Press "Enter" to skip to content

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையால் பறிபோன எம்பி பதவி – அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு ஜாமீனும் வழங்கியது சூரத் நீதிமன்றம்.

இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அடுத்த கட்டமாக ராகுல் காந்தி என்ன செய்ய முடியும் என சட்ட வல்லுநர்கள் சில விளக்கங்களை அளித்துள்ளனர்.

எப்படி தகுதிநீக்கம் செய்யலாம்?

ராகுல் காந்தி, காங்கிரஸ், வயநாடு, மோதி

பட மூலாதாரம், SRINIVASIYC

எம்.பி. எம்.எல்.ஏ-க்களின் பதவி பொதுவாக மூன்று முறைகளில் பறிக்கப்படும்.

முதலாவதாக, பதவியில் உள்ள ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருப்பது, மனநிலை சரியில்லாமல் இருப்பது, இந்திய குடியுரிமை இல்லாமல் இருப்பது போன்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக தகுதிநீக்கம் செய்யப்படுவார்.

இரண்டாவது முறை: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம், பிற கட்சிகளுக்கு மாறும் மக்கள் பிரதிநிதிகள் மீது தகுதிநீக்கம் கொண்டு வருவது.

மூன்றாவது முறை: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மூலமாக தகுதி நீக்கம் செய்யப்படுவது.

இந்தச் சட்டத்தில் உள்ள உட்பிரிவுகள், எதற்காக, எப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951(Representation of the People Act) பிரிவு 8-இன் கீழ், பதவியில் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்(MPs), சட்டப்பேரவை உறுப்பினர்(MLA), சட்டமேலவை உறுப்பினர்(MLC) ஆகியோர் மீது குற்றவியல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும் என குறிப்பிடுகிறது.

பிரிவு 9இன் கீழ், ஊழல், அரசாங்க ஒப்பந்தங்களில் தலையிடுவது போன்ற காரணங்களுக்காக தகுதிநீக்கம் செய்யப்படுவது.

பிரிவு 10, தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் தகுதி நீக்கம் செய்வது பற்றிக் கூறுகிறது.

பிரிவு 11, ஊழல் நடைமுறைகளுக்கான தகுதி நீக்கம் பற்றி கையாள்கிறது.

பிரிவு 8-இன் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் நபர்கள், தண்டனைக் காலம் நீங்கலாக 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

‘குற்றவாளி’ என தீர்ப்பு : அடுத்தது என்ன?

ராகுல் காந்தியின் வழக்கு தொடர்ப்பான தீர்ப்பு தொடர்பாக பிபிசியிடம் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, சூரத் நீதிமன்ற தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் ‘குற்றவாளி’ என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கும் வரை அவரைத் தகுதி நீக்கம் செய்ய முடியும் என நீதிபதி சந்துரு தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பேசும் போது, சட்டப்படி தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து அவரின் தகுதிநீக்கம் அமலுக்கு வருகிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 2013ஆம் ஆண்டு லில்லி தாமஸ் வழக்கில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இருக்கிறது என உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்தத் தீர்ப்பின் மூலமாக இயல்பிலேயே அவரின் தகுதிநீக்கம் உறுதியாகிறது. தீர்ப்பின் நகலைப் பெற்றதன் அடிப்படையில், மக்களவை சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

ராகுல் காந்தி இதை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றம் செல்வதுதான் அவருக்கான வாய்ப்பு. மேல்முறையீட்டில் தண்டனையையும், ‘குற்றவாளி’ என்ற தீர்ப்பையும் நிறுத்தி வைக்க முறையீடு செய்ய வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளில், பொதுவாக நீதிமன்றம் குற்றவாளி என்று அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்காது, மாறாக தண்டனை மீது இடைக்காலத் தடையை விதித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

என்ன சட்ட சிக்கல்?

ராகுல் காந்தி, காங்கிரஸ், வயநாடு, மோதி

பட மூலாதாரம், Getty Images

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4), தகுதிநீக்கம் செய்யப்படும் நபர் தீர்ப்பு வெளியான நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை தகுதிநீக்கம் செய்யக்கூடாது எனக் குறிப்பிடுகிறது.

ஆனால் லில்லி தாமஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில், 2013ஆம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் 3 மாத காலம் வரை ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்படாது என்ற உத்தரவாதம் கிடையாது.

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை ‘விநோதமானது’ என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குறிப்பிட்டார். நீதிமன்றம் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தால் அது போதுமானதாக இருக்காது. குற்றவாளி என அளித்த தீர்ப்பையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

உச்ச நீதிமன்றம் லில்லி தாமஸ், லோக் பிரகாரி வழக்குகளில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே தகுதி நீக்க காலம் தொடங்குகிறது. ஆனால் தீர்ப்பின் அடிப்படையில் தானாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3)-இல் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது, மாறாக தகுதியற்றவர் என குறிப்பிடப்படவில்லை.

அதனால் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கமும் நிறுத்தப்படும் என்று மக்களவை முன்னாள் செயலாளரும், அரசியல் சட்ட நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அடுத்து என்ன?

ராகுல் காந்தி, காங்கிரஸ், வயநாடு, மோதி

பட மூலாதாரம், ANI

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அவர் மக்களவை உறுப்பினராக இருந்த வயநாடு தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இது தொடர்பாக பேசிய முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் உடனடியாக தேர்தல் நடக்காது, அதற்கு சில மாதங்கள் ஆகும் என்றார்.

தற்போது ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இரண்டு முக்கிய அம்சங்களை நாம் பார்க்க வேண்டும். ஒன்று அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தண்டனை, மற்றொன்று அவர் ‘குற்றவாளி’ என நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. குற்றவாளி என ராகுல் காந்தி உறுதி செய்யப்பட்டு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அவரை நேரடியாக தகுதிநீக்கம் செய்ய முடியும். ஆனால் இடைக்கால நிவாரணமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்று இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரலாம்.

அதனால் இந்த விவகாரத்தில் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு வேலை எதுவும் இருக்காது. சபாநாயகர் எப்போது ராகுல் காந்தியின் தொகுதி காலியானதாக அறிவிக்கிறாரோ, அதுவரை மறுதேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளிவராது என கோபால்சாமி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »