Press "Enter" to skip to content

அகநக முகநக பாடல்: குந்தவையின் இதயச் சிறையில் வந்தியத்தேவன் சிறைபட்ட கதை தெரியுமா?

பட மூலாதாரம், Madras Talkies

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் இடையில் வருவதைப் போன்ற ‘அகநக’ பாடல் தற்போது வெளியாகி, எல்லோரையும் முணுமுணுக்க வைத்துள்ளது. நாவலில் குந்தவை – வந்தியத்தேவன் இடையிலான காதல் எப்படிப்பட்டது?

ஐந்து பாகங்களை உடைய பொன்னியின் செல்வன் நாவலில் 11வது அத்தியாயத்தில்தான் குந்தவையும் வந்தியத்தேவனும் முதன் முதலில் சந்திக்கிறார்கள். குடந்தை ஜோதிடரின் வீட்டில், குந்தவையும் வானதியும் இருக்கும்போது, திடுமென உள்ளே நுழைகிறான் வந்தியத்தேவன்.

பெண்கள் உள்ளே இருக்கும்போது தான் இப்படி திடுமென நுழைந்ததற்காக வந்தியத்தேவன் மன்னிப்புக் கோரினாலும், குந்தவை ஏதும் சொல்லாமல் சென்றுவிடுகிறாள். இருவருக்குமே, மற்றொருவரைப் பற்றி அந்தத் தருணத்தில் தெரியாது.

இதற்குப் பிறகு குந்தவையின் தோழி வானதியை முதலையிடமிருந்து காப்பாற்ற நினைத்து வாளை உருவும் வந்தியத்தேவன், பிறகு அது பொம்மை முதலை என்பதை அறிந்து வெட்கமடைந்து செல்கிறான். அந்தத் தருணத்திலும் இருவருக்கும் இடையில் அறிமுகம் ஏற்படவில்லை.

இதற்குப் பிறகு, ஈசான பட்டரின் உதவியுடன் குந்தவையின் மாளிகைக்குச் சென்று அவளைச் சந்திக்கிறான் வந்தியத்தேவன். அப்போதுதான் தன்னை ஆதித்த கரிகாலனின் ஒற்றன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வந்தியத்தேவன், அவன் கொடுத்தனுப்பிய ஓலையை குந்தவையிடம் கொடுத்தான்.

“அந்தரங்கமான வேலை எதையும் நம்பி ஒப்புவிக்கலாம்” என அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு, குந்தவை அவனுக்கு ஒரு வேலையைக் கொடுத்தாள். அப்போது ஈழத்தில் இருந்த அருள்மொழி வர்மனைச் சந்தித்து, அவனை உடனடியாக திரும்பி வரச் சொல்லும்படி கூறினாள்.

“பொன்னியின் செல்வா! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்,” என்று எழுதப்பட்ட ஓலையையும் வந்தியத்தேவனிடம் கொடுத்தாள்.

இந்தத் தருணத்தில் குந்தவையின் மனவோட்டம் என்னவெனத் தெரியாது. ஆனால், வந்தியத்தேவன் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தான். அடுத்த நாள் அவன் ஈழத்திற்குப் புறப்பட்ட பிறகு, குந்தவையின் மனதைப் பற்றிச் சொல்லும்போது, “மன்னாதி மன்னர்களையும் வீராதி வீரர்களையும் நிராகரித்த இந்த மனது வழிப்போக்கனாக வந்த இந்த வாலிபனிடம் ஏன் இவ்வளவு சிரத்தை கொள்கிறது?

இவன் ஏற்றுக் கொண்ட காரியத்தை வெற்றியுடன் முடித்துக் கொண்டு பத்திரமாய்த் திரும்ப வேண்டுமே என்று ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது?” என்று குந்தவையின் மனதைச் சொல்கிறார் கல்கி.

இரண்டாவது பாகம் முழுவதும் கதை இலங்கையில் நடப்பதால் வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திப்பதேயில்லை. பிறகு மூன்றாம் பாகத்தில் 20 அத்தியாயங்களுக்குப் பிறகுதான் இருவரும் சந்திக்கிறார்கள். அப்போது குந்தவையைப் பார்த்து, ஏதேதோ பேசுகிறான் வந்தியத்தேவன். பிறகு, இளவரசர் அருள்மொழி வர்மனுக்கு கடுமையான காய்ச்சல் என்றும் அவரை பூங்குழலியிடம் விட்டு வந்திருக்கும் தகவலையும் தெரிவிக்கிறான்.

இதற்குப் பிறகு, குந்தவையை சந்திக்கும் முதன்மந்திரி அனிருத்த பிரம்மராயர், வந்தியத்தேவனின் பின்னணியைப் பற்றி சந்தேகத்தை குந்தவையிடம் ஏற்படுத்துகிறார்.

“தஞ்சைக் கோட்டைக்கு வெளியில் பழுவூர் ராணியைப் பல்லக்கில் சந்தித்தான். அப்போது முத்திரை மோதிரத்தைப் பெற்றுக் கொண்டான். பிறகு, கோட்டைக்குள் பழுவூர் அரண்மனையின் அந்தப்புரத்தில் அவளைச் சந்தித்தான்.

அவனைப் பழுவூர் இளைய ராணி பொக்கிஷ நிலவறையில் ஒளித்து வைத்திருந்து வெளியே அனுப்பினாள். இலங்கையில் இருந்து அவன் திரும்பி வரும்போது அரிச்சந்திர நதிக்கரையில் பாழடைந்த பாண்டியன் அரண்மனையில் நள்ளிரவில் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். அதற்குப் பிறகும் பழுவூர் முத்திரை மோதிரம் வந்தியத்தேவனிடம் இருக்கிறது,” என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்ட குந்தவை குழப்பமடைகிறாள்.

ஆனாலும், ஆதித்த கரிகாலனும் நந்தினியும் சந்திப்பதைத் தடுக்க வந்தியத்தேவனையே அனுப்பலாம் எனக் கூறுகிறார் முதன்மந்திரி.

அந்தத் தருணத்தில் வந்தியத்தேவன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனை சிறையில் இருந்து விடுதலை செய்து, ஆதித்த கரிகாலனிடம் அனுப்புவதற்காக அங்கே வந்து சந்தித்தாள் குந்தவை.

அந்தத் தருணத்தில்தான் தன் காதலைச் சொல்கிறாள் குந்தவை. அப்போது இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள், ஒரு காவியக் காதலுக்குரியவை.

வந்தியத்தேவன்

பட மூலாதாரம், madras talkies

சிறையில் குந்தவையை சந்திக்கும் வந்தியத்தேவன், “தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?” என்கிறான்.

இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களினால் உற்றுப் பார்த்துவிட்டு, “ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர்” என்றாள்.

“அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்.”

“நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர்தப்ப முடியாது…”

“சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?”

“இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்…”

“பின்னே, எந்த சிறையைச் சொல்கிறீர்கள்?”

“என்னுடைய இதயமாகிற சிறைச் சாலையைத்தான் சொல்கிறேன்.”

“தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ, மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி…”

“யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒருநாள் பழைய கதை ஆகலாம்.”

“ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற, அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும் பழுவேட்டரையர்களும் முதல் மந்திரியும், தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணியமாட்டார்கள்…”

“இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?”

“அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்.”

“அதிலேதான் என்ன தவறு?”

“நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம்தான் தவறு…”

“‘அன்பிற்கும் உண்டோ , அடைக்கும் தாழ்’ என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?”

“தேவி! ராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றேவல் செய்ய வந்தவன்…”

இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனுடைய உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.

“வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதானமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாநகரில் சிலர் கணவனுடன் உடன் கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்.!”

“கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!”

“உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது…”

வல்லவரையன் சொல்லிழந்து செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.

குந்தவை

பட மூலாதாரம், Madras Talkies

இதற்குப் பிறகு, அவன் செய்ய வேண்டிய வேலையைச் சொல்கிறாள் குந்தவை. நந்தினியும் ஆதித்த கரிகாலனும் சந்திக்கவேகூடாது என்கிறாள். அதைக் கேட்கும் வந்தியத்தேவன், “தேவி! என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து பார்க்கிறேன். தோல்வி அடைந்தால் என்னைக் குற்றம் சொல்ல வேண்டாம்” என்றான்.

“ஐயா! தாங்கள் தோல்வி அடைந்தாலும், வெற்றி அடைந்தாலும் என் இதயச் சிறையிலிருந்து இந்த ஜன்மத்தில் தங்களுக்கு விடுதலை கிடையாது!” என்றாள் அரசிளங்குமரி.

இதற்குப் பிறகு தொடரும் பரபரப்பான சம்பவங்களில் பட்டத்து இளவரசனும் குந்தவையின் சகோதரனுமான ஆதித்த கரிகாலன் சம்புவரையர் மாளிகையில் கொல்லப்படுகிறான்.

ஆதித்த கரிகாலனைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாதாளச் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறான் வந்தியத்தேவன். அப்போதும் குந்தவையின் மனம் அலைபாய்கிறது. சகோதரனைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பவனை எப்படி சிறையில் சென்று சந்திப்பது என யோசிக்கிறாள்.

அந்தத் தருணத்தில் சம்புவரயரின் மகளும் கந்தமாறனின் சகோதரியுமான மணிமேகலை குந்தவையைச் சந்தித்து, தான் வந்தியத்தேவனைக் காதலிப்பதாகவும் அவனை ஒரு முறையாவது சிறையில் சென்று சந்திக்க அனுமதிக்க வேண்டுமென்றும் கோருகிறாள்.

தன் மரணத்திற்கு வந்தியத்தேவன் காரணமல்ல என ஆதித்த கரிகாலன் எழுதிய ஓலையையும் குந்தவையிடம் கொடுத்துவிட்டு, அவரைக் கொன்றது தான்தான் என கொலைப் பழியையும் ஏற்கிறாள். ஆனால், வந்தியத்தேவன் மீது உள்ள காதலால்தான் அதைச் செய்கிறாள் என்பது குந்தவைக்குப் புரிகிறது.

அருள்மொழி வர்மனும் அங்கே வந்து சேர, அவர்கள் பாதாளச் சிறைக்குச் சென்று வந்தியத்தேவனை சந்திக்கப் போகிறார்கள். ஆனால், அதற்குள் அவன் அங்கிருந்து தப்பிவிடுகிறான்.

இதற்குப் பிறகு, சில முறை குந்தவையும் வந்தியத்தேவனும் சந்தித்தாலும், நாவலின் இறுதியில் மீண்டும் ஒருமுறை தம் காதலை உறுதி செய்கிறார்கள். அந்தக் காட்சி காதலும் உருக்கமும் மிக்கது.

“ஐயா! என் தந்தை எனக்கு ஒரு சுயம்வரம் நடத்தி அதற்கு இந்தப் பரந்த தேசத்திலுள்ள அத்தனை அரசகுமாரர்களையும் அழைத்திருந்தால், என் கையிலுள்ள மாலையை அவர்கள் யாருடைய கழுத்திலும் போட்டிருக்க மாட்டேன். தஞ்சைக் கோட்டையிலிருந்து தப்பி ஓடி வந்து, பழையாறை ஆலய பட்டரின் துணையுடன் ஓடமேறி ஓடையைக் கடந்து, அரண்மனைத் தோட்டத்துக்குள் புகுந்து என்னைத் தனிமையில் சந்தித்த அனாதை வாலிபர், அத்தனை அரசகுமாரர்களுக்கு மத்தியில் எங்கேயாவது இருக்கிறாரா என்று தேடுவேன். அவருடைய கழுத்திலேதான் என் கையிலுள்ள சுயம்வர மாலையைப் போடுவேன்!” என்றாள் குந்தவை.

இதைக் கேட்டதும் வந்தியத்தேவனுடைய செவிகளில் ஆயிரம் கிண்கிணிகள் ஒலித்தன. வானத்திலிருந்து பொன் மழை பொழிந்தது. தளிர்களும் மலர்களும் குலுங்கிய மரங்களின் உச்சியில் வர்ணப்பட்டுப் பூச்சிகள் இறகுகளை விரித்து நடனம் புரிந்தன.

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம், Madras Talkies

குந்தவை அப்போது “ஐயா! ஒன்று மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போகுமிடங்களில் எத்தனையோ அபாயங்களுக்கு உட்படுவீர்கள். எவ்வளவோ போர்க்களங்களில் போர் செய்வீர்கள். பகைவர்கள் வஞ்சகச் சூழ்ச்சியால் தங்களை மேலுலகம் அனுப்ப முயல்வார்கள்.

அப்படி ஏதாவது தங்கள் உயிருக்கு அபாயம் நேர்ந்துவிட்டால், இந்தத் தொல் பெருமை வாய்ந்த சோழ குலத்தில் பிறந்த ஓர் இளவரசி கலியாணம் ஆவதற்கு முன்னாலேயே கைம்பெண் ஆவாள்! இதை மறந்து விடாதீர்கள்!” என்றாள்.

இதற்குப் பிறகு, நாவல் முடிவுக்கு வருகிறது. இந்த நாவலில் இருவருக்கும் திருமணம் ஆகும் காட்சிகள் கிடையாது.

வரலாற்றைப் பொறுத்தவரை, வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற இளவரசன் இருந்தது உண்மை. குந்தவை தேவி அவரை மணந்ததும் உண்மை. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டில், “இராஜ ராஜ தேவரின் திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகர் குந்தவையார்” என்று குறிப்பிடப்படுகிறது.

சோழர்களின் வரலாற்றை எழுதிய சதாசிவப் பண்டாரத்தார், அவனை கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவன் என்கிறார். ஆனால், அதற்குப் போதிய ஆதாரங்களைத் தரவில்லை. வேறு சிலர் அவனை ராஷ்டிரகூட மரபைச் சேர்ந்தவன் என்கிறார்கள். இருந்தாலும், கல்கி வந்தியத்தேவனை வாணர் மரபைச் சேர்ந்தவன் என உறுதியாக நம்புகிறார்.

குந்தவையை மணந்த பிறகு தற்போதைய வேலூர் பகுதியை ஒட்டியுள்ள பிரம்மதேசம் பகுதியை வல்லவரையன் ஆட்சி செய்கிறான். பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை – வந்தியத்தேவன் இடையிலான காதல் காவியக் காதலாக இருந்தாலும் வந்தியத்தேவனுக்கு வேறு மனைவியரும் இருக்கக்கூடும். குந்தவை திருமணத்திற்குப் பிறகும் வாழ்வின் பெரும் பகுதியை தஞ்சையிலேயே கழிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »