமுகவில் நிறுத்தப்பட்டது ஒரு வேட்பாளர்தான்”

ஜெயக்குமார்

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இரண்டு அணிகளும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்று கேட்டபோது, “அதிமுக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஒருவர்தான். ஓபிஎஸ் அணி மூலம் நிறுத்தப்படுபவர் ஒரு சுயேச்சை வேட்பாளர்,” என்கிறார்.

”அதிமுக என்ற கட்சி ஈபிஎஸ் தலைமையில்தான் இயங்குகிறது. ஓபிஎஸ் அணி என்ற ஒரு அணி இருப்பதாக நாங்கள் கருதவில்லை. எங்களைப் பொறுத்தவரை பாஜகவிடம் நாங்கள் ஏற்கெனவே பேசி முடிவு செய்துவிட்டோம். கடந்த முறை தா.ம.க போட்டியிட்டது. இந்த முறை நாங்கள் நேரடியாக போட்டியிடுகிறோம். வேட்பாளரை அறிவித்து விட்டோம். நாங்கள் பின்வாங்க மாட்டோம்.நாங்கள் முடிவு செய்து எங்கள் முடிவை வெளியிட்டு விட்டோம். அதனை பின்வாங்கும் தேவை எங்களுக்கு இல்லை,”என்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் அதிமுகவின் தலைமை குறித்த வழக்கில் தீர்ப்பு ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக இருந்தால்,இபிஎஸ் அணி தொடர்ந்து போட்டியிடுமா என்று கேட்ட போது, ”தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். நாங்கள் போட்டியிடுவது உறுதி. நாங்கள் எங்கள் தொண்டர்களை நம்பியிருப்பதால், முடிவை மாற்றத்தேவையில்லை,” என்கிறார்.

ஓபிஎஸ் முடிவுக்கு என்ன காரணம்?

ஓபிஎஸ் அணியைப்பொறுத்தவரை, முதலில் பாஜகதான் வேட்பாளர் குறித்து அறிவிக்கும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போது வேட்பாளர் ஒருவரை அறிமுகம் செய்துவிட்டு, பாஜக வேட்பாளரை அறிவித்தால், தாங்கள் அறிவித்த வேட்பாளரைப் பின்வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றது.

செந்தில்முருகன் என்ற வேட்பாளரை அறிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பது நான்தான். வேட்பாளரை முடிவு செய்தால், அதற்கு உரிய விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடத் தயார் என்றும் நான் தெரிவித்தேன். என்னிடம் யாரும் எந்த தகவலையும் சொல்லவில்லை. தற்போது நான் வேட்பாளரை அறிவிக்கிறேன். பாஜக ஒரு தேசிய கட்சி, அவர்கள் பல யோசனைகளில் இருப்பார்கள் என்பதால், அவர்கள் ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவுசெய்தால், எங்கள் வேட்பாளரை திரும்பப்பெற்றுவிடுவோம்,”என்றார்.

”ஈபிஎஸ் அணியில் மனஉளச்சல்”

ஓபிஎஸ்

ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளரான புகழேந்தி, ஈபிஎஸ் அணியில் உள்ள மூத்த அமைச்சராக இருந்த பலரும் கடும் மனஉளச்சலில் இருப்பதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததும் அவர்கள் ஓபிஎஸ் அணிக்கு வந்துவிடுவார்கள் என்றும் பாஜக தங்களது கூட்டணியில் தொடரும் என்றும் சொல்கிறார்.

”எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை. முதலில் போட்டியிட முடிவு செய்தது ஓபிஎஸ்தான், பாஜக தேசிய கட்சியாக இருப்பதால், அவர்கள் முடிவை சொல்லலாம் என்றார். தற்போது இபிஎஸ் வேட்பாளரை அறிவித்துள்ளார், கட்சியின் நன்மை கருதி ஓபிஎஸ் ஒரு வேட்பாளரை நிறுத்துகிறார், அதேநேரம் தேசிய கட்சியின் தேவையைப் பொறுத்து முடிவு எடுப்பதில் எந்த தவறு இல்லை. உண்மையான அதிமுக எப்படி செயல்படவேண்டுமோ அதுபோலத்தான் நாங்கள் செயல்படுகிறோம்,” என்கிறார் புகழேந்தி.

அரசியல் விமர்சகர்களின் பார்வை

ஈபிஎஸ் ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது எவ்வளவு முக்கியமோ அதேஅளவு முக்கியத்துவத்தை அதிமுகவில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி கடந்த வாரம் வரை நீடித்தது.

ஆனால் இபிஎஸ் தானாக வேட்பாளரை அறிவித்துவிட்டதால், பாஜகவின் ஆதரவை அவர் எதிர்பார்க்கவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் குபேந்திரன், ஈபிஎஸ் தானாக வேட்பாளர் ஒருவரை அறிவித்தது மற்றும் வேட்பாளர் அறிவிப்பு குறித்த நிகழ்வில் இருந்த பேனரில் பாஜக தலைவர்களின் படம் இடம்பெறாதது ஆகியவை பாஜக கூட்டணி தனக்கு தேவையில்லை என்ற ஈபிஎஸ் கருத்தை பிரதிபலிப்பதாகவே பார்க்க முடிகிறது என்கிறார்.

”கூட்டணிக் கட்சியான பாஜகவிடம் பேசுவதற்கு ஓபிஎஸ் நேரில் சென்றார். முதலில் பாஜக முடிவைச் சொல்லும் என்றார், பாஜகவின் முடிவை வைத்துத்தான் தனது முடிவு இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவந்தார். தற்போதுகூட வேட்பாளரை அறிவித்துவிட்டாலும், பாஜக வேட்பாளரை அறிவித்தால் தனது வேட்பாளரை திரும்பப்பெற வாங்குவேன் என்றும் சொல்கிறார். ஆனால் இபிஎஸ் அணியைப் பொறுத்தவரை, இபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு நேரில் செல்லவில்லை, தனது குழுவை அனுப்பினார். பாஜகவிடம் இருந்து பதில் வரவில்லை என்றவுடன் தனது வேட்பாளரை அறிவித்துவிட்டார். இபிஎஸ் அணியின் முடிவை அடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார் என்றுதான் பார்க்கமுடிகிறது. அதனால், பாஜகவிடம் தெளிவு தேவைப்படுகிறது என்று தோன்றுகிறது,”என்கிறார்.

மேலும், அதிமுகவில் எந்த அணியைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்திற்கு பாஜகவுக்குத் தீர்வு தரும் தேர்தலாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அமைந்துள்ளது என்றும் கூறுகிறார் குபேந்திரன்.

”அதிமுகவின் தலைமை தொடர்பான வழக்கில் எந்த அணிக்கு சாதகமாகத் தீர்ப்பு வருகிறதோ, அந்த அணியை பாஜக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. அதனால், தற்போது எந்த அணிக்கு ஆதரவாக இருப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறது. அதனால் பாஜகவின் கூட்டணி யார், அதிமுகவின் பிளவுக்குத் தீர்வு என்ன என பல கேள்விகளுக்கு இந்த தேர்தல் பதில் சொல்லப்போகிறது. ஆனால் இபிஎஸ் அணியைப் பொறுத்தவரை, பாஜகவின் ஆதரவை இனி எதிர்நோக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது,”என்கிறார் குபேந்திரன்.

அதிமுகவின் இரண்டு அணிகளும் தேர்தலில் போட்டியிட்டால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். ஆனால் ஒவ்வொரு முறையும், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு தான் காரணமாக ஒரு காலத்திலும் இருக்கப்போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் ஓபிஎஸ் வலியுறுத்துகிறார்.

இடைத்தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகளும் பாஜகதான் முடிவை அறிவிக்கும் என்று கூறியபோது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் இருந்தது.

எடப்பாடி பழனிசாமி

“தற்போது, இரண்டு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால், அதிமுகவின் தலைமை குறித்த எதிர்பார்ப்பு மேலும் கூடுகிறது,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங்.

”முதல் கட்டமாக இரண்டு அணிகளும் போட்டியிடுவதைத் தவிர்க்கத்தான் இருவரும் பாஜகவை நாடினர். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு தாமதம் ஆகும் என்றால், இரண்டு அணிகளும், பாஜக போட்டியிடட்டும் என்று எதிர்ப்புகளின்றி விட்டுக்கொடுப்பார்கள்.

தற்போது தீர்ப்பு வரும் தேதியும் நெருங்கிவிட்டதால், இரண்டு அணிகளும் தங்களது இறுதி பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு அணிகளும் தெளிவாகப் பார்க்கவேண்டியது ஒரு விஷயத்தைதான். அதாவது, இரட்டை இலை சின்னத்திற்குத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.

கட்சியின் தலைமையை யார் பெறுகிறார்களோ, அவர்கள் சின்னத்தைப் பெறுவார்கள் என்பதுதான் முக்கியம். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி ஓங்கியிருக்கும் என்பதால், அந்த தேர்தல் வெற்றியைவிட கட்சியின் தலைமையை யார் கைப்பற்றுகிறார்கள், பாஜக கூட்டணியை யார் தக்கவைத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மையான போட்டி,” என்கிறார்.

பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் தேர்தலா இந்த இடைத்தேர்தல் என்று கேட்டபோது, அவ்வாறான நெருக்கடிதான் குழப்பங்களுக்கு முடிவு தரும் என்கிறார் பகவான் சிங்.

”பாஜக நேரடியாக திமுகவுடன் மோத முடிவு செய்யுமா என்பதை தற்போது சொல்ல இயலாது. அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்கிறது என்றாலும், இந்த குழப்பம்தான் புதிய வாய்ப்புகளை அதிமுகவில் உருவாக்கப்போகிறது. பாஜக யார் பக்கம் நிற்கவேண்டும் என்று இன்னும் தெளிவாக முடிவுசெய்யவில்லை . அதேநேரம் பாஜக தனது பலத்தை எப்படி தமிழ்நாட்டில் அதிகரிக்கப் போகிறது என்பதையும் இந்த தேர்தல் முடிவு செய்யும்,”என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »