Press "Enter" to skip to content

அதானி குழுமத்தின் பங்குகள் தொடர் வீழ்ச்சி: மீண்டு வர வழி உள்ளதா? அடுத்த திட்டம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஒரே வாரத்தில் உச்சியில் இருந்து அதல பாதாளம் வரை பார்த்துவிட்டது அதானி குழுமம்.

கடந்த வாரத் தொடக்கம் வரை தோராயமாக 19 லட்சம் கோடியாக இருந்த அதானி குழுமத்தின் மதிப்பு ஹிண்டர்பெர்க் அறிக்கை வெளியான பின்பு கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு அவை அடிப்படை இல்லாதவை என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது. எனினும், முதலீட்டாளர்களின் அச்சத்தை இது போக்கவில்லை.

அதானி குழுமத்தின் மதிப்பு நாளுக்கு நாள் புதிய வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் தற்போதைய சவால்கள் குழுமத்தின் வளர்ச்சியின் வேகத்தை பெருமளவில் குறைக்கலாம் அல்லது அதன் முக்கிய சொத்துக்களை விற்கும் நிலைக்கு இட்டுசெல்லலாம்.

பங்குகளின் வீழ்ச்சி எப்படி பாதிக்கும்?

நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்துவருகிறது என்பதையே பங்குகளின் விலை வீழ்ச்சி காட்டுகிறது.

ஆனால் பங்கு விலை சரிவு நிறுவனத்தின் செயல்பாடுகளை எப்போது பாதிக்கும்? கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவைப்படும் நிறுவனத்தின் பணப்புழக்கம் மற்றும் விரிவாக்கங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தை இது பாதிக்கும் போது.

ஹிண்டர்பெர்க் அறிக்கை வெளியான நாளில் இருந்தே அதானி குழும பங்குகளின் மதிப்பு சந்தையில் தினமும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதானி குழும பங்குகளின் விலை புதன்கிழமை 28 சதவீதமும் வியாழக்கிழமை 26 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தது. மேலும், தொடர் பங்கு வெளியீடு (FPO) மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்த அதானி குழுமம், முதலீட்டாளர்களின் நலன் கருதி இதனை ரத்து செய்வதாக அறிவித்தது.

தொடர்பங்கு வெளியீட்டு வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கான திட்டங்களுக்கு செலவிட திட்டமிடப்பட்டிருக்கலாம். பசுமை ஹைட்ரஜன் எக்கோசிஸ்டத்தை அமைப்பது, ஏற்கனவே உள்ள விமான நிலையங்களில் நடக்கவேண்டிய பணிகள் மற்றும் அதன் சாலை மற்றும் நெடுஞ்சாலை துணை நிறுவனத்தின் மூலம் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே அமைப்பது போன்ற திட்டங்களுக்கு பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டும் பணத்தை அவர்கள் செலவிட திட்டமிட்டிருக்கலாம்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்தது, எதிர்காலத்தில் பங்கு மூலதனத்தை உயர்த்துவதற்கான நிறுவனத்தின் திறனையும் பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் லட்சியத் திட்டங்களில் பெரும்பாலானவை கால அட்டவணையில் பெருமளவில் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும், ஏனெனில் அவர்களுக்கு இப்போது நிதி திரட்டும் திறன் இல்லை” என்று காலநிலை ஆற்றல் நிதியத்தின் இயக்குனர் டிம் பக்லே பிபிசியிடம் தெரிவித்தார்.

பணத்தை திரட்ட அதானி குழுமத்திடம் தற்போது உள்ள ஒரே வழி மீண்டும் கடன் வாங்குவதுதான். ஆனால், கடன் கொடுத்தவர்கள் ஏற்கனவே பதற்றத்தில் உள்ளதால் அதுவும் எளிதானதாக இல்லை.

அதானி குழுமத்தின் பங்கு வீழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

அதானி குழும நிறுவனங்கள் ஏன் கடன் வாங்குகின்றன?

நிதியை திரட்டவும் தங்களது திட்டங்களை நிறைவேற்றவும் நிறுவனங்கள், குறிப்பாக உள்கட்டமைப்பு நிறுவனங்கள் கடன் வாங்குவது என்பது இயல்பானது. இது அதானி குழுமத்தின் முக்கிய உத்தியாக உள்ளது. மேலும், அதன் அசுர வளர்ச்சிக்கும் இந்த உத்தி உதவியுள்ளது.

ஆனால் இந்த முறையில், அதானி குழுமம் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் கடனை குவித்துள்ளது. 5ஜி தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற லட்சிய திட்டங்களில் கவனம் செலுத்தியதன் காரணமாக இந்த கடன் அளவு கடந்த 3 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

அதன் வருவாய் மற்றும் லாபம் அதிகரிக்கும் வேகத்தை விட கடன் வேகமாக அதிகரித்துள்ளது. இது, கடனை திருப்பி செலுத்த முடியாத அபாயத்தை அதிகரிக்கிறது என்பது ஹிண்டர்பெர்க் அறிக்கை மற்றும் பிற ஆய்வாளர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கவலையாகும்.

இதுவரை அதானி குழும நிறுவனங்கள், தங்களுடைய உள்கட்டமைப்பு சொத்துக்கள் அல்லது பங்குகளை அடமானமாக வைத்து பெரும்பாலான நிதியை கடன்கள் மூலம் திரட்டியுள்ளன. இப்போது பங்கின் விலை பாதிக்கும் கீழே சரிந்ததால், அவர்களின் பங்கு பிணையங்களின் மதிப்பு குறைந்துள்ளது. இரண்டு பெரிய வங்கிகளான கடன் சூயிஸ் மற்றும் சிட்டி குரூப் ஆகியவை அதானி பத்திரங்களை பிணையமாகப் பயன்படுத்துவதை நிறுத்தியதற்கு இது ஒரு காரணம் என்று நிதிசார்ந்த செய்தி ஊடகமான ப்ளூம்பெர்க் கூறுகிறது.

பல்வேறு முக்கிய வங்கிகளும் அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கோடி கோடியாக கடன்களை வழங்கியுள்ளன. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. கூட அதானி பங்குகளில் முதலீடு செய்துள்ளது.

ஆனால் அதானியின் கடனில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பத்திரங்கள் அல்லது வெளிநாட்டு வங்கிகள் போன்ற வெளிநாட்டு மூலங்களிலிருந்து வந்தவை என்று சர்வதேச தரகு நிறுவனமான ஜெஃப்ரிஸின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஹிண்டன்பெர்க் அறிக்கைக்குப் பிறகு, கடன் வழங்குபவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று பங்குசந்தையை உற்றுநோக்குபவர்கள் கூறுகிறார்கள்.

அது தவிர, புதிய கடன்கள் என்பது இனி, அதானிக்கு அதிக வட்டிக்கான கடன்களாக இருக்கும். நிறுவனத்தின் நம்பகத்தன்மையில் அழுத்தம் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சந்தையில் புதிய கடன்களை திரட்டுவது மிகவும் கடினமாக இருக்கும்,” என்று பெருநிறுவன நிதித்துறையை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் கூறினார்.

எனவே, புதிய விமான நிலையங்கள், மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்டம் மற்றும் அதானி குழுமத்தின் கனவு திட்டமான 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பசுமை ஹைட்ரஜன் எக்கோசிஸ்டம் போன்ற ஒப்பந்தங்களுக்கு நிதி திரட்டுவது அந்நிறுவனத்துக்கு கடினமானதாக இருக்கும்.

அதானி குழுமத்தின் பங்கு வீழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

அடுத்து என்ன நடக்கும்?

கண்காணிப்பு அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் கடன் தர நிர்ணய முகவர் நிறுவனங்கள், பணத்தை திரட்டும், கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அதானி நிறுவனங்களின் திறனை உற்றுநோக்குகின்றனர்.

பெரிய அளவில் கடன் வாங்கி செயல்படுத்தப்படும் குழுமத்தின் மூலதன செலவு திட்டங்கள் ஒரு முக்கிய சவாலாக உள்ளன என்று கடன் மதிப்பீட்டு நிறுவனமான ICRA கூறுகிறது.

தொடர்பங்கு வெளியீட்டை திரும்பப் பெறுவது அதன் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கெளதம் அதானி, காணொளி மூலம் தெரிவித்திருந்தார்.

அதில், “எங்கள் இருப்புநிலைக் குறிப்பு ஆரோக்கியமானது, சொத்துக்கள் வலுவானவை. எங்களின் வட்டி, வரிகள், தேய்மானம், மற்றும் கடனடைப்புக்கு முந்தைய வருவாய் (EBITDA) நிலைகள் மற்றும் பணப்புழக்கங்கள் மிகவும் வலுவாக உள்ளன. மேலும் எங்கள் கடன் கடமைகளை நிறைவேற்றுவதில் எங்களிடம் அப்பழுக்கற்ற சாதனை உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

அதானி குழுமத்தை பொறுத்தவரை, பசுமை ஆற்றல், விமான நிலையங்கள் மற்றும் சாலைகள் போன்ற அதன் பெரும்பாலான அதிக மூலதனம் தேவைப்படும் புதிய நிறுவனங்கள் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) கீழ் உள்ளன. இந்த நிறுவனங்கள் தங்கள் நிதி தேவைகளுக்காக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ஐ சார்ந்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் வசம் பணப் புழக்கம் இருந்தாலும், அதன் துணை நிறுவனங்களின் வட்டியை செலுத்துவதற்கு இப்பணப்புழக்கம் பயன்படுத்தப்பட்டால், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டுக்கு அழுத்தம் ஏற்படும்.

எனினும், அதன் சில நிறுவனங்கள் வைத்துள்ள வலுவான சொத்து அடித்தளம் அதானி குழுமத்திற்கு நன்மை அளிக்கிறது. அதானி குழுமம் எரிசக்தி மற்றும் போக்குவரத்தில் சொத்துக்களை உருவாக்கியுள்ளது. இவை பெரும்பாலும் நாட்டின் பொருளாதார முன்னுரிமைகளுடன் இணைந்துள்ளன.

உள்கட்டமைப்பு நிபுணரும், இன்ஃப்ராவிஷன் அறக்கட்டளையின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான விநாயக் சாட்டர்ஜி கூறுகையில், “துறைமுகங்கள், விமான நிலையங்கள், சிமென்ட் முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வரை அதானி குழுமத்தின் பல்வேறு செயல்பாட்டு திட்டங்களை நான் பார்த்திருக்கிறேன், அவை திடமாகவும் நிலையாகவும் உள்ளன. மேலும், ஆரோக்கியமான பணப்புழக்கத்தை உருவாக்குகின்றன. பங்குச் சந்தையில் நடக்கும் ஏற்ற தாழ்வுகளில் இருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார்.

அதானி குழுமத்தின் பங்கு வீழ்ச்சி

பட மூலாதாரம், Reuters

எனினும் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் பாதுகாப்பாக உள்ளன என்று கூறமுடியாது.

“அதானி துறைமுகம் மற்றும் எரிசக்தி ஆகியவை நீண்ட கால அரசாங்க ஒப்பந்தங்களால் ஆதரிக்கப்படும் சொத்துக்களைக் கொண்ட வலுவான மற்றும் மிகவும் நல்ல மூலதனம் கொண்டவையாக உள்ளன. இந்த நிறுவனங்கள் வாங்கிய கடன்களில் பெரும்பாலானவை இந்த வருவாய் மற்றும் லாபம் ஈட்டும் சொத்துக்களுக்கு ஈடாக பெறப்பட்டவை. ஆனால் புதிய வணிகங்களுக்காக அல்ல,” என்று நாம் மேலே குறிப்பிட்ட பெருநிறுவன நிதித்துறையை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் கூறுகிறார்.

அதானி குழும நிறுவனங்கள் வெளியிட்ட வெளிநாட்டு கடன் பத்திரங்களை குறிப்பிட்டு அவர் இதனை விளக்கினார்.

பெரிய அளவிலான செயல்பாட்டு துறைமுகங்களைக் கொண்ட அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் லிமிடெட் வழங்கிய பத்திரங்களின் விலைகள் ஓரளவு மட்டுமே மதிப்பை இழந்துள்ளன, ஆனால் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான அதானி கிரீன் வழங்கியவை 3 நாட்களில் அவற்றின் மதிப்பில் கால் பங்கிற்கு மேல் இழந்துள்ளன.

அதானி கிரீன் மற்றும் அதானி கேஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே அதிக கடன்களை வைத்துள்ளன. மேலும் பணப்புழக்கத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றன. இது, பங்குச்சந்தையில் ஏற்படும் தாக்கத்தால் அதிகம் பாதிக்கும் நிலையை இந்நிறுவனங்களுக்கு ஏற்படுத்துவதோடு அவற்றின் கடன் பெறும் தகுதியையும் குறைக்கிறது.

எனவே, பணத்தை திரட்ட புதிய திட்டங்களை ஒத்திவைப்பது மற்றும் சில சொத்துக்களை விற்பது மட்டுமே ஒரே வழி.

குழுமத்தின் திட்டமிட்ட விரிவாக்கங்களில் சில அவர்களின் விருப்பமானவை என்றும் போதிய நிதி கிடைக்கும் வரை அவை ஒத்திவைக்கப்படலாம் என்றும் ICRA குறிப்பிடுகிறது.

“அதானி நிறுவனம் இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்கியுள்ளது. எனவே, முதலீடு செய்வதில் பல மூலோபாய முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள்” என்று ஒரு கார்ப்பரேட் ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்த ஒருவர் கூறினார்.

கார்ப்பரேட் நிர்வாக சிக்கல்கள் மீண்டும் நிறுவனத்தை ஆட்டிப் படைக்கும் நிலையில் , விசாரணையால் மேலும் ஆபத்துகள் இருக்கலாம். இருப்பினும் இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர் செபி இதுவரை அதானி பங்கு வீழ்ச்சி குறித்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.

“அழுத்தம் அதிகரிக்கும் சூழலில், தங்களின் வருவாயை எளிதாக அதிகரிக்க உதவும் அரசாங்க ஒப்பந்தங்களை எளிதாக வெல்வது என்பதும் அதானி குழுமத்துக்கு கடினமாக இருக்கும். மேலும், கடன் நம்பத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதும் கடினமானது. ஆனால், கணிசமான கடன்களை திருப்பி செலுத்த வேண்டியிருப்பதால் அதானி குழுமம் தனது சொத்தை விற்க வேண்டி இருக்கும்” என்று டிம் பக்லே கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »