Press "Enter" to skip to content

பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சம் காட்டும் நிதி நிறுவனங்கள்: சட்டம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் அட்டை, செக்புக், மாதத் தவணை மற்றும் கடன் வழங்குவதல்தொலைபேசிற அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு நிதி நிறுவனங்கள் மறுத்து வருவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுதிறனாளி சக்திவேல் என்பவர், ”வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்று மாதத் தவணையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பொருட்கள் வழங்குவதில்லை என்று தெரிவித்ததாக” குற்றம்சாட்டியுள்ளார்.

புதுகோட்டை மாவட்டம், பெருங்கலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவரும், இவரது மனைவியும் பார்வை மாற்றுத்திறனாளிகள். சமீபத்தில் புதுகோட்டையில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்றிற்கு சென்ற தம்பதியினர், தங்களது வீட்டிற்கு மாதத் தவணை முறையில் ஏ.சி வாங்குவது குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவது இல்லை என்றும், அதனால் தங்களது நிறுவனம் சார்பில் சக்திவேலுக்கு தவணை முறையில் ஏ.சி., வழங்க முடியாது என்றும் அந்நிறுவனத்தைச் சார்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டிருந்த சக்திவேல்,

“ஒரு நிறுவனம் பார்வையற்றோருக்குரிய வசதிகளை கட்டாயம் செய்திருக்க வேண்டும். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு தரும் அனைத்து வசதிகளையும் பார்வையற்றோருக்கும் தர வேண்டும். நல்ல நிறுவனம் பார்வையற்றோருக்கு இது போன்ற வசதிகளை செய்து தர முடியாது என ஒருபோதும் வெளிப்படையாய் சொல்லக்கூடாது. அதற்கான சாத்திய கூறுகளையே ஆராய வேண்டும். ஒரு சாதாரண நபருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தரப்பட வேண்டுமென மாற்றுத் திறனாளிகளுக்கான 2016 சட்டம் சொல்கிறது.

கார் வாங்க போனால் உங்கள் பெயரில் தர முடியாது, லோன் வாங்கப் போனால் உங்கள் பெயரில் தர முடியாது, கடன் அட்டை வாங்கப் போனால் உங்கள் பெயரில் தர முடியாது.. இவையணைத்தும் பொருளீட்டும் பார்வையற்றவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள். பொருளீட்டுவதோ பார்வையற்றவர்கள், பொருட்கள் மட்டும் அவர்கள் பெயரில் வாங்க முடியாது என்பதெல்லாம் மிகக் கொடிய பொருளாதார ஒடுக்குமுறை” என்று குறிப்பிட்டிருந்தார்.

மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள் :

பார்வையற்றவர்கள், நிதி நிறுவனம்

“இது எனக்கு மட்டுமல்ல, என்னை போன்ற எத்தனையோ பார்வை மாற்றுத்திறனாளிகள் இத்தகைய பிரச்னைகளை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். எனவே இதுகுறித்த குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்து குரல் கொடுக்க வேண்டியது எங்களது கடமை” என்று பிபிசி தமிழிடம் கூறுகிறார் சக்திவேல்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “கோடை காலம் வந்துவிட்டதால், வெப்பத்தை சமாளிக்க, மாதத் தவணையில் ஏ.சி வாங்கலாம் என முடிவு செய்து கடைக்கு சென்றோம். ஆனால் என்னைப் பார்த்துவிட்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி நிறுவனங்கள் மாதத் தவணை வழங்குவது இல்லை., வேறு யாராவது நண்பர்கள் இருந்தால், அவர்கள் பெயரில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

நான் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறேன், அதனால் எனது பெயரிலேயே கொடுங்கள் என அவர்களிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை. ஏற்கனவே பொருட்கள் வாங்க வந்த எங்களை போன்ற மற்ற பார்வை மாற்றுதிறனாளிகளிடமும் இதே காரணத்தை கூறி அனுப்பி வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து நான் முகநூலில் பதிவிட்டப் பிறகு, நேரடியாக எனது வீட்டிற்கே வந்த அந்த தனியார் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் விரைவில் நிலைமை சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். மாதத் தவணைக்காக நிதி நிறுவனத்திடம் பேசி எழுத்துப்பூர்வ ஆதாரத்தையும் பெற்று தருவதாக கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

பார்வையற்றவர்கள், நிதி நிறுவனம்

அவர்கள் கூறியப்படியே தனக்கான தேவையை செய்து தருகிறார்களா என்பதை பார்த்துவிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கூறுகிறார் சக்திவேல்.

“தகுதியும், திறனும் இருந்தாலும், பார்வை மாற்றுத்திறனாளிகளாக இருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக எங்களுக்கு அடிப்படை உரிமைகளும், சலுகைகளும் மறுக்கப்படுகின்றன.

நுகர்வோர் யாராக இருந்தாலும், வாங்கும் திறனும் செலுத்தும் திறனும் இருந்தால் அவர்களுக்கு தேவையானதை நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், பார்வை மாற்றுத்திறனாளிகள் என்ற காரணத்தை கூறி நீங்கள் மறுக்க முடியாது” என்று கூறுகிறார் சக்திவேல்.

மாற்றுத்திறனாளிகள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை

பார்வையற்றவர்கள், நிதி நிறுவனம்

”எந்தவொரு நிதி தொடர்பான ஒப்பந்தத்திற்கும், பார்வை மாற்றுத்திறனாளிகள் தகுதியானவர்கள்தான் எனச் சட்டம் சொல்கிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டமும் (2016), ஆர்.பி.ஐ வங்கியின் விதிகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும் இதுபோன்ற சூழல்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுவது, இந்த சமூகத்தின் பிற்போக்கு மனநிலையைதான் பிரதிபலிக்கிறது” என்கிறார் வழக்கறிஞரும், அகில இந்திய பார்வையற்றவர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவருமான முத்துச்செல்வி.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “ பார்வையற்றவர்கள் என்பதால் எங்களால் ஒவ்வொரு முறையும் ஒரேமாதிரியான கையெழுத்தை போட முடியாது. அதில் சில வேறுபாடுகள் வரலாம். அதன் காரணமாகத்தான் நாங்கள் கைரேகை வைக்கும் முறையை பயன்படுத்துகிறோம். ஆனால் இதை இழிவாக கருதுபவர்கள், எங்களை படிப்பறிவு இல்லாதவர்கள் என நினைக்கின்றனர். இதன் காரணமாக வங்கியில் பண இயந்திரம் அட்டை, கடன் அட்டை போன்ற அடிப்படையான வங்கி வசதிகளை வழங்குவதற்கு கூட எங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. வங்கிகளிலேயே இந்த நிலைமை என்றால் தனியார் நிதி நிறுவனங்கள் எங்களை எப்படி நடத்துவார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். இது எங்கள் மீது நிகழ்த்தப்படும் அப்பட்டமான ஒடுக்குமுறையாகும்.

இதுபோன்ற சிக்கல்களை சரி செய்வதற்கு, எங்களின் உரிமைகளை வலியுறுத்தி அனைத்து வங்கிகளுக்கும், தனியார் நிதி நிறுவனங்களுக்கும் ஆர்பிஐ தொடர்ந்து சுற்றறிக்கை அனுப்புகிறது. வங்கியில் கடன் பெறுதல் உட்பட அனைத்து விதமான நிதி தொடர்பான ஒப்பந்தத்திற்கும், மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி நாங்கள் தகுதியானவர்கள் என்பதை மேற்கோள் காட்டுகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் குறித்து சரியான புரிதல் இல்லாத சில தனிநபர்களால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறுகிறார்.

நிதி நிறுவனங்களின் நிலை என்ன?

பார்வையற்றவர்கள், நிதி நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

”எந்தவொரு தனியார் நிறுவனங்களும் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவைதான். ஆனால் தங்களுடைய நிறுவன நலன் சார்ந்து சில முடிவுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

அப்படிதான் தனி நபர்களுடன் நிதி ஒப்பந்தம் செய்வது போன்ற விஷயங்களில் அந்தந்த நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு கருதி சில வழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன” என்று கூறுகிறார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர் ஒருவர்.

தன்னுடைய அடையாளத்தை வெளிபடுத்த விரும்பாத அவர் பிபிசியிடம் பேசுகையில், “ தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வழங்குதல், மாதத் தவணை வழங்குதல் போன்ற விஷயங்களுக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த மேலாளர்கள்தான் பொறுப்பாகிறார்கள்.

எனவே ஒருவருக்கு கடனோ, மாதத் தவணையோ அளிக்கும்போது, அவர் திரும்ப செலுத்தமுடியாத சூழல் ஏற்படும்பட்சத்தில் அந்த தொகைக்கு அந்த குறிப்பிட்ட பகுதி மேலாளர்தான் மேலிடங்களில் பதிலளிக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்திற்கு பயந்து, இதுபோன்ற நிதி ஒப்பந்தங்களுக்கு அவர்களாகவே சில வரைமுறைகளை வகுத்துக் கொள்கிறார்கள்.

அப்படிதான் மாற்று திறனாளிகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்களுடன் நிதி ஒப்பந்தத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். இது முற்றிலும் அந்த தனிநபர் எடுக்கும் முடிவை சார்ந்தது.அவர்கள் செய்வது நியாயப்படுத்தக் கூடிய விஷயமல்ல. ஆனால் அவர்களது வேலையில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மையே, அவர்களை இத்தகைய நிலைக்கு தள்ளுகிறது” என்று கூறுகிறார்.

சட்டம் என்ன சொல்கிறது ?

பார்வையற்றவர்களுக்கு இதுபோன்ற உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் கையாள வேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்து பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார் முத்துச்செல்வி.

அடிப்படையாக பார்த்தால் மனித உரிமை பாதுகாப்புச் சட்டங்கள், நுகர்வோர் சட்டங்கள் என அனைத்து விதமான பொதுச் சட்டங்களும், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதுதான். ஆனால் அதில் சரியான தீர்வுகள் எட்டப்படாத நிலையில்தான் நாம் மாற்றுத்திறனாளிகளுக்காக இருக்கும் தனி சட்டங்களின் அடிப்படையிலும், ஆர்பிஐ விதிகளை மேற்கோள் காட்டியும் பிரச்னைகளை கையாள்கிற சூழல் ஏற்படுகிறது.

  • மனநிலை பாதிக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் இருப்பவர்கள் (Insane), 18வயதிற்கு கீழே இருப்பவர்கள்(Minor), ஏற்கனவே கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்கள் (Insolvent) ஆகிய இந்த மூன்று தரப்பினருக்குத்தான் சட்டத்தின்படி கடன் வழங்க கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. எனவே இதுதவிர மாற்றுத்திறனாளிகள் உட்பட மற்ற அனைத்து தரப்பு மக்களும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களுக்கு தகுதியானவர்களே.
  • மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகளில், முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதற்கான விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்படும்.
  • குறிப்பிட்ட நிறுவனம், அதற்கு சரியான பதிலளிக்காதபோது சட்டப்படி வக்கீல் நோட்டிஸ் அனுப்ப முடியும்.
  • தில்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தின் தலைமை ஆணையரிடமும், இதுகுறித்து நாம் புகார் அளிக்கலாம்.
  • மாநில அளவிலும் இதுபோன்ற மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் உள்ளது. இதுபோன்ற ஆணையரகத்திற்கு சிவில் நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரங்கள் இருக்கின்றன. அவர்களால் இதனை தனி வழக்காகவே எடுத்து நடத்த முடியும்.
  • இதில் சரியான தீர்வுகள் கிடைக்கப்படவில்லை என்றால், உயர்நீதிமன்றத்திலும், நுகர்வோர் நீதிமனறத்திலும் சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

”ஆனால் உண்மை என்னவென்றால், இத்தகைய உரிமைகள் மறுக்கப்படும்போது அனைத்து மாற்றுத்திறனாளிகளாலும் எதிர்த்து குரல் கொடுக்க முடியாது, சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது. அவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். எனவே அரசுதான் இதில் உள்ள சிக்கல்களை கலைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இன்று அரசு சார்ந்த பல பொதுத்துறை வங்கிகளிலேயே இதுபோன்ற பாரபட்சங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பார்வையற்றவர்கள் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் முத்துச்செல்வி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »