Press "Enter" to skip to content

ஹிண்டன்பர்க் விளைவு: அதானி எஃப்.பி.ஓ. பங்கு விற்பனை திரும்பப்பெற – சொன்ன காரணம் என்ன?

பட மூலாதாரம், Adani Group

ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) மூலமாக 20,000 கோடி ரூபாய் திரட்டும் வேலையில் இறங்கியிருந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அந்த முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

பங்கு வாங்குவதற்காகப் பணம் செலுத்திய அனைவருக்கும் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவு தொடர்பாக காணொளி மூலமாக விளக்கம் அளித்துள்ளார் கௌதம் அதானி.

அதானி குழுமத்தின் அறிவிப்பு

கடந்த ஜனவரி 27ம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், ஜனவரி 24ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது தீவிர குற்றச்சாட்டுகளை சுமத்தி ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது.

அதானி குழுமம் பங்குச்சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும், ஏராளமான கடன்களை வாங்கியிருப்பதாகவும், வரி ஏய்ப்புக்கு சாதகமான மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் சந்தேகத்துக்கு இடமான நிறுவனங்கள் அதானியில் முதலீடு செய்திருப்பதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியது.

இந்த அறிக்கை வெளியான பிறகு பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு சரிந்தது.

இவ்வளவு களேபாரம் நடந்தாலும், திட்டமிட்டபடி தமது எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையை 27ம் தேதி தொடங்கியது அதானி எண்டர்பிரைசஸ். ஆனால், அவற்றை வாங்குவதற்கு முதலீட்டாளர்களிடம் பெரிய ஆர்வம் இல்லை.

எஃப்.பி.ஓ வெளியீட்டில் அதானி குழுமம் வெளியிட்ட பங்குகளுக்கு 112% முதலீட்டாளர்கள் பதிவு செய்திருந்ததாக இருந்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

அதானி குழுமத்தில் சாதாரண மக்கள் யாரும் முதலீடு செய்யவில்லை என்றும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பணக்காரர்கள் சிலர் முதலீடு செய்திருந்தாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று கூடிய அதானி குழுமத்தின் இயக்குநர்கள் குழு(Board of Directors) FPO தொடர்பாக விவாதித்தது. கூட்டத்திற்கு பின்னர், வெளியான செய்திக் குறிப்பில் இப்போதையை சந்தைச் சூழலில் ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபரை தொடரப் போவதில்லை என்று அதானி குழுமத்தின் இயக்குநர்கள் குழு முடிவு செய்திருப்பதாக அந்தக் குழுமம் அறிவித்தது.

கௌதம் அதானி சொன்ன விளக்கம் என்ன?

அதானி

பட மூலாதாரம், REUTERS/AMIR COHEN

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ‘ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்’ திரும்பப்பெறப்பட்டது குறித்து காணொளி வெளியிட்டு விளக்கம் அளித்தார் அந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி.

அதில், “அதானி நிறுவனத்தின் பங்குகள் தற்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இப்போது பங்குகளை வெளியிடுவது தார்மீக அடிப்படையில் சரியாக இருக்காது என இயக்குநர்கள் குழுமம் கருதுகிறது. அதனால் முதலீட்டாளர்களின் நலன் கருதி எஃப்.பி.ஓ பங்கு விற்பனையை நிறுத்தி வைக்கிறோம்,” என்று பேசி இருக்கிறார்.

“அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையிலும், எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் கட்டுப்படுகிறேன். இப்போதையை சந்தைச் சூழலில் முதலீட்டார்களின் பணத்தை நஷ்டத்தில் இருந்து காக்க, FPO-வை திரும்ப பெறுகிறோம். பங்குகளை வாங்குவதற்குப் பணம் செலுத்தியிருந்த அனைவருக்கும் பணம் திரும்ப வழங்கப்படும். அதானி குழுமத்தின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி,” என்று அதானி தெரிவித்துள்ளார்.

அதானி சொத்து மதிப்பு சரிந்தது எப்படி?

அதானி

பட மூலாதாரம், Forbes

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சந்தையில் கடுமையாக சரிவை சந்தித்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்த கௌதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பும் கடுமையாக சரிந்தது.

இதனால், உலகப் பணக்காரர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருந்த கௌதம் அதானி, சடசடவென சரிந்து வீழ்ந்தார். ஒரே வாரத்தில் அவர் வியாழக்கிழமை நிலவரப்படி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்துக்குத் தள்ளப்பட்டார் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியல்.

பங்குகள் சரிவும், செபி விசாரணையும்

இந்திய அரசின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை காலை தொடங்கிய மும்பை பங்குச் சந்தையின் குறியீடுகள் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன.

குறிப்பாக அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய விலையை விட 10% வீழ்ச்சி அடைந்துள்ளது. எஃப்.பி.ஓ. வெளியீட்டை திரும்பப்பெற பெறுவதாக அதானி அறிவித்ததன் தாக்கம் இன்று பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. இன்று காலை 10 மணிக்கு அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1,921.85 ரூபாயாக இருக்கிறது.

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜியோஜிட் நிதி நிறுவனத் தலைமை முதலீட்டு ஆலோசகர் வி.கே. விஜயகுமார், “அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட இந்த ஏற்ற இறக்கம் இன்னும் சில காலம் நீடிக்கும். அதன் பிறகு சந்தை பழைய நிலைக்கு திரும்பும். அதற்கான அறிகுறிகள் அமெரிக்க பங்குச் சந்தையில் தெரியத் தொடங்கி இருக்கிறது,” என்று கூறினார்.

அதானி குழுமத்தின் பங்குகளின் வீழ்ச்சி தொடர்பாக இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) விசாரணை நடத்தி வருவதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »