Press "Enter" to skip to content

இலங்கை கடன் மறுசீரமைப்பு: இந்தியா ஆர்வம் காட்டும்போது சீனா பின்தங்க காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க தயாராகவுள்ள பின்னணியில், அதற்கு ஆதரவு வழங்க சீனா முன்வந்துள்ள போதிலும், சீனாவின் ஆதரவு போதுமானதாக இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வித உதவிகளையும் அமெரிக்கா செய்யும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் நம்பகரமான உத்தரவாதத்தை இந்தியா வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

எனினும், சீனா இதுவரை வழங்கிய உத்தரவாதம் போதுமானதாக இல்லை எனவும், சீனாவிடமிருந்து நம்பகமான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலான சான்றிதழை, சீனா வழங்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சீனா அமெரிக்கா

பட மூலாதாரம், Ambassador Julie Chung Twitter

சீனா வழங்கிய உத்தரவாத சான்றிதழ்

சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடனை மீள செலுத்துவதற்கு இரண்டு ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்க வேண்டிய 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை பெற்றுக்கொள்வதற்கு, தாம் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாகவும் சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி கடிதமொன்றின் ஊடாக கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு கடன் வழங்கப்பட வேண்டுமாயின், கடன் வழங்கிய நாடுகளின் இணக்கம் அவசியமானதாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கைக்கு பாரியளவில் கடன் வழங்கிய நாடுகள் மத்தியில், இந்தியா மற்றும் சீனா முன்னணி வகிக்கின்றன.

கடன் மறுசீரமைப்பிற்காக இந்த இரு நாடுகளின் இணக்கத்தை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் பாரிய முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.

இதன் பிரதிபலனாக கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கடந்த 19ம் தேதி இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து, அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இதையடுத்து, கொழும்பில் கடந்த 20ம் தேதி இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர ஆகியோர் இணைந்து கூட்டு ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

இலங்கை சீனா அமெரிக்கா

பட மூலாதாரம், PMD SRI LANKA

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான இணக்க சான்றிதழை தாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கையளித்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்திருந்தார்.

”ஏனையோர் செய்வார்கள் எனக் காத்திருப்பதைத் தவிர்த்து, நாங்கள் சரியானது என நம்புவதை செய்தோம்,” என எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை, இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்குக் காலதாமதமின்றி அனுப்பியுள்ளதாகவும் ஏனைய கடனாளிகளும் அவ்வாறே செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் இணக்கப்பாடு கிடைக்கப் பெற்றதை அடுத்து, சீனாவின் இணக்கப்பாட்டிற்காக இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.

இந்த நிலையில், சீனாவும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு தற்போது இணக்கம் தெரிவித்துள்ளது.

எனினும், சீனாவினால் வழங்கப்பட்ட இந்த இணக்கமானது, சர்வதேச நாணய நிதியத்திற்கு போதுமானது அல்லவென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பிற்கு சீனா பின்வாங்க காரணம் என்ன?

இலங்கை சீனா அமெரிக்கா

பட மூலாதாரம், RAJAGOPAL YASIHARAN

சீனா இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பின்வாங்கியதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் ஊடகவியலாளர் யசிஹரன், பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.

”கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா பின்வாங்கியதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கின்றன. சீனாவின் கடன் வழங்கும் கொள்கையில், கடன் மறுசீரமைப்பு என்ற திட்டம் கிடையாது. சீனா எந்தவொரு நாட்டிற்கும் அப்படி செய்ய மாட்டார்கள். அது தான் முதல் காரணம்.

அவர்களின் கடன் திட்டமானது, நீண்டகால இலக்குகளை கொண்ட கடனாகவே இருக்குமே தவிர, கடன் மறுசீரமைப்புக்கு அவர்கள் செல்லமாட்டார்கள். இதுவரை காலம் ஒரேயொரு நாட்டிற்கு மாத்திரம் கடன் மறுசீரமைப்புக்கு அவர்கள் இணங்கியிருந்தார்கள். ஆபிரிக்காவிலுள்ள ஒரு தீவு நாட்டிற்கு மாத்திரம் அவர்கள் கடன் மறுசீரமைப்பிற்கு சென்றுள்ளார்கள்.

அதனால், இலங்கை அதனை காரணம் காட்டி, தங்களையும் கடன் மறுசீரமைப்புக்குள் உள்வாங்குமாறு கோரி வருகிறது. இலங்கை சர்வசேத்திடமிருந்து வாங்கிய கடனில் 55 வீதம் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்தான். இப்படியான சூழலில் சீனா கடன் மறுசீரமைப்புக்கு போகுமானால், சீனாவிற்கு அது ஒரு பின்னடைவாக அமையலாம்.

சீனா, இலங்கை உட்பட பல தீவு நாடுகளுக்கு கடனுதவிகளை வழங்கியுள்ளது. சீனாவின் கடனானது, துறைமுகங்கள், விமான நிலையங்கள், வர்த்தக மையங்கள் போன்ற திட்டங்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கே கடனை கொடுத்து வருகின்றது. இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கு செல்லும் போது, இதனை உதாரணமாக வைத்துக்கொண்டு, ஏனைய நெருக்கடியிலுள்ள நாடுகளும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கோரிக்கை விடுப்பார்கள். அதனை சீனாவினால் கையாள முடியாது என்பதே முக்கியமான காரணங்களாக காணப்படுகின்றன.” என ஊடகவியலாளர் யசிஹரன் தெரிவிக்கின்றார்.

சீனா கடன் மறுசீமைப்புக்கு ஆதரவு தெரிவிக்காது என கூறிய நிலையில், தற்போது இலங்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளது. அதற்கான காரணம் என்ன?

”நெருக்கடியிலுள்ள இலங்கைக்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என சொல்லியிருக்கின்றார்கள். கடனை சீனா, மறுசீரமைக்கிறதா? அப்படியில்லை என்றால், கடனை நிறுத்தி வைக்கிறார்களா? என்ற நகர்வு இருக்கிறது. கடனை இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்தால் இரண்டு வருடங்களுக்கு கடனை கொடுக்கத் தேவையில்லை.

கடனை இரண்டு வருடங்களுக்கு பின்னர் செலுத்த வேண்டும். மற்றைய விடயம், குறுகிய காலத்திற்கு கடனை நிறுத்தி வைப்பதே இந்த முறைமையாகும். கடன் மறுசீரமைப்பு என்பது, உதாரணத்திற்கு சீனாவிற்கு வழங்க வேண்டிய எஞ்சிய கடனை, சுமார் 10 வருடங்களுக்கு நீட்டித்து, புதிதாக ஒரு கடன் திட்டத்தை வகுத்தல். அந்த திட்டத்தில் கடன் கொடுக்கும் அளவு குறையும்.

ஆனால், காலங்கள் நீடிக்கும். இது தான் மறுசீரமைப்பாகும். சீனாவின் தற்போதைய அறிவிப்பதானது, கடனை இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்தலாகும். அதாவது இரண்டு வருடங்களின் பின்னர் கடனை கொடுக்க வேண்டி வரும். சீனா இந்த முறையின் கீழ் வருகின்றது. ஆனால் இந்தியா அந்த முறையின் கீழ் வரவில்லை.

இந்திய மறுசீரமைப்பு என்ற திட்டத்திற்குள் வந்துள்ளார்கள். இந்த அறிவிப்பை சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கிதான் அறிவித்துள்ளது” என அவர் கூறுகின்றார்.

கடன் மறுசீரமைப்பு – கடன் நிறுத்தி வைத்தல் இந்த இரண்டு முறைகளில் இலங்கைக்கு சாதகமானது, பாதகமானது எது?

”கடன் மறுசீரமைப்பு – கடன் நிறுத்த வைத்தல் இந்த இரண்டிலும், இலங்கை கடனை மீள கொடுக்கதான் வேண்டும். சாதகம் பாதகம் என பார்க்க முடியாது. இலங்கைக்கு தற்காலிக தீர்வு அவசியமாக காணப்படுகின்றது. அதனால், இந்த இரண்டில் எதை கொடுத்தாலும், இலங்கைக்கு தற்போது அது சாதகமானதாகவே அமையும். ஏனெனில், ரொம்ப பெரிய கடன் நெருக்கடியில் உள்ள நாடு என்பதனால், எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அது இலங்கைக்கு சாதகம் தான்” என ஊடகவியலாளர் யசிஹரன் தெரிவிக்கின்றார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவு முதலில் கிடைத்த பின்னரே, சீனா தனது அறிவிப்பை வெளியிடுகிறது. ஏன் இந்தியாவின் அறிவிப்பு வரும் வரை சீனா காத்திருந்தது?

”இலங்கை விவகாரத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நகர்வுகள் இன்று நேற்று அல்ல, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இரண்டு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக நடந்துக்கொள்ளும் சூழ்நிலை காணப்பட்டது. கடன் மறுசீரமைப்பில் கூட சுயநலன்தான் இருக்கின்றது.

இந்தியா கூட பொதுநலத்தில் இலங்கைக்கு உதவ முன்வரவில்லை. சீனாவும் பொது நலத்தில் இலங்கைக்கு உதவி செய்ய முன்வரவும் இல்லை. இந்த இரண்டு நாடுகளும் உலக வல்லரசு நாடுகள். இந்த இரண்டு நாடுகளுக்கும் இலங்கை என்பது மிகப் பெரிய சொத்து.

இலங்கை ஏதாவது ஒரு நாட்டின் பக்கம் சாய்ந்தால் கூட, மற்றைய நாட்டிற்கு அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பூகோல அரசியலிலும் சரி, உள்நாட்டு அரசியல் காரணங்களிலும் பாரிய தாக்கத்தை செலுத்தும். அதனால், இலங்கைக்கு கூடுதலாக உதவிகளை செய்வது போல, அதிகளவிலான கடனை கொடுத்து யார் தமது கைக்குள் வைத்துக்கொள்வது என்ற போட்டியே இங்கு காணப்படுகின்றது.

இந்த இரண்டு நாடுகளும் இலங்கையை பகடை காய்களாக பயன்படுத்தி வருகின்றன” என ஊடகவியலாளர் யசிஹரன் குறிப்பிட்டார்.

இலங்கை சீனா அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

மூன்று மாதங்களுக்குள் கடன் மறுசீரமைப்பு நிறைவடையும்

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாத காலப் பகுதிக்குள் இந்த கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்ய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »