Press "Enter" to skip to content

கீழடியில் மட்கும் பொருள்களால் கட்டுமானம்: இந்திய தொல்லியல் துறையின் அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கை சொல்வது என்ன? #Exclusive

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Archaeological Survey of India

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார். கீழடி குறித்து இந்த ஆய்வறிக்கை சொல்வதென்ன? பிபிசி வழங்கும் பிரத்யேகத் தகவல்கள்.

மதுரையில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி என்ற தொல்லியல் தளத்தை 2014ஆம் ஆண்டுவாக்கில் இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா கண்டறிந்தார். இதற்குப் பிறகு இந்த இடத்தில் 2014-15, 2015-16 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அவரது தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகு ஒரு முறை இந்தியத் தொல்லியல் துறையும் அதற்குப் பின்பு மாநிலத் தொல்லியல் துறையும் அங்கு அகழாய்வுகளை நடத்தின.

இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கை தற்போது அமர்நாத் ராமகிருஷ்ணாவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை, கீழடி தொல்லியல் தளத்தின் காலகட்டம், அங்கு நிலவிய கலாச்சாரம், அங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்த பயிர்கள், அவர்கள் வளர்த்த விலங்குகள், அந்த இடம் எப்படி ஒரு நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்திருக்கக்கூடும் என்பதுபோன்ற கேள்விகளுக்கு ஆரம்பகட்ட விடைகளை அளிப்பதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கீழடியில் மூன்று காலகட்டம்

கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது, இங்கே மூன்று பண்பாட்டு காலகட்டம் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

கீழடி அகழாய்வு

பட மூலாதாரம், Archaeological Survey of India

இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் மக்கள் இங்கே வாழத் துவங்கியிருக்க வேண்டும். இதற்கான தரவுகள் 2 மீட்டர் ஆழத்தில் உள்ள மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில், கீழடியில் எளிதில் மட்கிப் போகக்கூடிய (செங்கல் அல்லாத, மரம் போன்ற) பொருட்களால் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இரும்புப் பொருட்கள், கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், கிறுக்கல்களைக் கொண்ட பானை ஓடுகளும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்த மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன.

இடைக்கற்காலத்தைச் சேர்ந்த நிறைய கற்கருவிகள் கிடைத்திருக்கின்றன. புதிய கற்காலத்தைச் சேர்ந்த தீட்டப்பட்ட கற்கருவிகளும் கிடைத்திருக்கின்றன. இருந்தபோதும் கீழடி இடைக்கற்காலத்தையோ, புதிய கற்காலத்தையோ சேர்ந்த இடமாகக் கொள்ள முடியாது. இந்தக் கற்கருவிகள் கிடைப்பதை வைத்துப் பார்க்கும்போது, கீழடி வளரத் தொடங்கியபோது முந்தைய காலத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சி இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும் என்றாலும்கூட, தொடர்ந்து இந்தத் திசையில் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடியின் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். இதுதான் கீழடி, ஒரு முதிர்ந்த வாழிடப் பகுதியாக இருந்த காலகட்டம். இந்த காலகட்டத்தில்தான், கீழடியில் பெரும் வளர்ச்சி இருந்திருக்கிறது. பெரிய மற்றும் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இங்கே கிடைத்த செங்கலால் ஆன மேடைகள், சிக்கலான செங்கல் கட்டுமானங்கள், இரட்டைச் சுவர்களைக் கொண்ட உலைகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை.

கீழடி அகழாய்வு

பட மூலாதாரம், Archaeological Survey of India

தானியங்களை சேகரித்துவைக்கக்கூடிய, அலங்கரிக்கப்பட்ட ஜாடிகள், சுடு மண் குழாய்கள், சுடு மண் உறை கிணறுகளும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்த அடுக்கில் கிடைத்திருக்கின்றன. உயர்ந்த ரகமுள்ள கறுப்பு – சிவப்பு கலங்கள், சிவப்பு நிறம் பூசப்பட்ட பொருட்கள், வெள்ளை நிறம் பூசப்பட்ட கலங்கள், தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட பானை ஓடுகள், கிறுக்கல்களைக் கொண்ட பானை ஓடுகள் ஆகியவை இந்த காலகட்டத்தைச் சேர்ந்த மண் அடுக்கில் கிடைத்திருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் சேர்த்துவைத்துப் பார்க்கும்போது, இந்த காலகட்டத்தில் கீழடி நகரப் பண்புகளைக் கொண்ட மிக முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, கீழடி மதுரைக்கு அருகில் இருப்பதும், வரலாற்றுக் கால துறைமுகமான ஆலங்குளம் செல்லும் வழியில் இருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிடுகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

கீழடி அகழாய்வு

பட மூலாதாரம், K. Amarnath Ramakrishna

இங்கு கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் பிராகிருத பெயர்கள், கீழடிக்கும் இலங்கைக்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. மதிப்புமிக்க கற்களால் ஆன மணிகள், தந்தத்தால் ஆன பொருட்கள், தாமிரப் பொருட்கள், முத்து போன்றவை இங்கு கிடைத்திருப்பதை வைத்துப்பார்க்கும்போது, இந்திய நிலப்பரப்பின் பிற பகுதிகளுடனும் உலகின் பிற பகுதிகளுடனும் கீழடிக்கு இருந்த தொடர்பு தெரியவருகிறது.

ஆனால், மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது இங்கு கிடைத்த கட்டடத் தொகுதிகள்தான். தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் வரலாற்று துவக்க காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் மிக அரிதாகவே கிடைத்திருக்கின்றன. அரிக்கமேடு, காவிரிப்பட்டனம், கொற்கை போன்ற ஒரு சில இடங்களைத் தவிர, வேறு எங்கு இந்த காலகட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கிடைத்ததில்லை. இந்தப் பின்னணியில்தான் கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கீழடி அகழாய்வு

பட மூலாதாரம், Archaeological Survey of India

இந்த இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த கட்டடத் தொகுதிகள், மிகப் பெரிய கட்டடத் தொகுதிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஓட்டி மேலதிக ஆய்வுகள் இந்தியத் தொல்லியல் துறையால் செய்யப்படாத நிலையில், இந்த கட்டடத் தொகுதிகள் எவ்வளவு பெரியவை, விரிவானவை என்பதை அறிய முடியவில்லை.

இங்கு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் கீழடியின் கலாச்சார வளர்ச்சியை மட்டுமல்லாமல், வைகைச் சமவெளி மற்றும் தமிழ்நாட்டின் வரலாற்று துவக்க காலம் எப்படியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

கீழடியின் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்த இரு அகழாய்விலும் இங்கு கிடைத்த காசுகள், அதற்கு முன்பாக இங்கு கிடைத்த ராஜராஜன் காலத்து காசுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்த மூன்றாவது காலகட்டம் பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, இங்கு மக்கள் வாழ்வது குறைய ஆரம்பித்தது. பிறகு இந்த இடம் கைவிடப்பட்டது. ஆகவே, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது என்பதை இந்த ஆய்வறிக்கை உறுதிசெய்திருக்கிறது.

கீழடி அகழாய்வு

பட மூலாதாரம், Archaeological Survey of India

கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன உணவை உண்டார்கள், எந்த விலங்குகளை வளர்த்தார்கள், இங்கு கிடைத்த எழுத்துகள் என்ன சொல்கின்றன என்பதை இந்தக் கட்டுரையின் அடுத்த பாகத்தில் காணலாம்.

(தொடரும்)

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »