Press "Enter" to skip to content

மத்திய வரவு செலவுத் திட்டம்: யாருக்கு சுகம்? யாருக்கு சுமை? விரிவான ஆய்வு

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசின் நிதி நிலை அறிக்கை புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவருகின்றன. இந்த நிதி நிலை அறிக்கையின் சாதக பாதக அம்சங்கள் என்ன? ஒரு விரிவான கட்டுரை.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யும்போது, ஏழு துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உள்ளடங்கிய இடங்களுக்கும் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, பசுமை வளர்ச்சி, இளைஞர்கள், நிதித்துறை ஆகியவைதான் அந்த ஏழு பிரிவுகள்.

முதலில் சில அடிப்படை எண்களைப் பார்க்கலாம். இந்திய வரவு செலவுத் திட்டத்தின் இந்த ஆண்டு மதிப்பு 45,03,097.45 கோடி ரூபாய். ஆனால், வருவாய் அந்த அளவுக்கு இல்லை என்பதால், 17,86,816 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்கப்படும்.

இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2025-26க்குள் இது 4.5 சதவீதமாகக் குறையும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.

அதிகரிக்கும் கடன், குறையும் மானியங்கள்

இந்தியா 2023-24 வரவு செலவுத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

22-23ஆம் ஆண்டிலும்கூட கிட்டத்தட்ட மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 42 சதவீதம் கடன் வாங்கப்பட்டது. அதில், 11,10,546 லட்சம் கோடி அளவுக்கு நடப்புக் கணக்குக்கு செலவுசெய்யப்பட்டது. இந்த ஆண்டு மத்திய அரசு கட்ட வேண்டிய வட்டித்தொகை மட்டுமே 10,79,971 கோடி ரூபாயாகும். இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

இந்த நிதி நிலை அறிக்கையைப் பொறுத்தவரை, மானியங்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டிருப்பதை கவலைக்குரிய விஷயமாக நிதி நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு ஒதுக்கீடுகளோடு ஒப்பிட்டால், இந்த ஆண்டில் உணவுக்கான மானியம் 89,844 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, உரத்திற்கான மானியம் 50,120 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியக் குறைப்பையும் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக சுமார் ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மானியங்களைப் பொறுத்தவரை, ஏழைகளுக்கும் மத்திய தர வகுப்பினருக்கும் செல்லக்கூடியவை என்பதால், இவை அந்தப் பிரிவினரைக் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

அதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு கடந்த ஆண்டில் 89,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த ஒதுக்கீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிலிருந்து 29,400 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு, சுமார் 60,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட மிகக் குறைவான தொகை இதுதான்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் அளிக்கும் பிஎம் கிசான் திட்டத்திற்கு கடந்த ஆண்டில் 6,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 6,000 கோடி ரூபாய் மட்டுமே செலவுசெய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடே 6,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இது போன்று நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டு (2022-23) நிதி நிலை அறிக்கையில் சில முக்கியத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட மிகக் குறைவாகவே செலவுசெய்யப்பட்டிருப்பதை நிதி நிலை அறிக்கை ஆவணங்கள் காட்டுகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் 4,397 கோடி ரூபாயும் சுகாதாரத் துறையில் 9,255 கோடி ரூபாயும் சமூக நலத் துறையில் 5,278 கோடி ரூபாயும் குறைத்து செலவழிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி குறைப்பால் எவ்வளவு சுமை?

அதேபோல, மத்திய அரசு இதுவரை மிகப் பிரபலமாக முன்வைத்த திட்டங்கள் அனைத்திலும் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டதைவிட குறைவாகவே செலவழிக்கப்பட்டிருக்கின்றன. ஜல் ஜீவன் திட்டம், கல்வித் துறை, ஸ்வச் பாரத், க்ருஷ்யா நிதி யோஜனா, மிஷன் வாத்சல்யா, ராஷ்ட்ரிய க்ருஷி விகாஸ் யோஜனாதொலைபேசிற திட்டங்கள் அனைத்திருக்கும் ஒதுக்கப்பட்டதைவிட குறைவான நிதியே செலவிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 3,34,339.42 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில் 2,70,935.60 கோடி ரூபாயே அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் முக்கியமான செலவுகளை மாநிலங்களே செய்ய வேண்டிய நிலையில், இப்படி நிதி ஒதுக்கீடு குறைவது முக்கியமான மக்கள் நலத் திட்டங்களைப் பாதிக்கும்.

புதிய வரித் திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்களுக்கான வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டத்தில் வெறும் .008 சதவீதம் மட்டும்தான்.

இந்தியா 2023-24 வரவு செலவுத் திட்டம்

பட மூலாதாரம், ANAND SRINIVASAN FACEBOOK

“இந்தச் சலுகையை அளிப்பதால் சாதாரண மக்களுக்கு என்ன பலன்? மாதம் 55ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு இது உதவப்போகிறது. பழைய வரி செலுத்தும் முறையில் இருந்து புதிய வரி செலுத்தும் முறைக்கு ஆட்களை ஈர்ப்பதற்கான ஒரு நடவடிக்கை என்பதற்கு மேல் இதில் ஏதும் இல்லை” என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன். அதேபோல, ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்துபவர்களுக்கான சர்-சார்ஜ் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வேறு சிலர் இதை வரவேற்கிறார்கள். இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், சம்பளம் அதே அளவு உயரவில்லை. ஆகவே மத்திய தரவர்க்கத்தைப் பொறுத்தவரை பொருட்களை வாங்க கூடுதல் செலவு செய்ததோடு, கூடுதலாக நேரடி வரியையும் செலுத்திவந்தது. தற்போது வருமான வரி வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது இவர்களுக்கு நிச்சயம் உதவும். இதனால், அந்தக் குடும்பங்களின் சேமிப்பு அதிகரிக்கலாம்.

பொதுத்துறை பங்குகள் எவ்வளவு விற்பனை?

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பொதுத் துறை பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 51,000 கோடி ரூபாயைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. “கடந்த ஆண்டும் இதேபோலத் திட்டமிட்டார்கள். ஆனால், நினைத்த அளவு திரட்ட முடியவில்லை. இந்த ஆண்டும் அதேதான் நடக்கும்? எந்தப் பொதுப் பங்குகளை எப்படி விற்கப் போகிறார்கள் என்பதற்கு ஏதாவது திட்டமிருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்புகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் செலவழிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாத நிலையில், திறன்களைப் பெற்றோர் வெளிநாடுகளை நாடிச் செல்ல ஆரம்பிப்பார்கள் என்பதும் ஒரு கவலையாக இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மறைமுக வரி தொடர்ந்து அதிகரித்துவருவது கவலைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. நேரடி வரியைப் போல் அல்லாமல் மறைமுக வரி எல்லாத் தரப்பினரையும் பாதிக்கும் என்பதால், அதில் செய்யப்படும் சீர்திருத்தங்களே எல்லாத் தரப்பினருக்கும் பலனளிக்கும் என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »